PUBLISHED ON : மே 06, 2018

வேலுடன் காட்சி தரும் முருகனை தான், பெரும்பாலும் தரிசித்திருப்போம். ஆனால், பெரம்பலுார் மாவட்டம் அருகிலுள்ள செட்டிகுளம் முருகன் கோவிலில், குடுமி வைத்து, கரும்பு ஏந்திய நிலையில் காட்சி தருகிறார், முருகப்பெருமான்.
வணிகர் ஒருவர், வழிப்பயணத்தின் போது, கள்வர் பயம் காரணமாக, அடர்ந்திருந்த அரச மரத்தில் ஏறி, கிளை ஒன்றில் படுத்து ஓய்வெடுத்தவர், களைப்பில் உறங்கி விட்டார். ஏதோ சத்தம் கேட்டு விழித்த போது, நள்ளிரவாகி இருந்தது. அப்போது ஓரிடத்தில் மட்டும் ஒளி தெரிந்தது. அங்கு, தேவர்கள் போல் தோற்றமளித்த சிலர், சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி இருந்தனர். சற்று நேரத்தில் அந்த காட்சி மறைய, சிவலிங்கம் மட்டும் அங்கே இருந்தது.
உடனே, இத்தகவலை, மன்னர் பராந்தகசோழனிடம் தெரிவித்தார், வணிகர். அச்சமயத்தில், அங்கு விருந்தினராக வந்திருந்தார், குலசேகரபாண்டிய மன்னர். இருவரும் அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, கையில் கரும்புடன் வந்த முதியவர் ஒருவர், அவர்களிடம் சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டினார். பின், அருகிலிருந்த குன்றின் மீது ஏறி, கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார்.
தான் விருந்தாளியாக வந்தபோது, தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகரபாண்டியன், அந்த மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோவில் எழுப்பினான்.
இந்த மலைக் கோவிலில், 240 படிகள் உள்ளது; முருகனின் தலையில் குடுமியும், உற்சவர் கையில் கரும்பும் இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு நிறைந்திருக்கும். அதுபோல, பார்ப்பதற்கு கரடு முரடாக தோற்றமளித்தாலும், நற்குணம் எனும் இனிய சாற்றை மனிதன் கொண்டிருக்க வேண்டுமென்பதை, கரும்பைக் கையில் வைத்திருப்பதன் மூலம் உணர்த்துகிறார், இறைவன்.
மலைக்கு நேரே, ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. சித்திரை மாதப் பிறப்பன்று, படிபூஜை நடக்கும்.
ஒருமுறை பொதிகை மலைக்கு அகத்தியர் சென்ற போது, வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார், முருகன். இதனால், இந்த ஊர், செட்டிகுளம் எனப்பட்டது.
குழந்தை இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத்தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து, கோவிலை வலம் வருகின்றனர்.
திருச்சி - பெரம்பலுார் சாலையில், 44 கி.மீ., துாரத்தில், உள்ளது, ஆலத்துார். இங்கிருந்து பிரியும் சாலையில், 8 கி.மீ., சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். சென்னையில் இருந்து வருவோர், பெரம்பலுார் தாண்டி திருச்சி சாலையில், 15 கி.மீ., கடந்தால், ஆலத்துாரை அடையலாம். இவ்வூரில் இருந்து, 13 கி.மீ., துாரத்தில், புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது.
வார நாட்களில், காலை, 8:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும்; மாலை, 4:00 - இரவு, 7:00 மணி வரையும், வெள்ளி, கிருத்திகை நாட்களில், காலை, 8:00 முதல், இரவு, 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
- தி.செல்லப்பா
