
ஒரு படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில், சிலுக்கிடம், 'இந்த ஆளு என்ன அழகா இருக்காருன்னு, இவரை, உங்க கூட வெச்சிருக்கீங்க...' எனக் கேட்டார், ஸ்டன்ட் மாஸ்டர், விக்ரம் தர்மா.
'என் கண்ணுக்கு, அவர் அழகா இருக்கார்... உனக்கென்ன...' என்றார்.
அந்த நபர், 'டாக்டர்' என்று அழைக்கப்பட்ட, ராதாகிருஷ்ணமூர்த்தி. சினிமாக்காரர்களால், தாடிக்காரர் என்றே அழைக்கப்பட்டார்.
சிலுக்கு, பிரபலமாக ஆரம்பித்தபோதே, அவருக்கு, டாக்டரின் அறிமுகம் இருந்தது. படப்பிடிப்புகளுக்கு வந்து போவார். நடிகை அபர்ணா வீட்டிலிருந்து, சிலுக்கை வெளியே அழைத்து வந்தவர், டாக்டர் தான் என்றும் தகவல்கள் உண்டு. ஆரம்பத்தில், சிலுக்கின், 'கால்ஷீட்'டை பார்ப்பவராக அறிமுகமானார்.
நாளடைவில், சிலுக்குக்கு சகலமும் டாக்டர் தான் என்றாகிப் போனது. ஆனால், அவர் யார், சிலுக்குக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம், சினிமா உலகம், 'கிசுகிசு'த்தபோது, அவர் வாயே திறக்கவில்லை.
உண்மையில், சிலுக்கும் - டாக்டரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்ததாக, யூகங்கள் எழுந்தன.
ஆந்திராவின், காக்கிநாடா மருத்துவ கல்லுாரி மாணவரான அவர், டாக்டர் தொழிலில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஈடுபட்டார். டாக்டர் தொழிலை விட, வியாபாரத்தில் அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. சென்னை, பாண்டி பஜார், பிருந்தாவனம் ஓட்டலில், 'ரெஸ்டாரென்ட்'டை, 'கான்ட்ராக்ட்' எடுத்து நடத்தினார். பின், கப்பலில், 'பெயின்டிங் கான்ட்ராக்ட்'டில் ஈடுபட்டார்.
ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு, இரண்டு மகள்கள், ஒரு மகன். டாக்டருக்கும், சிலுக்குக்கும், 15 ஆண்டுகள், வயது இடைவெளி இருந்தது. தன் வயதான தாயார், தனசூர்யாவதி, வாலிப வயதில் மகன், ராமு ஆகியோரோடு, சிலுக்கு வீட்டில் தங்கியிருந்தார், டாக்டர்.
சாலிகிராமம், குமரன் காலனி, தனலட்சுமி தெருவில், சிலுக்கின் வாடகை பங்களா இருந்தது. அந்த பங்களாவுக்கு, சிலுக்கு கொடுத்த வாடகை, மாதம், 6,500 ரூபாய். கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள், ஒரே வீட்டில், சிலுக்கும், டாக்டரும் வாழ்ந்தனர்.
சினிமாவில் சிலுக்கு ஆடி சம்பாதித்த பணமெல்லாம், டாக்டருக்கே போனது. டாக்டரின் முழு கட்டுப்பாட்டில் தான் வாழ்ந்தார்.
விசாகப்பட்டினத்தில், டாக்டர் மனைவிக்கு, தனியாக பெரிய கிளினிக்; மகனுக்கு, சென்னையில், டிராவல்ஸ் கம்பெனி, பல கார்கள், 15 ஏக்கர் நிலம்; 20 லட்சம் செலவில், மகள் சுதாவுக்கு திருமணம் என்று, சிலுக்கின் சம்பாத்தியத்தை, டாக்டரின் குடும்பத்தினர் அனுபவித்துக் கொண்டிருந்தனர். போதாக்குறைக்கு, குதிரை பந்தையத்திலும் டாக்டருக்கு ஆர்வம் இருந்தது.
சிலுக்கின் சொத்து எதுவும், அவர் பெயரில் இல்லை. எல்லாமே டாக்டர் மற்றும் பினாமிகளின் பெயர்களில் தான் இருந்தன.
சினிமா சார்ந்த சகலரும், அன்னபூரணியை தான், சிலுக்கின் தாயாக கருதினர்.
