
பாட்டியின் ஊட்டச்சத்து சமையல்!
விடுமுறை தினம் மதியம், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். குழந்தைகளோடு நண்பரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நானும் சேர்ந்து கொண்டேன். வாழைத் தண்டு மோர் குழம்பு, வாழைப்பூ பருப்பு வடை, நார்த்தங்காய் குழம்பு என, சமையல் அசத்தலாக இருந்தது. நண்பரிடம் விபரம் கேட்டேன்.
அவர் மனைவி, 'இவையெல்லாம், எங்கள் குடியிருப்பில் உள்ள வயதான பாட்டியின் கைங்கரியம். கணவனும் - மனைவியும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில், விதவிதமான, பாரம்பரிய சமையலுக்கு சாத்தியமில்லை என்பதால், வளரும் குழந்தைகளின் உடல் நலனை மனதில் கொண்டு, உதவி செய்கிறார்.
'முதல் நாள் சொல்லி விட்டால் போதும். முருங்கை கீரை, வாழைத்தண்டு, நார்த்தங்காய், இஞ்சி, புதினா மற்றும் பிரண்டை என, எது வேண்டுமானாலும் அவரே வாங்கி வந்து, சமையலுக்கு ஏற்றவாறு ஆய்ந்து, நறுக்கி தந்து விடுவார் அல்லது எங்களுக்கு தெரியாததை செய்து தந்து, அசத்தி விடுவார்.
'காய்கறி விலையோடு, அவரின் சேவைக்காக வாங்கிக் கொள்ளும் தொகை குறைவாகவும் இருக்கும். அதோடு, புளி காய்ச்சல், தேங்காய் பொடி, பருப்பு பொடி, மிளகு குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, வெந்தய குழம்பு, பிரண்டை துவையல் முதலானவற்றை, தேவையென்றால் ருசியாக செய்தும் தருவார்.
'முன்பெல்லாம், விடுமுறை நாட்களில், ஓட்டலுக்கு போகலாம் என்று அடம்பிடித்த குழந்தைகள், இப்போது, வீட்டு சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு காரணம், பாட்டியின் கை பக்குவமும், பாரம்பரிய சுவையும் தான்...' என்றார்.
இதை கேட்டதும், மனம் மகிழ்ந்தது.
வயதான காலத்தில், வீடு வீடாக சென்று வம்பு பேசாமல், 'டிவி சீரியல்'களில் மூழ்காமல், வளரும் குழந்தைகளின் நலனுக்காக நேரத்தை செலவிடும், வயதான பாட்டியை பாராட்டி வந்தேன்.
என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
நோ சுகர்!
சமீபத்தில், ஒருநாள், பெட்ரோல் பங்கில் அமைந்துள்ள கடையில், 'வித்தவுட் சுகர் காபி' ஒன்று, 'ஆர்டர்' செய்தேன். அங்கிருந்த வடமாநில பணியாளர், என்னை பார்த்து, 'கீத்னா சுகர்?' என்றான். அவனுக்கு நான் சொன்னது புரியவில்லை என நினைத்து, 'நோ சுகர்' என்றேன்.
தலையை ஆட்டிய அவன் தயாரித்து கொடுத்த காபியை வாங்கி குடித்தபோது, அதிக இனிப்பாக இருப்பதை உணர்ந்தேன். உடனே, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், 'ஐ செட் நோ சுகர்... ஒய் யூ புட் ஹை சுகர்?' என்றேன்.
அவனோ, 'யூ செட் தோ சுகர்...' என்றான்.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நான், சர்க்கரை தேவையில்லை என்பதற்கு, 'நோ சுகர்' என்று கூறியதை, இரு மடங்கு சர்க்கரை போடுவதற்காக, 'தோ' - ஹிந்தியில் இரண்டு என்று சொன்னதாக அவன் புரிந்து கொண்டது, தெரிய வந்தது.
இப்போதெல்லாம் பெரும்பாலான கடைகளிலும், ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர்களே காணப்படுகின்றனர். தமிழ், அவர்களுக்கு தகராறு. எனவே, இதுபோன்ற குளறுபடிகள் அரங்கேற அதிகம் வாய்ப்புள்ளது.
ஹிந்திகார பணியாளர்களிடம் பேசும்போது, முடிந்தவரை சைகையையும் சேர்த்து தெளிவாக பேசி விடுங்கள். நாம் சொன்னது அவர்களுக்கு புரிந்ததா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையேல் என்னை போல, நீங்களும் நொந்து போக நேரிடும்.
கே. சக்கரபாணி, சென்னை.
திருமணத்துடன், சுயம்வர நிகழ்வு!
சமீபத்தில், திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். மண்டபத்தின் இரு புறங்களிலும் இரண்டு மேடைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த, திருமண வயதுள்ள ஆண்கள், ஒரு பக்க மேடையிலும், பெண்கள், மற்றொரு பக்க மேடையிலும் அமர்ந்திருந்தனர்.
ஒவ்வொருவராக எழுந்து நிற்க, அவர்களின் படிப்பு, வேலை மற்றும் இருப்பிடம் போன்ற விபரங்களை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். அத்துடன், அவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய, சிறு கையேட்டை திருமண வீட்டினர் வினியோகம் செய்தனர்.
இந்த சுயம்வர நிகழ்வில், அவர்களுக்கு பிடித்தவர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து, மனம் விட்டு பேசி, பெற்றோரிடம் சொல்ல, இரு தரப்பு பெற்றோரும் நேரில் பேசி, முடிவு எடுப்பதும், ஒரு விழா போன்று காட்சியளித்தது.
இதுபற்றி, திருமண வீட்டாரிடம் கேட்டபோது, 'எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று, நாங்கள் மட்டும் சந்தோஷம் அடையாமல், எங்கள் சொந்த பந்தங்களுடைய பிள்ளைகளுக்கும், விரைவில் திருமணம் நடக்க, இந்த ஏற்பாடு செய்தோம்...' என்றனர்.
இக்காலத்தில், தன் நலன் பாராமல், பிறர் நலன் மீது கவனம் செலுத்தும் திருமண வீட்டாரை, மனதார வாழ்த்தி வந்தேன்.
ஏ. நாராயணன், பெரிய காஞ்சிபுரம்.