
இளம் பச்சை நிற குர்த்திக்கு பொருத்தமாக, துப்பட்டாவை தேடி எடுத்தபடியே, மாமியாரிடம் வந்தாள், பாமினி.
''அத்தை... இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கெளம்பணும்ன்னு சொன்னேனே... சமையல் முடிஞ்சுதா?''
''ஆச்சும்மா... காலைக்கு, நீ கேட்ட சாலட், பழச்சாறு... மத்தியத்துக்கு, நிறைய காய்கறி போட்ட, பாஸ்தா. என் கை, உப்பு கம்மியா இருக்கும்; கொஞ்சம் ருசி பாத்துடு,'' என்றாள், லலிதா.
''இல்ல, அத்தே... அதெல்லாம் ரொம்ப சரியா இருக்கும்... சமையல்ல, உங்களை அடிச்சுக்க யார் இருக்கா... 'பேக்' பண்ணிடுங்க நேரமாச்சு,'' என்றாள்.
''சரி... நீ கிளம்பு!''
''என்னம்மா, அப்படி மணக்குது... பாஸ்தாவா, பிரமாதம்,'' என, ருசித்தவன், ''எனக்கும் இதையே, 'லஞ்சு'க்கு வெச்சுடு... ஆங், ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேம்மா... உனக்கு, மரகதான்னு கல்லுாரி தோழி யாராவது இருந்தாங்களா?'' என்றான், மகன் லோகேஷ்.
முகம் மலர்ந்து, ''ஆமாம்பா... நெருக்கமான தோழி. உன்கிட்ட கூட நிறைய சொல்லியிருக்கேன் அவளை பத்தி... ஏம்பா?''
''அவங்களோட மகன், எங்க கம்பெனி சப்ளையர்மா... கார் இன்ஜின் தயாரிக்கிற நிறுவனத்துல, விற்பனை பிரிவுல இருக்கார்... அடிக்கடி வருவார்... நேத்து, யதார்த்தமா வீட்டு விஷயங்கள் பேசிட்டிருக்கும் போது, அவங்கம்மா ஊர், படிப்பு பத்தி சொன்னார். எனக்கு புரிஞ்சு போச்சு, உன் தோழியா இருக்க வாய்ப்பு இருக்கும்ன்னு!''
''அருமைப்பா... நானும், அவளும் நல்ல நட்போட இருந்தோம்... கல்லுாரியில ரெண்டு பேரும் ரொம்ப பிரபலம். பேச்சுப் போட்டி, ரங்கோலி, கவிதை மற்றும் மாணவர் தலைவர் தேர்தல்கள்ன்னு நாங்க பரபரப்பா இருப்போம்... உடனே, அவளைப் பாக்கணும் போல இருக்குப்பா,'' என்று குரலில் கசிவும், பரவசமும் கலந்து சொன்னாள், லலிதா.
''வர சனிக்கிழமை ரெண்டு பேருக்கும் விடுமுறைம்மா... பாமினியும், ராகுலும் வீட்டுல இருக்கட்டும்... உன் தோழி வீட்டுக்கு, நான் கூட்டிகிட்டுப் போறேன்!''
''அப்படியா, ரொம்ப தாங்க்ஸ்ப்பா... இன்னும் ரெண்டு நாள்ல சனிக்கிழமை வருதுல்ல?'' என்று குழந்தையை போல மகிழ்ந்தாள், லலிதா.
கல்லுாரி காலம் பற்றி நினைக்கும்போதெல்லாம், இதமான குளிர் பிரதேசத்திற்கு வந்துவிட்ட மாதிரி இருக்கும் லலிதாவிற்கு. வாழ்க்கையின் பொற்காலம் அது.
கூண்டில் அடைபட்ட கிளி போன்ற பள்ளிக்கூடத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர வானில் சிறகடித்து பறந்த, அந்த ஆண்டுகளை எப்படி மறக்க முடியும். நினைவின் அலமாரியிலிருந்து தினம் தினம் நுாறு பூக்கள், இன்னும் கூட மலர்ந்தபடியேதானே இருக்கின்றன!
படிப்பில் சுட்டியாக இருந்தது மட்டுமல்லாமல், பல கலைகளிலும் ஆர்வத்துடன் திரிந்த தினங்கள். கல்லுாரி சுவர்களுக்கு வெள்ளை அடித்து, ரக ரகமான ஓவியங்களை வரைய, பிரின்சிபாலிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி ஜெயித்த நாட்கள்.
