தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சீர்!

சீர்!

சீர்!


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசல் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டதும், மொட்டை மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருந்த மாதவி, எட்டிப் பார்த்தாள்.

கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான், வடிவேலு. பார்த்ததுமே பக்கென்றிருந்தது.

'நினைச்சேன், எங்க ஆளைக் காணுமேன்னு வந்துட்டார்...' ஆத்திரமாக கையிலிருந்த துணியை உதறி கொடியில் போட்டு, கீழே வந்தாள். அதற்குள் வராண்டாவில் ஏறியிருந்தான், வடிவேலு.

உள்ளத்திலோ அத்தனை எரிச்சல். ஒப்புக்காக, ''வாங்கண்ணா...'' என, அழைத்தாள்.

''வர்றேம்மா... சந்தானம் இருக்கானா?''

'ஞாயித்துக் கிழமை வீட்டில் இருப்பார்னுதானே வந்திருக்கார். இதென்ன கேள்வி?' என, மனதுக்குள் நினைத்தபடி, ''இருக்கார்ண்ணே, கூப்பிடறேன். உட்காருங்க,'' என்று கூறி, உள் அறைக்கு வந்தாள்.

மறுநாள் அலுவலகத்திற்கு உடுத்திச் செல்ல வேண்டிய உடையை, 'அயர்ன்' செய்து கொண்டிருந்தான், சந்தானம்.

''என்னங்க, உங்க பிரெண்டு வடிவேலு வந்திருக்கார்.''

''ஓ... நானே அவனை பார்க்கணும்ன்னு நினைச்சேன். பார்த்து ரொம்ப நாளாச்சு, தீபாவளியப்ப பார்த்தது,'' என்றபடி, நண்பனை பார்க்கும் ஆவலில், 'அயர்ன் பாக்ஸ்' இணைப்பை துண்டித்து, ஓரமாக வைத்தான், சந்தானம்.

''ம்க்கும்... தீபாவளிக்கு கடன் வாங்க வந்தாரு. இப்ப பொங்கல் வருதுல்ல, அதான் கடன் கேட்க வந்திருப்பாரு,'' தோள்பட்டையில் இடித்தாள்.

''ப்ச்... மெல்ல பேசு. அவன் காதுல விழுந்திடப் போகுது.''

''விழட்டுமே, அப்படியாவது கடன் வாங்க வராமயிருந்தா சரி. ரெண்டு வருஷமா, தீபாவளி, பொங்கல்ன்னு வந்து பணம் வாங்கிட்டுப் போறாரு; திருப்பி கொடுத்திருக்கிறாரா?

''மறுபடி மறுபடி நீங்க கொடுத்துக்கிட்டே இருக்கீங்க. இந்த தடவை ஏதாவது பணம் கேட்டாருன்னா, இல்லைன்னு சொல்லிடுங்க,'' கண்டிப்பாக சொன்னாள், மாதவி.

''சும்மா இருக்கியா, அக்கா, தங்கச்சின்னு கூடப் பொறந்தவங்க நான்கு பேர். நாளு கிழமையின்னா நான்கு பேருக்கும், அவன் சீர் வைக்கணும். பார்க்கிற வேலையில் பத்து காசு கூட அவனால சேமிக்க முடியலை.

''பாவம், அவன் என்ன பண்ணுவான்... தீபாவளி, பொங்கல்ன்னா என்கிட்ட பணம் வாங்கிட்டு போய், அவன் சகோதரிகளுக்கு சீர் வைக்கிறான்.''

''எல்லாம் சரிதான். ஆனா, வாங்கற காசை திருப்பித் தரணுமுல்ல?''

''தருவான். நீ போய், காபி போட்டு எடுத்துக்கிட்டு வா,'' என சொல்லி, கைலியை மடித்துக் கட்டி, நண்பனைப் பார்க்க கூடத்திற்கு வந்தான்.

''ம்க்கும்... கொடுத்த காசும் வர்றதில்ல. இதுல பால், காபித்துாள், சர்க்கரையெல்லாம் வேஸ்ட்,'' முனகியபடியே சமையலறைக்கு சென்றாள், மாதவி.

