PUBLISHED ON : அக் 23, 2011

லத்தீன், அமெரிக்க நாடுகளில், மிகவும் ஏழை நாடு பொலிவியாதான். ஏகப்பட்ட உள்நாட்டு குழப்பங்களுக்கு காரணமே, ஏழ்மை தான். ஆனால், அத்தனை இயற்கை வளங்களும், பொலிவியா மண்ணில் புதைந்து கிடக்கின்றன. உலகின் மிக உயரமான தலைநகர் என்ற பெருமை, லாபாஸுக்கு உண்டு. ஆனால், 4,500 மீட்டர் பள்ளத்தாக்கில், இரைச்சலிலும், போக்குவரத்து நெரிசலிலும் திணறிப் போய் உள்ளது, இந்த நகரம்.
நகரில் எங்கு பார்த்தாலும், சுற்றுச்சூழல் விலை என்ன என்று கேட்க வேண்டும்; அந்த அளவுக்கு மோசமானது. இருந்தாலும், சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும், பல சுற்றுலா இடங்களுக்கு இந்த நாட்டில் குறைவில்லை. இந்த ஏழை குட்டி நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தில், பெரும் பங்கை, சுற்றுலா துறை தான் அளிக்கிறது.
மிக உயர்ந்த மலை பகுதிகளுக்கு சென்ற அனுபவம் உண்டா? இந்தியாவில் குலுமணாலி போனதுண்டா? இந்த பகுதிகளுக்கு திடீர் விசிட் அடித்தால், சிலருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும்; அந்த அளவுக்கு ஆக்சிஜன் குறைவு. அப்படி ஒரு உணர்வு தான், எனக்கு லாபாஸ் நகரில் ஏற்பட்டது. முதல் நாள் ஊரில் நுழைந்ததில் இருந்து, எனக்கு மூச்சு திணறியது; கூடவே தலைசுற்றல். சாப்பிடவே தோன்றவில்லை. 'கோகோ இலை டீயை குடித்தால் சரியாகி விடும்...' என, உள்ளூர் ஆட்கள் கூறினர். ஆனால், அடுத்த நாள்தான் உடல்நிலை நிதானத்திற்கு வந்தது. இந்த பிரச்னையை, 'சுருச்சி' என்று அழைக்கின்றனர். இது, மலையின் உயரத்தால் வரும் ஒரு உடல் பிரச்னை; தானாகவே சரியாகி விடுகிறது.
லாபாஸ் நகரில் சுற்றுச்சூழல் மோசம் என்றாலும், பள்ளத்தாக்கை தாண்டி மலைப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா இடங்கள் நம்மை மயங்க வைக்கின்றன. கார், மலையில் வளைந்து, வளைந்து ரோட்டில் சென்ற போது, சில அடுக்குகள் தாண்டிய பின், அருமையான பணக்கார பகுதியை காண முடிந்தது. மலைப்பகுதியில் இருந்து, எங்கு பார்த்தாலும், பச்சைப் பசேல் பகுதிகள் தான். பனி மூடிய நிலையில், ரசிக்க எவ்வளவு கண்கள் இருந்தாலும் போதாது. மணிக்கணக்கில், மலைப்பகுதிகளின் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
மலை சிகரத்தின் அடியில், உலகத்திலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள கோல்ப் மைதானம் உள்ளது. இங்கு பெரும்பாலும் உள்ளூர் மக்கள் வருவது கிடையாது. ஜப்பானிய மக்கள்தான் பணத்தை இரைத்து, நாட்கணக்கில் தங்கி, கோல்ப் விளையாடுகின்றனர். இயற்கையை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
எங்களுக்கு கைடாக இருந்தவர், பொலிவியா நாட்டு பெண். கொச்சையான ஆங்கிலத்தில் பேசினார். நகரின் இன்னொரு பகுதிக்கு அழைத்து சென்றார். நகரின் சாலைகள் குறுகலாக, மேடு பள்ளங்கள் நிறைந்து அமைந்திருந்தன. இதனால், ஆமை வேகத்தில் தான், கார்கள் போக முடிந்தது. ஒரு கடை வீதிக்கு சென்றோம். இங்கு கம்பளியில் கையால் இழைத்த ஸ்வெட்டர்கள் மற்றும் குழந்தைகள் உடைகளும் அதிகமாக தென்பட்டன.
