PUBLISHED ON : செப் 20, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நுாற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
சின்னப்பா தேவர் வேலைப் பார்த்த ஆலையின் போர்மேன், தேவர் அடிக்கடி லீவு எடுப்பதைச் சுட்டிக்காட்டி, இதே போல் தொடர்ந்தால், வேலையிலிருந்து நீக்கி விடுவதாக கூறினார்.
பயந்து போன சின்னப்பா, சினிமாவில் நடிக்க போன பின், தோல்வி ஏற்பட்டால், திரும்பவும் வேலைக்கு வந்தால் சேர்த்து கொள்வாரா என்று கேட்டார்.
'எனக்கு உன் பொழைப்ப பத்தித் தெரியாது; ஆனா, வேஷம் கட்டறவங்க யோக்யமா நடந்துக்க மாட்டாங்க; தாசி வீடே கதின்னு இருப்பாங்க. நல்லா குடிச்சிட்டு, கூத்தடிப்பாங்கன்னு நிறைய பேரு சொல்றாங்க. நீ, இதே கட்டுமஸ்தான ஆளாவே திரும்பி வந்தா, மறுபடியும் மில்லுல எடுத்துக்கறேன்...' என்றார் போர்மேன்.
அதற்குப் பின், ஆலைப் பணியில் அதிக நாட்கள் நீடிக்கவில்லை தேவர். அதுவரை, சம்பாதித்த பணத்தில், 'சாண்டோ சோடா கம்பெனி'யைத் துவங்கினார். கூடவே, பேக்கரி மற்றும் பால் வியாபாரம். அத்துடன், எந்த நேரத்தில் ஷூட்டிங் என்றாலும், உடனே ஆஜராகி விடுவார். சினிமாவில் நடிப்பதற்காகவே, பெயருக்கு இத்தொழில்களில் ஈடுபட்டார்.
தன் லட்சியக் கதாநாயகன், ஸ்டன்ட்டில் மானசீக ஆசான் பி.யு.சின்னப்பாவோடும், சினிமாவில், சுறுசுறுப்பாகச் சிலம்பம் சுழற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் திரைப்பட வரலாற்றில், மூன்று வேடங்களில் முதன் முதலில் கதாநாயகனாக முத்திரை பதித்தார் பி.யு.சின்னப்பா. மகத்தான வெற்றி பெற்ற அப்படம், மங்கையர்கரசி. அதில், சின்னப்பாவுடன் நடித்ததில், தேவரும் புகழ் அடைந்தார்.
'சினிமாவில் வந்தால் மட்டும் போதாது; பயாஸ்கோப்பும் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும்...' என்ற தன் எண்ணத்தை வெளிப்படுத்திய போது, ஊரார் எல்லாரும் அவரைப் பரிகசித்தனர். 'சின்னப்பாவுக்குத் திமிர் பிடிச்சிடுச்சி, கிரகம் வந்திடுச்சி; இல்லேன்னா உழைச்ச காசை பாழுங்கிணத்துலப் போடுவானா...' என்று பேசினர்.
மருதமலை முருகனின் தாள் பணிந்தார் தேவர். பூ போட்டு உத்தரவு கேட்டார். மருதாசல மூர்த்தி சம்மதம் கொடுத்து விட்டதாக நம்பினார்.
அதேசமயம், சினிமா உலகின் உச்சாணிக் கொம்பை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.,
அவரின் படங்களிலெல்லாம் தேவருக்கென்றே ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. மர்மயோகி, குலேபகாவலி, மதுரை வீரன் மற்றும் அரசிளங்குமரி என்று எம்.ஜி.ஆருக்கு இமாலயப் புகழ் கிடைத்த படங்களில் எல்லாம், தேவர் தொடர்ந்து இடம் பெற்றார். எம்.ஜி.ஆருக்கும், தேவருக்கும் இடையில் அப்படியொரு நெருக்கம் ஏற்பட்டது..
