
ப
சென்னை, அண்ணாசாலை அலுவலகத்தை, 'தினமலர்' இதழ், 'வெக்கேட்' செய்தது, கடந்த ஆண்டு இறுதியில்.
அப்போது, அங்கிருந்த, பழைய, 'பர்சனல் பைல்'களை, சென்னை, ஒயிட்ஸ் ரோடு அலுவலகத்திற்கு எடுத்து வந்தேன். தேவை இல்லாத கடிதங்களை கழிக்கத் துவங்கினேன். அதில் ஒரு கடிதம், ஜே.எஸ்.மைக்கேலிடமிருந்து வந்திருந்தது. கடிதத்தில், ஆண்டு மற்றும் தேதி இல்லை.
'தினமலர்' ஆரம்ப காலத்திலிருந்தே செய்தித் துறையில் பணியாற்றியவர். பிற்காலத்தில், செய்தி ஆசிரியராகி ஓய்வு பெற்றவர்.
அவர், எழுதியிருந்த கடிதம்:
முதிர் வயதில், ஒருநாள் மாலை பொழுதில், சாய்வு நாற்காலியில் சாய்ந்து, அரைத் துாக்கத்தில் இருந்தபோது, 'தினமலர்' இதழில், என் பணி காலத்தில் நடந்த சில சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. அவை, எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
மலையாள மண்ணில் தான், தமிழ் நாளிதழாக, 'தினமலர்' துவங்கப்பட்டது. தமிழ் உணர்வோடு, தமிழ் மண்ணை மீட்கவே, குமரி மாவட்ட தமிழ் மேதை, டி.வி.ராமசுப்பையரால், கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில், 'தினமலர்' இதழ் துவங்கப்பட்டது. இமயமலையில், தமிழர் கொடியை தமிழ் மன்னன் நாட்டியது போல், இது அமைந்தது.
அன்றைய, கொச்சி முதல்வர், பட்டம் தாணுப்பிள்ளை அரசை எதிர்த்து, 'தினமலர்' இதழ் காட்டமாக தலைப்புகள் மற்றும் செய்திகளை வெளியிட்டது. திருவனந்தபுரத்தில் இருந்துகொண்டே இவ்வளவு காட்டமாக தலைப்புகள் போடவும், செய்திகள் வெளியிடவும் எப்படி முடிகிறது என்று, அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், ராஜ் பிரமுக், தம் செயலர் சிதம்பரம் பிள்ளையை அனுப்பி, தலைப்புகளின் காட்டத்தை சற்று குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், நிர்வாக ஆசிரியர், ராமசுப்பையர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இதற்கிடையே, பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை கவிழ்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. முன்னாள் முதல்வர், பட்டம் தாணுப்பிள்ளையும், மனோன்மணியம் சுந்தரனாரின் மகனும், முன்னாள் மந்திரியுமான நடராஜ பிள்ளையுடன், ஒருநாள், திடீரென, 'தினமலர்' அலுவலகத்திற்கு வந்தனர்.
எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம்.
'ஆச்சரியமாக இருக்கிறதா... அரசியலில் நிரந்தர நண்பர், பகைவர் என்று கிடையாது...' என்று, சிரித்துக் கொண்டே கூறினார், நடராஜ பிள்ளை.
'ஆசிரியர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள். அதனால் தான் இந்த வேகம். இளம் கன்று பயம் அறியாது அல்லவா...' என்று, பட்டம் தாணுப்பிள்ளை, தன் கம்பீரமான குரலில் கூறி, செய்தி ஆசிரியரின் முதுகை தட்டினார். இந்த ருசிகர நிகழ்ச்சி, 'தினமலர்' இதழுக்கு தானே!
நேருவுக்கு பின், லால்பகதுார் சாஸ்திரி பிரதமர் ஆனார். எல்லாம், காமராஜரின் முயற்சி தான். பார்த்தால், லால்பகதுார் சாஸ்திரி, சாத்வீகவாதி; மிகவும் சிறிய உருவம். காங்கிரஸ் குல்லா தான் எடுப்பாக காட்டும்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு போக்கால், இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. ஆயுத பலம் கணிசமாக நம்மிடம் இல்லை. ஆனால், தேச பக்தி மிகுந்த ஜவான்கள் இருந்தனர். 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற அற்புத கோஷத்தை, பிரதமர் முழங்கினார். இக்கோஷம், மக்களை தட்டி எழுப்பியது.
நம்மிடம் மிக நவீன விமானங்கள் இல்லை. ஆனால், மிக திறமை படைத்த விமானிகள் இருந்தனர். போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, ஒருநாள், நம் போர் விமானங்கள், பாகிஸ்தான் தலைநகர் நோக்கி புறப்பட்டு, லாகூரில் குண்டு மழை பொழிந்தது. சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்; லாகூர் வீழ்ந்தது.
'தினமலர்' இதழிலும், ஆங்கில தினசரிகளிலும், 'லாகூர் வீழ்ந்தது' என்று கடைசி செய்தி வந்தது. சமாதான பேச்சுக்கு, முன் வந்தது, பாகிஸ்தான். மாஸ்கோவில், 'தாஷ்கண்ட்' ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. ஆனால், நம் பிரதமர், லால்பகதுார் சாஸ்திரியின் ஆவி பிரிந்தது.
