
கோழி கூவுது படப்பிடிப்பு நடைபெற்றபோது, தன் வீட்டுக்கு மதிய விருந்துக்காக, கங்கை அமரனை அழைத்தார், சிலுக்கு.
பட தயாரிப்பாளரும், கங்கை அமரனின் அண்ணனுமான பாஸ்கர், ஒளிப்பதிவாளர் நிவாஸ் ஆகியோருடன், கங்கை அமரனும், அவரது வீட்டுக்கு, விருந்துக்கு சென்றனர்.
தலைக்கு குளித்து, புடவை கட்டி, பொட்டிட்டு, ஆந்திரா மண் வாசனை மணக்க மணக்க, காரசாரமாக கோழிக் கறி வகைகள் சமைத்து, கங்கை அமரன் குழுவுக்கு, தானே பரிமாறினார்.
'இவருக்குள் இப்படியொரு பெண்ணா...' என வியந்தார், கங்கை அமரன்.
காலப்போக்கில், தெலுங்கு படங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், சிலுக்கு. ஆனாலும், நேரில் சந்திக்க இயலாமல் போனாலும், 'என் மச்சான் நல்லாயிருக்கிறாரா... அத்தான் நல்லாயிருக்கிறாரா...' என்று விசாரிக்க தவறுவதே இல்லை.
வெளிநாடுகளில் நட்சத்திர விழாக்களை தொடர்ந்து நடத்தினார், அமரன். அதில் பங்கேற்க முடியாத அளவுக்கு, அமரனின் சிநேகிதி, படு, 'பிசி'யாகவே இருந்தார்.
சிலுக்கை கவர்ந்த நடன அழகி, இந்தி கவர்ச்சி நடிகை, ஹெலன். 'ஹெலன் அளவுக்கு தன்னால் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள முடியுமா... பல ஆண்டுகள் நீடித்து, கவர்ச்சி ஆட்டம் போட முடியுமா...' என்று ஆச்சரியப்படுவார்.
சிலுக்கு நடித்த படங்கள், பத்திரிகைகளில் கொடுத்த, 'போஸ்'கள் எல்லாவற்றிலும், கவர்ச்சி மிதமிஞ்சியே இருந்தது. சினிமா படப்பிடிப்பு தவிர, பொது இடங்களில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிகரமான உடைகளிலேயே கலந்து கொண்டார்.
இதுகுறித்து, சக கவர்ச்சி நடிகையரே, 'கவர்ச்சியாக ஆட வேண்டியது தான். அதற்காக, அதே கவர்ச்சி உடையோடு தான் பொது நிகழ்ச்சிகளுக்கும், 'என்னை பார், என் அழகை பார்' என்று வந்து காட்ட வேண்டுமா...' என்று கோபப்பட்டனர்.
தன் கவர்ச்சி, அத்துமீறி போனது குறித்து கவலைப்படவே இல்லை.
ஒரு பேட்டியில்: கவர்ச்சியாக நடிக்கிறீர்களே, உங்கள் வாழ்க்கையை பற்றி கவலைப் படவில்லையா?
நான் நடிக்க வந்திருப்பது, ரசிகர்களுக்காக தான். அவர்கள்தான் என்னை இவ்வளவு துாரம் உயர்த்தி இருக்கின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கவர்ச்சியாக நடிக்கிறேன். ரசிகர்கள் வேண்டாமென்றால், கவர்ச்சியிலிருந்து விலகி விடுவேன்.
குலுக்கி ஆடும், கவர்ச்சி நடனங்களால் தான் சமூகம் கெட்டு போகிறது என்கின்றனரே?
எங்கே தவறுகள் நடக்கவில்லை, உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா... இன்றும், சில குடும்பங்களில் நடக்கும் தவறுகளை, அவர்களே மறைத்து விடுகின்றனர். எங்களை போல், பிரபல நடிகையர் என்றால், இல்லாததை சேர்த்து சொல்வர்.
மக்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில், ஆடை அணிந்து வரும் கல்லுாரி மாணவியரை பாருங்கள். சற்றும் கூச்சமில்லாமல் வருகிற மேல்மட்ட பெண்களின் கவர்ச்சி மிக்க உடைகளை பாருங்கள். இவர்களால் மக்களின் கவனம் சிதறி, சமூக சீர்கேடுகள் ஏற்படுவதில்லையா?
திரைப்படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தான் நாங்கள் அப்படி ஆடுகிறோம். நாங்கள் ஆடுவதை பார்க்க வேண்டுமென்றாலும், டிக்கெட் வாங்கிய பின் தான் பார்க்க முடியும். ஆனால், காலை, மாலை, இரவு என்று எந்நேரமும், தெருவிலும், பொது இடங்களிலும் மக்கள் பார்வையில் பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் குறித்து, ஏன் யாரும் ஒன்றும் சொல்வதில்லை.
கவர்ச்சி ஆட்டத்தோடு, கதாநாயகி ஆசையிலும், வாய்ப்புகளை தேடி போனார். கதாநாயகியாக நடித்த படங்களின் படுதோல்வி, சிலுக்கின் செல்வாக்கு இவ்வளவு தானா என்று, விநியோகஸ்தர்களை பேச வைத்து விட்டது.
கதையை கேட்க கூட அவகாசம் இல்லாமல், சிலுக்கின் நடிப்பில் எடுக்கப்பட்ட படம், சில்க் சில்க் சில்க். தொடர்ந்து, 30 நாள், தன் மிக அரிதான, 'கால்ஷீட்'டை கொடுத்து, மூன்று வேடங்களில் நடித்தார்.
பொங்கலுக்கு, 1983ல் வெளியான இந்த படம், தீவிரமான ரசிகர்கள் வாழ்ந்த மதுரையிலேயே, மூன்று வாரங்களில் சுருண்டது. சிலுக்கால் தான் படங்கள் ஓடுகின்றன என்றால், அவர், கதாநாயகியாக நடித்த, சில்க் சில்க் சில்க் படம் ஏன் ஓடவில்லை என்று கேள்விகள் எழுந்தன.
ஆறு மாதங்களுக்கு பின், போலீஸ் போலீஸ் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தார்; அதுவும் ஓடவேயில்லை.
ஏவி.எம்.குமரன், தனியாக தயாரித்த, சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில், சிலுக்கு தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பி, ஒப்பந்தம் செய்தார்; கதாநாயகன் பிரபு.
சிவாஜி நடித்த, மனோகரா படத்தை, ராம.நாராயணன் உல்டா செய்து, சூரக்கோட்டை சிங்கக்குட்டியாக உலவ விட்டார். அது, எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. மிகப்பெரிய பேனரில், முழு நீள கதாநாயகியாக சிலுக்கு நடித்தும், ரசிகர்கள் ரசிக்கவில்லை.
சிலுக்கு முக்கியம் தான். அதை காட்டிலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மை மனதில் நிற்பது போல் இருப்பது, அதி முக்கியமானது என்ற உணர்வு மேலிடத் துவங்கியது.
'சிலுக்கை, முழுக்க முழுக்க, 'செக்ஸ் சிம்பல்' ஆக இங்கே, 'எக்ஸ்பிளாயிட்' பண்ணப் பார்த்தது தவறு. மூன்றாம் பிறை படத்தில், சிலுக்கு நின்றதுக்கு காரணமே, அந்த கேரக்டர் தான்...' என்று, தம் கருத்தை சொன்னார், பாலு மகேந்திரா.
— தொடரும்.
பா. தீனதயாளன்