
போலீசார் போவதற்குள், சிலுக்கின் பிணம் அகற்றப்பட்டிருந்ததால், அது தற்கொலையா, கொலையா என்று, உறுதியாக கூற முடியாத அளவுக்கு தடயங்கள் இல்லாமல் போயின.
டாக்டர் சொன்னவைகளையே போலீசார் ஏற்க வேண்டியதாயிற்று.
சிலுக்கின் மரணம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின் கருத்துகள், சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்தன.
துாக்கு மாட்டுவதற்கு, சிலுக்கு பயன்படுத்திய அவரது நைலான் சேலையில் உமிழ்நீர் நிச்சயம் படிந்திருக்கும். அவர், தற்கொலை செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
மற்றபடி, சிலுக்கு கொல்லப்பட்டு துாக்கில் தொங்க விடப்பட்டிருந்தால், அவர் துாக்கு போடுவதற்கு பயன்படுத்திய மேஜை, மெத்தை ஆகியவற்றில், சிலுக்கின் பாதச்சுவடுகளை நிச்சயம் காண முடியாது.
இறந்துபோன, சிலுக்கின் பாதங்களின் தடங்கள், அவர் தற்கொலைக்காக பயன்படுத்திய கட்டில், மெத்தை, மேஜை ஆகியவற்றில் காணப்பட்டதா என்று போலீசார் பரிசோதித்திருக்க வேண்டும்.
சிலுக்கின் கழுத்து பகுதியில் இருந்த காயத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து, மரணம் எப்படி சம்பவித்தது என்று, போலீசார் உறுதியாக சொல்லியிருக்கலாம்.
தடயவியல் நிபுணர்கள் யாருமே, சிலுக்கின் உடலையோ, இறந்து கிடந்த அறையையோ சோதனையிடாத நிலையில், அவர்களால் இப்படி கேள்விகளை மட்டுமே எழுப்ப முடிந்தது.
சிலுக்கின் தற்கொலை இயல்பானதா அல்லது அவர் கொலை செய்யப்பட்டிருப்பாரா என்பது குறித்த மர்மங்கள் விலகவே இல்லை.
பொதுவாக, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தார், சிலுக்கு. ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன், 'கல்கி' இதழுக்கு, ஒரு பேட்டி அளித்திருந்தார்.
ஒரு வகையில், சிலுக்கு, தன்னை பற்றி, மனம் திறந்து முழுமையாக பேசிய முதலும் கடைசியுமான பேட்டி என்று, இதை சொல்லலாம்.
நீங்கள் சினிமா உலகத்துக்கு வந்து, 16 ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்த அனுபவத்தில், நீங்கள் வந்த புதிதில் இருந்த சினிமா உலகத்துக்கும், இப்போதுக்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
இன்றைய சினிமா உலகம் தொழில்நுட்ப அடிப்படையில் பார்த்தால், பிரமிக்கதக்க அளவில் முன்னேறி இருக்கிறது. நான் வந்த புதிதில் இப்படி இல்லை.
இன்னொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது...
முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கு, சிலுக்கு தேவைப்பட்டார். இப்போது, தேவையில்லை என்கிற நிலை. கதாநாயகியரே, கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டனரே.
இன்று, சிலுக்கு தேவையில்லை என்பதில்லை. எல்லாருமே சிலுக்கு ஆகிவிட்டனர் என்பது தான் உண்மை!
நிஜமாக சொல்லுங்கள், நீங்கள் நடிக்க வந்தபோது, இப்படியொரு கவர்ச்சி நடிகையாக வேண்டுமென்ற கனவோடு தான் வந்தீர்களா?
நிச்சயமாக இல்லை. சாவித்திரி அம்மா போல், சிறந்த நடிகையாக நடித்து, பேர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். அதனால் தான், என் பெற்றோரின் விருப்பத்தையும் மீறி, கதாநாயகி கனவுகளோடு சென்னைக்கு வந்தேன்.
உங்கள் பெற்றோரின் விருப்பம் என்ன?
என் பெற்றோருக்கு, நான் ஒரே பெண். எனக்கு ஒரு தம்பி. விவசாயம் தான் தொழில். சொந்த ஊர், ஆந்திராவில் உள்ள, ஏலுார். சொந்த பெயர், விஜயலட்சுமி. ஒரு சராசரி குடும்பம் என்பதால், நான் பெரியவளானதும், எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசைதான் பெற்றோருக்கு. எனக்கோ, கதாநாயகி ஆசை.
அப்புறம் எப்படி, 'கிளாமர் ரோல்'களில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்?
பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாதபோதும், பள்ளி படிப்பை முடிக்காத எனக்கு, சினிமா ஆசை மட்டும் அளவு கடந்து இருந்ததால், அத்தையுடன் சென்னை வந்தேன்.
