PUBLISHED ON : பிப் 06, 2011

பேட்மா நகரம் —
திருவைகுண்டத்தில் இருந்து கிழக்கே ஆறு கிலோ மீட்டரில் உள்ள குக்கிராமம் அது. பெருங்குளம் எனும் பெரியகுளம். அவ்வூரை மூன்று புறமும் சூழ்ந்திருப்பதால், அது தீபகற்பம் போலவே காட்சியளிக்கும்.
இந்தியா சுதந்திரத்துக்குப் போராடிய நாட்களில், 'பேட்மா...' எனும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரே இங்கு வந்து முதன் முதலாகக் குடியேறினார். அவரது சந்ததிகளே பல்கிப் பெருகி, இன்றைக்கு ஒரு கிராமமாக உருவெடுத்துள்ளது.
பேட்மா நகரம் உருவாகி நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, ஒரு மலர் வெளியிட நிர்வாகம் முடிவு செய்தது. மலர் வேலைகளை யாரை கவனிக்கச் சொல்லலாம் என யோசித்த வேளையில், நிர்வாகத்தில் ஒருவர், 'நம்ம கமாலை சொல்லலாம்...' என, என்னை முன்மொழிந்திருக்கிறார்.
எனவே, நிர்வாகம் என்னைக் காண ஒரு அதிகாலையில் வீட்டுக்கு வந்தது.
''கமால் பாய்... அஸ்ஸலாமு அலைக்கும்!''
''வஅலைக்குமுஸ்ஸலாம்... வாங்க!''
''நல்லாயிருக்கீங்களா?''
''ஆமா... என்ன விஷயமா?''
''நம்ம ஊர் பிறந்து நூறு வருஷமாகுது. அதற்காக ஒரு மலர் வெளியிடலாம்ன்னு நிர்வாகம் முடிவு செஞ்சிருக்கு. அதை நீங்கள் தான் கவனிக்கணும்!''
''நானா... எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாதே!''
''அப்படிச் சொல்லக்கூடாது... நீங்க தான், நம்ம மதரசா குழந்தைகளுக்கு பாட்டு, பேச்சு, வினாடி - வினான்னு நெறைய எழுதிக் கொடுக்கிறீங்க. அது ரொம்ப நல்லாயிருக்கு. அதனால, நம்ம ஊருக்காக நீங்க இதைச் செய்யணும்!''
கொஞ்சம் பிகு செய்த பிறகு, சம்மதித்தேன்.
உண்மையில் நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை. மதரசா குழந்தைகளுக்கு எழுதிக் கொடுத்தது, அங்கங்கே காப்பியடித்தது. அந்த ரகசியம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, என்ன செய்யலாம் என யோசித்தேன். எழுத்தாளர்களைப் பார்த்து கட்டுரை வாங்கலாம். ஊர்ப் பெரியவர்களை விசாரித்து, ஊரைப் பற்றி எழுதலாம். வழக்கம் போல எங்கிருந்தாவது, 'சுட்டு' சில விஷயங்களை எழுதலாம். மளமளவென எண்ணங்கள் உதித்தன.
மறுநாள் நண்பன் முபாரக்கை சந்தித்தபோது, மலர் பொறுப்பை நான் ஏற்றிருப்பதைச் சொல்லி யோசனை கேட்டேன்.
''எப்படிச் செய்யலாம்?''
''உன் யோசனைப்படி செய்... அதோட, கதிரவன்னு ஒரு நாவல் எழுத்தாளர் இருக்கிறார் தெரியுமா?''
''சின்ன வயசில அவரோட கதைகள் படிச்சதா ஞாபகம்.''
''அவரு கிட்டே ஒரு கதை வாங்கிப் போடு.''
''அவருகிட்டயா?'' அவரு முஸ்லிம் இல்லியே... முஸ்லிம் மலர்ல எப்படிப் போடுறது?''
''அவரு முஸ்லிம் தான். 'ஷம்சு'ங்கிற பேரை, இலக்கியத்துக்காக, 'கதிரவன்'னு வெச்சிருக்கார்.''
