
புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுத்ததால் வந்த வினை...
என் உறவினரின் மகளுக்கு, மாப்பிள்ளை பார்த்ததும், நிச்சயம் செய்ய மண்டபம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
'இந்த திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு, விருப்பம் இல்லையாம்... உங்களை, வேறு இடம் பார்த்துக் கொள்ள சொன்னார்...' என்று, போன் செய்தார், புரோக்கர்.
தாய் மாமன் மற்றும் உறவினர்கள் அனைவரும், கோபத்துடன், 'மாப்பிள்ளை வீட்டாரை, ஒரு கை பார்த்து விடுகிறோம்...' என்று கிளம்பி, அவர்கள் வீட்டிற்கு போய், தாம் துாம் என்று கத்தியுள்ளனர்.
பெண்ணின், 'இன்ஸ்டாகிராம்' மற்றும் முகநுாலில் உள்ள புகைப்படங்களை காட்டினர், மாப்பிள்ளை வீட்டார்.
அதில், அலுவலக நண்பர்கள் அனைவரும், மது அருந்துவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதை பார்த்து ஆடிப்போன பெற்றோர், 'மாதந்தோறும் அலுவலகத்தில் நடைபெறும், 'கெட் டு கெதர்' நிகழ்வு. இதில், பெண்கள் குடிக்க மாட்டார்கள்... குளிர்பானத்தை கையில் வைத்து, புகைப்படத்துக்காக, 'போஸ்' கொடுத்துள்ளனர்...' என்று எவ்வளவோ சொல்லியும், இவர்கள் தரப்பு நியாயம் செல்லுபடியாகவில்லை; அசிங்கப்பட்டு திரும்பினர்.
தற்போது, திருமணம் என்ற பேச்சு ஆரம்பிக்கும்போதே, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார், மணமக்களின், 'சோஷியா மீடியா' பக்கங்களை ஆராய ஆரம்பித்து விடுகின்றனர். அதை வைத்து, மணமக்களின் குண நலன்களை தெரிந்து கொள்கின்றனர்.
எனவே, அதில் தேவையில்லாத புகைப்படங்களை பதிவிடாமல் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
கல்பனா, சென்னை.
வாஸ்துபடி, வாயில் சரியில்லை!
நண்பனின், புது வீட்டு, கிரஹபிரவேசத்திற்கு சென்றிருந்தேன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்கள், நகைகளை விற்று, வங்கியில் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு தான் வீட்டை கட்டியிருந்தனர்.
நண்பனுடன் வேலை செய்யும் அலுவலக பணியாளர்களும் வந்திருந்தனர். அதில், 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி, 'வாஸ்துபடி, வாசற்படி சரியில்லை...' என்றார்.
'அதெல்லாம் சரியாக தான் உள்ளது; மாடிப்படியும், சமையல் அறையும் சரியில்லை. அதனால், குடும்பத்தில் என்னென்ன பிரச்னை வரும்...' எனக் கூற, மாறி மாறி, விவாதம் நீண்டது.
'எல்லாரும் ஒரே அலுவலகத்தில் தானே வேலை செய்கிறீர்கள்... வீடு கட்டும் விஷயம், உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். கட்ட ஆரம்பிக்கும்போதே, இதை சொல்லி இருக்க வேண்டும். கிரஹபிரவேசத்தின் போது, அரைகுறையாக தெரிந்த விஷயத்தை விவாதித்து, அவர்களின் மனதை ஏன் சங்கடப்படுத்துகிறீர்கள்.
'வீட்டின் உள்ளே வரும் சூரிய ஒளியும், காற்றோட்டமும் உடலுக்கு நல்லது. அருகே, கோவில் உள்ளதால், மணியோசையை கேட்பது நல்லது. வீட்டு முன் இரண்டு கடைகள், மேலே, இரண்டு வீடு கட்டியுள்ளனர். வீட்டுக்கு, பாதுகாப்பு மற்றும் அவர்கள் ஆயுள் உள்ள வரை, சந்தோஷமாக வாழ, வாடகையாக வரும் வருமானம்.
'இத்தனை வசதிகள் உள்ளன. ஒரு மனிதன், நன்றாக வாழ, இவையே போதுமானது. இதையெல்லாம் பாராட்டுவதை விட்டு, உயிரை கொடுத்து கட்டும் வீட்டை, குறை கூறலாமா... வாஸ்துப்படி, உங்கள் வாய் தான் சரியில்லை...' என்று, ஒரு போடு போட்டேன், நான்.
அரைகுறை வாஸ்து நிபுணர்கள் அசடு வழிந்து, சாப்பிட சென்ற காட்சி, அனைவரையும் சிரிக்க வைத்ததுடன், என்னையும், பாராட்டி சென்றனர்.
- எஸ். செந்தில்குமார், சென்னை.
போக்குவரத்து விதிகள்...
புதிதாக, சிறிய ரக கார் வாங்கி, தற்போது அதை பயன்படுத்தி வருகிறேன். பொதுவாகவே விதிகளை மதிக்கும் குணம் உடைய நான், சாலை விதிகளை மிகவும் கவனமுடன் பின்பற்றி வருகிறேன்.
சமீபத்தில், ஒருநாள் போக்குவரத்து சிக்னல் இருந்த பகுதியில் செல்லும்போது, சிவப்பு விளக்கு எரிந்தது. அதனால், என் காரை நிறுத்து கோட்டுக்கு முன் நிறுத்தினேன். ஆனால், என் பக்கவாட்டில் வந்த வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்று கொண்டிருந்தன.
எனக்கு பின்னால் வந்த, அரசு நகர பேருந்து ஓட்டுனர், பேருந்தை நிறுத்தி, தொடர்ந்து, 'ஹாரன்' ஒலி எழுப்பியபடி இருந்தார். இறங்கி, என்னவென்று கேட்க, என்னை போக்குவரத்து சிக்னலை மீறி செல்லுமாறு வலியுறுத்தினார்.
'சிவப்பு விளக்கு எரிகிறது...' என, நான் சுட்டி காட்டியும், 'அதுதான் வாகனங்கள் ஏதும் வரவில்லையே போ...' என்று வற்புறுத்தினார். ஆனாலும், காரில் அமர்ந்து, பச்சை விளக்கு எரியும் வரை காத்திருந்து, அதன் பின்னரே சென்றேன்.
விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வரும் வசதிக்காகவே, போக்குவரத்து சிக்னல்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டுவது தான், ஒரு சிறந்த குடிமகனுக்கு அடையாளம். சிக்னலை மதிக்காமல் இருப்பதும், அதை மதிப்பவர்களை வற்புறுத்தி, மீற செல்ல சொல்வதும், எந்த வகையில் நியாயம்?
பொதுமக்களும், அரசு வாகன பேருந்து ஓட்டுனர்களும், போக்குவரத்து விதிகளை மதிக்க முன் வருவரா... மதிப்பவர்களை அதை மீற சொல்லி வற்புறுத்தாமலாவது இருப்பரா?
க. இளவரசு, சென்னை.