'பெண்களுக்கு, நீளம் தாண்டுதல் போட்டியெல்லாம் எதற்கு?' என்று, எகத்தாளம் பேசிய, மேடத்தின் அறை வாசலில் நின்று, கோஷம் போட்ட நாட்கள். அவரை உணர வைத்து, 'விளையாட்டு என்பதில், ஆண் - பெண் வேறுபாடு இல்லை, சாரி...' என்று, கேட்க வைத்த நாட்கள்.
'புடவையும், பாவாடை தாவணியும் தான் அணிய வேண்டும்...' என்று, மறைமுக அழுத்தம் வந்தபோது, ஆங்கிலத்துறை தலைவராக இருந்த, மேடம் தலைமையில் போராடி, சுடிதாருக்கு அனுமதி வாங்கிய நாட்கள்.
சுற்றுலா பயணங்கள், தமிழகத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது, கல்லுாரி விதி. முதன்முறையாக மாணவிகள் குழு, அந்தமான் சுற்றுலா சென்றது. அந்த குழு, பத்திரமாக திரும்பி வந்தபோது, 'லலிதா, மரகதா... தலைவர்கள் தலைவர்கள்...' என்ற முழக்கம் மைதானத்தையே அதிர வைத்தது; கல்லுாரியே அதிர்ந்தது.
மரகதாவும், அவளும், ஒரே மனதுடன், அர்ப்பணிப்புடன், நோக்கத்துடன் செயல்பட்ட
அந்த கல்லுாரி நாட்களையும், பட்டம் பெற்று சிறிது காலம் வரை மட்டுமே தொடர்புகள் இருந்ததையும்... அதற்குப்பின் திருமணம், வீடு, கூட்டுக் குடும்பம், குழந்தைகள் என்று, வாழ்வின் பாதை வேறு திசையில் இட்டுச் சென்றதையும் நினைத்தபடியே இருந்தாள், லலிதா.
சனிக்கிழமைக்காக மனம், ஏங்கத் துவங்கி விட்டது.
''அட... இந்த ரோஜா கலர் காட்டன் புடவை ரொம்ப அழகா இருக்கே... கிளம்பலாமா அம்மா,'' என்றான், லோகேஷ்.
''நானும், மரகதாவும் ஒரே மாதிரி வாங்கின புடவை இது... கிளம்பலாமா?'' என்றாள்.
'மரகதா எப்படி இருக்கிறாய். என்னை போலவே நீயும் வாழ்க்கைத் துணையை இழந்து விட்டாய். ஆனால், என்னைப் போலவே அருமையான மகனை அடைந்திருக்கிறாய். காலம் நம்மை கனிவுடன் நடத்துகிறது இல்லையா...' என, நினைத்துக் கொண்டாள்.
வீடு எளிமையாக இருந்தது. வாசலில் புங்க மரம் நிழலை தந்து, குடை விரித்திருந்தது.
ஓடி வந்து, இறுக அணைத்துக் கொண்டாள், மரகதா.
''வா, லல்லி... தம்பி லோகேஷ், உள்ளே வாப்பா... அய்யோ, லல்லி, நீ அப்படியே ராணி மாதிரியே இருக்கே... வா... வா,'' என்று பரபரத்தாள்.
காபி, டிபன் உபசாரம் முடிந்தது.
கலைந்து கிடந்தன துணிகள்; இறைந்து கிடந்தன புத்தகங்கள்.
''ரூம்ல உட்கார்ந்து பேசலாம்... வா,'' என்று, கையைப் பற்றி இழுத்து போனாள், மரகதா.
வறண்டு போன விரல்களை போலவே, அவள் முகமும், உடலும் மிகவும் தளர்ந்திருந்தன. அந்திமாலையின் மெல்லிய சிவப்பில் எப்போதும் வனப்புடன் இருந்த முகமா இது என்று, லலிதாவுக்கு திகைப்பேற்பட்டது. குளிர் நிலத்தில் வளமாக இருந்த மலைவாசியை, பாலைவனத்தில் அழைத்து வந்து விட்டதை போல, ஒட்டாமல் இருக்கும் தன்மை தெரிந்தது.
''நிம்மதியாவே இல்ல, லல்லி...'' என்று ஆரம்பித்து, பெருமூச்சுடன், ''கல்யாணமாகி வந்தபோது, மாமியாருக்கு பயந்து வேலை செய்தேன். இப்போ, மருமகளுக்கு பயப்படறேன். எது செஞ்சாலும் குறை. மாமியார் காலத்துலயும் அப்படித்தான்.
