PUBLISHED ON : அக் 28, 2012

அக்., 29 ஐப்பசி அன்னாபிஷேகம்
உலகில் தினமும், 30 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர் என்று ஒரு சர்வதேச கணக்கெடுப்பு, சொல்கிறது. அதே நேரம், உலகில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்தால், எத்தனையோ லட்சம் பேர் சாப்பிடலாம் என்றும் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அநேக வீடுகளில், மிஞ்சிய உணவை குப்பையில் கொட்டுவதைக் காண்கிறோம். ரேஷன் என்ற பெயரிலும் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன. இதெல்லாம் கூடாதென்று தான், அந்தக் காலத்திலேயே உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், 'அன்னம் பரபிரம்மம்' என்றனர். 'உணவு தான் தெய்வம்' என்று கூறினர். அரிசிக்குள், அன்னபூரணி சிலையை போட்டு வைத்தனர். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும் முன், சிலைகளை, 'தானியவாசம்' என்ற பெயரில், தானியங்களில் கிடத்தி வைத்தனர்.
கிராமங்களில், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று சொல்வதுண்டு. ஒரு வீட்டில் விருந்தினர் ஒருவர் நீண்ட நாள் தங்கிவிட்டால், அவரைக் கேலி செய்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர். உண்மையில், சிவபெருமானுக்கு அன்னத்தை அபிஷேகம் செய் வதைக் கண்டால், சொர்க்கம் கிடைக்கும் என்ற பொருளில் இது சொல்லப்பட்டது.
உணவை வீணாக்குவதை தவிர்ப்பது மட்டு மல்ல, உணவை அளவோடு சாப்பிடுவதன் மூலமும் அதை சேமிக்க வேண்டும் என்கிறது வேதம். ஒரு துறவி, தினமும் எட்டு உருண்டை (கவளம்) சோறு தான் சாப்பிட வேண்டும். இல்லறத்தில் உள்ளவர்கள், இரண்டு வேளைக்கு, 32 கவளம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிறது. அந்தக் காலத்தில், இரவு சாப்பாடு என்ற ஒன்றே இல்லை. அதனால் தான் அவர்கள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். 120 ஆண்டுகள் சர்வ சாதாரணமாக வாழ்ந்ததால் தான், ஜோதிடத்தில் ஒருவருக்கு தசாபுத்தி வகுத்தது கூட, 120 ஆண்டுகளுக்கு என இருந்தது.
ஒரு ஸ்லோகத்தில், 'உணவை நீ அதிகமாக சாப்பிட்டால், அது உன்னைச் சாப்பிட்டு விடும்' என்று சொல்லியிருக்கிறது. அதனால் தான் டாக்டர்கள், 'அளவோடு சாப்பிடுங்கள்' என்று கூறுகின்றனர். நம் உயிரைக் காப்பது தெய்வம் என்கிறோம். அன்னமும் நம் உயிரைக் காப்பதால், அதையும் தெய்வமாக மதித்தனர்.
சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியன்று, அன்னாபிஷேகம் செய்கின்றனர். வெள்ளைச்சோறால் அபிஷேகம் செய்து, தயிரில் சேர்த்து பிரசாதமாகத் தருவர். எல்லாருக்கும் படியளப்பவன் இறைவன் என்பதால், மக்களுக்கு மட்டுமல்ல; எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த உணவு போய் சேர வேண்டும் என்பதற்காக, நீர் நிலைகளில் இதைக் கரைப்பர். அது, மீன்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு போய் சேரும். அந்த இறை பிரசாதம், அவற்றுக்கு முக்தியைக் கூட தரலாம். பறவைகளுக்கு கிடைக்கும் வகையிலும் அதை வைப்பதுண்டு.
துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை ஆனி பவுர்ணமியில் துவங்கி, ஐப்பசி பவுர்ணமியில் முடிப்பதுண்டு. இந்த நாளில், அவர்கள் வெளியே சஞ்சாரம் செய்ய மாட்டார்கள். விரதத்தை முடிக்கும் காலத்தில், எல்லாருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தி, அந்த பிரசாதத்தை கொடுக்கும் வழக்கம் வந்திருக்கலாம் என்பதும் ஒரு கருத்து. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பெரிய கோவில்களில் உள்ள பெரிய லிங்கங்களுக்கு, மூடை கணக்கில் சமைத்து, அபிஷேகம் செய்வதைக் காண, கண்கோடி வேண்டும்.
திருவள்ளுவர், உணவின் பெருமையை தம் வாழ்நாளிலேயே கடைபிடித்தவர். அவர் சாப்பிடும்போது, கீழே விழும் பருக்கையை, ஒரு ஊசியில் குத்தி எடுத்து, கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போட்டு விடுவார். பிறகு நீரை வடித்து விட்டு எடுத்துச் சாப்பிடுவார். இதுகுறித்து அவரது மனைவி வாசுகி கேட்டதற்கு, 'உணவை வீணாக்கக் கூடாது. ஒவ்வொரு பருக்கையும், ஒருவனது உழைப்பு. அதே நேரம், தவறி விழுவது இயல்பு. அதை சுத்தப்படுத்தி சாப்பிடவே, தண்ணீருக்குள் போட்டு எடுத்தேன்...' என்றார்.
அன்னாபிஷேக நன்னாளில், உணவின் பெருமையை உணர்ந்து, அதை வீணாக்குவதில்லை என்று உறுதியெடுங்கள். இனி, உங்கள் வீட்டிலிருந்து ஒரு பருக்கை கூட குப்பைத்தொட்டிக்கு போகக் கூடாது.
***
தி. செல்லப்பா