''அப்படியா?''
''ஆமாம்!''
''அவருகிட்ட எப்படி தொடர்பு கொள்வது?''
''அவரு, சென்னைபுரில, என்னோட மச்சான் ஆபிஸ் பக்கம் தான் இருக்காரு. போன் நம்பர் வாங்கித் தர்றேன்.''
சொன்ன மாதிரியே, இரண்டு நாட்களில் போன் நம்பர் வாங்கித் தந்தான் முபாரக். நான் தயக்கத்தோடு அவரைத் தொடர்பு கொண்டேன்.
''ஹலோ... கதிரவன் சாரா?''
''ஆமா... நீங்க?''
''நான் பேட்மா நகரத்தில் இருந்து கமால்... அஸ்ஸலாமு அலைக்கும்.''
''வஅலைக்குமுஸ்ஸலாம்.... என்ன விஷயம்?''
''எங்க ஊரு பிறந்து நூறு வருஷமாகுது. அதையொட்டி ஒரு மலர் போடப் போறோம். அதுல உங்கள் கதையும் வரணும்ன்னு விரும்பறோம். இன்ஷா அல்லாஹ்... அதற்கான சன்மானம் அனுப்பி வைக்கிறோம்.''
''ரொம்ப சந்தோஷம். இஸ்லாமிய மலர் என்பதால், இஸ்லாமியக் கதையா எழுதலாம்ன்னு நினைக்கிறேன். இப்ப, ரொம்ப பிரச்னையாயிருக்கிற ஜீவனாம்சம் பத்தி எழுத நினைக்கிறேன். எனக்கு, சன்மானத்துக்குப் பதிலா, ஜீவனாம்சம் சம்பந்தமான மார்க்கச் சட்டம் அடங்கிய புத்தகம் அனுப்பினா போதும்.''
''ரொம்ப நன்றி... அஸ்ஸாலாமு அலைக்கும்.''
''வஅலைக்கு முஸ்ஸலாம்.''
இரண்டு நாட்களாக அலைந்து, 'முஸ்லிம் லா' எனும் புத்தகமும், ஓர் ஆலிம் எழுதிய, 'ஜீவனாம்சம் - ஓர் பார்வை' எனும் கட்டுரையையும் அனுப்பி வைத்தேன். பெற்றுக் கொண்டு, 'ஜீவனாம்சம்' எனும் தலைப்பிலேயே ஒரு கதையை அனுப்பி வைத்தார். கதை மிகவும் அற்புதமாயிருந்தது.
மலர் வெளியீடு மிக விமரிசையாய் நடந்தது. அதில், ஜீவனாம்சம் கதையைப் பற்றியும், மலர் தொகுத்த என்னைப் பற்றியும் வெகுவாகப் புகழ்ந்தனர். ஊருக்குள் எனக்கு மரியாதை கூடியது.
இரண்டு வாரங்கள் கழித்து, கதிரவன் சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது.
''என்ன கமால் பாய்... நல்லாயிருக்கீங்களா?''
பெரிய எழுத்தாளரே என்னைத் தேடி அழைத்தது, எனக்கு என்னவோ போல் இருந்தது. சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.
''என்ன கமால் பாய்... பேச்சைக் காணலே?''
''சந்தோஷத்துல பேச்சே வரல சார்... நீங்க நல்லாயிருக்கீங்களா?''
''ஆமா... ரொம்ப நல்லாயிருக்கேன்.''
''என்ன விஷயமா?''
''மலர் வந்துடுச்சு... நல்லாயிருக்கு. அதோட சில மார்க்கப் பிரச்னைகள் சம்பந்தமா சில விவரங்கள் வேணும்; கடிதம் அனுப்பறேன். படிச்சிட்டு விவரங்கள் அனுப்பி வச்சா நல்லாயிருக்கும்.''
''கண்டிப்பா அனுப்பறேன்.''
