PUBLISHED ON : செப் 27, 2020

அக்., 1, நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாள்
நாடக துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்த கலைஞர்களுக்கு, இந்திய அரசு வழங்கும் மிக உயரிய விருது, சங்கீத நாடக அகாடமி விருது. 2010ல், இந்த விருதை பெற்றவரும், சிவாஜி குடும்பத்தினர் வழங்கும், சிவாஜி கணேசன் விருதை, அக்., 1, 2019ல் பெற்றவருமான, ஏ.ஆர்.எஸ்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஆலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீநிவாசன், சிவாஜி கணேசனின் நீண்ட கால நண்பர். சிவாஜி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள், 'வாரமலர்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்...
* நடிகர் திலகத்திற்கும், எனக்கும், பந்தம், 1952ம் ஆண்டு, தீபாவளியன்று ஆரம்பித்தது. அன்று தான், அவர் நடித்த முதல் படம், பராசக்தி வெளியானது. முதல் நாள், முதல் ஷோ, தீபாவளியன்று மேட்னி காட்சியில், பராசக்தி படத்தை, சென்னை பாரகனில் பார்த்து பரவசமானேன். அன்று முதலே அவருடைய தீவிர ரசிகனாகி விட்டேன்
எனக்கு முந்தைய சீட்டில் அமர்ந்து படம் பார்த்த என் குடும்ப நண்பரும், பிரபல வீணை வித்வான் எஸ்.பாலசந்தரும், 'இந்த புதுமுக நடிகர், தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைக்கப் போகிறார்...' என்று, ஆரூடம் சொன்னார். எங்கள் இருவர் கணிப்பும் விரைவில் உண்மையானது
* பிரபல நடிகர், வி.கே.ராமசாமி, நவாப் நாற்காலி படப்பிடிப்பின் இடைவேளையின்போது, 'சிவாஜி உட்பட பலர், 'பாய்ஸ் டிராமா' கம்பெனியில் இருந்தோம். தினமும் நாடகம் இருக்கும். வாரத்திற்கு ஒருநாள் மட்டும் விடுமுறை. நாங்க எல்லாரும், மூர் மார்க்கெட், பீச் என்று ஊர் சுற்றுவோம். ஆனால், கணேசு - சிவாஜி கணேசன் மட்டும், எங்க கூட வரமாட்டார். 'நியூ எலிபண்ட்ஸ்டோன்' தியேட்டருக்கு போய், 'ஹாலிவுட்' படங்களை மூன்று காட்சிகளும் பார்ப்பார். 'ஹாலிவுட்' படங்களை பார்த்து, நடிப்பு, 'டெக்னிக்' எல்லாம் தெரிஞ்சிப்பார்...' என, என்னிடம் கூறினார்
* பராசக்தி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு, ரொம்ப பெரிய நடிகராகி விட்டார், சிவாஜி. 1953 - 56, மூன்று ஆண்டுகளில், 23 படங்களில் நடித்தார். எல்லா படங்களிலுமே முக்கியமான ஹீரோ, வில்லன் பாத்திரங்கள் என, அசுர சாதனை
* சிவாஜி - எம்.ஜி.ஆர்., இணைந்து நடித்த ஒரே படம், கூண்டுக்கிளி. இப்படத்தின் இயக்குனர், டி.ஆர்.ராமண்ணா. ராமண்ணாவின் தம்பி, டி.ஆர்.சோமு என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் மூலமாக, கூண்டுக்கிளி படப்பிடிப்பை பார்க்க போனேன். சிவாஜியை மிக அருகில் பார்த்தேன். பலவிதமான உணர்ச்சிகளை, கொட்டி நடித்துக் கொண்டிருந்தார், சிவாஜி. அங்கிருந்து கிளம்ப மனமில்லை. படப்பிடிப்பு முடிந்த பின், நான் வீட்டுக்கு திரும்பியபோது, காலை, 5:00 மணி. அப்பாவிடம் செம திட்டு வாங்கியது தனிக்கதை
* பல மேடை நாடகங்களை, வெற்றிகரமான திரைப்படங்களாக்கிய பெருமை, நடிகர் திலகத்தையே சாரும். பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, ஞான ஒளி, தங்கப்பதக்கம், கவுரம் மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை
* தன் திரைப்பட கேரியரில், மொத்தம் 305 படங்களில் நடித்திருக்கிறார், சிவாஜி. அவற்றில் நேரடி தமிழ் படங்கள், 282
* சாணக்யா - நாகேஸ்வர ராவ், சந்திரகுப்தர் -என்.டி.ஆர்., அலெக்சாண்டர் - சிவாஜி என, மூவரும் இணைந்து, ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கின்றனர்.
