தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சின்னத்தட்டு, பெரியத் தட்டு!

சின்னத்தட்டு, பெரியத் தட்டு!

சின்னத்தட்டு, பெரியத் தட்டு!


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அதனால என்ன, அடுத்தது என்னன்னு பாருங்க... 'பிளான் பி' தயாரா இருக்குல்ல?'' என, ஜெயகுமாரியின் குரலை கேட்டதும், உற்சாக தென்றல் மனசுக்குள் இதமாய் பரவுவது போல இருந்தது, கேசவனுக்கு.

நல்ல வேளை... 'பிளான் பி' தயாராக இருந்தது. ஒன்று நடக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று திட்டம், எப்போதும் கைவசம் இருக்க வேண்டும் என்பாள், அவள்.

'பிளான் பி இருக்கா...' என, அவள் கேட்டு, 'அப்படி எதுவும் இல்லையே...' என்று சொன்னால், அது மரியாதையாக இருக்காது.

தன் வாழ்வை மாற்றிய அவளை, முதன் முதலில் சந்தித்தது, பெங்களூருவில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடந்த, வியாபார சந்திப்பில். அவன் வேலைக்கு சேர்ந்த புதிது. சூழல் புதிது. அவ்வளவாக பிரபலம் அடையாத சிறிய நிறுவனம்.

அந்த இடத்துக்கே சம்பந்தம் இல்லாதவன் போல, அமர்ந்து இருந்தான். ஒவ்வொருவராக பெயர் சொல்லி, மேடைக்கு அழைத்து, நினைவு பரிசு வழங்கியபோது, கை தட்டி உற்சாகப்படுத்தினர், நண்பர்கள்.

'மிஸ்டர் கேசவன்' என, அழைத்தபோது, சற்று பதட்டமாக, மேடைக்கு நடந்து செல்லும்போது, தனக்கென யார் கை தட்டப்போகின்றனர்... சீக்கிரம் போய், நினைவு பரிசு வாங்கி வந்து, அமர்ந்து விட வேண்டும் என, அவசர அவசரமாக நடந்தான்.

கூட்டத்தில், சிலர் சோகையாக கை தட்டினர். பதட்டத்தில் வியர்த்தது.

திடீரென, பலத்த கை தட்டல் ஒலி, தொடர்ந்து அனைவரும் கை தட்டினர். ஆச்சர்யமாக இருந்தது.

மேடையை விட்டு இறங்கி, தன் இருக்கை நோக்கி வரும்போது தான், கவனித்தான். கை தட்டியது அவளும், அவள் அணியினரும் தான். யார் அவள் என தெரியவில்லை.

உணவு இடைவேளையின்போது, 'மீட்டிங்குல, நீங்க கேட்ட கேள்விகள் வித்தியாசமா, விவாதிச்ச கோணங்கள் புதுசா இருந்துச்சு... அமைதியா, எளிமையா உட்கார்ந்திருந்த உங்களுக்குள், இவ்வளவு அறிவுக்கூர்மை இருப்பது எனக்கு பிடிச்சுருந்துச்சு... அதனால்தான், நீங்க மேடைக்கு போகும்போது, நானும், இன்னும் சிலரும் கை தட்டினோம்...' என்றாள், அவள்.

ஒருவர், தன்னை, நியாயமான காரணங்களுக்காக பாராட்டுகிறார் என்பதே ஆச்சர்யமாக இருந்தது, அவனுக்கு.

'ஆனா, நீங்க பேசுவதில் ஒரு பதட்டம் இருக்கு. தன்னம்பிக்கையோடு, நிதானமா பேசுவது ரொம்ப முக்கியம்...' என்றவள், நிதானமாக, தெளிவாக, மென்மையாக, ஆனால், அழுத்தமாக பேசினாள்.

'சூழல் தான் நம்மை உருவாக்குதுன்னு நினைக்கிறேன்...' என்றான், அவன்.

'அப்படி எல்லாம் இல்லை... சூழல் நம்மை பாதிக்க அனுமதிக்க கூடாது...' என்றாள், அவள்.

மேஜையில், உணவு வகைகள், அவர்களுக்காக காத்திருந்தன.

