sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சருகுகள், இலைகள், மலர்கள்!

சருகுகள், இலைகள், மலர்கள்!

சருகுகள், இலைகள், மலர்கள்!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த வாரம், இப்படி ஒரு வாய்ப்பைக் கொண்டு வரும் என்று, நான் நினைக்கவே இல்லை.

இந்த முறை, எங்கள், என்.ஜி.ஓ., அரையாண்டுக் கூட்டம், கூடலுாரில் நடக்கப் போவதாகவும், மத்திய சென்னை, 'யூனிட்' சார்பாக, நான் தான் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டனர்.

மனது படபடக்கத் துவங்கியது.

கவனித்து விட்ட, திவாகர், ''என்ன சுபா... 'டென்ஷனா' இருக்கிறாயா? அப்படி இருப்பவள் இல்லையே... என்ன விஷயம்?'' என்றார்.

''கூடலுார் போறேன், திவா... கல்லுாரிப் பருவம், அதைத் தொடர்ந்த சர்வீஸ் வேலைகள் என்று அழகான காலம், அந்த ஊரில் தான் கழிந்தது. கஸ்துாரிபா முதியோர் இல்லம் ஒன்றில், மேற்பார்வையாளராக என்னை நியமித்தனர். எல்லாரும், 70 - 85 வயது, 'சீனியர் சிட்டிசன்ஸ்!' பாவமாக இருக்கும். உறவுகளால் கைவிடப் பட்டவர்கள்.

''தரமான உணவு, உடை, படுக்கை என்று இருந்தும், அவர்களிடம் நிரந்தர சோகம் இருக்கும். அலுப்பும், விரக்தியுமாகவே இருப்பர். அந்த நினைவுகள் வந்தன. ஒரு காலத்தில், வாழ்வை பறந்து களித்தவர்கள். இப்போது, சிறகுகளை இழந்து, மூலையில் முடங்கி விட்டனர். என்ன செய்வது?''

''உண்மை தான், சுபா... அன்பால் தான் பிறந்தோம். ஆனால், அன்புடன் வாழ்கிறோமா என்றால் இல்லை என்று தான் தோன்றுகிறது!''

''அவர்களை பார்க்க செல்கிறேன். மனதிற்கு கொஞ்சம் சமாதானமாக இருக்கும்,'' என்றாள்.

''நிச்சயமாக போய் வா, சுபா.''

காற்றில் செடிகள் அசைந்து, காய்ந்த சருகுகளை உதிர்த்தன. மரம் அமைதியாக நின்றது. பிரியாவிடை கொடுத்து, அந்த உலர்ந்த இலைகளை அனுப்புகிறதோ என்று தோன்றியது. ஜன்னலில் இருந்து பார்வையை மீட்டேன். ஏனோ நெஞ்சம் மிக பாரத்தை உணர்ந்தது.

கூடலுாரில் வேலைகள் முடிந்தன.

இந்தப் பக்கம் போனால், முதுமலை; அந்தப் பக்கம் போனால், வயநாடு என்ற பூகோள அமைப்பு, எப்போதும் போல கவர்ந்தது என்றாலும், மனது வேறொரு இடத்தில் இருந்தது. அமைப்பாளர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

மலைப்பாங்கான ஊர். யானைகளும், சிறுத்தைகளும் உலா வரும் பிரதேசம். எப்போதும் காற்றுடன் குளுமை தவழும் மேகங்கள். அதோ, அந்த சிறு மேட்டில், குதிரைமலையின் கீழே கஸ்துாரிபா இல்லம்.

ஆட்டோவில் போய் இறங்கினேன்.

வெண்மையும், கறுப்புமாக இருந்த, கட்டடம், இப்போது, பச்சை, ரோஸ், ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறி, ஏதோ கின்டர் கார்டன் பள்ளி போல் காட்சியளித்தது.

அளவான உயரத்தில் சுற்றுச்சுவர்கள். பெரிய தோட்டம். ஏகப்பட்ட மரம், செடி கொடிகள். உள்ளே, தேசியக்கொடி கம்பம். பெரிய தாழ்வாரங்கள். அதில், அழகழகான ரங்கோலி கோலங்கள். உள்ளே சுவர்களில், வரையப்பட்ட ஓவியங்கள்.

