
''வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை, 8:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணி வரைக்கும், ஐந்து மணி நேர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. பாடறவங்களுக்கு மேடையும், மத்தவங்களுக்கு வெயில் படாமல், வசதியா உட்கார, பெரிய பந்தலும் போடணும்; தரையில சிலரால உட்கார முடியாதுங்கறதால, பிளாஸ்டிக் இருக்கைக்கு சொல்லணும்...
''முன் வரிசையில் சோபா போட்டால், வி.ஐ.பி., எல்லாம் சவுகரியமா உட்காரலாம். வெயில்ங்கறதால, ஐஸ் மோர், எலுமிச்சை ஜூஸ் ஏற்பாடு பண்ணி, நடுநடுவே பிஸ்கட் கொடுத்தால், எல்லாம் பேஷா நடந்துடும். ஏதோ, நம்மளோட இந்த பிரார்த்தனைக்கு, பலன் கிடைக்குமான்னு பார்ப்போம்,'' என்றார், சபா செகரட்டரி.
மழைக்காக, அனைவரும் கூட்டாக, 'அமிர்தவர்ஷினி' ராக கச்சேரியுடன் கூடிய பூஜைக்காக, சபா செகரட்டரி செய்யும் ஏற்பாடுகளை பற்றி, அங்கத்தினர்களிடம் சொல்லி வந்தார். நகரின் பெரிய மைதானத்தில், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக விளம்பரங்களும், நன்கொடை வசூலிப்புகளும் நடந்து கொண்டிருந்தன.
பெரிய அளவில் கூட்டுப் பிரார்த்தனை போல செய்தால், நகரில் மழை பெய்யலாம் என்ற தீர்மானத்தில், ஓடியாடி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
இந்தளவு ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியை, நகரில் ஏற்பாடு செய்வதென்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை, தன், 25 ஆண்டு, செகரட்டரி அனுபவத்தில், நிறையவே தெரிந்து வைத்திருந்தார்.
இந்த விழாவின் மூலம் வரும் கலெக் ஷனில், செலவு போக எவ்வளவு பணம் மிச்சமென்ற கணக்கும், துல்லியமாக தெரியும், அவருக்கு. 'கமிட்டி மெம்பர்'களை ஓட ஓட விரட்டி, வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
இப்படியொரு கச்சேரி பூஜை செய்யலாமென்ற தீர்மானம், சங்கத்தில் முன்மொழியப்பட்டபோது, வழக்கமான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்ல, சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு, பிறகு ஒரு வழியாக, கூட்டு பிராத்தனை நடத்த முடிவு செய்தனர்.
அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது.
பெரிய பந்தல், மேடை நிறைய பெரும் பாடகர்கள், அலங்கார வளைவுகள், அமர்வதற்கும், அடிக்கடி கொறிப்பதற்கும், தாக சாந்திக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பெருங்கூட்டம், ஒரு பக்கம்... குழந்தைகள் விளையாடி கூச்சல் போட, பெரியவர்கள் சலசலவென்று பேசிக் கொண்டிருக்க, ஒரு பெரும் சுற்றுலா முகாம் போல நிறைந்திருந்தது, அந்த மைதானம். காலை, 8:00 மணிக்கு, கச்சேரியுடன் கூடிய, 'அமிர்தவர்ஷினி' ராகம், பூஜையுடன் துவங்கியது.
''ஏண்டா மாரியப்பா... பட்டணத்துல, அடுத்த ஞாயிற்றுக்கிழமை, மழை பெய்யறதுக்கு, ஏதோ அமிருதா பாட்டு பாடி, பூசை செய்ய போறாங்களாமே... அப்படியா!'' என்றான், முனியப்பன்.
''ஆமாம்... மழை பெய்யணும்ன்னா எல்லாரும் சேர்ந்து, அந்த பாட்டை பாடினா போதுமாம்,'' என்றான், மாரியப்பன்.
''மழை வேணும்ன்னு, எல்லாம் ஒண்ணா சேர்ந்து பாடினா, மழை பெய்யுமாடா?''
''நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து, மாரியாத்தாவுக்கு பொங்கல் படைக்கிறோம்ல... அதே மாதிரி தான் போல இருக்கு. எல்லாம் சேர்ந்து, மழை வேணும்ன்னு வேண்டறது தான்.''
''அப்ப, அங்க மட்டும் தான் மழை பெய்யுமா, இல்ல, 50 கி.மீ., துாரத்துல இருக்கும், நமக்கும் சேர்த்து பெய்யுமா?''
''ஐயோ... அதெப்படி உனக்கும் சேர்த்து பெய்யும்?''
''மாரியாத்தாகிட்ட எல்லாருக்கும் சேர்த்து வேண்டிகிட்டா, பெய்யாதா?''
