PUBLISHED ON : அக் 28, 2012

வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், 'பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
போட்டாளே ஒரு போடு!
நண்பர் ஒருவர், தன் மகள் கல்யாணத்துக்காக, வரன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மாப்பிள்ளையின் பொருத்தம் சரியாக இருந்தது. பெண் பார்க்க வரும் நிலையில், அந்த பெண், 'இந்த மாப்பிள்ளை வேண்டாம், இவர், பள்ளி ஆசிரியர். எனக்கு பள்ளிக்கூட வாத்தியார் தவிர, வேறு மாப்பிள்ளை யாரானாலும் பரவாயில்லை...' என்றும் கூறி விட்டாள்.
உடனே அவளது பெற்றோர், 'இந்த காலத்தில், பள்ளிக்கூட வாத்தியார் ஒன்றும் மட்டமில்லம்மா... அவர்களுக்கும் நல்ல சம்பளம். வருடத்தில் மூன்று மாதம் விடுமுறை. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு...' என்று கூறவும், அந்த பெண், 'ஆமாம்... இறைவனுக்கு சமமாக போற்றப்படும் பள்ளி ஆசிரியர்கள் தான், இன்று மாணவர்களை, சிறுநீரை குடிக்கச் சொல்வதும், பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகையை அபகரிப்பதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர்...' என்றாளே பார்க்கலாம்.
'பண்டம் ஒரு இடம் பழி பத்தெடம்' என்பது போல், யாரோ சிலர் செய்யும் தவறுக்கு, அந்த துறையே மதிப்பிழந்து போய்
விடுகிறது! இனியாவது, 'கறுப்பு ஆடு' ஆசிரியர்கள் திருந்துவரா?
— ஜி.நிலா, சென்னை.
சிறிய தட்டும் பெரிய தட்டும்!
டாக்டர் நண்பர் வீட்டில் சாப்பிடச் சென்றேன். சாப்பாட்டு மேஜையில், பெரியதும், சிறியதுமாக இரண்டு அழகிய பீங்கான் தட்டுகளை, என் முன்னே வைத்தனர். பொரியல், கூட்டு, சாலட் போன்றவற்றை, பெரிய தட்டிலும், சாதத்தைச் சிறிய தட்டிலும் பரிமாற ஆரம்பித்தனர்.
ஏதாவது தவறுதலாகப் பரிமாறுகின்றனரோ என்ற தயக்கத்துடன் கேட்டேன். அவர்: தவறு எதுவும் நேரவில்லை. வேண்டுமென்று தான் இப்படிப் பரிமாறுகிறோம். சாதத்தின் அளவு குறைவாகவும், காய்கறி, பழங்களின் அளவு அதிகமாகவும் சாப்பிட வேண்டும்...
குறைவாகச் சாப்பிட வேண்டியதை, சிறிய தட்டில் போட்டுக் கொண்டால், தட்டு நிறைய சாப்பிட்டது போல, திருப்தி உணர்வு ஏற்பட்டு விடும். நிறையச் சாப்பிட வேண்டிய அயிட்டங்களை, பெரிய தட்டில் போட்டு தாராளமாகச் சாப்பிட வேண்டும். அதனால், எப்போதுமே எங்கள் வீட்டில் இப்படித்தான் பரிமாறுவோம்... என்று, விளக்கமாகச் சொன்னார்.
விருந்தும் கொடுத்து, எப்படி ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றும் கற்று கொடுத்த டாக்டர் குடும்பத்திற்கு, மனமார நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்.
இனி, டாக்டர் சொன்னபடி தான் சாப்பிட வேண்டும் என்று, தீர்மானித்தும் விட்டேன். அப்போ.. நீங்க...
— மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.