திரை உலகில் நிறைய வாய்ப்புகள் வந்ததும், தயாரிப்பு நிர்வாகியாகவும் ஆனார். சோகா மேளார் பட இயக்குனர் சி.வி.ராமன், தேவரை புரொடக் ஷன் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பழக்கினார்; திரையுலகின் நெளிவு, சுளிவுகள் புரிந்தன.
'இனி சினிமா மட்டுமே தன் எதிர்காலம்...' என்று தீர்மானித்தார் தேவர். எம்.ஜி.ஆர்., அவருக்கு பின்புலமாக இருக்கிறார், இனியும் இருப்பார் என்ற நம்பிக்கையில் துணிந்து படமெடுக்க விரும்பினார். கேமராமேன் விஜயம், எஸ்.ஏ.நடராஜன் கூட்டணியில், 'பார்வர்ட் ஆர்ட் பிலிம்ஸ்' உதயமானது. தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராக வேலை பார்த்தார். புகழ் பெற்ற ஜூபிடரின், மனோகரா படத்தை இவர்தான், 'எடிட்' செய்திருந்தார்.
'தம்பி... நல்ல தங்கைன்னு படம் எடுக்குறேன்; நீயே டைரக்ட் செஞ்சா நல்லது. இயக்குனருக்குன்னு பெரிசா சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. என்ன சொல்றே?' என்று கேட்டார் தேவர். ஆனால், கதை பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டார் திருமுகம். வேறு வழியின்றி நடிகர் எஸ்.ஏ.நடராஜனே, நல்ல தங்கை படத்தை இயக்கினார். படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அவரால், நடிகர் மற்றும் இயக்குனர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் சமாளிக்க முடியவில்லை. தேவரின் முதல் தயாரிப்பான, நல்ல தங்கை படம் சுமாராகவே ஓடியது.
ஈரோடு அசோகா பிக்சர்ஸ், பத்மினி என்ற படத்தை தயாரித்தது. நிதி நெருக்கடி; அதன் தயாரிப்பாளர் தேவரிடம் வந்து, '15 ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா, 'ரிலீஸ்' செஞ்சிடலாம்; கடைசி ஷெட்யூல் பாக்கி...' என்றார்.
'நீங்க செட்டியாரு; லேவாதேவி உங்களுக்கான தொழில். நானே உங்களுடைய ஒத்துழைப்பில் என் புதுப்படத்தை எடுக்கலாம்ன்னு பார்க்கிறேன். நீங்க பணம் கேட்டு முந்திக்கிறீங்களே...' என்றார் தேவர்.
தேவரை வீழ்த்தும் ஆயுதம், அவர் வசம் இருந்தது.
'தம்பி... நீ கெட்டிக்காரன். மதுரை வீரன்ல எம்.ஜி.ஆர்., கூடப் பிரமாதமா சண்டை போட்டே. நான், உனக்கு இப்படத்தில் பெரிய வேடம் தரேன். உன் பணத்தை கடனாவே கொடு. கண்டிப்பா திருப்பிக் கொடுத்துடறேன்...' என்றார் செட்டியார்.
சின்னச் சின்ன வசனம் கிடைத்தால் கூட மந்திரி பதவி கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சி அடைவர் துணை நடிகர்கள். தேவரைத் தன் தூண்டிலில் அழகாக சிக்க வைத்தார் செட்டியார். தேவர், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல காட்சிகளில் நடித்த ஒரே படமான, பத்மினி ரிலீசானது.
படம் படுதோல்வி அடைந்தது. அதற்குப் பின், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பிலும் கூட தேவர் முக்கிய நடிகராக இடம் பெறவில்லை. அடியாளாகவோ, பக்திமானாகவோ வந்து போனதோடு சரி!
செட்டியார் வார்த்தையைக் காப்பாற்றினார். தேவரிடம் வாங்கிய, 15 ஆயிரம் ரூபாயை திருப்பித் தந்தார். அந்தப் பணத்தை சினிமாவிலேயே செலவிட விரும்பினார் தேவர்.
படமெடுக்க கையிருப்புப் போதவில்லை. கோவை ராமநாதபுர சீமான்களிடம் மடிப்பிச்சை கேட்டார். காறித் துப்பாத குறையாக கதவை மூடினர்.