தன் நிஜமான தாயார், நரசம்மாவுக்கு, மாதம், 1,000 ரூபாய் மட்டுமே கொடுத்தார். தம்பி நாகேந்திர பாபுவை படிக்க வைத்தார். ஆனால், அவர்களை தன்னோடு தங்க வைக்காமல், விருந்தினர்கள் போலவே நடத்தினார்.
ஒரு கட்டத்தில், டாக்டருக்கும், அன்னபூரணிக்கும் ஒத்துபோகவில்லை. அன்னபூரணிக்கு வேண்டிய பணத்தை கொடுத்து, 'செட்டில்' செய்து விட்டார், டாக்டர்.
அந்த பணத்தை வைத்து, சிலுக்கு வசித்த வீட்டுக்கு, சில தெரு தள்ளி, வீடு வாங்கி குடியேறினார், அன்னபூரணி. அவர், சிலுக்கை விட்டு முற்றிலும் விலகாமல், அவ்வப்போது சந்தித்தபடி தான் இருந்தார்.
ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அந்த வாழ்க்கை மீது, சிலுக்குக்கு வெறுப்பு வர துவங்கியது. தாலி கட்டிக் கொள்ளாமல், அங்கீகாரமில்லாத வாழ்க்கை. ஆசையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. டாக்டரால், தான் பெற்ற நன்மைகள் எதுவுமே இல்லை என்று, புரியத் துவங்கியது.
தன் வயதுக்கு ஏற்ற துணை வாய்த்து விட்டால், வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வந்து விடாதா என்று தோன்றியது. மற்ற கவர்ச்சி நடிகையர், சொந்த வீடும், கணவனும், குழந்தைகளுமாக மகிழ்ச்சியாக வாழ்கிறபோது, தான் மட்டும் செய்த பாவம் தான் என்ன... தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா... இம்மாதிரியான ஏக்கங்கள், மனதில் பாரமாக அழுத்தத் துவங்கின.
டாக்டருடனான காதல் மட்டுமே, சிலுக்குக்கு முக்கியமாக தெரிந்தது. அந்த காதல், தன்னை கரை சேர்த்து விடாதா என்கிற நப்பாசையில், நாட்களை கடத்திக் கொண்டிருந்தார். பெரும்பாலும், சிலுக்குடன் படப்பிடிப்புக்கும் உடன் சென்றார், டாக்டர். அவரால் முடியாதபோது, டாக்டரின் மூத்த தாரத்து மகன், ராமு வந்தார்.
திரும்பிப் பார் என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு, மைசூரில் நடைபெற்றது. அப்போது, சிலுக்கோடு சென்றவர், டாக்டரின் மகன் தான். சினிமாக்காரர்கள் மத்தியில் இந்த விஷயம் சலசலப்பை உண்டாக்கியது. ஆனால், சிலுக்குடன் தன் மகன் பற்றிய, 'கிசுகிசு'க்கள் வந்துவிடக் கூடாது என்பதில் உஷாராகவே இருந்தார், டாக்டர்.
சிலுக்குக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில், அவரை தன், 'டிவி' சீரியலில் நடிக்க வைக்க எண்ணினார், குட்டி பத்மினி. அதற்காக, சிலுக்கு வீட்டுக்கே போய், நடிக்க அழைப்பு விடுத்தார்.
அப்போது, 'டாக்டர் மகனுக்கு, உங்க சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால், நான் நடிக்கிறேன்...' என்றார்.
புலியூர் சரோஜாவின் ஒரே மகன், இளம் வயதில், சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். வாழ்க்கையே வெறுத்து, துடிதுடித்து போய் விட்டார், சரோஜா. சினிமா நடனத்துக்கும் முழுக்கு போட முனைந்தார். அப்போது, அவருக்கு ஆறுதல் சொல்லி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தவர், சிலுக்கு தான்.
'அக்கா... யாரு, எப்ப சாவாங்கன்னு யாருக்கு தெரியும்... நீங்க மட்டும் இருக்க போறீங்களா... நான் மட்டும் இருக்க போறேனா...' என, அப்போது, சிலுக்கின் வார்த்தைகளில் தெளிவு இருந்தது. ஆனால், நாளடைவில், அவரின் மனதில் இருந்த விரக்தியை, வார்த்தைகளில் உணர முடிந்தது.
— தொடரும்.
பா. தீனதயாளன்

