PUBLISHED ON : ஜூலை 30, 2017

வாசலில் நின்று குரல் கொடுத்த கீரைக்காரம்மாவிடம், பொன்னாங்கண்ணி கீரை வாங்கி வீட்டிற்குள் திரும்பினார், சிவக்குமார்.
அந்த வழியாக பைக்கில் சென்ற அவரது நண்பர், வண்டியை நிறுத்தி, ''என்ன சிவக்குமார்... எப்படி இருக்கே?'' என்று கேட்டார்.
''எனக்கென்ன... தனியா சமையல், தூக்கம், வாக்கிங், வாழ்க்கைன்னு நல்லாத்தான் ஓடிக்கிட்டிருக்கு,'' என்றார் புன்னகையுடன்!
''நீயும் இப்படியே, 28 வருஷங்கள கழிச்சுட்ட... என்ன சொல்றான் உன் மகன் கிஷோர்... இந்தியாவுக்கு வர்றானா இல்லயா...''
''அடுத்த மாசம் வர்றான்; இந்த முறை எப்படியாவது, 'கன்வின்ஸ்' செய்து, கல்யாணத்தை செய்து வெச்சுடணும்... பாக்கலாம்... என்னவோ, இந்த முறை ஒத்துக்குவான்னு தோணுது.''
''நானும் அவன்கிட்ட பேசறேன்... ஒருநாள் வீட்டுக்கு வாப்பா... மாங்காய் வத்தக் குழம்பு சாப்பிட!''
''கண்டிப்பா வர்றேன்,'' என்று சிவக்குமார் கூறியதும், விடை பெற்று சென்றார், நண்பர்.
கீரை கட்டை பிரித்து, ஒவ்வொரு இலையாக ஆய்ந்த போது, மீனுவின் நினைவு வந்தது. தன்னுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளையும், காவியமாக்கி போய் சேர்ந்தாள். இருள் தவழும் நேரத்தில், மெல்லிய குரலில் அவள் பாடுகிற, 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே...' பாட்டும், தேங்காய் மணக்கும் அரிசி உப்புமாவும், தூசியே இல்லாத தரையும், ஓரம் மடங்காத காகிதம் விரித்த, வெள்ளை அலமாரிகளும், நாசிக்கருகில் கிறங்க வைக்கிற முல்லைப்பூச்சரமும், இன்னும் அவள் இங்கேயே சுற்றுவது போல் அவருக்கு தோன்றியது.
சமையலை முடித்து, கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார், சிவக்குமார். கிஷோரிடமிருந்து மெயில் வந்திருந்தது.
உடலில் புதிய காற்று பட்டது போல உணர்வு. கொரிய வங்கிக்கு, மென்பொருள் தயாரிக்கும் வேலைக்கு, அவனை தலைவனாக நியமித்திருந்தது, அவனுடைய அமெரிக்க கம்பெனி. 'பிசிப்பா... உடம்புக்கு ஒண்ணுமில்லயே, மழை வந்துதா; இங்கே பனி மழைப்பா...' என்று, அவன் அனுப்பும் குறுஞ்செய்திகள் மட்டுமே அவருக்குள் உயிர் வார்த்தன.
வேகமாக மெயிலை திறந்தவர், கண்ணாடியை அணிந்து உட்கார்ந்தார்.
அன்பே உருவமான அப்பாவுக்கு...
மாளாத அன்புடன் கிஷோர் எழுதுவது. ரொம்ப நாளைக்குப்புறம் தமிழில் எழுதுறேன்; ஏதோ அம்மா வீட்டுக்கு வந்த புதுப் பெண் மாதிரி ஒரு உணர்வு, ஏற்படுகிறது. பாருங்கள்... அம்மாவையே பாத்திராதவன், அம்மாவை, இதற்கு ஒப்பிடுகிறேன்.
சிறு வயது சம்பவம் ஒன்று, நினைவிற்கு வருகிறது... நம் வீட்டில் செம்பருத்திச் செடியில் பூ ஒன்று பூத்திருந்தது. ஆர்வக் கோளாறால், அதைப் பிடுங்கி, ஒவ்வொரு இதழாக, அந்தப் பூவின் மொத்த இதழ்களையும் பிய்த்து விட்டேன். நான் செய்த வேலையைப் பார்த்தும் நீங்கள் என் மீது கோபப்படாமல், 'கண்ணு... ஒரு மலரின் இதழ்களை பிய்ப்பதன் மூலம், உன்னால் ஒரு மலரின் அழகை சேகரித்து விட முடியாது...' என்றீர்கள். அப்போது, அதற்குரிய அர்த்தம் எனக்கு புரியவில்லை.