துக்காராம் என்ற படத்தில், சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சிவாஜி
* குங்குமம், தெனாலிராமன் மற்றும் லாரி டிரைவர் ராஜகண்ணு ஆகிய மூன்று படங்களில், பெண் வேடத்தில் நடித்திருக்கிறார், சிவாஜி
* பட்டாக்கத்தி பைரவன் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. பகல், 1:00 மணி, உணவு பரிமாறிக் கொண்டிருந்தார், மேஜர் சுந்தரராஜன். சிவாஜிக்கு அடுத்து நான். பச்சிடி போட மேஜர் வந்தபோது, 'வெங்காய பச்சிடி எனக்கு போடாதே...' என்றார், சிவாஜி. 'வெங்காய பச்சிடி வேணாம்ன்னு சொல்றீங்களே, ஏதாவது விரதமா...' என்று கேட்டேன். 'சாயங்காலம் சொல்றேன்...' என்றார்
அந்த படத்தில், அவருக்கு இரட்டை வேடம். அப்பா மற்றும் மகன். அம்மா சவுகார் ஜானகி. மகன், மடியில் இறக்கும் காட்சி, அன்று பிற்பகலில் படமாக்கினர். மடியில் சவுகார் ஜானகி விழுந்து கிடக்க, நீண்ட வசனம் பேச வேண்டும், சிவாஜி
அன்று மாலை, படப்பிடிப்பு முடிந்த பிறகு, 'எட்டு, பத்து நிமிடங்கள் காட்சி. இறந்தவர் போல, சவுகார் என் மடியில் படித்திருக்க வேண்டும். மதியம், நான் வெங்காய பச்சிடி சாப்பிட்டிருந்தால், வெங்காய வாடை வராதா... அந்த வாடை இருக்கும்போது, அதை பொறுத்துக் கொண்டு அவரால் எப்படி நடிக்க முடியும்... அதனால் தான், வெங்காயத்தை தவிர்த்தேன்...' என, விளக்கினார், சிவாஜி
எனக்கு மெய்சிலிர்த்தது. நடிக்கும் காட்சி மட்டுமின்றி, அதன்பின் என்ன காட்சி எடுக்கப் போகின்றனர் என்று அறிந்து, அதற்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்து கொள்வது. காட்சியில் உடன் நடிப்பவர்களுக்கு, சிறிதும் கஷ்டம் கொடுக்க கூடாது என்ற பண்பு, இவையெல்லாம் தான் அவரை நடிகர் திலகமாக ஆக்கின.
சோ, என்னிடம், 'பர்சனலாக' சொன்ன நிகழ்ச்சி இது:
முக்தா பிலிம்ஸ் படப்பிடிப்பில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்தார், சிவாஜி. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும், சிவாஜி நடிப்பை பாராட்டி, கை தட்டினர். சோ மட்டும் அமைதியாக இருந்தார்.
மதிய உணவு சாப்பிட்டதும், இருவரும் சிகரெட் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். 'மற்றவர்கள், 'செட்டில்' கை தட்டினாலும், எனக்கு, உங்கள் நடிப்பு ஓவராகப்பட்டது. அதுதான் கை தட்டவில்லை...' என்றார், சோ.
'வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி?' என்றார், சிவாஜி.
'நிறைய காட்சிகளில் சூப்பர். ஆனால், சில காட்சிகளில், 'ஓவர் ஆக்டிங்'காக இருந்தது...' என்றார், சோ.
'நகரங்களில், 'ஏ சென்டர்'களில் மட்டும் என் ரசிகர்கள் இல்லை. பட்டி தொட்டிகளில் தான் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களின் ரசனை அறிந்து, உணர்ந்து அவர்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது...' என்று சொல்லி, அந்த படத்தில், கட்டபொம்மன் - ஜாக்சன் துரை இருவரிடையே வரும் வசனங்களை, ஐந்து மாறுபட்ட பாணிகளில் பேசிக் காட்டினாராம்.
நெகிழ்ந்து போய், பிரமிப்பில் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துள்ளார், சோ.
சுதந்திரம் அடைந்து, 73 ஆண்டுகளில், தமிழ் நாடக துறையை சேர்ந்த ஐந்து பேருக்கு மட்டுமே சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
1959 - பம்மல் சம்பந்த முதலியார்
1962 - டி.கே.சண்முகம்
1968 - எஸ்.வி.சகஸ்ரநாமம்
1992 - பூர்ணம் விஸ்வநாதன்
2010 - ஏ.ஆர்.எஸ்.,
- நடிகர் ஏ.ஆர்.எஸ்.