'மடப்பய மருதாசல மூர்த்தியே! ஒரு பய என்னைய நம்பிப் பணம் போட மாட்டேங்கிறான். நான் எப்படி சொந்தமா படம் எடுக்கிறது...' என்று புலம்பினார் தேவர்.
அவரது மாமியார், தன் நகைகளை விற்றுத் தந்தார். முருகையன், பொன்னுசாமி, பயில்வான் பழனியப்பன், வெங்கடாசலம் ஆகிய நால்வரும் தேவரின் உயிர் சிநேகிதர்கள். எப்போதும் விலகாதிருந்தனர். குலத்தவர்கள் இன்னும் சிலர் சேர்ந்து கொண்டனர். 'சின்னப்பா... உன் மாமியாரே போட்டுக்கற நகைகளைக் கழட்டிக் கொடுத்தாச்சு; நாங்களும் ஆளுக்கு கொஞ்சம் பணத்த கடனா கொடுக்கிறோம். நீ நல்லபடியா படம் எடு. உன் எம்.ஜி.ஆரையே நடிக்க வை...' என்றனர்.
'பத்மினி படுத்துடுச்சே அண்ணே...' என்று சின்னப்பா சொன்னதும், கலகலவென்று சிரித்த எம்.ஜி.ஆர்., 'நீங்க ஏன் கவலைப்படறீங்க... பெரிய தயாரிப்பாளர், பைனான்சியர்ன்னு ஆயிட்டிங்க; இனி, சில்லரை வேஷம்ன்னு உங்களுக்குச் சொல்லவே பயமாயிருக்கு...' என்றார்.
'அய்யா முருகா... வம்புல மாட்டி விட்டுடாதீங்க; அடிமடியிலேயே கை வெக்கிறீங்களே...'
'அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்... நடிப்பா, புரொடக் ஷனா... ரெண்டுல ஒண்ணு முடிவெடுங்க...'
வெகு நாட்களாக, தன் மனத்தில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை, பட்டென்று எம்.ஜி.ஆர்., கேட்டு விட்டாலும், பதில் சொல்ல தயங்கினார் சின்னப்பா.
'என்ன சின்னப்பா... என்னமோ பேச நினைக்கிறீங்க... அப்புறம் ஏன் மென்னு முழுங்கறீங்க; உங்களுக்கு எங்கிட்ட எதையும் மறைச்சு பழக்கமில்லயே...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
'அண்ணே... நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது; நான் சின்ன நடிகன். உங்க தயவால, 20 படம் நடிச்சேன்; சினிமாவும் தயாரிச்சேன். ஆனா, எனக்கொரு ஆசை; தம்பி திருமுகத்தை ஒரு ஆளாக்கிப் பார்க்கணும்ன்னு! அவனுக்கு, இப்ப நான் தான் அப்பா ஸ்தானத்துலயிருந்து நல்லது செய்யணும். அவனை இயக்குனராக்கி கை தூக்கி விடணும்ன்னு மனசுல ஒரு எண்ணம். மொதல்லயே கேட்டேன், அவன் கதை புடிக்கலன்னு ஒத்துக்கல. நீங்க நடிச்சுக் கொடுக்கறீங்கன்னா கண்டிப்பா ஒத்துக்குவான்...'என்றார்.
அண்ணன் தயாரிப்பாளர்; தம்பி இயக்குனர். அந்த நினைப்பே எம்.ஜி.ஆருக்குப் பிடித்திருந்தது.
'ஏன் இப்படி யாரோ மாதிரி தூரமா தள்ளிப் போறீங்க... நான் நடிக்கிறேன்னு விளம்பரத்தை கொடுத்துட்டுக் கூட, எங்கிட்ட நீங்க தேதி கேட்டிருக்கலாம். உங்களுக்கே தெரியும்... நானும் படாதபாடு பட்டுத்தான் கதாநாயகன் ஆனேன். அவசியம் நீங்க என்னை வெச்சு படம் எடுக்கறீங்க; அதுல எனக்கு சந்தோஷம் தான். போய் ஆக வேண்டிய வேலையப் பாருங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