''காலை, 5:00 மணிக்கு எழுந்து, தலைக்கு குளிச்சு, பில்டர் காபி போடணும். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி மோர்க்குழம்பும், பருப்புசிலியும் தான் பண்ணணும். 'காம்பினேஷன்' மாத்தக் கூடாது. நாத்தனார்கள் மனம் கோணாம நடந்துக்கணும். இப்படியே, 20 வருஷம் ஓடிப்போச்சு...
''மகன் வளர்ந்து கல்யாணமாகி, மருமகள் வந்துட்டா... இப்போ, அவளுக்கு பணிவிடை செய்கிற மாதிரி இருக்கு நிலைமை. பெரிய படிப்பு, வேலை மற்றும் அதிக சம்பளம். மகனுக்கு சமமா சம்பாதிக்கிறா. காலைல சீக்கிரமா போய்ட்டு, ராத்திரி லேட்டா தான் வரா. அரிசி உப்புமா, மோர்க்களி சாப்பிட மாட்டா. நுாடுல்ஸ், பரோட்டன்னு அவளுக்கு பிடிச்சதா பண்ண கத்துகிட்டேன்.
''இதுல எனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்ல... மத்தவங்க விருப்பத்துக்கு ஒப்புக் கொடுக்கிற மாதிரியே ஆகிபோச்சு, என் வாழ்க்கை. இத்தனை கஷ்டங்களுக்கு அப்புறமும், ஏன் மூச்சு விட்டுகிட்டிருக்கேன்னு தெரியல,'' என, கண்ணீருடன் குரல் தழுதழுக்க, உடைந்து அழும் தோழியை, தோளில் தாங்கி, முதுகை வருடிக் கொடுத்த, லலிதா தொடர்ந்தாள்...
''கல்லுாரி காலத்துல, நாம எப்படி இருந்தோம்... 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்' என்கிற பாரதி பாடலைத்தானே சுமந்து திரிஞ்சோம். எதையாவது சாதிக்கணும்னு தானே, சகலகலாவல்லியாக உருமாற முயற்சி பண்ணினோம். 'புதிய தலைமுறை பெண்கள் நாங்கள்'ன்னு, மார்தட்டி வளைய வந்தோம்.
''ஆனால், நம்மால முழுசா எதையும் அடைய முடியலே... எண்ணம் இருந்த அளவுக்கு செயல்ல தீவிரம் இல்ல. கட்டுப்பெட்டித்தனம் தாண்டி வளரணும்னா, எவ்வளவு வலிமையா போராடணுமோ, அவ்வளவு உறுதியா போராடவே இல்ல.
''ஆனா, இந்த தலைமுறை, எல்லா கனவுகளையும் நனவாக்க, அழுத்தமா போராடி ஜெயிக்குது. பெண் என்பவளாலயும் எல்லாம் முடியும்ன்னு, செயல்கள்ல செஞ்சு காட்டுகின்றனர். மருமகள் தான், நம் கனவின் செயல்வடிவம், மரகதா.
''இது, காலம் செய்கிற அற்புதமான புரட்சி. அதாவது, நடக்க வேண்டிய நியாயமான மாற்றங்களை, நம்மை போன்ற பெண்களால் செய்ய வைக்குது. இரண்டு துருவங்களை இணைக்கிற, மலர் பாலமா நம்மை மாற்றுகிறது. சிரமங்கள்ன்னு நினைக்காம, பொறுப்புகளை உணர்ந்து, நம் தலைமுறை பெண்கள் சுமந்து வந்ததால தான், அடுத்த தலைமுறை பெண்களுக்கு, பாதைகள் சுலபமாக இருக்கு...
''உண்மையில் இது ஒரு சமூக மாற்றம். மூத்த தலைமுறை பெண்களின் மனப்பூர்வமான ஆதரவோட நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமுதாய மாற்றம், இந்த பெண்கள் முன்னேற்றம். இன்னும் ஒண்ணு சொல்லட்டுமா, மரகதா...
''வாழ்க்கையின் ரகசியங்களில், அழகான ரகசியம் என்ன தெரியுமா... மற்றவர்களுக்காக செய்கிற எல்லா செயல்களும், உண்மையில் மிக மதிப்பு வாய்ந்தவை என்கிற ரகசியம் தான்,'' என, முடித்தாள், லலிதா.
மரகதா, வியப்புடன் தோழியை பார்த்தாள். ஏதோ வானத்தை பார்ப்பது போல இருந்தது அவளுக்கு.
வானதி