பிறகு, எங்களை மலைப்பகுதியின் ஸ்பெஷல் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றார். இங்கிருந்து நகரின் வடிவமைப்பு, மிக துல்லியமாக தெரிகிறது. ஆனால், பல படிகள் ஏற வேண்டும். பிறகு, டவுன் சதுக்கத்தை சுற்றினோம். மற்ற தென் அமெரிக்க நகரங்கள் போன்ற வடிவமைப்புதான் இங்கும். டூர் கைடு, ஓட்டலில் எங்களை இறக்கிவிட்டு, 'பை' சொல்லி விட்டார்.
மாலை நேரம். கால்நடையாக நகரின் பிரதான வீதிகளை சுற்றிப் பார்த்தோம். அப்போது ஒரு சிறிய நைட் கிளப் தென்பட்டது. ஆண்டியன் இசை மற்றும் நடனத்திற்கு புகழ் வாய்ந்த இடம் என்று கேள்விப்பட்டோம். குறுகிய வாசல்; ஆனால், உள்ளே ஒரு பெரிய அரங்கம். ஆஸ்திரேலியா, ஜெர்மன் மற்றும் கனடா நாட்டு பயணிகள் குழுமி இருந்தனர். நாங்கள் மட்டுமே இந்தியர்கள்.
பழமையான ஆண்டியன் இசைக்கு, பல இளம் ஜோடிகள் நடனமாடினர். என்னையும் வற்புறுத்தி, மேடையில் ஏற்றி, ஆட்டத்தில் பங்கேற்க வைத்து விட்டனர். உள்ளூர கூச்சம்; ஆனால், கடைசியில் மனதுக்கு தெம்பாக இருந்தது. மெதுவாக நடந்து, பாதை தப்பாமல் ஓட்டலை அடைந்து விட்டோம்.
என்னதான் மகிழ்ச்சிக்காக, ரிலாக்ஸ் செய்ய இப்படி சுற்றுலா சென்றாலும், சென்ற இடத்தில் சில சின்ன விஷயங்கள் கூட, நம்மை தர்ம சங்கடத்தில் மாட்டிவிடும்; எரிச்சலையும் கிளப்பும். இருந்தாலும், அவற்றை பொறுமையோடு சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டது. அடுத்தடுத்து, இரண்டு சம்பவங்கள் எங்களை துவள வைத்து விட்டன.
எங்களது அடுத்த பயணம், 'டிட்டிகாக்கா' என்ற பெரும் ஏரியை நோக்கி. அந்த ஏரியின் கரையில், கோபகபானா என்ற அழகிய துறைமுக நகர் உள்ளது. இங்கிருந்துதான் படகில் செல்ல ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால், துறைமுகத் தொழிலாளர்கள், மறியல் போராட்டம் நடத்துவதால், அங்கு செல்ல முடியாது என்று கூறி விட்டார் எங்கள் கைடு. உடனே, அடுத்த திட்டத்தில் இறங்கினார். எங்கள் மினி வேன் போகும் வழியை மாற்றி, இன்னொரு சிறிய படகு துறையில் இருந்து, படகை பிடிக்க ஏற்பாடும் செய்து விட்டார். இதனால் எங்கள், 'மினி வேன்' மாற்று பாதையில், சிறிது வேகம் குறைவாக சென்றது; ஆனால், பாதி வழியில் இன்னொரு பிரச்னை ஏற்பட்டது.
எங்கள் மினி வேன் பின்னால், அதே கம்பெனியைச் சேர்ந்த, 'மினி வேன்' வந்து கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென, 'பிரேக் டவுன்' ஆகி விட்டது. அந்த வேனில் இருந்த பயணிகளையும், கனமான பெட்டிகளையும் எங்கள் வேனில் ஏற்றி விட்டனர். நான் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். என் மடி மீதே அந்த சீன டூர் பிரிவின் கைடு உட்கார்ந்து பயணித்தார். அவருக்கு பெருத்த உடம்பு வேறு; டென்ஷன் ஆகி விட் டேன். என்ன செய்வது? அடக்கிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ஏரியின் கரையை அடைந்த போது, ஒரு காயலான் கடை படகு நின்றிருந்தது. எங்கள் பெட்டிகளை, படகு ஊழியர்கள் வாங்கி, படகின் உள்ளே தள்ளி விட்டனர். எங்களை ஏற்றிய பின், படகு நகர்ந்தது. நம்மூர் படகை விட மோசம்; பெரும் சத்தம்... சகிக்கவில்லை. ஆட்டத்துடன் தான் படகு நகர்ந்து கொண்டிருந்தது; சற்று பயமாகவும் இருந்தது.
