PUBLISHED ON : அக் 20, 2013

பேஸ்புக்கில் முகம் காட்டும் பெண்களே உஷார்!
என் அலுவலக தோழி மிகவும் நல்லவள். குணமான கணவன், கல்லூரியில் பயிலும், இரு மகள்கள் என, மாமனார்- மாமியாருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறாள். 'பேஸ்புக்'கில், தன் புகைப்படம் மற்றும் முகவரியை பதிந்து வைத்திருந்தாள். இது எப்படியோ, ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்யப்பட்டு, நட்பு வட்டாரம் பெருகியது.
திடீரென ஒருநாள், அவளுடைய மொபைலில், ஒரு அழைப்பு. முப்பது ஆண்டிற்கு முன், காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்த காதலன் தான், அழைத்திருந்தான். தன் தற்போதைய நிலை, கணவர் மற்றும் குழந்தைகள் பற்றி தோழி எவ்வளவோ எடுத்து கூறியும், முன்னாள் காதலன் அதை புரிந்து கொள்ளாமல், காதலி கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷத்தில், தினமும் மொபைல் மற்றும், 'பேஸ்புக்'கில் தொல்லை கொடுத்து வருகிறார்.
'என் நிலையை உன்னிடம் சொல்ல வேண்டும். எப்போது, நேரில் வரட்டும்...' என, அடிக்கடி கேட்கிறாராம். இதனால், பயந்து போன தோழி, எப்போதும் ஒரு வித அச்சத்துடனே காணப்படுகிறாள். அவளுடைய செயல்பாடுகளால், கணவர், மகள்கள் மற்றும் மாமனார்- மாமியாரிடம் மாட்டிக் கொள்வாளோ என, நாங்கள் பயப்படுகிறோம்.
'பேஸ்புக்'கில் ஏன் புகைப்படத்தை கொடுத்தோம் என்று, இப்போது யோசிக்கிறாள்.
'பேஸ்புக்'கில் புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணுடன், தங்கள் எண்ணங்களை பரிமாறி கொள்பவர்கள், இனி, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!
— அ.செல்வி அருண், செங்குன்றம்.
பிறர் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்!
நான், சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், தேனி செல்லும் பஸ்சிற்காக காத்திருந்தபோது, என் அருகில், 40 வயது மதிக்கத்தக்க, மிகவும் நவநாகரிகமான தோற்றம் கொண்ட பெண் ஒருவர், மொபைல் போனில், 'தங்கிலீசில்' கொஞ்சிக் கொஞ்சி பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில், சுற்றுப்புறத்தை மறந்து, குரலை உயர்த்தி, 'இங்க பாரு... எனக்கு, நீ வேணும்... அவ்வளவுதான். உனக்காக, நான் என் புருஷன், பிள்ளைகளை விட்டுட்டு வர்ற மாதிரி, நீயும், உன் பொண்டட்டி, பிள்ளைகளை தூக்கி எறிஞ்சுட்டு வா. அப்பத்தான் நாம சந்தோஷமா இருக்க முடியும். எனக்கு, உன்னை பிடிச்சிருக்கு; உனக்கு, என்னை பிடிச்சிருக்கு; இடையில எதுக்கு, இந்த தொல்லைகள். இது நம்ம வாழ்க்கை, நம்ம சந்தோஷத்த, எதுக்காக, மற்றவர்களுக்காக, தியாகம் செய்யணும்... நான் சொல்லுறத கேளு...' என்று, பேசிக் கொண்டே போனார். இதைக் கேட்ட எனக்கு, பயங்கர, 'ஷாக்!'
இல்லறத்தின் அர்த்தம் புரியாதவர்களும், தன்னுடைய சந்தோஷம் தான் பெரிது என்று நினைப்பவர்களும், ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அவர்கள் இஷ்டப்படி, சட்டையை மாற்றுவது போல், ஆணையோ, பெண்ணையோ மாற்றிக் கொண்டு, வாழ்ந்து தொலைக்க வேண்டியது தானே!
அம்மாக்களே... ஐயாக்களே... சுய கட்டுப்பாடும், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் யோக்கியதையும், உங்களுக்கு இல்லை என்றால், தயவு செய்து திருமணம் செய்யாதீர்கள். திருமணம் என்னும் பெயரில் கைபிடித்தவர்களின் மனதையும், வாரிசுகளின் வாழ்வையும் கெடுக்காதீர்கள்!
— ப.லட்சுமி, கோட்டூர்.
அலட்டல் சிகாமணிகளுக்கு தோழி கொடுத்த சூடு!
வெகுநாட்களுக்கு பின் சந்தித்த என் தோழியுடன், நகரில் இருந்த ஒரு சைனீஸ் உணவகத்துக்கு சென்றோம். எங்கள் பக்கத்து டேபிளில், கல்லூரி மாணவியர் ஆறு பேர் வந்து அமர்ந்தனர். நவநாகரிக தோற்றத்துடன் இருந்த அவர்கள், சிறிது நேரத்தில், நுனி நாக்கு ஆங்கிலத்தில், எங்களை பார்த்து, ஏதோ பேசுவதும், சிரிப்பதுமாக இருந்தனர். எங்களை, ஏதோ கேலி செய்து பேசுவதை உணர்ந்து, நானும், தோழியும் கவனிக்க ஆரம்பித்தோம்.
விஷயம், இதுதான்: ஆர்டர் செய்த நூடுல்சை நானும், தோழியும் கைகளால் எடுத்து, சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அதைக் குறிப்பிட்டு, 'நாட்டுபுறங்கள், டீசன்ட் இல்லாத காட்டுமிராண்டிகள்' என்று, ஏதேதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆங்கில பேராசிரியையான, என் தோழிக்கு வந்ததே கோபம். நேராக, அவர்களிடம் சென்று 'நீங்கள் உண்பது, எந்த நாட்டு உணவு தெரியுமா?' என்று ஆங்கிலத்தில் கேட்க, ஒருத்தி ஸ்டைலாக, 'சைனீஸ்' என்றாள். உடனே, என் தோழி, 'ஒன்று சீனாவில் உண்பது போல, 'சாப்ஸ்டிக்ஸ்' உபயோகித்து உண்ணுங்கள். இல்லை, நம் நாட்டு வழக்கப்படி, ஐந்து விரல்களால் உண்ணுங்கள். இரண்டும் இல்லாமல், மேலை நாட்டு பழக்கமான, ஸ்பூன் உபயோகித்து சாப்பிடுகிறீர்களே... யார் நாட்டுப்புறம்? என் நாட்டு பழக்கத்தில், நான் தெளிவாக இருக்கிறேன். அப்படி உண்பதை அவமானமாக நினைக்கவில்லை. எந்த முறையில் சாப்பிடுவது என்ற குழப்பத்தில் இருக்கும் நீங்கள் தான், நாட்டுப்புறம்...' என்று தெளிவான ஆங்கிலத்தில், நிறுத்தி நிதானமாக சொல்லி விட்டு வந்தமர்ந்தார். பின், நாங்கள் கிளம்பும்வரை, அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
இதுதான் நாகரிகம் என்று கற்பனையில், அடுத்தவர்களை கேலி பேசி அவமானப்படுத்துவதோடு, தங்களை, மேல்நாட்டவர்களாக எண்ணிக் கொண்டிருக்கும், இவர்களைப் போன்றவர்கள் எப்போதுதான் திருந்துவரோ!
— ஜெ.ஜீனத், சென்னை.
