
வழக்கமாக, இரவு, 11:00 மணிக்கு மேல் தான் துாங்குவார், சிலுக்கு. அதற்கு முன், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பார். அன்றும், சாத்துக்குடி ஜூஸ் குடித்து, இரவு, 9:00 மணிக்கெல்லாம் படுக்க போனார்.
'நாளைக்கு காலையில, 9:30 மணிக்கு எழுப்பு...' என்று, 'டச் - அப்' பையன் ராமகிருஷ்ணாவிடம் சொல்லி, வழக்கமாக படுக்கும் அறையை விடவும் சிறிய அறையில், குழந்தை உத்ராவையும் தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார்.
எப்போதும் கருப்பு நிற ஆடைகளை விரும்பி அணியும், சிலுக்கு. அன்று, கருப்பு நிற பனியனும், கால் சட்டையும் அணிந்திருந்தார்.
சிலுக்கு அறையும், டாக்டர் அறையும் மாடியில் அடுத்தடுத்து இருந்தன.
திங்கள், காலை, 8:00 மணி. குழந்தை உத்ராவின் அலறல் சந்தமும், அழுகுரலும் கேட்டு, பரபரப்பானது வீடு. கீழே தன் அறையில் படுத்திருந்த டாக்டரின் மகன், ராமுவும், டாக்டரும், சிலுக்கு படுத்திருந்த அறைக்கு ஓடினர்.
அந்த அறையில் இரு பக்கங்களிலும் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. வீட்டின் பின் பக்கமாக சென்று, ஏணி வழியாக ஏறி, சிலுக்கு அறையின் ஜன்னலில் எட்டி பார்த்தபோது, நடந்திருந்த விபரீதம் அவர்களுக்கு தெரிந்தது.
டாக்டர், அவரது மகன் மற்றும் மருமகன் என, மூவருமாக, சிலுக்கின் அறை கதவை கடப்பாரை மூலம் நெம்பி உடைத்து, திறந்தனர். போலீசுக்கு தகவல் போனது. போலீஸ் வருவதற்குள், சிலுக்கின் பிணம் துாக்கிலிருந்து அகற்றப்பட்டது.
சிலுக்கின் நாடியை பார்த்து, முதலுதவி செய்தார், டாக்டர். சிலுக்கின் உடல் குளிர்ந்து போயிருந்தது. வடபழனி விஜயா ஆஸ்பிடலுக்கு போன் செய்து, ஆம்புலன்சை வரவழைத்தார். சிலுக்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து, நீண்டநேரமாகி விட்டதாக கூறினர்.
சிலுக்கின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
'நடிகை சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார்' என்ற செய்தி, காட்டுத்தீயாய் பரவியது.
சிலுக்கின் மரணம் குறித்து, அவர் தாயாருக்கு தந்தி அனுப்பப்பட்டது. அவரின் உடல், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கும் செய்தியறிந்து, ஏராளமான ரசிகர்கள், அங்கு குவியத் துவங்கினர்; போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
சில ஆண்டுகளாகவே, சிலுக்கின் தற்கொலை முயற்சிகள் தொடரவே செய்திருக்கின்றன என்ற செய்திகள், நரசம்மாவின் வார்த்தைகளால் உறுதியாயின.
சினிமாவில் சிலுக்கு நடிப்பதே, நரசம்மாவுக்கு பிடிக்கவில்லை. தாயார் தன்னோடு வந்திருக்க வேண்டும் என்று, சிலுக்கு மனதார விரும்பியது, அவரது கடைசி நாட்களில் தான்.
'என்னோட வந்து இருன்னு பலமுறை சொன்னா... 'கேடு கெட்ட பொழைப்பு நடத்தறே... வரமாட்டேன்'னு, சொன்னேன். நாலு வருஷம் முன்ன இப்படி தான், அபர்ணா வீட்டுல நான் தங்கியிருந்தப்ப, அந்த பொண்ணு தான், 'பாப்பா, 10 நாளா சாப்பிடலை... செத்து போற மாதிரி இருக்கு'ன்னு சொல்லுச்சு. பதறியடிச்சு ஓடினேன். பாப்பா, என்னை பார்த்து, 'ஓ'ன்னு அழுதுச்சு. தாடிக்காரன், ஒரு மாசமா ஐதராபாத் போயிட்டான், வரல.
'தெலுங்கு படமெடுத்து, கடனாகி, 'டெக்னீஷியன்'களுக்கெல்லாம் நிறைய பாக்கி. படம் வெளியீடு பண்ண முடியல. 'நீ நடிக்கிறதுக்கு முன்னாடியே துட்டை வாங்கிடுறியே... நாங்க வேலை செஞ்சுட்டுதானே காசு கேட்கிறோம்'ன்னு கடன்காரங்களெல்லாம் போன்ல, பாப்பாவ அசிங்கமா பேசினாங்களாம்.
