sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சண்டை சகோதரிகள்!

/

சண்டை சகோதரிகள்!

சண்டை சகோதரிகள்!

சண்டை சகோதரிகள்!


PUBLISHED ON : டிச 18, 2022

Google News

PUBLISHED ON : டிச 18, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவாதியும், ஸ்வேதாவும் அக்கா, தங்கை. இருவருக்கும் நான்கு ஆண்டு இடைவெளி இருந்தாலும், ஒற்றுமை முக சாயலில் மட்டும் தான். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் சண்டை, இரவு வரை தொடரும்.

மிகவும் பொறுப்பானவள், ஸ்வேதா. எல்லாவற்றையும் நேரம் தவறாமல் செய்து முடிப்பாள்; அதற்கு நேர் எதிர், சுவாதி. எந்த செயலையும் மிகவும் தாமதமாக செய்வாள்.

''சுவாதி, சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பு, வேலைக்கு போகணும். எனக்கு தினமும், 'லேட்' ஆகுது,'' என்று விரட்டினாள், ஸ்வேதா.

''ஸ்வேதா, சீக்கிரம் போகணும்ன்னா, நீ முதல்ல கிளம்பி போ. என்னை சீக்கிரம் ரெடியாக சொல்லி, ஏன் படுத்துற.''

வேகமாக அம்மாவிடம் ஓடிய ஸ்வேதா, ''அம்மா... இவள, தினமும் விட்டுட்டு அப்புறமா நான் போறதால, எனக்கு ரொம்ப, 'லேட்' ஆகுது. எப்படியாவது சீக்கிரம் எந்திரிச்சு, கிளம்ப சொல்லுங்க.''

''என்ன சுவாதி, எல்லாத்தையும் இப்படி கலைச்சு போட்டுருக்க... இதையெல்லாம் யார் எடுத்து வைக்கிறது?'' என, கோபமாக கேட்டாள், ஸ்வேதா.

''சும்மாதான இருக்க, நீயே எல்லாத்தையும் எடுத்து வை,'' என்றாள், சுவாதி.

''நான் எதுக்கு எடுத்து வைக்கணும்... நானா கலைச்சு போட்டேன்,'' என்றாள், ஸ்வேதா.

''யாரு கலைச்சு போட்டா என்ன... நீட்டா இருக்கணும்ன்னு நெனச்சின்னா, நீதான் எடுத்து வைக்கணும். என்னை செய்யச் சொல்லி, 'பிரஷர்' பண்ணக் கூடாது,'' என்றாள், சுவாதி.

''பாரு அம்மா, எப்ப பார்த்தாலும் இவ கலைச்சு கலைச்சு போடுறா... எப்போதும் நானே எடுத்து வைக்க வேண்டி இருக்கு. எவ்ளோதான் நானே எடுத்து வைக்கிறது. என்னை எரிச்சல் படுத்தறா.''

''உங்க சண்டையை, யாராலும் சமாதானம் செய்ய முடியாது. நீங்களே ஒரு சமாதானத்துக்கு வாங்க, என்கிட்ட எந்த பஞ்சாயத்துக்கும் வராதீங்க,'' என்று சொல்லி நகர்ந்தாள், அம்மா.

வீட்டில் உள்ள பாட்டி, அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆயினும் பயனில்லை.

ஸ்வேதாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

''ஸ்வேதா, கல்யாணமாகி போக போறா. அதனால, அவளோட சண்டை போடாம ஒற்றுமையாய் இரு,'' என்று அம்மாவும், பாட்டியும் அறிவுரை கூறினர்.

ஆனால், அதன் பிறகு தான் சண்டை இன்னும் அதிகமாகியது.

ஸ்வேதா கல்யாணத்துக்கு புடவை எடுக்க, எல்லாரும் கடைக்கு சென்றனர்.

''இந்த பிங்க் கலர் புடவை, எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,'' என்றாள், சுவாதி

''பிங்க் புடவை, கிராண்டா இல்ல. வேற புடவை எடுத்துக்க சுவாதி,'' என்றாள், ஸ்வேதா.

''உன் கல்யாண புடவைக்கு, நான் ஏதாச்சும் கருத்து சொன்னேனா... எதுக்கு எனக்கு வந்து, 'கரெக் ஷன்' பண்ணிட்டுருக்க?'' என்றாள், சுவாதி.