ஆனால், கல்லூரி காலத்தில், தாகூரின் கவிதை ஒன்றில், 'அழகை சிதைப்பதன் மூலம், அதை அடைந்துவிட முடியாது...' என்ற கவிதையின் உட்பொருள், எனக்கு அதை புரிய வைத்தது. எத்தகைய இடர்பாடுகளிலும், நம் சுயம் இழக்காமல், நம் வாழ்வை, சமாதானமாக வைத்துக் கொள்ள, என் இளம் பருவத்தை கைப்பிடித்து அழைத்துச் சென்ற உங்கள் தோழமை தான், எனக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறது.
அந்த தோழமையின் பெயரால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். அவள் பெயர், மரியா; எஸ்கலேட்டரில் மாட்டிய குழந்தையை காப்பாற்றியதில் கைகளில் அடிபட்டு, ஆறு மாத சிகிச்சைக்குப் பின் சரியானவள்; ராணுவத்தில் பணியாற்றிய கணவனை, உள்நாட்டுக் கலவரத்தில் பலி கொடுத்தவள்; எங்கள் கம்பெனியின் கணக்குகளை பார்ப்பவள்; அமைதி, பொறுமை, பக்குவம், நகைச்சுவை உணர்வு மற்றும் ஈரம் என்று பண்புகள் நிறைந்த பெண்.
அப்பா... அவள், நம் வீட்டுக்கு ஒளியாய் இருப்பாள். 'மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய்...' என்பது தானே நீங்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி. அந்த வகையில், மெழுகுவர்த்தியை போன்றவள், மரியா. நீங்கள் வளர்த்த குழந்தை நான்; உங்களுக்கும், அவள் அப்படித் தான் தோற்றமளிப்பாள்.
சனிக்கிழமை அவளோடு இந்தியா வருகிறேன்; சரி என்று சொல்லிவிடுங்கள் அப்பா.
— மாறாத அன்புடன், கிஷோர்.
விழிகளை மூடித் திறந்தார்; மறுமுறை வாசித்துப் பார்த்தார். 'ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து எழுதியிருக்கிறான். மிகையான உணர்வுகளோ, பொய்யான வர்ணனைகளோ இல்லை; தன்னை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே என்கிற தவிப்பு மட்டுமே தெரிகிறது.
'ஆனால், மரியம்... சரியாக வருமா... இதுவரையில் எந்த பேதமும் தோன்றியதில்லை. கோபுர கலசங்களையும், தேவாலய மாடங்களையும், மசூதி உச்சிகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல், சுற்றி வருகிற புறாக்கள் போன்று தான் நகர்ந்திருக்கிறது, என் வாழ்க்கை.
'கிஷோர்... ஏன் என்னை தர்மசங்கடத்தில் நிறுத்தி விட்டாய்... வண்ணத்துப் பூச்சி போல என் மனதை அலைக்கழிக்க வைக்கிறாயே... மீனு... நீ இருந்திருந்தால் உன் மகனுக்கு என்ன சொல்லியிருப்பாய்... கனவில் வாயேன், இந்த குழப்பத்திற்கு விடை சொல்லேன்...' என பலவாறு எண்ணி, தவித்துப் போனார், சிவக்குமார்.
சனிக்கிழமை காலை —
தூக்கம் வராத இரவுகளின் பாதிப்பில், சிவந்த கண்களும், தளர்ந்த உடலுமாக, எப்படியோ குழம்பும், கூட்டும் செய்து முடித்தார், சிவக்குமார். அவனுக்கு மிகவும் பிடித்த, அவல் பாயசம் செய்வதற்காக, அவலை வறுத்து வைத்தார்; மிக்சியை எடுத்து, பொடிக்க முடியாமல், உடல் சோர்ந்தது.
கொஞ்சம் ஓய்வு எடுத்து செய்யலாம் என்று உட்கார்ந்தபோது, வாசலில் கார் வந்து நின்றது. அவர் எழுந்து வருவதற்குள், ஓடி வந்தான் கிஷோர். பெட்டிகளை போட்டு விட்டு, அவர் கால்களைத் தொட்டு வணங்கி, இறுக அணைத்தான்.