''பட்டணத்துகாரங்களுக்கு, நம்ம குப்பத்து, 50 குடும்பத்தை பத்தி என்ன கவலை?''
''அப்போ... வேணும்ன்னா, நாமளும் அதே மாதிரி பாடி பூசை செஞ்சா போச்சு.''
''அதெல்லாம் நம்மளால பாட முடியாதுடா.''
''நமக்கு தெரிஞ்ச பாட்டை பாடி, மாரியாத்தாகிட்ட மழை கேப்போம்... என்னா, நான் சொல்றது?'' என்றான், முனியப்பன்.
''அதுவும் கரெக்டு தான்... நம்ம குப்பத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, அடுத்த ஞாயித்துக் கிழமை காத்தால, 8:00 மணிக்கு ஆரம்பிச்சு, 1:00 மணி வரைக்கும், மாரியாத்தா பாட்டு பாடி, பூசை செஞ்சுடுவோம். ஆனா ஒண்ணு, பூசை முடியற வரைக்கும், பச்ச தண்ணி கூட யாரும் குடிக்கக் கூடாது. எல்லாரையும் சுத்தமா இருக்க சொல்லி, காத்தால, 7:00 மணிக்கு, நம்ம மாரியாத்தா கோவிலாண்ட வரச் சொல்லிடலாம்.''
''எங்க முப்பாட்டன் காலத்துல, மழை பெய்யணும்ங்கிறதுக்காக, ஒரு பாட்டை, உடுக்கடிச்சு பாடுவாங்கன்னு, எங்கம்மா சொல்லி, அவர் பாடியதை நான் கூட கேட்டிருக்கேன்.''
''ஒனக்கு அந்த பாட்டு தெரியுமாடா, முனியப்பா?''
''ஆங்... தெரியும் மாரியப்பா.''
''பாடு, பார்க்கலாம்.''
''புளிநெல்லிக் குப்பத்துல, புது மழை தான் பெய்யோனம், மாரியாத்தா
புருஷனுங்க, வயலுக்கு போயுழுது உழைக்கோணும், மாரியாத்தா
பொண்டுபுள்ள எல்லாரும், பொழுதாறச் சாப்பிடணும், மாரியாத்தா
ஆடு, மாடு, கோழியெல்லாம், அடி வயிறு நெறயோணம், மாரியாத்தா
ஈயெறும்பு, பூச்சி பொட்டு, எல்லாமே ஓம் பிள்ளை, மாரியாத்தா
நெல்லு புல்லு ஆல மரம், நெலத்துல தான் வாழோணம், மாரியாத்தா
பஞ்சத்துல வாடாம, பாரெல்லாம் காக்கோணும், மாரியாத்தா
ஒலகத்து உசிரெல்லாம் ஓங்கையில் தான் இருக்கு, மாரியாத்தா
ஒன்னோட அருளால, ஒலகத்துல மழை வேணும், மாரியாத்தா
ஏரி, குளம் நிறையோணம், எங்க உசிரு காணிக்கை, மாரியாத்தா
உன்னை விட்டா கதி யாரு, ஓடி வந்து விழுந்திட்டோம், மாரியாத்தா
ஏழை பாழை எங்களையே, என்னிக்கும் நீ காக்கணும்மா, மாரியாத்தா!'' என, பாடி முடித்தான், முனியப்பன்.
புளிநெல்லிக் குப்பத்தில் வாழும், 50 குடிசை வாழ் ஜனங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, ஞாயிற்றுக் கிழமை, காலை, 7:00 மணிக்கு, குப்பத்தின் வேப்ப மரத்தின் கீழே உள்ள மாரியம்மன் சிலைக்கு பக்கத்தில், ஒன்று கூடினர். முனியப்பன் பாட்டை, வரி வரியாய் பாட, மற்ற எல்லாரும், ஐந்து மணி நேரம் ஒன்றாக பின்பாட்டு பாடுவதென்றும் முடிவாயிற்று.
'நேற்று காலை, 8:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, நகரின் மைய மைதானத்தில், பெரும் பாடகர்களின், 'அமிர்தவர்ஷினி' ராக கச்சேரி பூஜை... ... முன்னிலையில், சிறப்பாக நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இப்பூஜையின் மூலம், விரைவில், நகரில் மழை பெய்யலாமென அனைவரும் கருதுகின்றனர். நகரத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ள புளிநெல்லிக் குப்பத்தில், நேற்று மதியம், 1:00 மணி முதல், விடியற்காலை, 4:00 மணி வரை, பெருமழை பெய்துள்ளது...'
திங்கட் கிழமை காலை, தினசரிகளில் வெளியான மேற்படி செய்தியை வாசித்த நகரமாந்தர்கள், மறுபடியும் விவாதத்தில் இறங்கினர்...
