sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சீனிவாசன்!

சீனிவாசன்!

சீனிவாசன்!


PUBLISHED ON : ஜூலை 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமல்லிகை' பத்திரிகை அலுவலகம் -

வாகன நிறுத்துமிடத்தில், தன் பழைய மொபெட்டை நிறுத்தி, ஸ்டாண்டிட்டு, பின் சக்கரத்தில் செயின் கோர்த்து பூட்டிய சீனிவாசனுக்கு, வயது, 30; உயரம், 5 அடி; தலைக்கேசத்தை, 'சம்மர் கிராப்' செய்து, நடிகர் சுருளிராஜன் போன்று மீசை வைத்திருந்தான். கிராமியக் கண்கள்; நீலநிற சட்டையும், அதே நிற கால்சட்டையுமாக சீருடை அணிந்திருந்தான்.

சட்டைப் பையில், ஹைதர் காலத்து கைபேசியும், இரண்டு மூன்று வர்ணங்களில் பேனாக்களையும் கோர்த்திருந்தான். பாலிஷ் காணாத ஷூ அணிந்து, சாப்பாடும், வாட்டர் பாட்டிலும் கொண்ட பையை எடுத்தபடி நடந்தான்.

கூண்டில் இருந்த செக்யூரிட்டி, ''வாங்க புதுமாப்பிள்ளை... வணக்கம்,'' என்றார்.

பயோமெட்ரிக்கில் ரேகை பதித்தபடி, ''வணக்கம்,'' என்று கூறியபடி நடந்த சீனிவாசன், பாஸின் அறைக்குள் பிரவேசித்தான்.

நிறுவனர் படத்தை வணங்கி, பின், அறையை சுத்தம் செய்தான். மேஜையை தூசி தட்டி, கிருமி நாசினி வைத்து தொலைபேசியை சுத்தம் செய்தவன், கழிப்பறையில் இருந்த பழைய ஓடோனிலை எடுத்து, புதிது மாற்றினான். ஐரோப்பியன் கிளாசெட்டில் ஹார்பிக் வில்லை பொருத்தினான்; கழிப்பறையிலும், பாஸ் உட்கார்ந்து பணி செய்யும் அறையிலும், ரூம் ஸ்ப்ரே அடித்தான். காலண்டரில் தேதி கிழித்தான்; குப்பைக் கூடையை காலி செய்து, இருந்த இடத்தில் வைத்தான்.

ஊழியர்கள் ஒவ்வொருவராய் பணிக்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சீனிவாசனை பார்த்ததும், 'ஹாய் சீனி... ஹலோ சீனி... வணக்கம் சீனி... குட்மார்னிங் சீனி...' என, முகமன் கூறினர். முதலாளியுடனேயே இருப்பதால், அவனுக்கு இந்த ஸ்பெஷல் மரியாதை.

சிலர், 'இது, எத்தனை நாளைக்குடா... என்றாவது ஒரு நாள் முதலாளிக்கு உன் மீது அதிருப்தியாகி, உன்னை தூக்கி விட்டெறியப் போறாரு...' என்கிற கிண்டலுடன், வணக்கம் சொல்வர். மற்றும் சிலரோ, 'இவனை பகைத்தால், முதலாளியிடம் நம்மை போட்டுக் கொடுத்து விடுவான்...' என்கிற பயத்தில், வணக்கம் சொல்வர்.

ஆனால், சீனிவாசனோ விருப்பு, வெறுப்பு அற்ற மோன நிலையில் இருப்பான். முதலாளியிடம் பேசும்போது, யாரைப் பற்றியும் குறை கூற மாட்டான்; நிறை இருந்தால், நெஞ்சம் பூரிக்க சிலாகிப்பான். நாள் முழுவதும், பாஸ் பற்றிய அக்கறையும், கரிசனமும் தான் அவனுள் ஓடும். 'பிறப்பெடுத்ததே பாஸுக்கு சேவை செய்யத்தான்...' என்கிற மனோபாவத்துடன் செயல்படுவான்.

முதலாளியின் கறுப்பு கார் வந்ததற்கு அடையாளமாய், ஹாரன் ஒலிக்கும் சத்தம் கேட்டவுடன், வோடபோன் நாய்க்குட்டி போல துள்ளி ஓடி, கார் கதவைத் திறந்து, சூட்கேசையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொள்வான். காரை, 'பார்க்' செய்த பின், இறங்கி நடக்கும் பாஸுடன் ஓடுவான்.

பாஸ் வருவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன்னரே, அறையில், 'ஏசி'யை போட்டு வைத்திருப்பான். அவர் தன் இருக்கையில் அமர்ந்ததும், வாக்கி டாக்கியை மேஜையிலும், சூட்கேசை பக்கவாட்டு சோபாவிலும் வைப்பான்.