என்ன இது, முதியோர் இல்லம் மாதிரி இல்லையே... முகவரி மாறி வந்துட்டேனா... சந்தேகத்துடன் பார்த்தேன்.

'யாரும்மா?' என்றனர்.

திரும்புவதற்குள், 'மீராம்மாவைப் பாக்கணுமா... இதோ வந்துடுவாங்க... 'டிபன் செக் ஷன்' வேலை முடியணும்ல... இங்க உக்காருங்க...' என்று சொல்லி, உள்ளே சென்றனர்.

உட்கார்ந்தேன். மீராவை எனக்குத் தெரியும். அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து, நான் கிளம்பியிருந்தேன். அப்போது, அவள் புது உறுப்பினர். எம்.எஸ்சி., சோஷியல் சயின்ஸ் மற்றும் செக்ரெட்டரிஷிப்பும் முடித்தவள்.

மிகுந்த ஆர்வத்துடன் இந்த வேலைக்கு வந்திருப்பதாக கூறினர். அப்படியானால் மிக விரைவிலேயே வேலையை விட்டுப் போய் விடுவாள் என்று நினைத்தேன். அவளா, ஐந்து ஆண்டுகளாக இங்கேயே இருக்கிறாள்?

திடீரென்று, கலகலப்பான சத்தம்.

மணியடித்ததும், 'ஹே' என்று கத்தியபடி, துவக்கப் பள்ளிக் குழந்தைகள் வருவரே... அதேபோல், உள்ளேயிருந்து முதியவர்கள், சிரித்தும், பேசியும், தோள் மேல் கை போட்டு, கிண்டல், கேலி செய்தபடி வெளியேறிக் கொண்டிருந்தனர்.

பார்க்க ஆச்சரியமும், பிரமிப்புமாக இருந்தது.

நம்ப முடியவில்லை. ஒவ்வொருவர் முகங்களில் வலியையும், விரக்தியையும் தவிர, நான் எதையுமே பார்த்ததில்லை. குரல் கூட சரியாகக் கேட்டதில்லை. ஆனால், இன்று உற்சாகமாக சிரிக்கின்றனர். அந்த முகங்களில் எவ்வளவு உற்சாகம். ஓடாத குறையாக எங்கே போகின்றனர்?

பெயின்ட் டப்பா எடுத்து விரைகிறார், ஒரு தாத்தா. கூடவே பிரஷ்கள், கைத்துணிகள் என்று, இரு பாட்டிகள் ஓடுகின்றனர்.

அதோ, பூவாளியுடன், ஒரு தாத்தா; அவருடன் சிரித்தபடியே, விதைகளுடன், இன்னொரு தாத்தா; கோடரி, புல் வெட்டி சகிதம், ஒரு அம்மாள்.

இந்தப் பக்கம், சில தாத்தாக்கள் உட்கார்ந்து, களிமண், தண்ணீர், சுடு சிற்பங்கள், பானைகள் என்று செய்கின்றனர்.

தோட்டத்து பெஞ்சில் உட்கார்ந்து, விடைத்தாளை திருத்திக் கொண்டிருந்தனர், இருவர்.

எல்லார் முகங்களிலும் ஆர்வம், திருப்தி, மகிழ்ச்சி, பெருமிதம்!

மீராவின் குரல் கேட்டது.

''என்ன பார்வதிம்மா... இன்னுமா ஓவியத்தை வரைஞ்சு முடிக்கலே... இது, உலக அளவிலான ஓவியப் போட்டிம்மா... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு... கொஞ்சம் வேகமா வரைங்க... ஓ.கே.,யா?''

''சின்னுா தாத்தா... கவனிச்சீங்களா... இன்னிக்கு பொங்கல்ல, நீங்க சொன்ன மாதிரி, பெருங்காயமும், பச்சை மிளகாயும் போட்டோம்; செம ருசி. அதே போல, தக்காளி தொக்குல, வெந்தயப்பொடி சேர்த்தோம். அதுவும், 'செம ஹிட்!' இந்த வாரம், உங்க ஹோட்டல்ல போட்டீங்களே பொட்டுக்கடலை வடை, நீங்க அதை செய்யப் போறீங்க... 'கஸ்துாரிபா சேனல்'ல முதல் வீடியோ அது தான்.''

