PUBLISHED ON : அக் 20, 2013

பத்மா சேஷாத்ரி பள்ளி விழாவில் தான், முதன் முறையாக, சிவாஜியை பார்த்தேன். 'இவர் தான் நடிகர் சிவாஜியா... வெள்ளை வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக் கிறாரே...' என்ற எண்ணம் தான், எனக்கு, அப்போது தோன்றியது. சிறுவன் என்பதால், எனக்கு, கத்திச் சண்டை நிறைந்த 'அட்வெஞ்சர்' படமும், லாரல் ஹார்டி காமெடி படங்களும் பிடிக்கும். என் தந்தை நடத்தி வந்த, 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழுவினர், சிவாஜி படங்களைப் பற்றி, காரசாரமாக விமர்சிப்பர். வியந்து கவனிப்பேன்.
நுங்கம்பாக்கத்தில், பாலா டூரிஸ்ட் கம்பெனி பின்புறம் உள்ள, சந்திரலேகா முத்துசாமி தெருவில் தான் எங்கள் வீடு இருந்தது. கூரை வேய்ந்திருந்த மொட்டை மாடியில் தான், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆரம்பமானது. காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வகுப்பும், பின், யு.ஏ.ஏ., நாடக குழுவின், நாடக ஒத்திகை மற்றும் நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் கூட்டங்கள் என, எல்லாமே, அங்கு தான் நடக்கும்.
அங்கே, நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் அங்கத்தினர்களுக்காக, 16 எம்.எம்.மில்., படிக்காத மேதை படம் திரையிட்டனர். 16 எம்.எம்., ரீல்கள் என்பதால், ஒவ்வொரு ரீல் முடிந்த பின், கழற்றி, மறு ரீல் போட்டு, பல இன்டர்வெல்களுடன் படம் ஓடும்.
அதுதான், நான், முதன்முதலில் பார்த்த சிவாஜி படம். அப்போது, எனக்கு பத்து வயது இருக்கும். அந்த படம், என்னை முழுமையாக உலுக்கிவிட்டது. முரட்டுத் தனம், வெகுளித்தனம், யதார்த்தம் இவற்றின் கலவையாக அமைந்திருந்த ரங்கன் கதாபாத்திரம், என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது.
என் தந்தை ஒய்.ஜி.பி.,யிடம், 'ரங்கனாக வந்த அதே ஆள் தானா, இந்த சிவாஜி...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதுதான்டா நடிப்பு; அவர்தான்டா சிவாஜி...' என்றார். இப்படம், தியேட்டரில், மறுபடியும் ரிலீசான போதும், வீட்டிலும் பல முறை, அந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
ஒரு நேர்மையான, விசுவாசமான வேலைக்காரரின் பிரதிபலிப்பே ரங்கன். அதில் ஒரு காட்சி, என்னை, வியக்க வைத்தது.
ஈ.வி.சரோஜாவை, பெண் பார்க்க வருவர். மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சிவாஜி நேராக சென்று, மாப்பிள்ளையின் புஜங்களைத் தொட்டுப் பார்த்து, 'ஸ்ட்ராங்கான ஆள் தான்' என்று, செய்கையிலும், தன் கண்களாலும் உறுதிபடுத்துவார். அந்த வீட்டில், ரங்கன் எடுத்துக் கொள்ளும் உரிமையை, இந்த ஒரு ஆக்ஷனில் வெளிப்படுத்துவார்.
ரங்கன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வேலைக்காரனாகவே கடைசி வரை இருக்க கூடாது என்று, ரங்காராவ் தீர்மானித்து, 'தனிக்குடித்தனம் செல்லுங்கள்...' என்று சொல்லுவார். அந்தக்காட்சியில், ரங்காராவ் - சிவாஜி இருவரின் முகபாவம், குரலை, ஏற்றி - இறக்கி பேசுவதில் காட்டும் வித்தியாசம்... எல்லா நடிகர்களுக்கும், அது, ஒரு பெரிய பாடம்.
படிக்காத மேதை படத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும், 'ரீ-மேக்' செய்யலாம்; சிவாஜி செய்த ரங்கனை, 'ரீ-மேக்' செய்ய முடியாது. சிவாஜியே, மறுபடியும் பிறந்து வந்து தான் செய்ய முடியும்.
சிவாஜி, ரங்காராவிற்கு மட்டுமல்ல, இயக்குனர் பீம்சிங்கிற்கும் இது நிகரற்ற படம். உள்ளத்தை நெகிழச் செய்யும், கருத்துள்ள வசனங்கள் எழுதிய, கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கும், அப்படம், ஒரு மைல் கல்.
கீழ்வானம் சிவக்கும் படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்து கொண்டிருந்தது. முக்தா சீனிவாசன் என்னிடம், 'டேய்... என்னிடம், அண்ணனுடைய டேட்ஸ் இருக்கு. உன்னுடைய, 'பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தை, அவரை வைத்து செய்தால், நன்றாக இருக்கும்...' என்றார்.
மேட்டரை சிவாஜியிடம் சொன்ன போது, என்னைப் பார்த்து, அவருக்கே உரித்தான நக்கலோடு, 'ஆஹா... சார் கதை சொல்லப் போகிறாரா... கதை சொல்வதிலே, சார் பெரிய ஆள் ஆச்சே... சரி, நாளை காலை, 7:00 மணிக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில், என்கிட்ட கதை சொல்லு...' என்றார்.
