
வாழ்ந்து காட்டுங்களேன்!
சமீபத்தில், என் நண்பர், தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, வாடகைக்கு வீடு பார்த்து, அவர்களை குடி வைத்தோம். குடிபோன அன்று, அந்த வீட்டுக்காரர், நண்பரையும், அவரது மனைவியையும் அழைத்து தேநீர் வழங்கி உபசரித்ததுடன், 'தம்பி... காதல் கல்யாணம் தப்பில்ல; ரெண்டு பேருமே வேலைக்கு போறதால, சீக்கிரமே முன்னேறிடுவீங்க. நாங்களும், எங்களால் முடிஞ்ச அளவு உங்களுக்கு பக்க பலமாக இருப்போம்...' என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டியவர், 'எனக்கு நான்கு பிள்ளைகள்; எல்லாருமே வசதியாக இருக்காங்க; ஒன்பது பேரக்குழந்தைகள். சொந்த வீடு, கடை, கார் என எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் வைராக்கியத்தோட நாங்க சம்பாதித்தது. காரணம், நானும், என் மனைவியும் வீட்டை எதிர்த்து, காதல் கல்யாணம் செய்தவங்க. அதனால, நீங்களும், நம்பிக்கையோடு வாழ்க்கைய துவக்குங்க...' என்றார்.
காதல் திருமணம் என்பது ஆரம்பமல்ல; கடைசி வரை, அதே அன்பில் வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது என்பது, அவரது பேச்சில் புரிந்தது.
— பி.சந்திரன், மதுரை.
வீட்டை காலி செய்ய ஒரு ஐடியா!
எங்களது ஏரியா நண்பர் ஒருவர், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைக்கு குடியிருந்தவர், வீட்டை சரி வர பராமரிக்காததால், நண்பருக்கும், குடியிருந்தவருக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதல் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில், நண்பர், வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்யச் சொல்ல, அரசியல் செல்வாக்குள்ள அவரோ வீட்டை காலி செய்ய மறுத்து, கலாட்டா செய்தார். இந்நிலையில், நான்கு, 'பிளக்ஸ்' பேனர் அடித்து, 'வீடு விற்பனைக்கு' என்று எழுதி, எங்கள் ஏரியாவில் மாட்டி வைத்தார் நண்பர். அத்துடன், தினமும் வீடு பார்க்கிறேன் பேர்வழி என்று, புரோக்கர்கள் பத்து, பதினைந்து பேரை கூட்டி வந்து, பகல், இரவு பாராமல், வீட்டிற்குள் நுழைந்து காட்டும்படியும் ஏற்பாடு செய்தார்.
வெளியாள் தொந்தரவால் நொந்து போன வாடகைதாரர், வீட்டை காலி செய்து, வேறு எங்கோ குடி போய் விட்டார். பதினைந்து நாட்கள் வீட்டை சும்மா வைத்திருந்த நண்பர், பின், வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டார். அத்துடன், பின்னால், பயன்படும் என, நான்கு, 'பிளக்ஸ்' போர்டுகளையும் கழட்டி, வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.
சண்டை, சச்சரவு இல்லாமல், பிரச்னைக் குரியவரை சமயோசிதமாக விரட்டிய நண்பரை பாராட்டினேன்.
— எஸ்.பாலசுப்ரமணியன், கோவை.
மின்சார சிக்கனம், தேவை இக்கணம்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் மகனும், மகளும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதால், நண்பரும், அவர் மனைவியும் மட்டுமே குடியிருந்தனர்.
வீட்டை சுற்றிப் பார்த்த போது, 10க்கு, ஏழடியில், 10அடி உயரம் கொண்ட ஒரு சிறு அறையை பார்த்து, 'இது ஸ்டோர் ரூமா...' என்றேன்.