'பாகிஸ்தானை முற்றிலுமாக அடிக்க முடியவில்லையே என்ற கவலையில் தான், அவர் ஆவி பிரிந்திருக்க கூடும்...' என்று, அரசியல் விமர்சகர்கள் எழுதினர்.
'லாகூர் வீழ்ந்தது!' என்று தலைப்பிட்ட, 'தினமலர்' இதழுக்கு, இது புகழ் இல்லையா!
லால்பகதுார் சாஸ்திரி மறைவிற்கு பின், பிரதமரானார், இந்திரா. எல்லாம் காமராஜரின் சாதனை தான்.
இந்திரா பொறுப்பேற்ற சில ஆண்டுகளில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும், குமுறலும் அதிகரிக்கவே, என்ன நினைத்தாரோ, இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்து விட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், வாஜ்பாய் உட்பட எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும், இரவோடு இரவாக கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார்.
'இம்' என்றால் சிறைவாசம். 'ஏன்' என்றால் வனவாசம் எனும் நிலை உருவாயிற்று. அவசர நிலையை, 'தினமலர்' இதழும் எதிர்த்தது. எனினும், தமிழக செய்தி தணிக்கை அதிகாரி, எந்த செய்தியை பிரசுரிக்கலாம், எந்த செய்தியை பிரசுரிக்க கூடாது என்பது பற்றி, 'தினமலர்' ஆசிரியருடன் கலந்து ஆலோசித்தார். இது, 'தினமலர்' இதழுக்கு புகழ் இல்லையா!
இதற்கிடையே, சிறையில் அடைக்கப் பட்டிருந்த அரசியல் தலைவர்கள் கலந்து ஆலோசித்து, ஜனதா கட்சி என்ற புதிய ஐக்கிய கட்சியை அமைத்து விட்டனர். லோக்சபாவுக்கு பொது தேர்தல் நடத்தினால், இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும், ஜெயப்பிரகாஷ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 'தினமலர்' இதழ் தொலைநோக்குடன் அடித்துக் கூறி வந்தது.
'ஜெயப்பிரகாஷ்... ஜெயப்பிரகாஷ்... என்று கொட்டை எழுத்தில் எழுதுகிறீர்களே, இந்த ஜெயப்பிரகாஷ் யார்?' என்று, ஆசிரியருக்கு ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன.
'தம்மை பறைசாற்றிக் கொள்ள, ஜெயப்பிரகாஷ், டம்பாச்சாரியும் அல்ல, தகர டப்பாவும் அல்ல. மவுனமான தீவிர தேச பக்தர்...' என்று, 'தினமலர்' இதழ் தெளிவுபடுத்தியது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் இந்திராவுக்கு, திடீரென அரசியல் ஞானம் பிறந்தது. நெருக்கடி நிலையை ரத்து செய்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களை விடுதலை செய்தார். பொது தேர்தலுக்கு, தேதியையும் அறிவித்தார்.
பொது தேர்தலில், பெருந்தோல்வி அடைந்தார், இந்திரா; அவரது கட்சியும் அடியோடு சாய்ந்தது. ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
'தினமலர்' இதழின் தொலைநோக்கு பார்வை பலித்தது; இது, 'தினமலர்' இதழுக்கு கிடைத்த பெருமை.
அன்புடன், ஜே.எஸ்.மைக்கேல்.
'போலியோ' நோயால் பாதிக்கப்பட்டவர், மைக்கேல். எந்தவித உதவியும் இல்லாமல், சமாளித்து நடப்பார்.
ஒருநாள், நெல்லை அலுவலகத்தில், சிறுநீர் கழிக்கச் சென்ற இடத்தில், பாம்பு ஒன்று திடீரென்று வரவே, தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அதன் மீது வீசி விட்டு, அலறி அடித்தபடி, பாதிக்கப்பட்ட தன் அடுத்த காலையும் பயன்படுத்தி ஓடி, தப்பிவிட்டாராம்!
அவரது சொந்த ஊர், நாகர்கோவில்; பணி ஓய்வுக்கு பின், அங்கேயே, 'செட்டில்' ஆகிவிட்டார். நானும், லென்சும், நாகர்கோவில் செல்ல வேண்டிய ஒரு வேலை வந்தது.
லென்சிடம் அதைக் கூறினேன். அப்போது அவர், 'மைக்கேல் சாரையும் பார்த்துவிட்டு வரலாம்... அவர் ஒரு, 'உற்சாகபான' பிரியர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... இரண்டு, 'டபுள் பிளாக்' ஜானிவாக்கர் விஸ்கி, வாங்கி வந்து விடுகிறேன்...' எனக் கூறினார்.
நான் மறுப்பேதும் கூறவில்லை...
ஏனென்றால், எழுதுவது எப்படி என, எனக்கு கற்று கொடுத்தவர், மைக்கேல் சாரே!
அவரை சந்தித்தோம்... இரு பாட்டில்களை, லென்ஸ் அளித்து, ஆசி வாங்கிக் கொண்டார்!
கடைசியில் கேள்விப்பட்டது... இரண்டில் ஒன்றை, அவரது மருமகன், 'அடித்து'ச் சென்று விட்டார் என்பதையே!
இன்று, உலகில் இல்லை, ஜே.எஸ்.மைக்கேல்!