கதிரவனிடம் இருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைப் படித்ததும், என்னை மிகப்பெரிய ஆலிம் என நினைத்துக் கொண்டதாகவே தோன்றியது. காரணம், கடிதத்தில் கேட்டுள்ள விளக்கங்கள் ஒவ்வொன்றும், அவ்வளவு ஆழமான விஷயங்கள்.
என் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக முயற்சித்தேன். எனக்குத் தெரிந்த ஆலிம்களிடம் விவரங்கள் சேகரித்தேன். அவருக்குப் பதில் அனுப்பினேன். ரொம்பவும் சந்தோஷமடைந்தார்.
எங்களின் நெருக்கம் கூடியது. வாரம் ஒரு முறை, தொலைபேசியில் பேசினோம். இருவருக்கும், ஒருவரையொருவர் காண வேண்டும் என்ற ஆவல் கூடிக் கொண்டே இருந்தது. அந்த நாளுக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். திடீரென அந்த நாளும் வந்தது.
நாகர்கோவிலில் ஒரு பத்திரிகையாளருக்குத் திருமணம். அங்கே இருவரும் சந்திக்கலாம் எனப் பேசினோம். நாகர்கோவில் மங்கை லாட்ஜின் தரைத் தளத்தில், கதிரவன் எனக்காக காத்திருந்தார். ஓடிச்சென்று கை குலுக்கினேன். நீண்ட நேரம் என் கையை விடவேயில்லை. ஒரு பெரிய எழுத்தாளரின் நெருக்கத்தில் நான் இருக்கிறேன் என்ற கர்வம் வந்தது.
அறைக்குள் இருவரும் சென்றோம். பேசிக் கொண்டே இருந்தோம். அவரை நான் அளந்தேன். சராசரி உயரம். எக்ஸ்ரே கண்கள். மாநிறம். கறுப்பு நிற பேன்ட்டும், சந்தனக் கலர் சட்டையும் அணிந்திருந்தார். கண்களைப் பார்த்துப் பேசினார். யோசிக்கும்போது, கண்களை மூடிக் கொண்டார். படிக்கும்போது கண்ணாடி பயன்படுத்தினார்.
அவர் என்னைப் பார்த்தார். வெள்ளை நிறக் கைலியும், முழங்கால் அளவு ஜிப்பாவும் அணிந்திருந்தேன். தலையில் வெள்ளை நிறத் தொப்பி. கண்களில் பவர் கிளாஸ். கறுப்பு, வெள்ளை கலந்த தாடி. படபடப்பாயிருந்தேன். குறைவாகப் பேசி, அவர் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தேன்.
''நீங்க ஆலிமா?'' - கதிரவன் கேட்டார்.
''இல்லையே... ஏன்?''
''ஒரு ஆலிமோட கெட்டப்புல இருக்கீங்க?''
''எனக்கு, 'தப்லீக் ஜமாத்'துல ஈடுபாடு அதிகம்; அதனாலதான் இந்த கெட்டப். இது, ஆலிம் மாதிரியே தோணும்.''
நிறைய விஷயங்கள் பேசினோம். எங்கள் பேச்சு, இலக்கியம் பற்றித் திரும்பியது.
''நீங்க ஏதாவது எழுதியிருக்கீங்களா பாய்?''
''ஆர்வக் கோளாறுல ஒரு சில கதைகள் எழுதி இருக்கேன். ஆனா, எந்தப் பத்திரிகைக்கும் அனுப்ப தைரியமில்லை.''
''ஊருக்குப் போயி எனக்கு அனுப்பி வைங்க. பிரசுரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்.''
திருமணத்திற்கு நேரமானதால், அங்கிருந்து மண்டபம் சென்றோம். திருமணத்தில் கலந்து, ஒன்றாய் உணவருந்தி விட்டு, ஊர் வந்து சேர்ந்தேன். வந்ததும் முதல் வேலையாய், 'உயிர் தப்பிய சிறுவன்' எனும் என் கதையை அனுப்பி விட்டு, பதிலுக்காய் காத்திருந்தேன்.