உலகத்திலேயே படகு சவாரி செய்யக்கூடிய ஏரிகளில், இதுதான் மிக அதிக உயரத்தில் இருக்கிறது. ஏரியின் பரப்பு, 8,380 சதுர கி.மீ., கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கும் தலை கிறு, கிறு தான். பொலிவியா, பெரு நாடுகளுக்கு இந்த ஏரி புகழ் சேர்க்கிறது என்றால் மிகை ஆகாது. கண்ணாடி போல் ஏரி நீர் பளிச்சென்று இருந்தது. சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு பாசனம், குடிநீர் சப்ளை இந்த ஏரியில் இருந்துதான். இதில், கணக்கில் அடங்கா மீன் வகைகளும், அரிய தாவரங்களும், நீர் வாழ் ஜந்துக்களும் நிறைந்து உள்ளன என தெரிவித்தார் டூர் கைடு.
ஏரியில் பல தீவுகள் தென்பட்டன. சில தீவுகளில் இன்றும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுகளில் உள்ள, 'சன் ஐலண்ட்' என்ற பெரிய தீவுதான் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இவ்வளவையும் நாங்கள், எங்கள் ஆட்டம் காணும் படகில் மெதுவாக சென்று ரசித்தபடியே இருக்க, 'சன் ஐலண்டை' நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று படகு ஊழியர் கூறிய போது, அட... அருமையான தீவை காணப் போகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. தீவிற்குள் நுழைந்த போது, உள்ளூர் மக்கள் சிலரே தென்பட்டனர். எங்கும் அமைதி. இங்குள்ள எல்லா கட்டடங்களும் தீவில் கிடைக்கும் மரப் பொருட்கள், கிளிஞ்சல்களை கொண்டுதான் வடிவமைக்கப்பட்டிருந்தன.
சிறிது தூரத்தில் எளிமையான, ஆனால் அழகான, ஒரு கட்டடம் தெரிந்தது. இதுதான் நாம் சாப்பிடப் போகும் உணவகம் என்று பின்னர் அறிந்தோம். எங்கள் கைடு ஏற்கனவே அங்கு தகவல் சொல்லியிருந்ததால், சாப்பாடு ரெடியாக இருந்தது. சாப்பாட்டு அறை படுசுத்தம். மெகா உருவத்தில், வெந்த மக்காச்சோளக் கதிர். ஏரியில் அன்று காலையில் பிடித்த, பொன் வறுவலாக பொரித்த மீன் போன்ற அயிட்டங்கள் படுஜோர்.
இந்த உணவகத்தின் உரிமையாளர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி; ஆனால், ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். வியப்பாக அவரை பார்த்தோம். தீவின் பெருமை பற்றியும், அதன் பாரம்பரியம் பற்றியும் அரிய தகவல்கள் பலவற்றை கூறினார். அந்த பெண்மணிக்கு, நன்றி சொல்லிவிட்டு சுற்றுப்புற தோட்டங்களை சுற்றி பார்த்தபின், படகுக்கு திரும்பினோம். எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கைடு அளித்தார். அது, 'கோபகபானா' நகரில் துறைமுக தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டனர் என்ற செய்திதான்.
கோபகபானா நகரத்துக்கு போக வேண்டும் என்று, எங்களுக்கு அதிக ஆவல் ஏற்பட, அதன் வரலாற்று பெருமைதான் முக்கிய காரணம். புராதன சின்னங்கள் உள்ள இந்த நகரை பார்க்காமல் கிளம்பி விடுவோமோ என்ற வருத்தத்தில் இருந்தோம். நல்ல வேளை, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், மீண்டும் எங்கள், 'காயலான் கடை' படகில் ஏறி, ஒரு வழியாக நகரத்தை அடைந்தோம்.
கோபகபானா நகர மையத்தில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த, 'கதீட்ரல்' தான் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. 16ம் நூற்றாண்டின் அபூர்வம் இது என்று கூறலாம். இதன் பெயர், 'வர்ஜின் ஆப் கோண்டலோரியா' கதீட்ரல். ஐநூறு ஆண்டுக்கு முன் கட்டிய புனித ஆலயம். ஆனால், பொலிவு மட்டும் மங்கி விடாமல், 'பளீச்' என்று காட்சி அளித்தது. கதீட்ரல் விசிட்டை முடித்துவிட்டு, ஒரு மினி நகர்வலம்; இத்தோடு பொலிவியா சுற்றுலா முடிந்தது.
— தொடரும்.
கே. வெங்கட்ராமன்

