தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : பிப் 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 27 வயது ஆண். எனக்கு, திருமணமான ஒரு சகோதரி மட்டும் உண்டு. ராணுவ வீரராக வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு வாழ்ந்தேன். என்னுடைய அம்மாவின் தம்பிக்கு, இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவளைத் தான், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, என் உறவினர்கள் உட்பட அனைவரும் ஆசைப்பட்டனர். இதனாலே, எங்களுக்குள் காதல் மலர ஆரம்பித்தது. ஆனால், நான் மட்டும் தான் ஆசைப்பட்டிருக்கிறேன் என்பது, எனக்கு இப்போதுதான் புரிந்தது. கடினமான முயற்சிக்கும், பயிற்சிக்கும் பின், எனக்கு, எல்லையோர பாதுகாப்பு படையில், நல்ல பணி கிடைத்தது. அதில் சேரும் நாளுக்காக நான் ஆவ<லுடன் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என் மாமாவின் மகள், 'நீங்கள் அந்த வேலைக்குச் சென்றால், அடுத்த நிமிடமே நான் தற்கொலை செய்து கொள்வேன்...' என்று மிரட்டியதால், வேறு வழியின்றி, என் ஆசை, லட்சியம் என்று எல்லாவற்றையும் இழந்தேன். என் மேல், அவள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினால் தான், இப்படி சொல்கிறாள் என்று நினைத்தேன். ஆனால், கொஞ்ச நாளில், அவள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குப் போனாள். அங்கு, வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, அவருடனே சென்று விட்டாள்.

எங்களின் காதல், வெறும் வார்த்தையால் மட்டுமானதல்ல... இரு உடல்களும் இணைந்து, ஒரு கருவை சுமக்கும் வரை போனது. சந்தர்ப்பம் சரியில்லாத காரணத்தால், திருமணம் தள்ளிப் போடப்பட்டது. இது, எங்கள் இரு குடும்பத்தினருக்கும் தெரியும். இதுவரையில், எதற்காகவும் அவமானப்படாத நான், முதல் முறையாக இதற்காக கேவலப்பட்டு, தற்கொலைக்கு முயன்றேன். வெறும் உடல் சுகத்திற்காக மட்டும்தான் என்னை விரும்பினாளா இல்லை வேறு ஏதாவது காரணம் உண்டா என்று கூட எனக்கு இதுவரை தெரியவில்லை. இப்போது என் பிரச்னை என்னவென்றால், என் மாமாவின் இளைய மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு, என்னை வற்புறுத்துகின்றனர். அந்தப் பெண்ணும், என் மேல் அளவு கடந்த அன்பு காட்டுகிறாள். 'என் அக்கா செய்த துரோகத்திற்காக, நான் பரிகாரம் செய்ய ஆசைப்படுகிறேன்...' என்கிறாள். நான் எவ்வளவு சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. என்னால் இந்த ஜென்மத்தில், அந்த முகத்தை பார்க்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாது. அப்படி இருக்க, நான் எப்படி இந்த பெண்ணோடு வாழ முடியும். எனக்கு நீங்கள் தான் ஒரு நல்ல பதில் கூற வேண்டும்.

வயசுக் கோளாறு, பருவ வயது, உணர்ச்சி வேகம் என்றெல்லாம் ஒரு சாக்கு சொல்லி, என்னால் அவங்களை மன்னிக்க முடியாது அம்மா. அந்த வலியிலிருந்து, இன்னும் என்னால் விடுபட முடியவில்லை. உங்கள் வழிகாட்டலுக்காக காத்திருக்கிறேன்.

