தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கொடுக்கிற மனசு வேணும்!

கொடுக்கிற மனசு வேணும்!

கொடுக்கிற மனசு வேணும்!


PUBLISHED ON : அக் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொருள் படைத்த பலருக்கு, கொடுக்கிற மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் படைத்த சிலருக்கு, பொருள் இருப்பதில்லை. இது, இந்தக் காலம். ஆனால், அந்த காலத்தில், மன்னர்கள், தங்களிடமுள்ள பொருளை, வறியவர், இரவலர், புலவர்கள் மற்றும் ஆன்மிக காரியங்களுக்கு வாரி வழங்கினர். இதோ... ஒரு திருடனுக்கு உதவிய, மன்னரின் வரலாற்றைக் கேளுங்கள்.

சேர நாட்டின் சிற்றரசு பகுதியான, கோனாட்டிலுள்ள கொடும்பாளூரைத் தலைநகராக கொண்டு, ஆட்சி செய்தவர் இடங்கழியார். தீவிரமான சிவபக்தர். இவரது நாட்டில், ஏராளமான சிவனடியார்கள் இருந்தனர். அவர்களில் ஒரு அடியார், தனக்கு கிடைக்கும் பொருளை எல்லாம் சக அடியார்களின் பசி போக்க செலவழித்து விடுவார். அவர் வீட்டில், எப்போதும் அடுப்பு புகைந்து கொண்டே இருக்கும். எந்த நேரம், சிவனடியார்கள் வந்தாலும், அவர்களது பசி போக்க தயாராயிருப்பார்.

இப்படி, அள்ளி அள்ளி கொடுத்தே, அவரது தானியக்களஞ்சியமும், கையிலிருந்த பொருளும் காலியாகி விட்டது. இந்நிலையில், அடியார்கள் வந்தால், அவர்கள் உணவுக்கு என்ன செய்வதென, கலங்கினார்.

இன்று, சுயநலம் கருதி கொள்ளையடிப்போரை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த சிவனடியார், அடியார்களுக்கு உணவிட வேண்டி, அரண்மனை தானியக்களஞ்சியத்தில், தானியங்களை கொள்ளையடிக்க முடிவு செய்தார். அதன்படி, தைரியத்தை வரவழைத்து, அரண்மனைக்குள் புகுந்து, களஞ்சியத்தை திறந்து நெல்லை அள்ளிக் கொண்டிருந்தார். சிவனடியாருக்கு ஏது திருட்டு அனுபவம்! காவலர்கள் வந்து விட, அகப்பட்டுக் கொண்டார். அவரைக் கைது செய்து, அரசர் இடங்கழியார் முன், நிறுத்தினர் காவலர்கள்.

அடியாரின் தோற்றத்தை கண்டு, சிவபக்தரான இடங்கழியார் மிகவும் வருந்தி, 'அன்பரே...நெற்றியிலும், உடலிலும் திருநீறு அணிந்து, சிவப்பழமாக காட்சி தரும் நீங்கள் ஏன் இப்படிப்பட்ட ஈனச் செயலை செய்தீர்கள்... காரணம் கூறுங்கள்...' என்று கேட்டார்.

'மன்னா... நான், சிவனடியார்களுக்கு, தினமும் அன்னதானம் செய்து வந்தேன். இப்போது, என் தானியக்களஞ்சியத்தில், தானியங்கள் சிறிது கூட இல்லை. அடியார்களுக்கு, தானம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், இவ்வாறு செய்து விட்டேன்...'என, கண்ணீர் மல்க கூறினார்.

நெகிழ்ந்து போன இடங்கழியார், 'அடியவரே... உங்களுக்கு இருக்கும் தொண்டு மனப்பான்மை, எனக்கு இல்லாமல் போனதே என்று வருந்துகிறேன். நான் மன்னனாயிருந்தும், தங்களைப் போல், அடியார்களுக்கு உதவாமல், நாட்களைக் கடத்தியதை நினைத்து வருந்துகிறேன். இனி, அரண்மனையில் உள்ள நெல், அடியார்களுக்கு உரியதே. தானம் செய்ய விரும்பும், எந்த அடியாராயினும், அவரவர் பகுதி களஞ்சியங்களிலுள்ள நெல்லை எடுத்துச் செல்லலாம்...' என, உத்தரவு போட்டார்.

மன்னரின் ஈகை குணத்தைப் பாராட்டி, சிவன், அவருக்கு காட்சியளித்து, அருள்புரிந்தார். நீண்ட காலம் நல்லாட்சி புரிந்த இடங்கழியார், சிவனின் திருவடி நிழலை அடைந்து, பிறவாநிலை பெற்று, நாயன்மார்களில் ஒருவராகும் தகுதியும் பெற்றார். இவரது குருபூஜை, ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், நடை பெறும்.

நாமும் நம்மால் முடிந்த பொருளைக் கோவில்களுக்கும், நல்லவர்களுக்கும் கொடுத்து, இறையருளுக்கு பாத்திரமாவோம்.

***

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us