காபி கலந்து எடுத்து, கூடத்திற்கு வந்தபோது, ''சந்தானம்... அக்கா, தங்கச்சிக்கு சீர் செய்யணும். 5,000 ரூபாய் வேணும்,'' என, தயங்கியபடி கேட்டான், வடிவேலு.

''அதுக்கென்ன தர்றேன். முதல்ல காபியைக் குடி,'' என, மாதவி கொண்டு வந்த காபியை வாங்கி வடிவேலுவின் கையில் கொடுத்தான்.

காபியை குடித்த கையோடு பணத்தை வாங்கிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் வடிவேலு சென்ற பின், வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடந்தது.

''உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க... கிருஷ்ணர், குசேலர் நட்பா இது? பணம் கேட்டா, குடுக்க கூடாதுன்னு படிச்சுப் படிச்சு சொல்றேன். நீங்க பாட்டுக்கு எடுத்துக் கொடுக்கறீங்க...

''முன்பு கொடுத்த பணமே வரலை. இப்ப கொடுத்தது எப்ப வரும்?'' அவள் கோபப்பட, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் வேலையைப் பார்த்தான், சந்தானம்.

அன்று மாலையே வடிவேலுவிடமிருந்து போன் வந்தது.

''சரிடா, ஓ.கே.,'' என, போனை வைத்தான்.

''என்ன விஷயம்... எதுக்காக இப்ப அவர் போன் பண்ணினார்?'' சீறினாள், மாதவி.

''அடடா இவ ஒருத்தி, எதாயிருந்தாலும் தோண்டி தோண்டிக் கேட்டுக்கிட்டு...''

முணு முணுத்தவனை விடவில்லை.

''ஏன் என்கிட்ட சொல்லக் கூடாதா... அப்படியென்ன ரகசியம்?'' சண்டைக்கு தயாரானாள்.

''ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை.''

''மறுபடியும் கூடுதலா பணம் கேட்டாரா... சத்தியமா சொல்றேன், நீங்க மட்டும் கொடுத்தீங்க... உங்களுக்கு, வீட்ல சாப்பாடு கிடையாது. அவர் வீட்லயே போய் சாப்பிட்டுக்கங்க,'' மிரட்டினாள்.

''கூடுதலா பணமெல்லாம் கேட்கலை. அவன், பைக் ரிப்பேராம். எல்லாருக்கும் சீர் வரிசை வச்சுட்டானாம். கடைசி தங்கச்சிக்கு மட்டும் தான் பாக்கியாம். தாம்பரம் வரை போகணும். அதனால, என் காரை எடுத்துக்கிட்டு வரமுடியுமான்னு கேட்டான்.''

''பைக் ரிப்பேரா, எல்லாம் பொய். பெட்ரோலை மிச்சம் பிடிக்க, உங்களை காரை எடுத்துக்கிட்டு வரச் சொல்றார். அது புரியாம சரியான ஏமாளியா இருக்கீங்க.''

''இதப்பார், அப்படியெல்லாம் அவன் பொய் சொல்ல மாட்டான்.''

''ஆமா நீங்க தான் கண்டிங்க... இந்தக் காலத்துல, மத்தவங்களை ஏய்ச்சி பிழைக்கறவங்க தான் நிறைய பேர். உண்மையிலயே பைக் ரிப்பேர்ன்னா ஆட்டோ பிடிச்சு போகலாமே. ஆட்டோல போனா பணம் செலவாகும், உங்க கார்ல போனா பணம் மிச்சம்.''

''சரி அப்படியே வச்சுக்கயேன். இப்ப என்ன நாம குறைஞ்சுப் போயிட்டோம். அவன் கஷ்டப்படறான். ஒரு உதவியா இருந்துட்டுப் போகட்டுமே,'' என, அவள் கூறியும் கேட்காமல், காரை எடுத்து, வடிவேலு வீடு நோக்கி பறந்தான்.

வாசலில் அவனுக்காக காத்திருந்தான், வடிவேலு.

