sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சிங்கப்பூர் ராமநாதன்!

/

சிங்கப்பூர் ராமநாதன்!

சிங்கப்பூர் ராமநாதன்!

சிங்கப்பூர் ராமநாதன்!


PUBLISHED ON : செப் 18, 2011

Google News

PUBLISHED ON : செப் 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இவரது பெயர் ராமநாதன். இவர் அப்பாவின் பெயர் செல்லப்பன். முழுப்பெயர் செல்லப்பன் ராமநாதன். பெயரைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால், ராமநாதன், நாதன் ஆனார். என்ன காரணம்?

'பால்ய சிநேகிதர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள், மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமோ என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். 'ராமா முதலில் வரட்டுமா, கடைசியில் வரட்டுமா?' என்று கேட்டனர். அவர்களின் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். 'நாதன் என்று அழைப்பது தான் சுலபமாக இருக்கிறது...' என, நண்பர்கள் முடிவு செய்தனர்; மறுக்க முடியவில்லை. அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டது...' என்கிறார் நாதன்.

இனிஷியல் வேண்டுமல்லவா? அதனால், செல்லப்பன் ராமநாதன் பெயரைச் சுருக்கி, எஸ்.ஆர்.நாதன் ஆனார்.

சிங்கப்பூரின் அதிபராக, ஜனாதிபதியாக, 12 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெற்ற இவருக்கு வயது, 87.

இவருடைய துணைவியார் ஊர்மிளா, இந்திய வங்காளி வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள், மகன், மூன்று பேரப் பிள்ளைகள்.

எஸ்.ஆர்.நாதன், மலாயா பல்கலைக்கழகத்தில், சமூகவியல் படித்து, 1954ல் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு, அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் நீளும். பல நிறுவனங்களில் உயர் பதவிகள். சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம், இந்தியர் மேம்பாட்டுச் சங்கப் பணிகள். மலேசியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கான சிங்கப்பூர் தூதர் பதவிகள்!

'என், 12 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தில் மறக்க முடியாத அனுபவம் என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியாது. எதையுமே மறக்க முடியாது...' என்கிறார் எஸ்.ஆர்.நாதன். அனுபவங்களின் தொகுப்பு நூலை விரைவில் வெளியிடவிருக்கிறார். வசதி குறைந்தவர்கள், உதவி தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக, 2000ல் அதிபர் சவால் அறநிதியை ஏற்படுத்தினார்.

'சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்திய சமுகத்தினர், 8 -9 சதவீதம் உள்ளனர். இந்த இலக்கை அடையவே நீண்ட காலமானது. இந்த எண்ணிக்கை உயர, நம் பிள்ளைகள் படிப்பிலும், தொழிலிலும் முன்னேறுவதற்கு பெற்றோர் பாடுபட வேண்டும். 'டிவி' பார்க்கும் பழக்கம் இன்றைக்கு அதிகரித்து விட்டது. முன்னேற்றத்துக்கு அது தடையாக இருக்கக் கூடாது. டாக்டராக வேண்டும், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று எல்லா பிள்ளைகளும் நினைக்கும் போக்கு வேண்டியதில்லை. பல துறைகளிலும், முன்னேறும் இலக்குடன் அவர்கள் படிக்க வேண்டும்...' என்கிறார் எஸ்.ஆர்.நாதன்.

'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1943 ஜூலை மாதம் சிங்கப்பூர் பாடாங் திடலில் ஆற்றிய உரையை கேட்டு எழுச்சி பெற்றது, மறக்க முடியாத அனுபவம்...' என்றார் அவர். நேதாஜியின் கொள்ளுப் பேரன் சுகாதா போஸ் எழுதிய நூலை, கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் வெளியிட்டுப் பேசினார்.

சிங்கப்பூரின் ஆறாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன், ஆகஸ்ட் 1999ல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால், 2005 ஆகஸ்டில் மீண்டும் பதவிக்கு வந்தார்.

தைவானைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வெண்கலச் சிலையை வடிவமைத்து வழங்கினார். அவருடைய முக உருவம் கொண்ட சிலையை வடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்ததாக செர்ன் லியன் ஷான் என்ற அந்த, 58 வயது சிற்பி கூறினார்.

எஸ்.ஆர்.நாதன் ஒரு பழைய கடிகாரத்தையே எப்போதும் கையில் கட்டிக் கொண்டிருக்கிறார். 'முப்பது வருஷத்துக்கு முன், 1980ல் என் மாமனார் தந்த அன்பளிப்பு இது. இன்று வரை இந்தக் கடிகாரத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகிறேன்...' என்கிறார்.

கண்ணதாசன் கவிதைகள் இவருக்கு மிகவும் பிடித்தமானது. ஓய்வு நேரத்தில் அந்தப் பாடல்களைக் கேட்பது வழக்கம்.

'அதிபர் பதவிக்காலம் நிறைவு பெற்றாலும், எப்பவும் போலவே இருக்கிறேன். ஓய்வாக இருக்கக் கூடாது; ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வுக் கழகங்கள், சமூக அமைப்புகளில் தொடர்பு இருப்பதால், வீட்டிலேயே ஓய்ந்திருக்காமல், அங்கெல்லாம் சென்று வருகிறேன்...' என்கிறார் எஸ்.ஆர்.நாதன்.

***

ஜே.எம். சாலி






      Dinamalar
      Follow us