
அனைத்து பள்ளிகளும் பின்பற்றலாமே!
நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன். 6ம் வகுப்பு படிக்கும், நண்பரின் மகன், வங்கி சேமிப்பு புத்தகத்தை காட்டினான்.
'என்னப்பா, இந்த வயதிலேயே, வங்கியில் பணம் சேமிக்கிறாயா...' என, கேட்டதற்கு, 'இல்லை அங்கிள்... எங்க பள்ளியில் கொடுத்தாங்க...' என்றான்.
வியப்புடன் நண்பனை பார்க்க, 'இவனது பள்ளியில் வகுப்பு வாரியாக பிரித்து, ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மார்க் வாங்குகிற மாணவர்களுக்கும், அறிவு சார்ந்த மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் ரொக்க பரிசு வழங்குவர்.
'அந்த பரிசு தொகையை, அவரவரின் வங்கி சேமிப்பு கணக்கில் சேர்த்து, ஆண்டு முடிவில், அந்தந்த மாணவரின் பெற்றோரிடம் வழங்குவர். இதனால், அடுத்தடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஊக்கமும், சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும் ஏற்படுகிறது...' என்றான், நண்பன்.
அறிவை வளர்க்கும் பள்ளிகள், சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதையும் பாராட்டினேன்.
மற்ற பள்ளிகளும், இதே நடைமுறையை பின்பற்றி, மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தலாமே!
— ஆ. ராஜேந்திரன், கோவை.
'ஈகோ'வால் வந்த பிரச்னை!
'அரசுப் பணியில் இருக்கும் பெண்ணை தான், திருமணம் செய்து கொள்வேன்...' என்று, பிடிவாதமாக இருந்தார், என் நண்பர்.
கடைசியில், அவர் நினைத்தது போலவே, அரசுப் பணியில் உள்ள பெண்ணே, மனைவியாகக் கிடைத்தாள். ஆனால், என் நண்பனின் சம்பளத்தை விட, மனைவியின் சம்பளம் அதிகம். பல சமயங்களில், இந்த சம்பள வித்தியாசம், பிரச்னைகளை உருவாக்கியது.
நண்பன், நல்ல குணவான். மனைவி, குழந்தைகளுக்கு உதவி செய்து, குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் தானே கவனித்து வந்தார்.
ஒருநாள், கணவன் - மனைவி இடையே, சம்பளம் வித்தியாச பிரச்னை எழவே, பார்த்த வேலையை ராஜினாமா செய்து, அயல்நாடு சென்று விட்டார். தற்போது, மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம்; மனைவி சம்பாத்தியத்தை போல, ஐந்து மடங்கு அதிகம். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான், இந்தியா வர முடியும்.
அவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள். வயதுக்கும் வந்து விட்டனர். உதவிக்கு யாருமில்லை. குடும்பத்தை கவனிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள், மனைவி.
'நீங்கள், வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டாம்; இந்தியா வந்து விடுங்கள்...' என்று, மனைவி கூற, 'நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான், தாய் நாடு வர முடியும்...' என, தவிக்கிறார், நண்பர்.
'நீங்கள், வேலைக்கே போக வேண்டாம். வீட்டிற்கு தலைவராக இருங்கள் போதும்...' என்று, இப்போது புலம்புகிறாள், மனைவி.
பணத்தாசை மற்றும் 'ஈகோ'வால் வந்த பிரச்னையின் விளைவை எண்ணி இப்போது வருந்துகிறாள், மனைவி.
உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.
இரக்கமற்ற செயல்!
புற்று நோயால் பாதிக்கப்பட்ட, தோழி ஒருவர், 'கீமோதெரபி' செய்து கொண்ட நிலையில், முடி முழுவதும் கொட்டி விட்டது. அழகாக இருக்க விரும்பிய அவள், தன் நிலையை எண்ணி வேதனை அடைந்தாள்.
ஆறுதல் கூறி, செயற்கை முடி வாங்கித் தந்தோம். அரைமனதாக அதை அணிந்து, அலுவலகம் வந்தாள்.
ஒருநாள், மதிய உணவு நேரத்தில், அழுது கொண்டிருந்தாள். விசாரித்ததில், 'உன் முடி, மிக அழகாக இருக்கிறது... இது போல, நானும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளட்டுமா... தலை சீவும் நேரம் மிச்சம், ஷாம்பூ, தண்ணீர் கூட அதிக செலவு வைக்காது...' என, அலுவலகத்தில் ஒரு குழு, கிண்டல் செய்ததாக சொன்னாள்.
இன்றைய நிலையில், மக்களுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலாவதாக இருப்பது, புற்றுநோய். இது, யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறாவிட்டாலும், கேலி செய்வது ஏற்புடையது அல்ல.
வாசகர்களே... நாம் காட்டும் அன்பு மட்டுமே, அவர்களிடம் நம்பிக்கையை தோற்றுவிக்கும்; எனவே, கூடிய வரை, வியாதியஸ்தர்களை புரிந்து, இரக்கம் காட்டுங்கள்.
- வித்யா வாசன், சென்னை.