பல்வேறு பிரிவுகளிலிருந்து பாஸ் பார்க்க வேண்டிய செய்தி குறிப்புகளை எடுத்து வருவான்; சில உதவி ஆசிரியர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் நேரடியாகவே எடுத்து வருவர். அவர்களின் அவசரம் பார்த்து, பாஸின் அறைக்குள் அனுப்பி வைப்பான். வரும் பார்வையாளர்களை வரிசை கிரமமாய் உட்காரச் சொல்வான். பார்வையாளர்களின் முகங்களை பார்த்தே, என்ன காரணத்துக்காக முதலாளியை பார்க்க வந்திருக்கின்றனர் என்பதை யூகித்து, நியாயமற்ற கோரிக்கைகளுடன் வந்திருக்கின்றனர் என்றால், 'இன்னைக்கு பாஸை பாக்க முடியாது; நாளைக்கு வாங்க...' எனக் கூறி அனுப்பி விடுவான். உள்ளே அனுமதிக்கும் பார்வையாளர்களிடம், 'பாஸ் நேரத்தை திருடாம, சுருக்கமா பேசிட்டு வாங்க...' என்று சொல்லி, அனுப்புவான்.

பாஸின் நண்பர்களிடம் கூட, கறாராக, கண்டிப்பாய் நடந்து கொள்வான்.

'பாஸ் கூட ரயில்ல திருநெல்வேலி போகப் போறீங்க போல... பயணத்தின் போது, 'நொச்நொச்'ன்னு பேசி, அவர் தூக்கத்தை கெடுத்துடாதீங்க...' என்பான். அத்துடன், பாஸின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைத்திருப்பான். அவர்களை பார்த்ததும், பட்டப் பெயரை முணுமுணுப்பான்.

காலை, 11:00 மணிக்கு பாஸுக்கு இனிப்பு கலக்காத காபி, கொடுப்பான். மதியம், 1:00 மணிக்கு பாஸின் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டை அவருக்கு பரிமாறுவான். அவர், அரை மணி நேரம் குட்டி தூக்கம் போட்டு எழுந்த பின், மீண்டும் அவருக்கு காபி கலந்து கொடுப்பான். சி.சி.டி.வி., கேமராக்கள் பதிவை பார்த்து, புதுப்புது ஆணைகள் பிறப்பிப்பார் பாஸ்; ஓடோடி சென்று அதை முடிப்பான், சீனிவாசன்.

மாதம் ஒரு சிறந்த ஊழியரை தேர்ந்தெடுத்து, அவரது புகைப்படத்தை போர்டில் ஒட்டி, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவார், பாஸ். ஆண்டில் ஆறு முறையாவது, அந்த அங்கீகாரத்தை பெற்று விடுவான், சீனிவாசன். ஆண்டு முழுக்க விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவான்; பாஸ் வருகிறார் என்றால், விடுமுறை நாளன்று கூட பணிக்கு வருவான்.

பதினெட்டு வயதில் வேலைக்கு வந்தான்; இப்போது, 30 வயதாகிறது. 12 ஆண்டுகள் அப்பழுக்கில்லாத சர்வீஸ். வேலையில் சேரும் போது, வெறும் எட்டாம் வகுப்பு தான் படித்திருந்தான்; பாஸின் அறிவுறுத்தல் மற்றும் பண உதவியால் தொலைதூர கல்வி இயக்கம் மூலம், முதுகலைப் பட்டம் பெற்றான்.

அத்துடன், தினம் ஒரு மணி நேரம் ரிப்போர்ட்டர்களுடன் செல்லும் போட்டோகிராபர்களுக்கு உதவியாளராக சென்று, புகைப்பட கலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்; இதுவும் பாஸ் ஏற்பாடு.

'தினமல்லிகை' இதழில், அனைத்து பக்கங்களையும் பத்தி விடாமல், படித்து விடுவான். மனதில் தோன்றியதை, பாஸிடம் விமர்சிப்பான். அவனது விமர்சனங்களை, ஆக்கப்பூர்வமாய் எடுத்துக் கொள்வார் பாஸ்.

அரைத்த மாவையே அரைக்கும் எழுத்தாளர்களை பார்த்ததும், 'சார்... இன்னும் நீங்க எழுதுறதில இருந்து ஓய்வு பெறலையா...' என, கிண்டலடிப்பான். உருக்கமாக கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் வந்தால், சிறப்பாக வரவேற்று, காபி கொடுத்து உபசரித்து, காத்திருக்க வைக்காமல், பாஸை உடனடியாக பார்க்க அனுமதிப்பான்.

கல்யாண ஆசையே இல்லாமல் இருந்த சீனிவாசனை ஒரு நாள் அழைத்து, 'டேய் சீனி... சீக்கிரம் கல்யாணம் செய்துக்க; அப்பத்தான் உன் வாழ்க்கை முழுமை அடையும்...' என்றார், பாஸ்

'யாரு பாஸ் எனக்கு பொண்ணு தருவா...'

'எதுக்கு அவநம்பிக்கையா பேசுறே... நானே உனக்கு பெண் பாத்து, கட்டி வைக்கிறேன்...' என்றார்.

சீனிவாசனின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் பேசி, அவனுக்கு பெண் பார்த்து, திருமண செலவை முழுவதும் ஏற்று, தலைமை தாங்கி, சீனிவாசன் - கோகிலா திருமணத்தை முடித்து வைத்தார் பாஸ். ஹனிமூன் செல்ல, ஒரு வாரம் ஊட்டிக்கு போய் வர ஏற்பாடும் செய்து கொடுத்தார்.

