PUBLISHED ON : ஜூலை 17, 2016

பந்த பாசங்களை, வேஷங்கள், மோசங்கள் என்போர் கவனிக்க!
பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு!
உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் எண்ணியது உண்டு.
ஆனால், 'தாய்வழி பெரியம்மாக்கள் மூலம், உனக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கின்றனரே... இவர்களை ஏன் நீ, அண்ணன்களாக கருதவில்லை...' என்று என் மனமே, என்னை வினவிய போது, 'அதானே...' என, மனம் தெளிந்தேன்.
பின், இவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி, 'அண்ணே... அண்ணே...' என்று வாய் நிறைய சொல்லி, பூரித்து மகிழ்ந்தேன். அவர்களது பாசமும், பரிவும் கண்ணாடியின் பிரதிபலிப்புகளாய் எனக்கு திருப்பி கிடைத்த போது, பூரித்துப் போனேன்.
ஆனால், ஒரே கருப்பையில் தோன்றி வளர்ந்தவர்கள் கருத்து வேறுபட்டு நிற்கிற போது, இயற்கை ஏற்படுத்தி தந்த இந்த அருமையான இணைப்பையும், இப்படி மழுங்கடித்து கொள்ள தான் வேண்டுமா என்கிற முதல் உணர்வே, தலைதூக்கி நிற்க வேண்டும்.
உறவினர்களை பற்றி பொதுவாக சொல்லப் படுகிற குறைகள் இரண்டு...
'என் வளர்ச்சி கண்டு வயிறு எரிகின்றனர்; பொறாமைப்பட்டு சாகின்றனர்...' என்பது, முதல் குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டில், கால்வாசி கற்பனை; கால்வாசி பொய். ஊகங்கள் எல்லாம் உண்மையாகி விடாது.
எச்சில் கையால் காக்காய் ஓட்டினால், கையில் உள்ள பருக்கைகள் காக்காய்க்கு உணவாகி விடும் என்று, இடது கையால் காக்காய் ஓட்டும் கஞ்சப் பிசினாறிகள் உண்டு. இவர்கள் உறவினர்களுக்கு என்று எதுவுமே செய்யாதபோது தான், அவர்களிடையே பொறாமை வளர்கிறது.
'நம் புது காரில் ஏறி, ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளுங்கள்; என் மலைவாச இல்லத்தில் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கி வாருங்கள்; என் வங்கிக் கணக்கில் உறங்குகிற பணம், உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு பயன்படட்டும்; பின், சவுகரியப்படும் போது தாருங்கள்...' என்றெல்லாம் நம் வளர்ச்சியின் வாச மலர்களை, உறவினரும் நுகரும்படி கொடுக்காத உறவினர்களால் என்ன பயன்! வளத்தால் உயர்ந்து நிற்பவர்கள், மனதால் உயர்ந்து நிற்க வேண்டாமா... இவர்களை பார்த்து உறவினர் பலரும் வயிறு எரியாமல், வேறு என்ன செய்வராம்!
'அவர் நன்றாக இருந்தால், அது நமக்கும் உதவி; நல்லது...' என்று நம் உறவினர் வட்டத்தை நினைக்கும்படி செய்யாதது, வளர்ந்தவர்களின் தவறல்லவா!
உடல் உழைப்பால், செல்வாக்கால், புகழால், உறவினர் எவருக்கும் பயன்படாத ஒருவரது வாழ்க்கையை, முழுமையற்ற வாழ்க்கை என்பேன்.
உறவினர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு, உறவிற்குள் இருக்கிற சம்பிரதாயங்களை சரிவர பின்பற்றவில்லை என்பது!
'எனக்கு முறைப்படி சொல்லவில்லை; எவனோ சொல்லியல்லவா எனக்கு தெரிய வந்தது. முதலில் எனக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்... முறைப்படி அழைக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறார்; கேவலப்படுத்தி விட்டார். நன்கு வரவேற்கவில்லை; முகம் கொடுத்து பேசவில்லை; வாங்க என்று கூப்பிடவில்லை; சரி வர உபசரிக்கவில்லை; சாப்பிடச் சொல்லவில்லை; தாம்பூலப் பையும், பரிசும் தரவில்லை...' என்று ஆரம்பித்து, 'துக்கம் விசாரிக்க வரவில்லை; என் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லை; என்னை மதிப்பதே இல்லை...' என்கிற பெரிய புகார் பட்டியல் இதனுள் அடக்கம்.
ஒன்று சொல்லட்டுமா... இவற்றையெல்லாம் தாண்டிய பெருந்தன்மை நமக்கு வேண்டும். 'போகட்டும் விடு; அவர்கள் குறைபட நடந்து கொண்டாலும், நாம் பெருந்தன்மை காட்டுவோம்...' என்று சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மீறிய போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
மறுக்காமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்வோம். நண்பர்களை மன்னிக்க முன் வருகிற அளவிற்கு, நமக்கு உறவினர்களை மன்னிக்கிற பெருந்தன்மை ஏனோ இல்லை.
உறவினர்களை, உறவினர்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் மீது ஒருவித நட்பு பூச்சையும் பூசிக் கொண்டால், பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நம்முள் வளர்ந்து விடும்.
நட்பு நாம் தேடிக் கொண்டது; உறவு, இயற்கை தந்த அற்புத அன்பளிப்பு. நல்லதோர் வீணை இது; இதை, நலங்கெடப் புழுதியில் எறியலாமா?
லேனா தமிழ்வாணன்