கதிரவன் சாரிடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது. ஆவலோடு பிரித்தேன். என் கதையை, சில பல திருத்தங்களோடு அனுப்பியிருந்தார். கூடவே ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தை பிரித்தேன்.
அன்புள்ள கமால் பாய் அறிய...
கதையில் திருத்தங்கள் செய்துள்ளேன். இரட்டை மேற்கோள், கேள்விக்குறி, ஆச்சரியக்குறி இவைகள் எங்கேயும் இல்லை. இவைகள் இருந்தால்தான், வசனம் முழுமை பெறும். எனவே, ஒரு முறைக்குப் பலமுறை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்து, வசனம் எழுதவும். தேவையானால், வெட்டித் திருத்தவும்; தப்பில்லை.
கதை முடிவு சோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோசமான முடிவைத் தந்துள்ளீர்கள். தன்னம்பிக்கையற்ற, மோசமான முடிவைத் தர, ஒரு எழுத்தாளன் தேவையில்லை. சாதாரண நிகழ்வுகளை, வரலாறுகளைப் பதிவு செய்யும் ஒருவர் போதும். நாம் எப்போதுமே, கதை வழியே ஆரோக்கியமான, நம்பிக்கையூட்டும் செய்தியையே சொல்ல வேண்டும். எனவே, கதையின் முடிவையும் மாற்றியிருக்கிறேன்.
இதையே உதாரணமாகக் கொண்டு, தொடர்ந்து எழுதுங்கள். இந்தக் கதையை, 'நிலா' இதழில் பிரசுரிக்க, என்னோட பாஸுடன் பேசியிருக்கிறேன். நல்ல தகவல் வரும் என நம்புகிறேன். இலக்கியத்தில் பிரகாசிக்க என் வாழ்த்துக்கள்.
கடிதத்தை மூடி வைத்துவிட்டு, நிலா இதழில் என் கதையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இரண்டு வாரத்தில், கதை தெரிவு செய்யப்பட்ட சேதி வந்தது. இரண்டு மாதத்தில், கதை
வெளியானது. கூடவே, ஆயிரம் ரூபாய் சன்மானமும். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கதிரவன் சாருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். உள்ளூரில், இனிப்பு வழங்கிக் கொண்டாடினேன். ஊரில் ஒரு வி.ஐ.பி., அந்தஸ்தை அடைந்தேன்.
ஒருநாள், என்னைத் தேடி வந்தான் முபாரக். கையில் சின்னதாய் ஒரு கவர் இருந்தது.
''என்ன கமால்... பெரிய எழுத்தாளராயிட்டியே!''
''அதுக்கு நீதான் காரணம்.''
''என்ன சொல்றே?''
''ஆமா... கதிரவன் சாரோட நம்பரை நீதான தந்த... அவரு தான், ரொம்ப முயற்சி பண்ணி இந்தக் கதையை வெளிவரச் செய்திருக்காரு.''
''ரொம்ப நல்லாயிருந்துச்சு.... ஆமா, அந்தக் கதையை நீயே தான் எழுதினியா?''
''அதிலென்ன சந்தேகம்?''
''பெரிய எழுத்தாளரோட கதை மாதிரியே இருந்துச்சு. அதனால கேட்டேன்.''
கதிரவன் சாரோட திருத்தங்களை மறைத்து, ''நானே எழுதினேன்...'' என்றேன்.
''எனக்கு ஒரு உதவி செய்வியா?''
''என்ன?''
''நான் ஒரு கதை எழுதியிருக்றேன். இதைக் கொஞ்சம் படிச்சு, திருத்தித் தர்றீயா?''
''தாராளமா!'' என வாங்கி வைத்தேன்.
ஒரு ஓய்வு வேளையில், முபாரக் தந்த கவரைப் பிரித்தேன். 'ஒற்றை ரோஜா' எனும் தலைப்பில் கதை இருந்தது; படித்தேன். ஒரு அபலைப் பெண்ணின் வாழ்க்கையை, அப்பட்டமாய் பதிவு செய்திருந்தான். உணர்ச்சியான நடை, அழகான முடிவு, நெஞ்சில் நிற்கும்! பின்னுக்குத் தள்ளப்படுவேன் என உணர்ந்தேன். உடனே மூடி வைத்துவிட்டு எழுந்தேன்.
