
பள்ளி வகுப்பிலிருந்து கரையேறி, கல்லூரி வாசலில் காலடியெடுத்து வைத்த, கடந்த கால நினைவுகளை, 25 ஆண்டுகளுக்குப்பின் அசை போட்டவாறு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடும்பத்துடன் கோவைக்கு பயணமாகினர், சி.ஐ.டி., கல்லூரி இன்ஜினியரிங் துறை முன்னாள் மாணவர்கள். நண்பர்களுடன் கூடிப் படித்து, உறவாடிக் களித்த (1982 - 86) பசுமை மாறா நினைவுகள் மனத்திரையில் ஓடின. தம்முடன் பயணித்த மனைவி, குழந்தைகளுக்கு அவற்றை பரிமாறி, கடந்த கால நிகழ்வுகளை தோண்டி, அகழ்வாராய்ச்சி செய்தபடியே கோவையை அடைந்தனர். அதன்பின், ஆனந்த மயமான முன்னாள் மாணவர்கள் சங்கம நிகழ்ச்சி, 'லீ மெரிடியன்' ஓட்டலில் நடந்தது.
ஆரத்தழுவி அன்பை பகிர்ந்து, மனைவி, பிள்ளைகளை ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக் கொண்டனர்; இருநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால், ஓட்டல் அரங்கமே அறிமுக நிகழ்ச்சியில் திக்குமுக்காடியது. மறுநாள் காலை சி.ஐ.டி., கல்லூரி வளாகத்தில் கோலாகல விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் அளித்த, 14 லட்சம் ரூபாயில், கல்லூரி நுழைவாயிலில் கம்பீரமாக எழுப்பப்பட்டிருந்த அலங்கார வளைவை, கோவை கலெக்டர் கருணாகரன் திறந்து வைக்க, கல்லூரி முதல்வர் செல்லதுரை, செயலர் பிரபாகர், தாளாளர் பிரசாத் என, பலரும் பங்கேற்றனர்.
அன்றிரவு, 'லீ மெரிடியனில்' அரங்கேறிய சந்திப்பு நிகழ்ச்சியில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாண்டியராஜன், சினிமா இயக்குனர் அழகம்பெருமாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரின் பேச்சு, ராஜா தலைமையில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் என, அரங்கமே களை கட்டியது. கொண்டாட்டத்துடன், சமூகத்துக்கு தொண்டாற்றும் எண்ணமும் தங்களுக்குண்டு என்பதை நிரூபித்த முன்னாள் மாணவர்கள், 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை துவக்கி, ஏழை மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கினர்; உதவும் கரங்கள் அமைப்புக்கும் உதவினர். மறுநாள் காலை மீண்டும் சி.ஐ.டி., வளாகத்தில் குடும்பத்துடன் கூடி, வயதை மறந்து விளையாடிக் களித்தனர். கூடி மகிழ்ந்தவர்கள் பிரியும் போது, ஒருவித சோகம் அவர்களையும் அறியாமல் மனதில் தொற்றிக் கொண்டது, மறுபடியும் எப்போது சந்திப்போமோ என்ற ஏக்கத்துடன்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்' நிர்வாகியுமான ஆன்டோ ஜார்ஜ் கூறுகையில், 'எங்களது சந்திப்பு, வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், சமூகத்துக்கு ஏதாவது ஒருவகையில் சேவையாற்றும் வகையில் அமைந்திருந்தது. நாங்கள் துவக்கியுள்ள 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்' வாயிலாக ஏழை மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவுவோம். சம்பாதித்த பணத்தில் பிறருக்கும் உதவுவதன் மூலம் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது...' என்றார்.
படங்கள்: சிவகுருநாதன்.