''எப்படிப்பா இருக்கீங்க...'' என்று கேட்டவன், ''என்னப்பா இப்படி இளைச்சுட்டீங்க?'' என்று கவலையுடன் கேட்டு, மறுபடி அணைத்துக் கொண்டான்.
''அப்பா... இது மரியா... அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலமான பென்சில்வேனியால, மிஷோட்ன்னு ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்த பெண்; இப்ப, எங்க கம்பெனிய, 'ஆடிட்' செய்ற அளவுக்கு வளர்ந்துட்ட சாதனைப் பெண்,'' என்றவன், திரும்பி, ''மரியா... இவர் என்னோட அன்பான அப்பா, மிஸ்டர் சிவகுமார்,'' என்று, இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
இருகரம் கூப்பி, அவருக்கு வணக்கம் சொல்லி, பின், குனிந்து, அவர் பாதங்களை தொட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டாள், மரியா.
அப்போது தான், அவளை நன்றாக பார்த்தவர், திடுக்கிட்டுப் போனார். காரணம், அவளுக்கு, 45 வயதிருக்கும். அழகாக இருந்தாள்; ஆனால், விழிகளும், நெற்றிக் கோடுகளும், அவள் வயதை பறை சாற்றின. கிஷோருக்கு, 29 வயதே ஆகவில்லை.
'இதென்ன விபரீதம்... மேலை நாடுகளில், இதெல்லாம் இயல்பான விஷயம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா, இங்கே எப்படி இதை ஏத்துக்குவாங்க. கிஷோர்... நீயா இப்படி எல்லாம் நடக்கிறாய்...' என, மனதுக்குள் பரிதவித்தார்.
''பாயசம் சாப்பிடணும் போல் இருக்குப்பா... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... மரியாவுக்கு தென்னிந்திய சமையல் நல்லா தெரியும்... அரைச்சு விட்ட சாம்பார், மைசூர் ரசம்ன்னு கலக்குவாங்க...'' என்றவன், அவளிடம், ''மரியா... ப்ளீஸ் பாயசம் வேணும்,'' என்று சொல்லி சிரித்தான்.
''வித் யுவர் பர்மிஷன்,'' என்று, அவர் கையை லேசாக அழுத்தி, உள்ளே ஓடினாள், மரியா.
தந்தையின் அருகில் வந்து, தோளை மென்மையாகப் பற்றி, ''மரியாவை பிடிச்சிருக்காப்பா?'' என்று மென்மையாக கேட்டான், கிஷோர்.
அவர், மவுனமாக இருந்தார்.
''அம்மா இறக்கும் போது உங்களுக்கு, 25 வயசு; இப்போ, 53... எனக்காக, உங்க இளமையையும், உணர்ச்சிகளையும் தூக்கி கொடுத்திட்டீங்க... நான் மட்டும் தான் உங்க வானத்தின் ஒரே நட்சத்திரம்; மத்த எல்லா இடங்களும் வெறும் சூனியம். என்ன கொடுமைப்பா இது... விதி மேல பழியைப் போட்டு, மனசைக் கல்லா மாத்தி, உப்பு சப்பில்லாம வாழ்ந்துடீங்க....
''மரியாவை பாத்ததும், உங்க நினைவு தான் வந்தது. உங்களைப் போலவே ரசனை, குணம் கொண்டவங்க. நாலு வருஷமா எனக்கு அவங்கள தெரியும். மெல்ல அவங்க கிட்ட பேசி, 'எதை இழக்கிறோமோ, அதுவே வேறொரு வடிவத்துல, நம்மைத் தேடி வரும்'ன்னு சொல்லி, புரிய வெச்சேன். உங்களுக்கும் அதத்தான் சொல்ல விரும்புறேன்... அம்மா தான், இப்போ மரியாவா உங்களத் தேடி வந்திருக்காங்க... இந்த பருவத்துக்கு தேவையான தோழமை, துணைன்னு ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருந்து ரெண்டு பேரும் அற்புதமாக வாழணும்ங்கிறது தான் என்னோட ஆசை,'' என்றான், கிஷோர்.
கண் கலங்கி, குரல் வழுக்க, அன்புடன் தன் கைகளை பற்றி நிற்கும் மகனை, மனம் நெகிழ்ந்து அணைத்து, முத்தமிட்டார், சிவக்குமார்!
- வானதி