முபாரக் அடிக்கடி என்னைத் தேடி வந்தான். ''கதை என்னாயிற்று? திருத்தினாயா? எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம்?'' எனக் கேட்டான். அவ்வப்போது, ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து வந்தேன்.
ஒருநாள், என் மனைவி என்னிடம் கேட்டாள். ''உங்க நண்பர் முபாரக், ஏன் அடிக்கடி வர்றார்?''
''சும்மா பாக்குறதுக்கு.''
''சும்மா பாக்குறதுக்காகன்னா, பள்ளியிலேயே பார்த்திருப்பாரே?''
''இல்லே... அவன் ஒரு கதை எழுதியிருக்கானாம்; அதை நான் திருத்தித் தரணுமாம்.''
''திருத்திக் கொடுக்க வேண்டியது தானே?''
''போடி இவளே... என்னை விட அழகா கதை எழுதியிருக்கிறான். இது மட்டும் வெளியானா, அப்புறம் என் கதை அம்பேல் தான்.''
''அப்படியெல்லாம் நினைக்காதீங்க... கதிரவன் சார் இப்படி நினைச்சிருந்தா, உங்க கதை வெளி வந்திருக்குமா?''
''கதிரவன் சார் வேற, நான் வேற... அவரு இலக்கியத்துல பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. எந்தக் கொம்பனும் அவருக்கு எதிருல நிக்க முடியாது... நான் அப்படியா?''
''அப்போ?''
''இதைத் திருத்தப் போறதில்லை. கதையை அனுப்பப் போறதில்லை.''
''ஒருத்தரோட உணவை எவரும் தட்டிப் பறிக்க முடியாதுன்னு பெரிசா உபதேசம் பண்ணுவீங்களே... அது வெறும் பேச்சு தானா?''
மனைவியின் வார்த்தை என்னை சம்மட்டியால் அடித்தது; நான் மவுனமானேன்.
வழக்கம் போல, கதிரவன் சாரிடம் இருந்து போன் வந்தது. அவரிடம் பேசும்போது, 'ஒற்றை ரோஜா' சிறுகதையைப் பற்றிக் கூறினேன்.
''ரொம்ப சந்தோஷம் பாய்... அனுப்பி வைங்க. அதையும்
வெளியிட ஏற்பாடு செய்யலாம். எழுத வர்றவங்க ரொம்ப குறைஞ்சி போயிட்டாங்க. என்னோட வாழ்க்கையில,
குறைஞ்சது ஒரு பத்து எழுத்தாளரையாவது உருவாக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்.
''பூந்தோட்டத்துல, வெறும் மல்லிகை மட்டும் இருந்தா அழகில்ல; முல்லை, ரோஜான்னு கதம்பமா இருக்கணும். இலக்கிய வட்டத்துல, இந்தக் கதிரவன் மட்டுமில்ல, கமால், முபாரக்ன்னு நிறைய பேர் வரணும்ன்னு ஆசைப்படுறேன். அதனால அந்த, 'ஒற்றை ரோஜா'வை அனுப்புங்க. அதையும் நம் தோட்டத்தில் வளர்க்கலாம்.''
கதிரவன் சார் எப்படி இவ்வளவு உயரத்தில் இருக்கிறார் எனப் புரிந்தது. அவரோடு நட்பாய் இருக்கும் நான், எவ்வளவு சின்னத்தனமாய் நடந்து கொண்டேன் என, மனசாட்சி உறுத்தியது. முபாரக்கின், 'ஒற்றை ரோஜா' கதையை அனுப்புவதற்காக, கையில் எடுத்தேன். அது மணம் பரப்பியது. அந்த மணம், என் அறையைக் கடந்து, பிரபஞ்சத்தில் கலந்தது.
***