''சொல்றதை கேளு, இந்த பிங்க் புடவையை விட, அந்த ஆரஞ்ச் கலர் புடவை ரொம்ப நல்லா இருக்கு. இதை வாங்கிக்கோ ப்ளீஸ்...'' என்று கெஞ்சினாள், ஸ்வேதா.

''முடியவே முடியாது. பிங்க் கலர் புடவை தான், எனக்கு வேணும்; இல்லாட்டி எனக்கு புடவையே வேணாம். நான் சல்வாரே போட்டுக்கிறேன்...'' என்று உறுதியாக சொன்னாள், சுவாதி.

''கடையில வந்து சண்டை போடாதீங்க,'' என்றாள், அம்மா.

''சொல்லுங்க அம்மா... நானா ஆரம்பிச்சேன், ஸ்வேதா தான் முதல்ல ஆரம்பிச்சா...'' என்று குறை கூறினாள், சுவாதி.

''யாரு ஆரம்பிச்சா என்ன... கடையில இப்படியா சண்டை போடுறது, அதுவும் ஒரு சின்ன புடவை விஷயத்துக்காக?'' என்றாள், அம்மா.

''புடவை தேர்வு பண்றது சின்ன விஷயம் தான். ஆனால், சண்டை செய்ய, காரணம் வேற...'' என்றாள், சுவாதி.

''என்ன காரணம் சொல்லு?'' என்றாள், அம்மா.

''இவ, என்னை சின்ன குழந்தை மாதிரி, 'ட்ரீட்' பண்றா... எனக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி, எல்லா விஷயத்துக்கும், அவ கருத்து சொல்லிட்டுருக்கிறா,'' என்றாள், சுவாதி.

''சரி சரி, எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். கல்யாணம் ஆகி போயிட்டா, அப்புறம், நீ நினைச்சா கூட அவளோட சண்டை போட முடியாது. அவ, அவங்க வீட்டில் இருப்பா,'' என்றாள், அம்மா.

''அந்த நாட்களுக்காக தான், காத்திட்டு இருக்கேன். அப்புறம், எந்த சண்டையும் இல்லாம ரொம்ப, ஜாலியா வீட்ல இருக்கலாம்,'' என்றாள், சுவாதி.

''ஆமாமா... எனக்கு தெரியும், கல்யாணமாகி நான் அந்த வீட்டுக்கு போயிட்டா, நீங்க எல்லாரும் ரொம்ப ஜாலியா தான் இருப்பீங்க,'' என்றாள், ஸ்வேதா.

''சும்மா... அவதான் அறிவில்லாம ஏதாவது பேசுனா, நீயும், அதை சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படி பேசுறியே ஸ்வேதா,'' என்றாள், அம்மா.

''இல்லம்மா அவதான்,'' என்று ஆரம்பித்தாள், சுவாதி.

''சரி... இந்த சண்டையை இதோட விடுங்க. பிங்க் கலர் புடவைய, கல்யாணத்துக்கும்; ஆரஞ்சு கலர் புடவையை, வரவேற்புக்கும் வச்சுக்கோ... இதோட இந்த பிரச்னை முடிஞ்சது. திருப்பி திருப்பி இத பத்தி பேசி, பிரச்னையை பெரிசு பண்ணாம, கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருங்க,'' என்று, அவர்களின் வாயை அடைத்தாள், அம்மா.

அடுத்த முறை, நகைக் கடையில் பிரச்னை வேண்டாம் என்று, அவர்களை தனித்தனியாக அழைத்து சென்றாள், அம்மா.

திருமண நாள் நெருங்க நெருங்க, சண்டை இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள், அம்மா.

ஸ்வேதா திருமணம் முடித்து, இரவு ஊருக்கு கிளம்பும்போதும் சண்டை ஆரம்பமானது.

''இங்க பாருங்கம்மா... பெட்டியில எடுத்து வைக்க, எனக்கு உதவி பண்ண கேட்டேன். துணியை சரியா மடிக்காமல் அப்படியே சுத்தி சுத்தி வைக்கிறாள்,'' என்றாள், ஸ்வேதா.

''என்னால எப்படி முடியுமோ, அது மாதிரிதான் துணியை எடுத்து வைக்க முடியும். நீ நினைச்சா மாதிரி வைக்கணும்ன்னா, நீயே எடுத்து வச்சுக்கோ,'' என்று துணியை துாக்கி எறிந்துவிட்டு சென்றாள், சுவாதி.

