sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 26, 2014

Google News

PUBLISHED ON : ஜன 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோடியைப் பிரித்த ஜோசியர்!

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, கணவனை இழந்த நான், சமீபத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங்கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரணடு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம், குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உடனே, அந்த ஜோசியர், 'நீ, அந்த விதவை பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப்படிப்பட்ட ஆபத்து வந்திருக்கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப்பது தான் நல்லது...' என்று சொல்லி, என் கணவரை குழப்பி விட்டார்.

அதிலிருந்து, எதற்கெடுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங்களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர் தான். இனிமேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பத்தை பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பரா!

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

காதலிக்கும் கன்னியருக்கு ஒரு யோசனை!

நான் விரும்புபவரையே திருமணம் செய்து கொள்ள, எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதித்து விட்டதால், அவர்களின் அனுமதியுடனே, அடிக்கடி சினிமாவுக்கு செல்வோம். ஒவ்வொரு முறையும், படம் ஓடிக் கொண்டிக்கும் போது, 'அடுத்த காட்சி இதுவாகத் தான் இருக்கும். நம்ம தமிழ் படங்களே இப்படித்தான்...' என்று, கூறுவார் என் காதலர். அவர் கூறியவாறே, அடுத்த காட்சி அமைந்திருக்கும். அவரது கற்பனை திறனை மெச்சி, அவரை புகழ்ந்து, இவ்வளவு திறமைசாலியான ஒருவரை, கணவனாக அடையும் பாக்கியத்தை எண்ணி, மகிழ்வதும் உண்டு.

ஆனால், இந்த ரகசியம் ஒருநாள் எனக்கு தெரிந்து விட்டது. அதாவது, முதல் நாளே படத்தை பார்த்து, மறுநாள், அதே படத்திற்கு என்னை அழைத்துப் போய், அடுத்தடுத்து வரும் காட்சிகளை, முன் கூட்டியே சொல்லியிருக்கிறார். இதனை, அவரிடம் நேரடியாக கூறி மூக்கறுபட வைக்காமல், நானே, ஒரு படத்தை முதல் நாள் பார்த்து, மறுநாள் அதே படத்திற்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்புறம் என்ன? அடுத்த சீன் என்னவென்பதை நான் சொல்ல சொல்ல, அவரது முகம் போன போக்கை, பார்க்க வேண்டுமே... எனவே, காதலிகளே... உங்கள் காதலர்களின் போலியான திறமைகளை, ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

— இ.வர்ஷா, கோவை.

புது அயிட்டம் செய்யப் போறீங்களா...

என் நண்பரின் மனைவி, எந்தவொரு புதிய வகை உணவாக இருந்தாலும், உடனே செய்து விட துடிப்பார். விடுமுறையன்று, அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். மெதுவடைக்கு அவரது தோழியொருவர் புது ரெசிபி கூறியிருக்கிறார். நண்பரின் மனைவி, அதைச் செய்வதற்கு அவரது மகனிடம் கான்பிளாக்ஸ் மாவு வாங்கி வரச் சொன்னார். அச்சிறுவனும், வாங்கி வந்தான். மாவில் தேவையான பொருட்களையெல்லாம் போட்டு தயார் செய்து, வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, மாவை போட்டவுடன் எண்ணெய் பொங்கி வழிந்தது. அவருக்கு என்னவென்று புரியவில்லை. ரெசிபி கூறிய அம்மணியிடம் கேட்க, 'போட்ட பொருட்களை, 'செக்'செய்து பார்...' என்றிருக்கிறார். பின் தான் தெரிந்தது. கான்பிளார் மாவுக்கு பதில் கடைக்காரர் தவறுதலாக சோடா உப்பினை கொடுத்திருக்கிறார் என்பது.

கரைத்து வைத்த மாவு மற்றும் எண்ணெயை குப்பையில் கொட்டினர். புது அயிட்டம் செய்பவர்கள், இதை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

— ராம் விஜய், நாமக்கல்.

