PUBLISHED ON : செப் 11, 2016

உலகின் அதிவேக மனிதன் என்ற பெயரை தட்டிச் சென்றவர், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட். தடகள வீரரான இவர், பிரேசில் தலைநகர் ரியோவில், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியிலும், மற்ற சர்வதேச போட்டிகளிலும் தங்க பதக்கங்களை குவித்தவர்.
அதிவேகமாக ஓடுவதற்கு, மின்னல் வேகம் என்ற வார்த்தையை குறிப்பிடுவது உண்டு; ஆனால், இப்போதெல்லாம், 'போல்ட் வேகம்' என்று தான் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு, அதிவேகமாக ஓடக் கூடியவர், உசைன் போல்ட்!
இவர், ஒரு பெண்ணை காதலித்தார்; அவர் யார் என்பதையும் மிக ரகசியமாக வைத்திருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், அந்த ரகசிய காதலி, வெளிச்சத்துக்கு வந்து விட்டார். ஜமைக்காவை சேர்ந்த மாடலிங் பெண்ணான கசி பென்னட் தான் அவரது காதலி.
உசைன் போல்ட் போட்டிகளில் பங்கேற்றபோது, ஸ்டேடியத்தில் அமர்ந்து, அவரை உற்சாகப்படுத்தினார், பென்னட்; 'எனக்கான ராஜாங்கத்தில் நான்தான், சக்கரவர்த்தி; என் காதலி பெனட் தான், என் மகாராணி...' என, பெருமையுடன் கூறுகிறார் போல்ட்!
— ஜோல்னாபையன்.