ஒரு பிரியாணி தட்டையும், தயிர் சாத தட்டையும் தனக்கு முன் வைத்து, 'கேசவன்... உங்க முன்னால் தட்டில் இருக்கும் உணவின் அளவு தான், உங்களுக்கு கிடைக்கும். உங்க பசி, ஆசை முக்கியம் இல்லை. இதோ, இந்த சின்ன தட்டில், கொஞ்சம் தயிர் சாதம் இருக்கு.

'இதுக்கு முன் உட்கார்ந்து எவ்வளவு முயன்றாலும் உங்களுக்கு கிடைக்கபோவது, கொஞ்சூண்டு சாதத்தின் ஒரு பகுதி தான். இதோ பிரியாணி தட்டு, ரெண்டு ஆள் சாப்பிடும் அளவு இருக்கு. இதுக்கு முன் அமர்ந்து முயன்றால், உங்களுக்கு நிறைய சாப்பாடு கிடைக்கும் வாய்ப்பு இருக்கு...

'ஏதாவது தொழிலில் இறங்கும்போதோ, ஒரு துறையில் வேலைக்கு சேரும்போதோ, அது பெரிய தட்டா, சின்ன தட்டா அப்படீன்னு யோசிச்சுக்கோங்க... சின்ன தட்டில் உள்ள கொஞ்ச உணவுக்காக உங்க உழைப்ப, திறமையை வீணடிக்காதீங்க... 'பெரிதுனும் பெரிது கேள்' அப்படீங்கிற வாக்கியத்தை மறக்காதீங்க.

'பெருசா திட்டம் போடுங்க... எப்பவுமே மாற்றுத்திட்டம் ஒன்றையும் மனசில் வச்சுக்கோங்க... 'பிளான் பி' இருந்தால் தான், தோல்வியில் கலங்காம இருக்க முடியும்...'

மீட்டிங் முடிந்து, வீட்டுக்கு வந்த பிறகும், அவள் பேச்சு, மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. தற்போது வேலை பார்க்கும் நிறுவனமோ, அந்த துறையோ முன்னேற்றத்துக்கு வழியற்றது என்பது புரிந்தது. அதாவது, சிறிய தட்டு. தனக்கு அந்த தட்டு போதாது, பெரிய தட்டு ஒன்று தேவை.

கல்லுாரி நண்பன், ஜோசப் நினைவு வந்தது. அவனுடன் பேசலாம் என நினைத்து, கிளம்பினான்.

குளிரூட்டப்பட்ட உணவகம் ஒன்றில் சந்தித்தனர்.

'இந்த ஹோட்டலில் உணவு தரமா இருக்கும். அதனால் தான், இங்கு அழைத்து வந்தேன். இன்னிக்கு, தரமான உணவு கிடைப்பது தான், பெரிய பிரச்னையா இருக்கு. ரசாயன உரம், நஞ்சான காய்கறிகள், தரமற்ற உணவுகளை உண்டு வாழ்ந்த உயிர்களின் மாமிசம் என, போஷாக்கான உணவு கிடைப்பது அரிதாகி விட்டது.

'எங்கேனும் நல்ல உணவோ, உணவுக்கான மூலப்பொருட்களோ கிடைத்தால், தேடிச் சென்று வாங்க, மக்கள் தயாராகவே இருக்கின்றனர். எனவே, நிச்சயம் வெற்றி தரும் தொழில் இது என, உணர்ந்து, அது சார்ந்த தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன்.

'முதலில் நான் ஆரம்பித்தது, கீரை உணவகம். இயற்கை முறையில் விளைந்த ஆரோக்கியமான கீரைகளை கொள்முதல் செய்து, அதை விதவிதமாக சமைத்து விற்று வந்தேன். அவரவர்கள் சாப்பாட்டுக்கு, 'சைட் டிஷ்' மட்டும் நம் சப்ளை. நல்ல வரவேற்பு. காலப்போக்கில் அதை விரிவுபடுத்தினேன்.

'இன்னும் எவ்வளவோ இதை வளர்த்துகொண்டே போகலாம். இது சார்ந்த பயிற்சிகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும், அரசு எவ்வளவோ செலவு செய்கிறது. என்னைப்போல சிலர், இதை பயன்படுத்தி முன்னேறுகின்றனர்.

'பலருக்கு, இதைப் பற்றியெல்லாம் தெரியவில்லை. இந்த தொழில் உனக்கு பிடித்து இருந்தால், என்னோடு கொஞ்ச நாள் வேலை செய். பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வா. அதன் பின், என்னோடு தொடர்ந்தாலும், தனியாக தொழில் செய்தாலும் மகிழ்ச்சி தான். யோசித்து முடிவெடு...' என்றான், ஜோசப்.