'தேனிலவு' முடிந்து அன்று தான், பணிக்கு வந்திருந்தான், சீனிவாசன். ஒரு வார தாம்பத்யத்தில், அவன் முகம் பளபளத்து, இரண்டு கிலோ எடை கூடியிருந்தான்.

பாஸின் ஒரு கோடி ரூபாய் கார் வந்து நின்று, ஹாரன் அடித்ததும், ஓடிப் போய், ''பாஸ்... வணக்கம்...'' என்று சொல்லி, சூட்கேஸை எடுத்துக் கொண்டான், சீனிவாசன்.

சிரித்தவாறே அவனை நோட்டமிட்ட பாஸ், ''எப்படிடா இருக்கு திருமண வாழ்க்கை...'' என்று கேட்டார்.

''ஒரு வாரம் உங்கள பாக்காம, உங்களுக்கு தேவையானதை செய்யாம, அல்லாடிப் போயிட்டேன்...'' என்றான்.

இருக்கையில் வந்து அமர்ந்தார் பாஸ்; ஏவி.எம்.சரவணன் போல, கைகட்டி நின்றான் சீனிவாசன்.

ஒரு கவரை எடுத்து நீட்டினார் பாஸ்; தயக்கத்துடன் வாங்கி பிரித்தான்.

சீனிவாசனுக்கு புகைப்பட கலைஞனாய் பதவி உயர்வுடன், 8,000 ரூபாய் சம்பளமும் கூடியிருந்தது.

''இது, என்னோட திருமண பரிசுடா...'' என்றார்.

சீனிவாசனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. யாரோ தன்னை பாஸிடம் இருந்து பிரித்தெடுப்பதாக எண்ணினான்.

''ஏண்டா அழற...''

''எனக்கு பதவி உயர்வு வேணாம்... ரிட்டையர் ஆகிற வரைக்கும், உங்க கூட தான் இருப்பேன். உங்களுக்கு என்னை பிடிக்காம போயிருச்சா... என் திருமணத்தை சாக்கா வச்சு, என்னை வெட்டி விடுறீங்களா பாஸ்...'' என்றான்.

''எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா... உன் எதிர்கால நலனில் அக்கறை வச்சு தான், உனக்கு பதவி உயர்வு தரும் முடிவை எடுத்தேன்,'' என்றார், பாஸ்.

''எனக்கு பதவி உயர்வு வேணாம்; உங்க ஏவலாளாகவே இருந்துட்டு போறேன்,'' என்று சொல்லி, பதவி உயர்வு ஆணையை, பாஸிடமே திருப்பிக் கொடுத்தான் சீனிவாசன்.

''யோசித்து முடிவெடு...''

''இதில் யோசிக்க ஒண்ணுமில்லை. நா, உங்க கூடவே இருந்திடுறேன்; என்னை விட்ருங்க,'' என்றான்.

சில நொடிகள் யோசித்தவர், ''சரிடா... அப்புறம் உன் இஷ்டம்,'' என்றார், பாஸ்.

ஒரு வாரத்திற்கு பின் —

காலையில் இருக்கையில் வந்து அமர்ந்த பாஸிடம் தயங்கித் தயங்கி வந்த சீனிவாசன், ''பா...ஸ்...'' என்று இழுத்தான்.

''என்னடா...''

''என் புரமோஷன் ஆர்டரை என்ன செய்தீங்க?''

''கேன்சல் செய்திட்டேன்.''

''கேன்சலை, கேன்சல் செய்ய முடியுமா பாஸ்?''

''என்னடா சொல்ற...''

''நீங்க கொடுத்த பதவி உயர்வை, ஏத்துக்கலாம்ன்னு முடிவெடுத்திருக்கேன் பாஸ்!''

''ஏன் இந்த மாற்றம்?''

''ஹிஹி... நீங்க பதவி உயர்வு குடுத்ததையும், நான் வாங்க மறுத்ததையும், என் மனைவிகிட்ட சொன்னேன். என்னை காய்ச்சி எடுத்துட்டா. சோறு போட மாட்டேங்கிறா... ஒத்துழையாமை இயக்கம் நடத்துறா; என்னால தாக்குபிடிக்க முடியல. நான் அன்னைக்கு பேசினத மன்னிச்சு மறந்து, பதவி உயர்வு ஆணையை வழங்குங்க பாஸ்... போட்டோகிராபர் பணிக்கு போனாலும், அப்பப்ப உங்களை வந்து தரிசிப்பேன்,'' என்றான் சீனிவாசன்.

''டேய் சீனி... உனக்கு பாஸுக்கு மேல், ஒரு சூப்பர் பாஸ் வந்துட்டா. இனி உன் சேவை, அவளுக்கு தான். எங்கிருந்தாலும் நல்லா இரு. எனிவே ஐ மிஸ் யுவர் சர்வீஸ்...'' என்று சிரித்தபடி, பதவி உயர்வு ஆணையை, அவனிடம் வழங்கினார், பாஸ்.

ஆர்னிகாநாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us