ரூபாய் நோட்டில் எழுதாதீர்!

எனக்கு தெரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார். அவர் கடையில், வியப்புறும் வகையில், ஒரு போர்டு வைத்திருந்தார். அதில்,'ரூபாய் நோட்டுகளில், பெயரோ, எண்களோ, வேறு ஏதாவது குறிப்புகளோ, கிறுக்கல்களோ எழுதி இருந்தால் வாங்கப்பட மாட்டாது...' என, எழுதப்பட்டிருந்தது.

அப்போது, ஒருவர் நோட்டுப் புத்தகம் வாங்கி, பணம் கொடுத்தார். அதில், ஒரு பத்து ரூபாய் நோட்டில் யாரோ, 'அன்புடன், ராஜி' என்று எழுதி, கையெழுத்திட்டிருந்ததைப் பார்த்து, திருப்பிக் கொடுத்து, 'வேறு நோட்டு தாருங்கள்...' என்றார்.

இதுபோல் என்ன எழுதியிருந்தாலும், வாங்க மறுத்து விடுகிறார். இதனால், பலர் பொருள் வாங்காமலே போய்விடுகின்றனர்.

'நீங்கள் இப்படிச் செய்தால் வியாபாரம் பாதிக்குமே...' என்றேன். 'பரவாயில்லை... தவறை திருத்தணுமில்ல. மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்...' என்றார்.

மேலும், 'கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிற, எல்லாருக்கும் சொந்தமான ரூபாய் நோட்டை, தனி நபர்கள் மதித்து, பாதுகாத்து, பயன்படுத்த வேண்டும். இப்படி கண்டதை எழுதுவதற்கு, அது என்ன குப்பை காகிதமா...' என, நீண்ட விளக்கமும் தந்தார்.

இவர் சொல்வதும் சரி தானே! எல்லாருமே, இவரைப் பின்பற்றினால், ரூபாய் நோட்டில் எழுதுவது நிற்கும். ஆனால், பணப் புழக்கம் அதிகம் உள்ள வங்கிகளில் சிலர், ரூபாயிலேயே நம்பரை எழுதுகின்றனர். இதைத் தவிர்க்க, 'ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாமல் போகும்...' என அரசு அறிவித்தால், எவரும் எழுத மாட்டார்கள் அல்லவா! கடைக்கார ஆசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது!

ஓ.எஸ்.மசூது,சென்னை.

நம்மை ஏன் அன்னியன் சுடுகிறான்!

அன்று காலை, 8:00 மணிக்கு, என் மனைவியை கோவையிலிருந்து, உதகைக்கு அனுப்ப, பஸ் நிலையம் சென்றிருந்தேன். பயணிகள் வரிசையாக நிற்க ஏதுவாக, சில்வர் கம்பிகளால் ஆன, நீளமான தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வரிசையாக நிற்காமல், பயணிகள் அனைவரும் கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். நான், 'வரிசையாக நில்லுங்கள்...' என்று கூறியும், யாரும் கேட்கவில்லை. பஸ் வந்ததும், அனைவரும் முண்டியடித்து, இடம் பிடித்தனர்.

அருகிலிருந்த பெரியவர் ஒருவர், 'அன்று நம்மிடையே ஒற்றுமையில்லாததால் தான், வெள்ளைக்காரன், நம்மை அடிமைப்படுத்தினான். இன்றும், இந்தியர்கள் இப்படியிருக்கிற காரணத்தால் தான், வடக்கே பாகிஸ்தான்காரன் சுடுகிறான்; தெற்கே இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான்...' என்றார்.

இதை கேட்ட பயணிகளின் முகம் கருத்துவிட்டது; பெரியவரின் சொல்லை யாரும் மறுக்கவில்லை. சரியான கருத்தை, சரியான நேரத்தில் சொன்னார். பொது இடங்களில், வரிசையாக நிற்பது, புகைபிடிக்காமல் இருப்பது, முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற, நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே!

ஹரிஹரன், கோவை.






      Dinamalar
      Follow us