''நான் அப்பவே சொன்னேன், பாடினா மழையெல்லாம் பெய்யாதுன்னு.''
''மழை பெய்ஞ்சிருக்கே.''
''இங்க, 10 ஆயிரம் பேர், பூஜை பண்ணும்போது, மழை வேற எங்கேயோ, காட்டுலல்ல பெஞ்சிருக்கு.''
''இங்கேயும், உடனே பெய்யலா மில்லையா?''
''ஆமாம், கிழிஞ்சது... எல்லாரும் வெயில்ல வாடி, ஞாயிற்றுக் கிழமையை, 'வேஸ்ட்' பண்ணிட்டோம்.''
''வருண பகவானுக்கு, காது கேக்கறாப்புல பாடியிருக்கணும் போலயிருக்கு.''
''இதுக்கு மேலே எப்படிய்யா பாடறது... 10 ஆயிரம் பேர் சேர்ந்து போடற சத்தம் கேக்கலன்னா, வருண பகவானுக்கு காது செவிடுன்னு தான் அர்த்தம்.''
''எப்படியோ... நம்ம சங்கத்துக்கு கணிசமா ஒரு தொகையேனும் கிடைச்சுதேன்னு, ஒரு அல்ப சந்தோஷம் மட்டும் உண்டு. அவ்வளவு தான்,'' என, புலம்பி தீர்த்தனர்.
''பத்தாயிரம் பேர் சேர்ந்து நடத்திய, 'அமிர்தவர்ஷினி' ராக கச்சேரி பூஜை செய்த நகரில் பெய்யாத மழை, 50 கி.மீ., தொலைவில் உள்ள சிறிய கிராமமான, புளிநெல்லிக் குப்பத்தில் பெய்துள்ளது. இதனால், நகர மக்களுக்கு, வருண பகவான் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு, அவனுக்கு காது கேக்காதென்ற முடிவுக்கும் வந்துள்ளதாக தெரிகிறது.
''மேலோட்டமாக பார்க்காமல், எங்கள் நிருபர்கள் சென்று விசாரித்தறிந்ததில், இறைவனின் கருணை, எத்தனை பெரியதென்று நாங்கள் அறிந்து, வியந்தோம். நகரில் இப்படியொரு பூஜை செய்வதை அறிந்த குப்பத்தின், 50 குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து, கிழவர்கள் முதல் குழந்தைகள் வரை, பட்டினி விரதத்துடன், அம்மன் சன்னிதி முன் திரண்டனர்,'' என, தொடர்ந்தார், நிகழ்ச்சி தொகுப்பாளர்.
''வேகாத வெயிலில், புனிதமான அக்கினி தவம் செய்வது போல, ஒருமித்த நம்பிக்கையுடனும், ஆத்மார்த்தமான பக்தியுடனும், அவர்களுக்கு தெரிந்த, மழையை வேண்டும் பாடலை, ஞாயிற்றுக் கிழமை காலை, 8:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, திரும்ப திரும்ப பாடினர்.
''இந்த விபரம், நம் நகர மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்பாகவே கிராம மக்கள், அங்கிருந்த குளம், குட்டைகளை எல்லாம் துார் எடுத்தும், ஒவ்வொரு வீட்டின் முன்னும், தங்களது பாத்திரங்களை வெளியில் எடுத்து வைத்தும் இருந்தனர்.
''பூஜை முடிந்தவுடன், மழை பெய்யுமென்ற முழு நம்பிக்கையுடன் ஏற்பாடு செய்திருந்தனர் என்றால், அந்த நம்பிக்கையின் முழு மதிப்பையும் உணர்ந்தவன், வருண பகவான் அல்லவா... அவனுக்கா, காது கேட்கவில்லை?
''தினமும், 2 கி.மீ., நடந்து, ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீரை, துளி கூட சிந்தாமல், தங்கள் குடிசைக்கு எடுத்து வந்து கஷ்டப்படும் அவர்களுக்கு, பாற்கடல் அமுதம் போன்றது, தண்ணீர்.
''ஒவ்வொரு வீட்டிற்கு முன்னும், ஒரு வேப்ப மரமோ அல்லது புங்க மரமோ வளர்த்து, அதனடியில் கை கால் கழுவுதல், பாத்திரம் கழுவுதல், குளித்தல் போன்ற எல்லா செயல்களையும் செய்கின்றனர். உபயோகித்த தண்ணீர் வீணாகாதவாறு மரங்களையும் வளர்த்து வரும், அந்த குப்பத்து மக்களின் அருமைக்கல்லவா, வருண பகவான் செவி சாய்ப்பான்.