— உங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

'ஓம் சக்தி' என்ற வாசகத்துடன் நீ எழுதியிருந்த கடிதத்தை வாசித்தேன். உனக்கு மாமன் மகள்கள் இருவர்; இருவரில் மூத்தவளை நீ மணந்து கொள்ள வேண்டுமென்று இருதரப்பு உறவினரும் விரும்பி இருக்கின்றனர். அவர்களின் கேலி, சீண்டல்கள், உன்னையும், உன் மாமனின் மூத்த மகளையும், காதல் பள்ளத்திற்குள் தள்ளி விட்டிருக்கின்றன. உங்களுக்கிடையே இருந்தது காதல் அல்ல; நீ சொல்வது போல, மாமன் மகள் போட்ட வேஷமும் அல்ல. வேறு வேறு மந்தைகளை சேர்ந்த இரு ஆடுகளை, ஒரே கொட்டடிக்குள் இரவு முழுக்க ஓட்டிவிட்ட நிர்பந்தம். சிக்கன் கேட்காதவனுக்கு, இலை முழுக்க சிக்கன் பரிமாறினால், கட்டாயத்திற்காக இல்லாவிட்டாலும், பசிக்காவது ஒருவன் அந்த சிக்கனை சாப்பிடத்தானே செய்வான். ரோஜாப்பூ கேட்ட கழுத்துக்கு, அரளிப்பூ மாலை விழுந்திருக்கிறது. கேட்டால், 'நம்ம வீட்டு தோட்டத்தில் பூத்த அரளிடா இது...' என்கிறது சொந்தபந்தம். மாமனின் மூத்த மகளுக்கு, உன்னை காதலித்ததில் எந்த த்ரில்லும் கிடைக்கவில்லை. சொந்த வயலில் விளைந்த அரிசி சோறு, விவசாயி மகனுக்கு கசக்குமா? 'பருவ வயதில் எல்லாப் பெண்களும் காதலிக்கின்றனர். நமக்கும் ஒருவன் கிடைத்திருக்கிறான். இதனால், நானும் காதலிக்கப்படுகிறேன்...' என்ற கர்வ மகிழ்ச்சிஅவளுக்கு. நீயும், அவளும் செக்ஸ் வைத்திருந்திருக்கிறீர்கள். அதனால், கர்ப்பமான அவள், கருச்சிதைவும் செய்திருக்கிறாள். உன் மாமன் மகள் மிகுந்த சுயநலக்காரி. ஒரு ராணுவ வீரனை மணந்து, நீண்டகாலம் பிரிவுத் துயரில் வாட அவள் தயாரில்லை. அதனால்தான், நீ எல்லையோர பாதுகாப்பு படையில் போய் சேர்வதை, 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்து, தடுத்திருக்கிறாள். நீயும், கொண்ட முடிவில் உறுதியாக நிற்கும் லட்சியவாதி அல்ல. மாமன் மகள் மிரட்டியதும், வேலையை விட்டெறிந்து விட்டாய். இந்த நிகழ்ச்சிக்குப் பின், உன் மாமன் மகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு போயிருக்கிறாள். அங்கு ஒருவனை காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள். பின் ஒரு நாளில் அவனுடனேயே ஓடிவிட்டாள். 'பி.எஸ்.எப்., வேலைக்கு போகாதே...' என அவள் கூறும்போது, உன்னை மெய்யாலுமே, காதலித்தாளோ என்னவோ, உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்திருக்கிறாள். அப்போது, வேறு யாரையும் அவள் காதலிக்கவில்லை. உறவுக்காரப் பையன் - இருதரப்பும் இந்த உறவை அங்கீகரிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக உன்னுடன் பழகியிருக்கிறாள்.

தனியார் நிறுவனத்திற்கு போன பின்புதான், நிஜ காதல் அவளுக்குள் பூத்திருக்கிறது. உறவுக்காரர்கள் இந்த புதிய காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நினைத்து, மனதிற்கு பிடித்தவனுடன் ஓடிவிட்டாள் மாமன் மகள். வயதுக் கோளாறு, பருவ வயது, உணர்ச்சி வேகமெல்லாம் மாமன் மகள் செய்கைக்கு காரணமல்ல. உன்னையும், புதிய காதலனையும் ஒப்பிட்டு, அவன் உன்னைவிட பெட்டர் என முடிவெடுத்திருக்கிறாள். உன்னுடன் பழகிய போது, அவள் கர்ப்பமானதற்கு நீயும் குற்றவாளிதான். உறவினர் நிர்பந்தத்துக்காக நடக்க இருந்த திருமணம், நடக்காமல் போனது நல்லதற்குதான். நீயும், மாமன் மகளும், திருமணம் செய்த பின் அவள் ஓடியிருந்தால், உன்னுடைய நிலைமை இன்னும் கவலைக்கிடமாகி இருக்கும் இல்லையா? இறைவன் உன் பக்கம். உன் மீது காதல் இல்லாதவளை ஒதுக்கி விட்டு, உன்னை காதலிக்கும் பெண்ணை உன்னுடன் ஜோடி சேர விரும்புகிறான். தமிழ் சினிமா பார்த்து சென்டிமென்ட் வசனங்கள் உளறாதே. அக்கா செய்த துரோகத்துக்கு, பரிகாரம் செய்ய விரும்புகிறாள் உன் மாமனின் இளைய மகள். அதெல்லாம் தேவையற்ற பெரிய வார்த்தைகள். உன்னை திருமணம் செய்து, ஆயுளுக்கும் உன்னுடன் இனிய தாம்பத்யம் செய்தலே போதுமானது. மாமனின் மூத்த மகளை குற்றஞ்சாட்டிக் கொண்டே, சுவர் கோழி போல நிற்காதே. அவள், அவளது கணவனுடன் நன்றாக இருக்கட்டும். எப்போதாவது அவளைப் பார்த்தால், சம்பிரதாயமாக, நாலு அன்பு வார்த்தைகள் பேசு. ஒரு போதும் பிளாஷ்பேக் பேசி, குத்திக் காட்டாதே. மாமனின் மூத்த மகளை வெறுக்கிறாய். அதே முகம், நடை, உடை, பாவனை உள்ள இளையவளை எப்படி திருமணம் செய்து கொள்வது என கேட்டிருக்கிறாய். ஒரே சாயலில் இரு எதிர், எதிர் குணமுடைய ஆண், பெண்ணை உலகம் ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறது. ஒரு நதி இரண்டாய் பிரிந்து, ஒன்று சாக்கடை(?)யில் போய் கலந்து விட்டது; இன்றொன்று, சந்தனமான(?) உன்னில் சங்கமிக்க ஆசைப்படுகிறது; சங்கமிக்கட்டும்; விடு. ஒரு ரகசியம் சொல்கிறேன்... காதை கொண்டா... இளையவளுடன் நீ தாம்பத்யம் செய்யும் போதெல்லாம், மூத்தவளின் நம்பிக்கை துரோகத்தை ஜெயித்த சந்தோஷம் உன் ஆழ்மனத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். விரும்பினால், உனக்கு மட்டுமான ரகசியமாக நெஞ்சுக்குள் பதுக்கிக் கொள்.

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us