சந்தானத்தைக் கண்டதும் மகிழ்ச்சியில், சீர் வரிசை நிரம்பிய பெரிய பெரிய பைகளை காரின் டிக்கியைத் திறந்து உள்ளே வைத்தான்; முன்பக்கம் அவனருகே வந்தமர்ந்தான்.

''எல்லாருக்கும் வரிசை வச்சுட்டேன். கடைசி தங்கச்சி மட்டும் தான் பாக்கி. கடைசி நேரத்துல பைக் காலை வாரிடுச்சு. நல்ல வேளை, நீ வந்தே. இல்லாட்டி ஆட்டோவுக்கு அழணும். அவ்வளவு பணம் இல்லை. ரொம்ப நன்றிடா, சந்தானம்.''

நெகிழ்ச்சியாக கையை பற்றினான், வடிவேலு.

''போதும் போதும்... ரொம்ப நெகிழாதே.உன் கடைசி தங்கச்சி பானுவை, அவ கல்யாணத்தின்போது பார்த்தது,'' என, நினைவு கூர்ந்தான், சந்தானம்.

பானு, மிகவும் சுட்டியான பெண். இவன் வீட்டிற்குப் போகும் போதெல்லாம், 'அண்ணா... அண்ணா...' என, பாசத்தை பொழிவாள்.

''நானும் வர்றேன்னு பானுகிட்ட சொன்னியா?''

''சொல்லலை.''

''நல்லது, அவளுக்கு இன்ப அதிர்ச்சியா இருக்கட்டும். என்னை அவ எதிர்ப்பார்த்திருக்க மாட்டா,'' என்று சொல்லி, சிரித்தான்.

சந்து பொந்தில் நுழைந்து, ஒரு வீட்டின் எதிரே நின்றது, கார். இருவரும் இறங்கினர்.

''சந்தானம், நீ போய் கதவைத் தட்டு. நான் டிக்கியிலிருக்கிற சாமானை எடுத்துக்கிட்டு வர்றேன்,'' என்றான், வடிவேலு.

படியேறி அழைப்பு மணியை அழுத்தினான், சந்தானம்.

சில நொடிகளில் கதவு திறந்தது.

கதவுக்குப் பின் நின்றிருந்தவளைக் கண்டு துாக்கி வாரிப் போட அதிர்ந்தான், சந்தானம்.

''உமா!''

வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றிருந்தவனைப் பார்த்து கண்கள் விரிய, ''அண்ணா...'' கூவினாள், அவனது தங்கை உமா.

அந்த குரல் காது வழியே நுழைந்து, அவன் தேகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. கைகளும், கால்களும் திடீரென தடதடவென நடுங்க, சட்டென்று கதவை இறுகப் பற்றினான்.

''அண்ணா... நீ என்னை மறந்துட்டியோன்னு, தினம் தினம் அழுவேன். என்னை மறக்கலைன்னு நிரூபிச்சிட்டே. உள்ளே வாங்கண்ணா...'' சட்டென்று சந்தானத்தின் கையை பற்றி உள்ளே இழுத்தாள், உமா.

பொம்மை போல் உட்கார்ந்தான், சந்தானம்.

''என்னங்க... இங்க வாங்க... யாரு வந்திருக்காருன்னு பாருங்க,'' என, குரல் கொடுத்தாள், உமா.

''வாங்க மச்சான்...'' என, வரவேற்றான், உமாவின் கணவன்.

அதற்குள் சீர் சாமான்களை எடுத்து உள்ளே வந்து, ''அம்மாடி... போய் தாம்பாளத்தை எடுத்து வா,'' என்றான், வடிவேலு.

மானாய் மகிழ்ச்சியில் துள்ளி உள்ளே ஓடி, பெரிய தாம்பாளத்தை கொண்டு வந்து கொடுத்தாள், உமா.

தாம்பாளத்தில் பழம், பூ, புடவை இனிப்புகளை அடுக்கிய வடிவேலு, அதைத் துாக்கி சந்தானத்தின் கையில் கொடுத்தான்.

''இந்தாடா, இதை தங்கச்சி கையில கொடு,'' என்றான், அதிகாரமாய்.