'இதையெல்லாம் என்கிட்ட சொன்னதும், ஆந்திரா போய், 65 ஆயிரம் ரூபாய், 14 சவரன் நகையெல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்தேன். கடைசியா போன வருஷம், பாப்பாவை பார்க்கணும்ன்னு போனேன், தாடிக்காரன் துரத்தியடிச்சுட்டான்.
'தற்கொலை பண்ணிக்கிற மாதிரி, பாப்பா கோழையெல்லாம் கிடையாது. இது, தற்கொலை இல்லைன்னு மட்டும் நான் தைரியமா சொல்லுவேன்...' என்றார், நரசம்மா.
எனக்கு, டாக்டர், 'செட்டில்' செய்த, 'செக்'குகளில் சிலவற்றை தவிர, மற்றவை எல்லாம், வங்கி கணக்கில் பணம் இல்லாததால், 'பவுன்ஸ்' ஆனது. அதனால், பல ஆண்டுகளாக வக்கீல் வீட்டுக்கு அலைந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார், அன்னபூரணி.
சிலுக்கின் தாயார், நரசம்மாவின் வாக்குமூலம் பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
'என் மகன், வாடகை லாரி ஓட்டியும், நான், கூலி வேலை செஞ்சும் வயித்தை கழுவிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு ஒருநாள் தந்தி வந்துச்சு. 'துாக்க மாத்திரை நிறைய சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சுட்டா, விஜி. உடனே வாங்க'ன்னு, தாடிக்காரன் தந்தி கொடுத்தான். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்துச்சு.
'நானும், மகனும் மெட்ராசுக்கு ஓடி வந்தோம். எங்களை பார்த்ததும், அழ ஆரம்பிச்சா, விஜி. 'நான் எவ்வளவு சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்... என்னை, நீங்க எல்லாரும் அனாதையா விட்டுட்டு ஒதுங்கியே இருக்கீங்களே'ன்னு புலம்பினா.
'கொஞ்ச நாள் அவளோடயே இருந்தோம். எங்களை விரட்டி அடிக்காத குறையா, சொந்த ஊருக்கு அனுப்பி வெச்சான். தாடிக்காரன்.
'மீண்டும் அவசரமா வரச்சொல்லி தகவல் கொடுத்தா, வந்தேன். 'அம்மா... கடைசி வரைக்கும் உங்கூடவே இருக்கணும்ன்னு தோணுதும்மா... என்னை விட்டுப் போயிடாதேம்மா'ன்னா. அவளை சமாதானப்படுத்தி, ஒரு வாரம் இருந்து, அவளோடு பெங்களூர் படப்பிடிப்பு தளத்திற்கு போனேன்.
'நான் சிலுக்கோட இருக்கிறதை, தாடிக்காரன் விரும்பவில்லை. மறைமுகமா அவகிட்ட சண்டை போட்டான். 'நீ கொஞ்ச நாள் ஊருக்கு போய் தம்பி கூட இருந்துட்டு வா'ன்னு என்னை அனுப்பி வெச்சா...'
நரசம்மாவின் வார்த்தைகள், சிலுக்கு தனிமைப்படுத்தப் பட்டதை உறுதி செய்கின்றன.
சிலுக்கு ஒன்றும், டாக்டரிடம் மயங்கி கிடக்கவில்லை. டாக்டர் தான், சிலுக்கை, 'மெஸ்மரைஸ்' செய்து வைத்திருந்தார். தன் மருத்துவ அறிவை பயன்படுத்தி, சிலுக்கை, உடலளவிலும், மனதளவிலும் மிகவும் தளர்ந்து போய், தன் கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்திருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளி வந்தன.
'டாக்டரை, தன் துணையாக தேர்ந்தெடுத்தது தான், சிலுக்கு செய்த தவறு. அதனால் தான் இவ்வளவு கஷ்டங்கள்...' என்ற, அன்னபூரணி, டாக்டர் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை கூறினார்.
'அவளுக்கு, தண்ணி போட கத்துக் கொடுத்தாரு, சிகரெட் பிடிக்க பழகிக் கொடுத்தாரு. நான், அவளை தட்டிக் கேட்டேன். 'உடம்பு அலுப்பு தெரியாம இருக்கதான் இதையெல்லாம் சாப்பிடுறேம்மா'ன்னு சொல்லுவா...' என்றார்.
— தொடரும்.
பா. தீனதயாளன்