ஒரு ஆண்டுக்கு பின், வண்டிச்சக்கரம் படத்தில், வாய்ப்பு கிடைத்தது. ஸ்மிதாவாக பிரவேசம் செய்த நான், வண்டிச்சக்கரம் படத்தில் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர், 'சிலுக்கு' என்பதால், அந்த பெயரே நிலைத்து விட்டது.
அலைகள் ஓய்வதில்லை படத்தில், நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களே, அப்படியிருந்தும் ஏன், 'கிளாமர் ரோல்'களாகவே வந்தன?
வண்டிச்சக்கரம் படம் வெளியான பிறகு தான், அலைகள் ஓய்வதில்லை படம் வெளியானது. இரண்டிலுமே நான் சிறப்பாக நடித்திருப்பதாக பேசப்பட்டாலும், ரசிகர்களின் மத்தியில், வண்டிச்சக்கரம் படத்தில் நடித்த, 'சிலுக்கு' என்ற பாத்திரமே ஆழமாக பதிந்து விட்டது. எனவே தான், மீண்டும், 'கிளாமர் ரோல்'களிலேயே நடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
இந்த நிர்பந்தம் குறித்து, நீங்கள் வருத்தப்படவில்லையா?
சாவித்திரி அம்மாவை போலவே எனக்கும் புகழ் கிடைத்திருக்கிறதே!
அதற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால், சாவித்திரியின் நடிப்பை ரசித்தனர். உங்களை பொறுத்தவரை, உங்கள் நடிப்பை பின்னுக்கு தள்ளிவிட்டு, கச்சிதமான உடலமைப்பைதான் முதலில் ரசிக்கின்றனர் என்ற வித்தியாசத்தை, நீங்கள் உணரவில்லையா?
எனக்கு தெரியாமல் இல்லை. என்றாலும் வேறு வழியில்லை. முதல் படத்தை பார்த்து, ரசிகர்கள் எப்படிபட்டதொரு முத்திரையை குத்துகின்றனரோ, அதை கடைசி வரைக்கும் அழிக்கவே முடியாது என்பதை, மிக தாமதமாக தான் தெரிந்து கொண்டேன். அதனால் தான் எனக்கு, கதாபாத்திர வேடங்கள் கிடைக்கவில்லை. என்றாலும், அண்மையில் மலையாளத்தில், அற்புதமான ஒரு கதாபாத்திர வேடத்தில் நடித்தேன். அந்த வகையில் நான் திருப்திபட்டுக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில், நீங்கள் கடித்து கொடுத்த ஆப்பிள் கூட, ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போனதாக செய்திகள் வந்தன. அப்போதெல்லாம் உங்கள் மனோ நிலை எப்படி இருந்தது?
அதையெல்லாம் விளையாட்டாக தான் எடுத்துக் கொண்டேனே தவிர, சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை. இன்றைக்கு கூட ஒரு ரசிகர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்றாலும், நான் அவரை திருமணம் செய்து கொண்டால், என்னை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவதாக எழுதியிருக்கிறார். இதையெல்லாம் நான் என்னவென்று எடுத்துக் கொள்வது?
எந்த படத்தில் நடிக்கும்போதாவது, 'இதுபோன்ற, 'காஸ்ட்யூம்'களை யெல்லாம் என்னால் போட்டு நடிக்க முடியாது...' என்று, நீங்கள் மறுத்த அனுபவம் உண்டா?
இல்லை. காரணம், என், 'காஸ்ட்யூம்'களை நானே, 'டிசைன்' செய்து கொள்கிறேன். என் எந்த, 'செலக் ஷனை'யும் இதுவரை எந்த இயக்குனரும் மறுத்ததில்லை.
நடிப்போடு, 'காஸ்ட்யூம் டிசைனும்' செய்கிறீர்களா?
மற்றவர்களுக்கு அல்ல. எனக்கு மட்டும் தான். அதோடு பழைய பொருட்களை எங்கு பார்த்தாலும் உடனே வாங்கி வந்து விடுவேன். புதுமையாக இருந்தாலும் வாங்கி விடுவேன்.
உங்கள் திருமணம் எப்போது?
இன்னும் இரண்டொரு ஆண்டுகளில்.
காதல் திருமணமா?
ஆம். என்னை பற்றி முழுவதும் தெரிந்தவர் கணவராக வரும்போது தான், பின்னாட்களில் பிரச்னைகள் வராமல் இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொண்டால், 'ஐயய்யோ... நீ இப்படிப்பட்ட, 'காஸ்ட்யூம்'களில் கூடவா நடித்திருக்கிறாய்' என்றெல்லாம் கேள்விகள் வர வாய்ப்பிருக்கிறதே.
அப்படியானால், மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று சொல்லலாமா?
ஆமாம்.
யார்?
அதை மாத்திரம் இப்போது சொல்ல மாட்டேன்.
— முற்றும்
பா. தீனதயாளன்