'இல்ல... கோடைக்காலத்தில இது தான் எங்க, பெட்ரூம்...' என்றவர், மேலும், 'முதல் வகுப்பு, 'கூபே' ரயில் பெட்டி பாத்திருக்கிறீர்களா.... அது மாதிரிதான் இதிலும் மேலே ஒரு பெர்த்; கீழே ஒரு பெர்த் பொருத்தியிருக்கேன். ஆனா, இது சற்று பெரியதாக, சவுகரியமாக இருக்கும். 'ஏசி' வசதியும் செய்திருக்கிறேன். கூடுதலாக, பக்கவாட்டு, 'பெடஸ்டல்' பேனும் இருக்கு. பீரோ, பரண் போன்ற அடசல்கள் இல்லாத சிறிய அறை என்பதால், விரைவில் குளிருட்டப்படும். கடுமையான மின்சார பற்றாக்குறை உள்ள நம்ம ஊருல, பெரிய அறையில் படுத்து, அதிக மின்சாரத்தை வீண் அடிப்பது சரியல்ல என்கிறதால தான் இப்படி வடிவமைச்சுருக்கேன்...' என்றார்.
எவ்வளவு மின் கட்டணம் ஆனாலும், தருவதற்கு வசதி இருப்பினும், மின் சேமிப்பு குறித்த சமூக சிந்தனை கொண்ட அவரை மனதார வாழ்த்தினேன். புதிதாக வீடு கட்டுபவர்கள் இப்படி செய்தால், பெருமளவு மின்சாரம் சேமிக்கலாமே!
— ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
வடமாநிலத்தில் இது சகஜம்!
நான் பணிபுரியும் அலுவலகத்தில், ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வரும், இரு வடமாநில நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் இருந்தாலும், அலுவலகத்திற்கு வரும் போது, ஒரு வாகனத்தில் தான் வருவர். விசாரித்ததில், ஒருநாள் ஒருவருடைய வாகனத்தையும், அடுத்த நாள் மற்றொருவரின் வாகனத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதாகவும், வண்டியும் விரைவில் தேய்மானம் ஆகாதென்றும் விளக்கமளித்தனர்.
'வடமாநிலத்தில் இது சகஜமான விஷயம்; இங்கு ஏன் அது போல இல்ல?' என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில், அவர்களை கருமிகள் என்று கிண்டல் செய்த சக நண்பர்கள், தற்போது, அவர்களுடைய யோசனையை காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் இந்த யோசனையை பின்பற்றலாமே?
— ஜெ.கண்ணன், சென்னை.
பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்!
தனியார் ஆங்கிலப் பள்ளி யு.கே.ஜி., வகுப்பு ஆசிரியை நான். தினமும் மாணவர்களுக்கு, வீட்டுப் பாடம் செய்யச் செல்லி, ஒரு பாடத்தை தேர்வு செய்து, எழுத்து பயிற்சி கொடுத்து அனுப்புவேன். ஆனால், வகுப்பிலுள்ள பாதி மாணவர்களின் வீட்டுப் பாட நோட்டைப் பார்த்தால், அது, அவர்கள் எழுதியதாக இருக்காது; அவர்களின் பெற்றோர்களே எழுதியிருப்பர்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவோ, எழுத்துப் பயற்சி அளிக்கவோ நேரமில்லாமல் அவசர கதியில், வேலை முடிந்தால் போதும் என்று, பெற்றோரே எழுதிக் கொடுத்து விடுகின்றனர்.
பள்ளியில் நாங்கள் சொல்லி கொடுத்தாலும், வீட்டில் பெற்றோரும் பயிற்சி கொடுக்க வேண்டும். அதைவிட்டு, குழந்தைகள் எழுதிப் பழக வேண்டியதை பெற்றோர் எழுதினால், அவர்களுக்கு எப்படி எழுத்துப் பயிற்சி வரும்?
வீட்டுப் பாடத்தை போல, மாதமொரு முறை, 'பிராஜக்ட் ஒர்க்' உண்டு. அதிலும், பெற்றோரின் பங்கே அதிகம். சரியோ, தவறோ குழந்தைகளே செய்யும் போது தான், அவர்கள் மனதில் பதியும். இனியாவது, பெற்றோர் இதை, புரிந்து கொள்ள வேண்டும்.
— ஆ.தேவகுமாரி, அய்யம்பேட்டை.

