
ஜி.எஸ்.கலாவதி சந்திரசேகர், சென்னை: நல்ல அறிஞர்கள், விஞ்ஞானிகளுக்குக் கூட, மனைவி சரியாக அமைவதில்லையே...
நீங்கள் குறிப்பிட்ட இருவரும், அறிவு சேர்ப்பு, சிந்தனையிலும், புது கண்டுபிடிப்புகளில் மட்டுமே, தம் அறிவை செலுத்துகின்றனர்! இதனால், மனைவியர் துன்பத்துக்குள்ளாகி, மன வருத்தம் அடைந்து சோர்வடைகின்றனர்!
ஆனால், பெரிய சோகம் என்னவென்றால், அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும், குடும்பத்துப்பக்கம் திருப்பாமல் இருப்பது தான்!
* ஆர். பிரகாசம், திருவண்ணாமலை: பணம் உள்ளவர்களுக்குத் தான் காவல் துறையும், நீதிமன்றங்களும் சலுகை காட்டுமா?
பத்திரிகை செய்திகளை படிக்கும்போது, நீங்கள் சொல்வது, உண்மை என்றே தெரிகிறது!
ரகு பாலமுருகன், போளூர், திருவண்ணாமலை: காதலியோடு, நிலவை ரசிப்பது; கடல் அலைகளில் இருவரும் கால் நனைத்தபடி ரசிப்பது... இதில், எது சுகம்?
புதுச்சேரி கடற்கரையில், பாறையில், காதலியுடன் உட்கார்ந்தபடியே, கடலில் காலை வைத்து, அலைகளை ரசித்தபடியே, நிலவை பார்ப்பது, 'நம்பர் 1' என்கிறார், லென்ஸ் மாமா!
ர. பிரேமா, திருப்பூர்: இந்தியா முழுவதும் உள்ள, 'லெட்டர் பேடு' கட்சிகளை முடக்கி வைக்க, தேர்தல் ஆணையத்துக்கு, அதிகாரம் உள்ளதா?
இல்லை! அக்கட்சிகள், தமது, 'லெட்டர் பேடு' அச்சடிக்கவே கஷ்டத்தில் உள்ளன! அதுகளை பற்றி, 'டோன்ட் கேர்!'
ரா. மனக்காவலன், சென்னை: மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, ஒரே சேனலில், தொடர்ந்து, 'சீரியல்' பார்க்கிறார், மனைவி. என்னால் இதை சகிக்க முடியவில்லை. இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க வழி சொல்லுங்களேன்?
முதலில், 'கேபிள்'ஐ வேண்டாமென ஒதுக்குங்கள்; நல்ல நாவல்கள் வெளியாகின்றன... அவற்றை வாங்கிக் கொடுத்து, அவரது சிந்தனையை மாற்றுங்கள்!
- நடக்கிறதா பார்ப்போம்!
* கே. பாலமுருகன், பெருநாழி: நேரில் புகழ்ந்து பேசி, மறைமுகமாக கெடுதல் செய்யும் நட்புகளிடமிருந்து விலகுவதா அல்லது நேரடியாக பதில் கொடுத்து விடலாமா?
உங்களது முதலாம் எண்ணம் சரியானது; எதிரியை மேலும் வளர்த்துக் கொள்ளாமல் இருக்க உதவும்!