'இதுல யோசிக்க என்னடா இருக்கு... எனக்கு, ஓ.கே., தான்...' என, அவனுடன் சேர்ந்து, வேலை செய்ய முடிவு செய்தான்.

'சரி... இனி, சொந்தமாக தொழில் செய்யலாம்...' என்ற தன்னம்பிக்கை கிட்டியது. அதற்கு தேவையான பயிற்சி, அனுபவம் எல்லாம் இந்த கால கட்டத்தில் கிடைத்திருந்தன.

பணம் தேவைப்பட்டது.

குடும்ப நண்பர் நாகலிங்கத்தை சந்தித்து, 'சார், கறவை மாடு தொழில் நல்லா வரும்ன்னு நினைக்கிறேன்...' என்று, நம்பிக்கையுடன் சொன்னவனை, மெல்ல தட்டிக்கொடுத்தார்.

யோசித்த பின், வேண்டாம் என, முடிவெடுத்தார், நாகலிங்கம்.

''சரி, விடுங்க... 'பிளான் பி' என்ன?'' கேட்டாள், ஜெயகுமாரி.

''ஜோசப் ஆரம்பிக்கப்போற உணவகத்துக்கு, பால், வெண்ணெய் மற்றும் நெய் தேவைப்படுது... அதனால, இருவரும் சேர்ந்து செய்யிறதா முடிவு செஞ்சு இருக்கோம்,'' என, திட்டத்தை விவரித்தான், கேசவன்.

''வெரிகுட்,'' என, மகிழ்ந்தாள், ஜெயகுமாரி.

கறவை மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது.

ஜோசப்பின் உணவகத்துக்கு தேவையான பால் போக, எஞ்சியவை, பொது விற்பனைக்கும் கிடைத்தன. தரமான பால் என்பதால், அமோகமான வரவேற்பு. ஜோசப் உணவகமும் புகழ் பெறலாயிற்று.

பசுவின் பால் மட்டுமல்லாமல், சாணம், கோமியம் போன்றவையும் சிறந்த முறையில் பயன்பட்டன. கோமியத்தில் இருந்து, 'அர்க்' எனும் மருந்துப்பொருள் தயாரிக்கும் முறையை வட மாநிலத்திற்கு சென்று, கற்று வந்தான், கேசவன்.

''ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் நேர்ல சந்திக்கிறோம். ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்காகத்தான்,'' என்றான், கேசவன்.

சற்று தீர்க்கமான குரலில், ''என்ன சொல்றீங்க?'' என்றாள்.

''நம் தொழில் சூப்பரா நடக்குது. ஜோசப்போட பணத்தை கொடுத்துட்டேன். இப்ப, அது எனக்கு முழுசா சொந்தம் ஆகிருச்சு. என் முயற்சி வெற்றி பெறாதுன்னு நினைச்சார், நாகலிங்கம். இப்ப, அவரும், என்னோட இணைய விரும்புறார். அவர் பொண்ணை, எனக்கே தரலாம்ன்னு நினைக்கிறாராம்,'' புன்னகைத்தான், கேசவன்.

''வாவ்... வாழ்த்துகள்,'' கை கொடுத்தாள்.

''ஆமா... இரண்டு தட்டுகள் மட்டும் இல்லைன்னா, நான் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கவே மாட்டேன்.''

''அந்த உதாரணத்துக்கும், உங்க கல்யாண பேச்சுக்கும் என்ன சம்பந்தம்?'' கேட்டாள், ஜெயகுமாரி.

''இதயம் அப்படீங்கற தட்டு பெருசா இருந்தால் தான், அதுல இருக்கும் அன்பு, எனக்கு வாழ் நாள் முழுக்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். நானும் அதை கொடுத்துக்கிட்டே இருக்க முடியும். அவங்க சொல்லும் பணம், காசு எல்லாம் சின்ன தட்டு. அன்பு தான், என்னைப் பொருத்த வரை பெரிய தட்டு,'' என, கேசவன் கூறியதும், மலர்ந்து சிரித்தாள்.

தன் வாழ்வை மலர வைத்த அந்த சிரிப்பில், அவன் சிரிப்பும் கலந்தது.

ஜனமேஜயன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us