PUBLISHED ON : செப் 15, 2019

காதல் என்ற விபரீத வியாதி, எப்போது, எப்படி வரும் என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகளால் கூட, இதுவரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவில், 27 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதலை கேட்டால், தலை சுற்றி விடும்.
நுரேனி என்ற அந்த பெண், ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது, 87 வயதான, சுடிர்கோ என்ற முதியவரை சந்தித்தார். அவரை பார்த்த முதல் நொடியிலேயே, காதலில் விழுந்து விட்டாராம், நுரேனி. அந்த பெரியவருக்கு, எட்டு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
நுரேனி, தன் காதலை, அந்த முதியவரிடம் கூற, அவர் மறுத்து விட்டார். ஆனாலும், தொடர்ந்து முயற்சித்து, தன் காதலை ஏற்க வைத்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன், சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
'சுடிர்கோ மீது, எதற்காக காதல் வந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அவரை பார்த்ததுமே, என் இதயத்தை தொலைத்து விட்டேன்...' என, உருகுகிறார், நுரேனி.
— ஜோல்னாபையன்.
