PUBLISHED ON : ஆக 18, 2013

தைவான் நாட்டில், சாய் சுயான் என்ற பகுதியில், ஆவி திருவிழா ரொம்ப பிரபலம். இந்த ஆண்டு, ஆகஸ்டு 21ம் தேதி இவ்விழா நடைபெற உள்ளது. அன்று மாலை முதல், விடிய விடிய ஊர்வலங்களும், திருவிழாவும் நடக்கும். பேய், பிசாசு, ஆவி வேடங்களை அணிந்து, அட்டகாசமாய் ஆடிப்பாடி, பவனி வருவர் பலர். அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும்.
திருவிழா நடக்கும் ஆகஸ்டு, 21ம் தேதி, விண்ணுலகில் சொர்க்கமும், நரகமும் திறந்திருக்குமாம். அப்போது, எசகு பிசகாய் இறந்தவர்கள், உதாரணமாக பசி, தனிமை, கோபம், பகை என, பல்வேறு காரணங்களால் இறந்தவர்கள், கொலையுண்டவர்கள், அன்று, பூமிக்கு வந்து பழிக்குப் பழி வாங்க முயற்சிப்பர் என்று நம்புகின்றனர். இதனால், அன்று சிலர் வீட்டிற்குள்ளேயே கதவை சாத்தியபடி உள்ளேயே கிடப்பர்.
இன்னும், சிலரோ... ஆவி, பூத, பிசாசு ஊர்வலத்தில் வரும் நபர்களுக்கு பயந்து, வாசலில் மது மற்றும் உணவு பண்டங்களை வைத்து, எடுத்துச் செல்ல ஏதுவாய் கதவை சாத்திக் கொண்டு அமர்ந்திருப்பர். ஊர்வலத்தினரும் கதவை தட்டி, 'அதை கொடு. இதை கொடு...' என கேட்பதுண்டு; கொடுக்காவிடில் சபிப்பதும் உண்டு!
இப்படி, இறந்தவர்களின் வீடுகளில், அன்று விசேஷ உணவுகளை செய்து, இறந்தவர் வந்து சாப்பிடுவது போல், இலை போட்டு பரிமாறி, படைத்து பின், யாரையாவது உட்கார வைத்து, அதை சாப்பிடச் செய்வர். மேலும், சிலர் பண்டங்களை செய்து எடுத்துக் கொண்டு, கோவிலுக்குச் சென்று, புத்தர் சிலைக்கு படைத்து, பின், சன்யாசிகளுக்கும், ஏழைகளுக்கும் வினியோகம் செய்வர்.
சிலர், கோவிலில் வைத்து விட்டு வந்து விடுவர். அன்று, நீர் நிலைகளில் பேப்பர் படகுகளில் விளக்குகள் ஏற்றி, மிதக்க விடுவர். இவை, கோபத்துடன் ஆவி, பேய், பிசாசாக வந்தவர்களை சமாதானப்படுத்தி, மேலே அழைத்துச் சென்று விடும் என மக்கள் நம்புகின்றனர்.
மொத்தத்தில், இது ஒரு பயம் கலந்த திருவிழா. சீன காலண்டரின் ஏழாம் மாதத்தில், 15ம் நாள், இந்த விழா நடக்கிறது.
— ஜோல்னா பையன்.
