தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படியும் கொண்டாடலாம்!

முதியோர் இல்லத்தில், 'மகளிர் தினம்' கொண்டாடவிருப்பதாக கூறி, என்னை அழைத்திருந்தாள், தோழி. அங்கு, முதியோருக்கு பல போட்டிகள் வைத்திருந்தனர். அவர்களுடன் கலந்து, விளையாடியது ஆனந்தமாக இருந்தது.

கவலைகளை மறந்து, சிறு பிள்ளைகளை போல, தாத்தா - பாட்டிகள் விளையாடியது, மகளிர் தினம் கொண்டாடிய எங்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியை தந்தது.

விழாக்கள் மட்டுமின்றி, குடும்ப நிகழ்வுகள் மற்றும் பல சிறப்பு தினங்களை, இதுபோன்ற இல்லங்களில் கொண்டாடி, நாமும் மகிழ்ந்து, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி, மகிழ வைப்பதும் ஒரு சேவை என்பதை உணர்ந்தேன்.

பெ.சுலோசனா தெய்வேந்திரன், நெய்வேலி.

அனைவரும் தெரிந்து கொள்ளலாமே...

சமீபத்தில், ஒரு திருமணத்தில் பங்கேற்க, சில மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று விட்டேன். திருமண வீட்டாரின் முக்கிய பொறுப்பாளர்கள், மணவறை அமைக்கும் ஊழியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் அனைவரையும் வரவழைத்த மண்டப நிர்வாகி, தீயணைப்பு கருவிகள் இயக்கும் விதம், அவசர நேரத்தில் கவனமாக நடந்துகொள்ளும் முறைகள் பற்றி விளக்கமாக சொன்னதுடன், அச்சமயத்தில், பதற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதை விளக்கி கொண்டிருந்தார்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது, 'ஒரு நல்ல விஷயம் நடைபெற இருக்கையில், யாராவது ஒருவரது கவனக்குறைவால் மின்சாரம் மற்றும் காஸ் சிலிண்டர் கசிவால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்நேரத்தில், மண்டபத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கோ, விசேஷ வீட்டினருக்கோ இதன் நடைமுறை, செயல்படுத்தும் விதம் தெரிந்திருந்தால், விபரீதத்தை தடுப்பதுடன், நஷ்டத்தையும் தடுத்து விடலாமே... அதற்காக தான், இந்த முன்னெச்சரிக்கை மீட்டிங்...' என்றார்.

அவரது அணுகுமுறையை பாராட்டினேன். இந்த மீட்டிங்கை அனைத்து தொழில் நிறுவனங்களும், கம்பெனி மற்றும் ஜவுளி நிறுவனங்களும் அடிக்கடி நடத்தினால், தீ விபத்து அறவே ஏற்படாமல் தடுக்கலாமே!

— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

முன் ஜாக்கிரதை முத்தழகி!

நான், அரசு ஊழியை; எங்கள் அலுவலகத்தில், 50 பேர் பணியாற்றுகிறோம். மகளிரை தவிர்த்து, மீதியுள்ள ஆண்களில் பெரும்பாலோனோர், உ.பா., பிரியர்கள். அலுவலக நேரத்தில், நைசாக கட்டிங்கோ, குவார்ட்டரோ அடித்து விட்டு வரும் பேர்வழிகள். கூடுதல் வருவாய் எதுவும் வசூலாகாத தருணங்களில், உடன் பணியாற்றும் மகளிரிடம், 100 - 200 ரூபாய், கைமாற்றாக வாங்கி, உ.பா., அருந்துவது வழக்கம்.

முகத்தை துாக்கி வைத்து, நாலு திட்டு திட்டி தரும் மகளிர் அணியினர், வருவாய் கிடைக்கும் நேரத்தில், கறாராக பணத்தை வசூலித்து விடுவர்.

சமீபத்தில், மதுரையிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார், ஒரு பெண்மணி; அவர், இதுபோன்று, கைமாற்றாக கொடுக்கும் பணத்தை திருப்பி கேட்க மாட்டார்; கொடுத்தாலும், 'பரவாயில்லை இருக்கட்டும்...' என்று வாங்க மறுத்து விடுவார்.

அவரது இந்நடவடிக்கை வித்தியாசமாக இருக்கவே, அவரிடம், 'ஏன் கொடுத்த காசை திரும்ப வாங்க மாட்டேங்குறீங்க...' என்று கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில், என்னை பிரமிக்க வைத்தது:

'இந்த ஆபீஸ்ல வேலை பாக்கற ஒவ்வொருவருக்கும், 100 - 200 ரூபான்னு ஒரு மதிப்பு போட்டு வெச்சிருக்கேன். அவங்க வந்து கேட்கும்போது, அவங்களுக்கு உண்டானத கொடுத்திடுவேன். அந்த ரூபாய திருப்பி வாங்கிட்டோம்ன்னா, அடிக்கடி வந்து, பணம் கேட்டு இம்சை பண்ணிட்டே இருப்பாங்க. நான் வேண்டாம்ன்னு மறுத்திட்டா, திரும்பவும் என்கிட்ட வந்து கேட்க, கூச்சமா இருக்கும்; மனசாட்சி உறுத்தும்; அதான்...' என்றார்.

அட... என்னே ஒரு முன் ஜாக்கிரதை... பெண்களை பொருளாதாரப் புலிகள் என்று சும்மாவா சொன்னார்கள்!

- எஸ்.மங்கையர்கரசி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us