மறு நாள் காலை, 7:00 மணிக்கு, நான் செல்லும் போதே, 9:00 மணி ஷூட்டிங்கிற்கு, 'மேக் - அப்' போட்டு, தயாராக இருந்தார். கலைவாணியை வேண்டி, என் வாக்குத் திறமையை திரட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், என் நாடக கதையை கூறினேன். கதை கேட்டு முடித்ததும், என்னிடம், 'நாளைக்கு இதே நேரத்திற்கு வா. அப்போது சொல்றேன்...' என்று சொல்லி, படப்பிடிப்பு வேலையை, கவனிக்க சென்று விட்டார்.
அடுத்த நாள், காலை 7:00 மணி. அதே லொகேஷன். சிவாஜி என்னைப் பார்த்து, 'டேய்... நேற்று, நீ சொன்ன கதையிலே, என்னுடைய கேரக்டர், நரசிம்மாச்சாரியை பற்றி, நான் புரிந்து கொண்டதை சொல்றேன். சரியா இருக்கா பாரு...' என்று கூறி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அவர், எனக்கு கதாபாத்திரத்தை விளக்கினார். எனக்கே பிரமிப்பாக இருந்தது. நாங்கள், நாடகத்தில் காண்பித்த நரசிம்மாச்சாரியை விட, ஒரு படி மேலேயே போய் விட்டார்.
நடிப்பின் மீது, எவ்வளவு பற்றுதல் இருந்தால், ஒரே நாளில், தன் கேரக்டரை புரிந்து கொண்டிருப்பார். அது மட்டுமில்லாமல், 'சரியாக இருக்கா சொல்லு' என்று, என்னிடம் கேட்கிறாரே என்று, நெகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி, கதையை, 'ஓ.கே'., செய்த பின்பும், சிறு தயக்கத்துடன், நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அதைப் புரிந்து கொண்ட அவர், லேசான புன்முறுவலுடன், 'கவலைப்படாதடா பரதேசி. நீ தான் வரதுக்குட்டி...' என்று சொன்னாரே பார்க்கணும். என் மனதிற்குள், மங்கள வாத்தியங்கள் முழங்கின. எங்களுடைய, யு.ஏ.ஏ.,வின், நான்கு நாடகங்கள், சிவாஜியை வைத்து, திரைப்படங்களாக தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அவை, அறிவாளி, பார் மகளே பார், கவுரவம், பரீட்சைக்கு நேரமாச்சு. நான்கிலும், என் தந்தை ஒய்.ஜி.பி., நாடகத்தில் செய்த பாத்திரங்களை. சிவாஜி, மேலும் மெருகூட்டி, திரைப்படத்தில் நடித்திருந்தார்.
* ஒரு முறை, காஞ்சி மகா பெரியவர், சென்னை தாம்பரத்திற்கு, விஜயம் செய்த போது, திருவருட்செல்வர் திரைப்பட போஸ்டர்களை பார்த்து, 'என் போட்டோ போட்டு, சினிமாக்காரங்க ஏன் போஸ்டர் அடிச்சிருக்காங்க?' என்று கேட்டார். 'திருவருட்செல்வர் என்ற படத்தில், சிவாஜி கணேசன், அப்பர் சுவாமி வேஷத்தில் நடிச்சிருக்காரு. அந்த போஸ்டர் தான் இது...' என்று, அவருக்கு விளக்கம் தரப்பட்டது. மகாபெரியவரை, மனதில் வைத்து தான், அப்பர் கதாபாத்திரத்தில், நடித்திருந்தார் சிவாஜி. 'கண்மேலே கை வைத்து பார்ப்பது, முகத்தோற்றம் எல்லாம், தன்னை மாதிரியே செய்திருப்பதாக சொல்லி, சிவாஜியை, மடத்தில் வந்து, தன்னை பார்க்கும்படி' முக்தா ஸ்ரீனிவாசன் மூலமாக, சொல்லி அனுப்பியிருந்தார் மகாபெரியவர். முக்தாவும், சிவாஜியும் மடத்திற்கு சென்று, மகா பெரியவரை தரிசனம் செய்தனர். கொஞ்ச நேரம், அப்படியே சிவாஜியை பார்த்து விட்டு, ஆசிர்வாதம் செய்தார். 'ஒரு வினாடியாவது, மகாபெரியவர் தரிசனம் கிடைக்காதா' என்று, எண்ணற்ற பக்தர்கள் ஏங்கும்போது, மகாபெரியவரே, சிவாஜியை அழைத்து, ஆசிர்வாதம் செய்துள்ளார் என்றால், அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
*சிவாஜி, கோவில்களுக்கு, யானைகளை தானமாக கொடுப்பதை, மகாபெரியவர், பாராட்டி, 'யானையை தானம் செய்றது, மிகச்சிறந்த தானம்...' என்று, சொன்னார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வெள்ளையம்மா என்ற குட்டி யானையை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, புன்னை மாரியம்மன் கோவிலுக்கு, தானமாக கொடுத்திருந்தார் சிவாஜி. சில ஆண்டுகளுக்குப் பின், அந்த யானை, தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில், வெள்ளையம்மா யானை (வயது 63) மரணமடைந்த செய்தியை, பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
*தகுதியுள்ள புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும், தான் இதுவரை பணிபுரியாத இயக்குனர்களோடு, இணைந்து படங்கள் செய்வதிலும், சிவாஜிக்கு, எப்போதுமே ஆர்வமுண்டு; விரும்புவார். முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்த, 288 படங்களில், 90 இயக்குனர்களுடன், அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது, வியப்பான செய்தி.
***
— தொடரும்.
எஸ். ரஜத்