நடப்பது எதையுமே நம்ப முடியாத நிலையில், ஏதோ ஒரு மாயத்திற்குள் மாட்டிக் கொண்டதைப் போன்ற நிலையில் இருந்த சந்தானம், அதை வாங்கி, உமாவிடம் நீட்டினான்; கண்ணீர் வழிய பெற்றுக் கொண்டு விம்மினாள், உமா.

''இப்ப சந்தோஷமா தாயி. நீ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டே. உன் அண்ணன் உன்னை தலை முழுகிட்டான். ஒவ்வொரு வருஷமும் பண்டிகையின் போது, என் அக்கா, தங்கச்சிகளுக்கு சீர் கொடுக்கும் போது, உன் மனசு என்ன பாடு படும்ன்னு எனக்குத் தோணும்.

''அதனால, நானே தீபாவளி, பொங்கல் சமயத்துல, உன் அண்ணன் ஸ்தானத்துல இருந்து உனக்கு சீர் வரிசை வச்சுட்டுப் போவேன். தீபாவளிக்கு வரிசை வைக்கும் போது, 'எப்போது என் அண்ணன் வந்து இப்படி வரிசை வைக்கப் போவுதோ'ன்னு, நீ ஏங்கி அழுதே.

''அப்ப, 'கவலைப்படாதே... பொங்கலுக்கு அவன் கண்டிப்பா உனக்கு வரிசை வைப்பான்'னு, சொன்னேன். ஞாபகம் இருக்கா... இப்ப அது நிறைவேறிடுச்சு. மகிழ்ச்சித்தானே தாயி,'' என, வடிவேலு சொல்லவும், இன்னும் அதிகமாக விம்மினாள், உமா.

''போ தாயி... சீரைக் கொண்டு சாமிக்கிட்ட வச்சுட்டு, தடபுடலா சமையல் பண்ணு. நாங்க இருந்து சாப்புட்டுட்டுத்தான் போவோம்.''

''இதோ...'' சீர் தாம்பாளத்தை துாக்க முடியாமல் துாக்கி, உள்ளே உற்சாகமாக ஓடினாள், உமா.

ஆடு, கோழி வாங்க சட்டையை எடுத்துப் போட்டு, வெளியே போனார், மாப்பிள்ளை. ஒன்றும் புரியாதவனாய் சந்தானம் பார்க்க, அவன் தோளைத் தட்டி சிரித்தான், வடிவேலு.

''மச்சான்... காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டாள்னு, உன் தங்கை, உமாவை தள்ளி வச்சே. ஆனா, உன் ஸ்தானத்துலயிருந்து அவளுக்கு வருஷா வருஷம் தீபாவளி, பொங்கல் சீரை, நான் தான் கொண்டு வந்து வச்சிக்கிட்டிருக்கேன்.

''இதையெல்லாம் நீ செய்ய வேண்டியது. அதனால தான், தீபாவளி, பொங்கல்ன்னா உன்கிட்ட வந்து நின்னேன். என் அக்கா, தங்கச்சிக்கு வரிசை வைக்க என்கிட்ட பணம் இல்லைன்னு நினைச்சு நீயும் கொடுத்தே.

''அதை நான் திருப்பி தராமல் இருக்கறதுக்கும் இதான் காரணம். அந்த பணமெல்லாம் உன் தங்கச்சிக்குத்தானே சேர்ந்தது. அதை நான் ஏன் திருப்பித் தரணும். என்ன நான் சொல்றது சரிதானே?

''என்னதான் நான் சீர் கொண்டு வந்து வச்சாலும், சொந்த அண்ணன் நீ, செய்யிற நிறைவைத் தருமா... அதான், பைக் ரிப்பேருன்னு பொய் சொல்லி உன் கார்லயே அழைச்சுக்கிட்டு வந்தேன். எப்படி?'' சிரித்தான், வடிவேலு.

அப்பொழுது தான் சுயநினைவு வந்தவனாய் கண்ணீர் மல்க, நண்பனின் தோளணைத்து, ''நண்பேன்டா...'' என்று, உற்சாகமானான், சந்தானம்.

ஆர். சுமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us