
சிவகார்த்திகேயனின் அடுத்த, 'டார்கெட்!'
தன்னையும், முன் வரிசை கதாநாயகனாக உயர்த்தி காட்டி விட வேண்டும் என்பதற்காக, முன்னணி, கதாநாயகியரை, தனக்கு ஜோடியாக்கி வருகிறார், சிவகார்த்திகேயன். அதோடு, பாலிவுட் வில்லன்களை, தன் படங்களில் நடிக்க வைத்து, இந்திய அளவில், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், 'ரிஸ்க்' எடுக்கிறார். இப்படி, பாலிவுட் நடிகரை நடிக்க வைப்பதால், படத்தின் பட்ஜெட் எகிறும்போது, தன் சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை விட்டுக்கொடுத்தும் வருகிறார், நடிகர்.
சினிமா பொன்னையா
த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்!
சில ஆண்டுகளுக்கு முன், தன் குளியலறை புகைப்படம் ஒன்று வெளியானதை அடுத்து, எந்த ஓட்டல்களுக்கு சென்றாலும், எங்காவது ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்த பின்னரே, உள்ளே காலடி எடுத்து வைப்பார், த்ரிஷா. அப்படி, அவர் கண்ணும் கருத்துமாக இருந்தபோதும், சமீபத்தில், ஓட்டல் அறை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று, 'சோஷியல் மீடியா'வில் எப்படியோ வெளியாகி விட்டது.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அந்த ஓட்டலுக்கு விரைந்த, த்ரிஷா, 'நான் ஓட்டல் அறையில் படுத்திருந்ததை, யார் படமெடுத்து வெளியிட்டது...' என்று, ஊழியர்களிடம் தகராறு செய்தவர், 'இனி, தப்பித் தவறி கூட, உங்கள் ஓட்டல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன், குட் பை...' என்று, சொல்லி, வந்து விட்டார். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்!
— எலீசா
பரபரப்பு தீயை கொளுத்திப் போட்ட, ராஷ்மிகா!
தமிழ் சினிமாவில், ராஷ்மிகா நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் தமிழக இளைஞர்களின் இதயத்துடிப்பாகி விட்டார். அதோடு, தான் அளித்த ஒரு பேட்டியில், 'நடிகர், விஜயை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்...' என்றொரு அதிரடி பதிலை சொல்லி, வந்த வேகத்திலேயே, கோடம்பாக்கத்தில், பரபரப்பு தீயை கொளுத்தி போட்டுள்ளார். கிடக்கிறது குட்டிச்சுவர்; கனா காண்கிறது மச்சு வீடு!
— எலீசா
மகனை வளர்த்து விடும், விக்ரம்!
சிவாஜிகணேசன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள், அவர்களின் வாரிசுகளை, ஆரம்பத்தில் தங்களது படங்களில் நடிக்க வைத்து, வளர்த்து விட்டனர். அதுபோன்று, விக்ரமும், ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான, மகன் துருவ் விக்ரமை, அடுத்து, தான் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்கிறார். அந்த படத்தில், தன்னை விட, மகனுக்கே, கதையில் கூடுதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், பல இயக்குனர்களை அழைத்து, தீவிரமாக கதை கேட்கும், விக்ரம், 'மகன் துருவ் விக்ரமை, 'ஆக் ஷன் ஹீரோ' ஆக்கப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை
சண்டக்கோழி நடிகரை காதலித்து வந்த அந்த வாரிசு நடிகை, வேறு பெண்ணுடன் நடிகருக்கு, நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து, தானும் சண்டைக்கோழியாகி விட்டார். அதையடுத்து, நடிகரை எக்குத்தப்பாக வசைபாடி வந்தார்.
இதனால், கடுப்பான நடிகர், தன் செல்வாக்கை பயன்படுத்தி, அம்மணிக்கு வர இருந்த புதிய படங்களை தடுத்து நிறுத்தி, அவரது மார்க்கெட்டையே ஆட்டம் காண வைத்து விட்டார். ஆனபோதும், அசரவில்லை நடிகை. மேற்படி நடிகரின் எதிர், 'பார்ட்டி' நடிகர்களை சந்தித்து, பட வேட்டை நடத்தி, சில படங்களை கைப்பற்றியிருக்கிறார்.
அதோடு, மேற்படி நடிகர் தயாரித்து, நடித்த, இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டதை அடுத்து, சமீபத்தில், தன்னைப் போலவே, அவருக்கு எதிரிகளாக இருக்கும், சில நடிகர்களை அழைத்து, சண்டக்கோழியின் தோல்வியை, 'பார்ட்டி' கொடுத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், நடிகை.
'ஏண்டி வரலட்சுமி... பள்ளி மாணவ தலைவனாக, விஷால் நிற்பதை, எதிர்த்தே... இதனால், அவன் கோபமாகி, உன்னையும் அந்த பதவிக்கு போட்டியிடுவதை எப்படியோ தடுத்து நிறுத்திட்டான். இப்ப... அவன், அந்த தேர்தலில் தோற்று விட்டதை அறிந்து, 'பார்ட்டி' வைச்சு கொண்டாடுறியே... இது, உனக்கே நியாயமா இருக்கா...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* அஜீத்தின், வலிமை படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில், ரசிகர்கள் முற்றுகையிடுவதால், நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்படுகிறது.
* 'கேரக்டர் பிடித்திருந்தால், 50 வயது வேடத்தில் கூட தயங்காமல் நடிப்பேன்...' என்கிறார், வரலட்சுமி.
* பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து, தனுஷுடன் நடிக்கும் புதிய படத்திலும், நெல்லை தமிழ் பேசி, நடிக்கப் போகிறார், யோகிபாபு.
அவ்ளோதான்!