''வேலத்தாயம்மா... உங்க ஏலச்சி கிராமத்து விளையாட்டுன்னு பத்தாங்கல், ஆடு தாண்டி, கிளி கொக்கு எல்லாத்தையும் இன்னிக்கு ஆடப்போறோம்... நீங்க தான், விளையாட்டு டீச்சர்... சாயங்காலம், 4:00 மணிக்கு, 'டீம்' பிரித்து விளையாடறோம்... ஓ.கே.,?''

எல்லாரும் சிரித்து, தலையாட்டி, சம்மதம் கூறினர். ஆர்வம் தெறிக்க, தங்களுக்குள் பேசி திட்டம் வகுக்க ஆரம்பித்தனர்.

சட்டென, என்னைப் பார்த்து விட்டாள், மீரா.

விரைந்து, என் கரங்களைப் பற்றி படபடத்து, ''நீங்க, சுபாக்கா தானே... வாங்க, எப்படிக்கா இருக்கீங்க?'' என்றாள்.

அவள் முகம் மலர்ந்து, குளத்தில் புதிய தாமரை போல ஒளிர்ந்தது.

சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்தன.

அவள் விரல்களை வருடியபடியே, ''மாற்றங்கள் எப்போதும் கடினமானவை தான். ஆனால், இந்த மாற்றங்கள் என்னால் நம்பவே முடியவில்லை, பெண்ணே...

''விரக்தியின் எல்லையில் இருந்தவர்கள்... மரணத்தை எதிர்பார்த்து ரயில் பயணி போல காத்துக் கொண்டிருந்தவர்கள்... ஆனால், இப்போது ஊஞ்சலாடும் மஞ்சள் குருவிகள் போல... எப்படிம்மா மீரா, இது நடந்தது?'' என்றாள்.

அவள் வெட்கத்துடன் புன்னகைத்தபடி, ''ஆமாம் அக்கா... உண்மையில் இது அழகான விஷயம் தான். நீங்கள் சொன்னது போல, அடிபட்ட பறவைகளாகத்தான் இருந்தனர்.

''நல்ல உணவு, இருக்க இடம், உடுக்க நல்ல துணிமணிகள் என்று கிடைத்தாலும் நம்மை எல்லாரும் ஒதுக்கி விட்டனர், நம்மால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதே, இவர்களின் துக்கமாக இருந்தது. வாழ்வின் அழகான விஷயம், அன்பு. ஆனால், முக்கியமான விஷயம் அங்கீகாரம் இல்லையா, அக்கா...

''தனி மனிதன், தன் மேல் மரியாதை வைத்து வாழ்கிறான். தன் செயல்களால் திருப்தி கொள்கிறான். அதுதான் அவன் வாழ்வின் நோக்கத்தை ஈடு செய்கிறது. கசங்கிய காகிதம் போல, அவன் தன்னைத் தானே, என்று துாக்கி எறிகிறானோ, அன்றே அவன் மரணம் அடைகிறான். இவர்கள் அப்படித்தான் இருந்தனர்,'' என்றாள்.

கண்ணிமைக்காமல் கவனித்தேன்.

''நோக்கம், பொறுப்பு, குறிக்கோள் என்ற பண்புகளே, இவர்களை மீட்டெடுக்கும் என்று நினைத்தேன். யார் யார் எதில் எதில் திறமையானவர்கள் என்று தெரிந்து கொண்டேன்.

''ஸ்கூல் வாத்தியார், ஹெட் மிஸ்ட்ரஸ், சமையல் கலைஞர், தோட்ட ஆர்வலர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் என்று, சமுதாயத்திற்கு தேவையான எல்லா மனிதர்களும் இங்கே இருக்கின்றனர்.

''சிறு சிறு சவால்கள், பொறுப்புகள் கொடுத்திருக்கிறேன். ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். மென்மையான உடலில் உள்ள வலிமையான மனம், இப்போது இருக்கிறது அவர்களிடம்... சரியா, அக்கா?'' என, முடித்தாள்.

''மிகச் சரி, மீரா... ஒவ்வொரு மனிதனும், அவனுக்கான தனி சொத்து. இதில், அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. இவர்கள் இப்போது உரிமையுடனும், உற்சாகத்துடனும் வாழ்கின்றனர். உன் பொன்மனமே இதை சாதிக்கிறது கண்ணே,'' என்று, அவளை அணைத்துக் கொண்டேன்.

வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us