''நகர பூஜையில் பங்கேற்றவர்களில் பலர், இப்பூஜையின் மீதும், அதன் பலன் மீதும் சந்தேகம் கொண்டிருந்தனர்; பூஜையை ஒரு உல்லாச பயணம் போல நினைத்து, கொண்டாடி மகிழ்ந்தனர். பூஜையை வியாபாரமாக்கியதும், பெருமைகளை பறைசாற்றும் அரங்கமாக ஆக்கியது போன்ற, நகர மக்களின் செயலை பார்த்தால், வருண பகவான் காதை மட்டுமல்ல, கண்ணையும் கூட மூடிக்கொண்டிருப்பார் என்பதே சரி.
''அங்கே, பட்டினி விரதத்துடன், 50 குடும்பங்கள்; இங்கே, ஜூஸ், பிஸ்கட்டுடன், 10 ஆயிரம் பேர். அங்கே, கடும் வெயிலில், பூஜை பாட்டு; இங்கே, 'ஷாமியானா' பந்தல் கீழ், 'பெடஸ்டல் பேன்' ஓட, ராக பூஜை. அங்கே, முழு நம்பிக்கையுடன், முன்னேற்பாடாய் மழை நீர் சேமிக்க ஏற்பாடுகள்; இங்கே, ஒருவர் கூட, குடை எடுத்து வராத அவநம்பிக்கை.
''அங்கே, 50 வீட்டிலும், வீட்டிற்கு ஒரு மரமாவது நிச்சயம்; இங்கே, மரத்தையும் வளர்க்காமல், வளர்ந்த மரத்தை வெட்டி, 'கான்கிரீட்' கட்டடத்தை உயர வைக்கும் ஆத்திரமான ஆவேசம். ஆண்டு முழுக்க, குடிநீருக்காக, தினமும், 2 கி.மீ., நடக்கும், படிப்பறிவில்லாத மனிதர்கள் அங்கே; இங்கேயோ, இவ்வளவு கஷ்டத்திலும், குழாயில் தண்ணீர் வர ஆரம்பித்தவுடன், 'டியூப்' போட்டு காரையும், 'போர்டிகோ' மற்றும் மதில் சுவர்களையும் கழுவி, குடிநீரை வீணாக்கும் அறிவிலிகள்.
''இவர்களெல்லாம் இருக்கும் வரை, இந்நகரின் தண்ணீர் பஞ்சம், இப்படி தான் இருக்கும். சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களாக்களில் பூச்செடிகளுக்கும், குரோட்டன்ஸ் செடிகளுக்கும், கால்வாய் மூலம் தண்ணீர் பாய்ந்து, வீணாகிக் கொண்டிருக்கிறது. இப்படி இருந்தால், நகரின் தண்ணீர் பஞ்சம் எப்படி தீரும்?
''ஒருபுறம், மரக் கன்று நடு விழாவை துவக்கி, அதையும் வாட விட்டு, மறுபுறத்தே, யாரோ புண்ணியவான் வைத்து போன, ஆண்டுக்கணக்காய் வாழ்ந்து வரும் பெரிய மரங்களை வெட்டி, தார்ச் சாலையை தங்கள் வசதிக்காக அமைக்கின்றனர். கிராமத்து நம்பிக்கைகளை, மூட நம்பிக்கையென இழிவு செய்யும் அவநம்பிக்கையும், மக்களுடைய அறிவு நிலையும், மன நிலையும் தெளிந்தாலல்லவா, நகரில் மழை பெய்யும்.
''வாழ்க்கை பள்ளியில், அனுபவ பாடத் தேர்வில், புளிநெல்லிக் குப்பத்து மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களது, விழிப்புணர்வுக்கு முன், படிப்பாளிகள் என்ற பாவனையில், வாழ்க்கையில் தோற்று வரும் நகர மக்களின் பகட்டும், மேல் பூச்சும் கலைந்து போனது.
''சரியான விழிப்புணர்வை, உடனடியாக நகர மக்களுக்கு தான் கற்றுத் தரவேண்டும். இல்லாவிட்டால், தண்ணீரை போல, நகரில் சுத்தமான சுவாச காற்றுக்கும், இவர்கள் விரைவில் பஞ்சம் ஏற்படுத்தி விடுவர்...'' என, விளக்கமளித்தார், நிகழ்ச்சி தொகுப்பாளர்.
வருண பகவான், செவிடன் என்று சொல்ல இவர்கள் யார்!
கே.பி.பத்மநாபன்
வயது: 69, கல்வித் தகுதி: பொருளாதாரம் - இளங்கலை பட்டம், பணி: இந்தியன் வங்கி அதிகாரி, பணி நிறைவு. பிறந்த ஊர்: சென்னை, தற்போது வசிப்பது: கோவை. பள்ளி நாளிலிருந்தே மரபு கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுண்டு. பல சிற்றிதழ்களில் இவரது மரபு கவிதைகள் மற்றும் சில சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அவ்வப்போது புதுகவிதைகளும் எழுதுவதுண்டு.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