''நான் ஊருக்கு போறேன்ங்கிற கவலை கொஞ்சமும் இல்லாம, எப்படி துாக்கி எறிஞ்சிட்டு போறா பாருங்க,'' என்றாள், ஸ்வேதா.

''சரி விடு. துணியை எடுத்து வைக்க, நான் உதவி பண்றேன்,'' என்றாள், அம்மா.

''அவளுக்கும், எனக்கும் எப்போதும் ஒத்தே வராது. எதுக்கெடுத்தாலும் எனக்கு நேர்மாறாவே இருக்கா. நான் என்ன பண்றது?'' என்றாள், ஸ்வேதா.

''நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். எல்லாம் சரியாயிடும்,'' என்றாள், அம்மா.

''எப்படி சரியாகும்?'' என்றாள், ஸ்வேதா.

''சரி, ஊருக்குப் போகும் போது, இந்த சண்டையை பற்றி பேச வேண்டாம். ஏதாவது பொருளை மறந்து வெச்சிடுவ. ரெண்டு பேரும் எல்லா பொருளையும் எடுத்து வைக்கலாம் வா,'' என்று சமாதானம் செய்தாள், அம்மா.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, ஸ்வேதா ஊருக்கு கிளம்பும்போதும், ரயில்வே ஸ்டேஷனில் இருவருக்கும் ஒரே சண்டை. மிகவும் எரிச்சலோடு, கணவனுடன் ரயில் ஏறினாள், ஸ்வேதா.

ஸ்வேதாவை வழியனுப்பி விட்டு, அம்மாவும், சுவாதியும் வீட்டுக்குள் நுழைந்தனர். வேகமாக அறைக்குள் சென்று, கதவை சாத்திக் கொண்டாள், சுவாதி.

''என்னாச்சு சுவாதி... ஏன் கதவை சாத்திக்கிட்ட. கதவை திற,'' என்றாள், அம்மா.

கலங்கிய கண்களுடன் கதவைத் திறந்தாள், சுவாதி.

''சுவாதி, என்னாச்சு சொல்லு... ஏன் அழற?'' என்றாள், அம்மா.

''இல்லம்மா, ஸ்வேதா ஊருக்கு போனதால, எனக்கு அழுகை அழுகையா வருது,'' என்றாள்.

''நீ என்ன சொல்ற சுவாதி... ஸ்வேதா ஊருக்கு போனதற்கா அழுகிறாய்.''

''ஆமாம்!'' என்றாள், சுவாதி.

''நீ இப்படி அழறதுக்கு பதிலாக, அவள் இருக்கும்போது, அவ கூட சண்டை போடாமல் இருந்திருக்கலாம்ல?'' என்றாள், அம்மா.

''இல்லம்மா, அவ என்னை மாதிரி கிடையாது. ரொம்ப அன்பானவ. அவ கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போனதும், நம் எல்லாரையும் ரொம்ப, 'மிஸ்' பண்ணக் கூடாதுங்கிறதுக்குத் தான், அவ கூட சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டேன்.''

''சரி, இன்னிக்கு எதுக்கு சண்டை போட்ட?'' என்றாள், அம்மா.

''ஊருக்கு போகும்போது அவ அழக் கூடாது என்பதற்காக, சண்டை போட்டேன். நான் ஸ்டேஷன்ல போட்ட சண்டையால, அழாம, எரிச்சலோட போய்ட்டா,'' என்று அழுதாள், சுவாதி.

'இவர்களின் சண்டை எப்போதும் முடியாது...' என்று நினைத்திருந்த அம்மாவிற்கு, அவர்கள் இருவரும் சிறு சிறு செயலுக்காக சண்டை போட்டாலும், மிகவும் பாசமாக இருக்கின்றனர் என்று, அன்று தான் புரிந்தது.

சரண்யா விஜயகுமார்வயது: 36படிப்பு : பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்; எம்.பி.ஏ., டிப்ளமோ இன் பெயின்டிங்பணி : குடும்பத்தலைவிசொந்த ஊர் : கரூர்வெளியான படைப்புகள்: பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.லட்சியம் : சிறந்த கதாசிரியராக வேண்டும்கதைக்கரு பிறந்த விதம்  : சிறு வயதிலிருந்து என் சகோதரியோடு நடந்த சண்டைகள்.






      Dinamalar
      Follow us