/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அனுமதியின்றி, அடுத்தவர் பொருளை எடுத்தால்?
/
அனுமதியின்றி, அடுத்தவர் பொருளை எடுத்தால்?
PUBLISHED ON : ஜன 26, 2020

'வீதியில் கிடந்தாலும், நமக்கு உரிமையில்லாத பொருளை எடுக்கக் கூடாது...' எனும், மாபெரும் வாழ்வியல் உண்மையைச் சொல்லிக் கொடுத்தவர்கள், நம் முன்னோர்.
இதை, 'அபரிக்கிரகம்' என்று, விரிவாக விவரிப்பார், காஞ்சி, மகா சுவாமிகள்.
நற்குணங்களும், கருணையும் நிறைந்தவர், சிந்து தேச மன்னர். குடி மக்களை, தன் சொந்த மக்களை போல் பாதுகாத்து வந்தார்.
ஒரு சமயம், வேட்டையாட போனார், மன்னர். வேட்டை நீண்ட நேரம் தொடர்ந்தது. களைத்துப்போன, மன்னர், காட்டிலிருந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார். அங்கே, பெருமாள் பூஜைக்காக, உணவு பொருட்கள், -தண்ணீர் என, தயாராக வைக்கப் பட்டிருந்தன. அவற்றைப் பார்த்த மன்னர், வெகு நேரம் மிக பொறுமையாக இருந்தார்.
பசியும், தாகமும், மன்னரை வாட்ட, கண்களுக்கெதிரில் இருந்தவைகளை எடுத்து, உண்டு விட்டார்.
அந்த நேரம் பார்த்து, ஆசிரமத்திற்குள் நுழைந்தார், காலவ முனிவரின் குமாரர், குசானனர். மன்னரின் செயலை கண்டவருக்கு, கோபம் தாங்கவில்லை.
'பகவான் விஷ்ணுவின் ஆராதனைக்காக வைத்திருந்தவைகளை, கவர்ந்து கொண்ட நீ, நாயாக மாறுவாய்...' என, சாபம் கொடுத்தார்.
'முனிவர் பெருமானே... அறியாமல் நிகழ்ந்த தவறை மன்னித்து, சாப விமோசனம் அருளுங்கள்...' என வேண்டினார், மன்னர்.
'மன்னா... சிறந்த தீர்த்தம் ஒன்றில் நீராடும்போது, இந்த சாபம் விலகும்...' என்று, சாப விமோசனம் அளித்தார்.
நாயாக மாறி, ஆசிரமத்தை விட்டு வெளியேறினார், மன்னர்.
சற்று நேரத்தில், அந்த காட்டின் பக்கமாக வந்த கூத்தாடி ஒருவர், நாயின் அழகில் மயங்கி, தன்னுடன் அழைத்து போனார்.
ஒரு சமயம்... வெயிலின் கொடுமை தாங்காமல், ஒரு சோலையில், நாயுடன் புகுந்தார். அங்கிருந்த சேற்றுத் தாமரை எனும் தீர்த்தத்தில் நீராடினார்; அவருடன், நாயும் நீராடியது.
அதே வினாடியில், குசானன முனிவரின் வாக்குப்படி, நாயாக இருந்தவர், மன்னராக மாறி நின்றார்; அதை பார்த்து வியந்தார், கூத்தாடி.
தான் சாபம் பெற்ற நிகழ்வை விவரித்தார், மன்னர்.
'மன்னா... பல ஊர்களுக்கும் சுற்றித்திரிந்து, நீராடினோம். எங்கும் தீராத சாபம், இங்கு தீர்ந்திருக்கிறது என்றால், இதன் மகிமையை என்னவென்று சொல்வது...' என்று கூறினார், கூத்தாடி.
'ஐயா... ஆதரிப்பாரின்றி காட்டில் அலைய வேண்டிய என்னை, இத்தனை நாட்களாக பாதுகாத்து, உணவும் தந்த நீங்கள், தந்தைக்கு சமமானவர்...' என்று சொல்லி, தன் நாட்டுக்கு அழைத்து வந்தார், மன்னர்.
விபரம் அறிந்த மக்கள், மன்னருக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பளித்தனர்.
கூத்தாடிக்கு பெரும் பரிசளித்து, அவரை பல்லக்கில் ஏற்றி, வழியனுப்பினார், மன்னர்.
'அடுத்தவர் பொருளை அனுமதியில்லாமல் எடுக்காதே-...' என்று, பாடம் புகட்டிய கதையிது.
தவறு செய்த மன்னரின் சாபம் தீர்த்த இத்திருத்தலம், திருநெல்வேலி- - நாங்குநேரியில் உள்ளது. பெருமாளின் பெயர், தோத்தாத்திரிநாதர் -- தெய்வநாதர். தாயார், வரமங்கை. இந்த தீர்த்தத்திற்கு, சேற்றுத் தாமரை எனப் பெயர்.
பி. என். பரசுராமன்