PUBLISHED ON : மே 06, 2018

ஊமையன் கோட்டை படத்தில் நடித்து, அது நின்று போனதால், தன், மாலையிட்ட மங்கை படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பளித்தார், கண்ணதாசன்.
ஆனால், அதிலொரு சிக்கல் வந்தது; கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு பிரபல நடிகையரை பேசி முடித்து விட்டதால், மனோரமாவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு புதிய கதாபாத்திரத்தை படத்தில் சேர்த்தார், கவிஞர்.
அது,'காமெடி' நடிகை கதாபாத்திரம்!
மனோரமாவிற்கு இது வருத்தமாகத்தான் இருந்தது; காமெடியாக நடித்து பழக்கம் இல்லாததால், நடிப்பதற்கு பயந்தார்.
ஆனால், கவிஞரோ, 'எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை உனக்கு உண்டு; தைரியமாக நடி...' என்றார். எனவே, அரைகுறை மனதோடு சம்மதித்தார் மனோரமா.
இதுவே, மனோரமாவின் முதல் திரைப்பட பிரவேசமாக அமைந்தது.
சிரிப்பு நடிகையாக நடித்து பழக்கமில்லாத மனோரமாவை, துணிந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த கவிஞர், உண்மையிலேயே தீர்க்கதரிசி தான். ஏனென்றால், கடைசி வரை சிரிப்பு நடிகையாகவே, திரை உலகில் ஜொலித்தார், மனோரமா.
ஒருவேளை, கதாநாயகியாக திரை உலகில் காலடி எடுத்து வைத்திருந்தால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தோடு, அவரது திரைப்பட வாழ்க்கை முடிவுற்றிருக்கும்.
ஏனென்றால், கதாநாயகிகளால் குறிப்பிட்ட காலம் வரை தான், திரை உலகில் நிலைத்து நிற்க முடியும். அதன்பின், அவர்கள் விரும்பினாலும், திரை உலகம் அவர்களை நிராகரித்து விடும்; அந்த இடத்திற்கு புதியவர் வந்து விடுவார். இதுதான், திரை உலகின் நியதி!
மனோரமாவும் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தால், நிச்சயமாக, அவரால் தொடர்ந்து திரை உலகில் நின்றிருக்கவே முடியாது. ஆனால், நகைச்சுவை நடிகையாக அறிமுகமானதால், தன் கடைசி காலம் வரை அவர் திரை உலகில் ஆட்சி செலுத்தினார். ஏனெனில், காமெடிக்கு வயது வரைமுறையே கிடையாது.
அதனால், நகைச்சுவை நடிகையாக இருந்ததற்காக, மனோரமா மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தார் என்பதே உண்மை. இதை பலமுறை அவர் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
மாலையிட்ட மங்கை படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரை மனோரமாவிற்கு 'திக்... திக்'கென்று மனம், அடித்துக் கொண்டுதான் இருந்தது. எங்கே பாதியிலேயே படம் நின்று விடுமோ என்ற பயம் தான் அதற்குக் காரணம்!
நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை; தமிழகம் முழுவதும், மாலையிட்ட மங்கை படம் திரையிடப்பட்டது.
அப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று, சென்னை பாரகன் தியேட்டருக்கு மனோரமாவும், அவரது அம்மாவும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, டிக்கெட் வாங்கி படம் பார்த்தனர்.
அப்போது, மனோரமா சென்னையில் பிரபலமாகவில்லை என்பதால், மக்களோடு இரண்டற கலந்து படம் பார்ப்பதில் சிக்கல் இருக்கவில்லை.
வெண் திரையில் தன் உருவத்தை முதன் முதலாக பார்த்த மனோரமாவிற்கு சந்தோஷத்தில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் அம்மாவோ, சந்தோஷத்தில் கேவிக் கேவி அழுதபடி இருந்தார்.
திரை உலகம் என்பது எட்டாத உயரத்தில் இருப்பது. அதில், தனக்கு ஓர் இடம் கிடைத்து விட்டது என்பதை நினைத்து, மகிழ்ச்சியில் வந்த கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை.
திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தபோதும், நாடகத்தில் நடிப்பதை அவர் முழுமையாக விலக்கி விடவில்லை. தன் திரை உலக பயணத்தின் துவக்கம் நாடகம் என்பதால், அதிலும் நடித்துக்கொண்டே தான் இருந்தார். அப்படி நடித்த நாடகங்களில் ஒன்று, அண்ணாதுரையுடன் நடித்தது!
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் எனும் நாடகத்தை எழுதி, அதில், காசுப்பட்டர் என்ற வேடத்தில் நடித்தார், அண்ணாதுரை. இந்நாடகத்தின் கதாநாயகியாக, இந்துமதி என்ற பாத்திரத்தில் நடித்தார், மனோரமா.
சிவாஜி வேடத்தில், ஈ.வெ.கி.சம்பத்தும், சந்திரமோகன் வேடத்தில், பிரபல நடிகர் கே.ஆர்.ராமசாமியும் நடித்தனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்ததையும், இந்நாடகத்தில், ஆச்சியின் நடிப்பை, அண்ணாதுரை பாராட்டியதையும் தன் வாழ்நாளின் பெருமையான தருணங்களாக குறிப்பிட்டு மகிழ்வார், மனோரமா.
முரசொலி சொர்ணம், விடை கொடு தாயே என்றொரு நாடகத்தை எழுதினார். அந்நாடகத்தில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தவர், மனோரமா தான்.
அண்ணாதுரையின் தலைமையில் இந்நாடகம் பலமுறை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் மனோரமாவின் நடிப்பை, புகழ்ந்து தள்ளினார், அண்ணாதுரை.
'அண்ணாதுரை எவ்வளவு பெரிய அறிஞர்... தலைவர்... அவர் வாயால் பாராட்டு கிடைத்தது என்றால், அது தேசிய விருதுக்கு ஒப்பானது...' என்று கூறி உற்சாகத்தில் திளைத்தது உண்டு.
ஒருசமயம், சென்னை, ஒற்றை வாடை தியேட்டரில் இந்நாடகம் நடைபெற இருந்தது. ஆனால், அச்சமயம், படப்பிடிப்பு இருந்ததால், மனோரமாவால் நாடகத்தில் நடிக்க இயலாமல் போய் விட்டது. அதனால், வேறொரு பெண்மணியை கதாநாயகியாக நடிக்க வைத்தனர், நாடக குழுவினர். அண்ணாதுரை தலைமையில் தான், நாடகம் நடந்தது. வழக்கம்போல, அன்றும் நாடகத்தை வெகுவாக பாராட்டி பேசினார் அண்ணாதுரை. பின், வீட்டிற்கு செல்லும்போது முரசொலி சொர்ணத்தை அழைத்து, 'நாளை என்னை வீட்டில் வந்து பார்; மறந்து விடாதே...' என்று சொன்னார்.
எதற்காக அண்ணாதுரை, தன்னை வீட்டிற்கு வரச்சொன்னார் என்று குழம்பித் தவித்த சொர்ணம், மறுநாள், அண்ணாதுரையின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்தித்த போது, 'நாடகத்தினால் தான் நடிகர், நடிகையருக்கு பெருமை என்று நினைத்தேன்; ஆனால், நேற்று நாடகம் பார்த்த பின், நடிகர், நடிகையரால் தான், ஒரு நாடகம் பெருமையடைகிறது என்ற உண்மையை புரிந்து கொண்டேன். இனிமேல் மனோரமா நடிக்கவில்லை என்றால், இந்நாடகத்தை நிறுத்திவிடு; தொடர்ந்து போட வேண்டாம்...' என்றார் அண்ணாதுரை.
பின், ஒரு சந்தர்ப்பத்தில் மனோரமாவை சந்தித்த போது, இந்த விஷயத்தை கூறினார், சொர்ணம். இதைக் கேட்டதும், நோபல் பரிசை பெற்றது போல் சந்தோஷம் அடைந்தார், மனோரமா.
அண்ணாதுரை மட்டுமல்லாமல், கருணாநிதியுடனும் இணைந்து நடித்த நிகழ்வுகளும் உண்டு.
முரசொலி சொர்ணத்தின், விடை கொடு தாயே நாடகம், ஒருமுறை, கல்லல் என்ற ஊரில் நடைபெற்றது. அதற்கு, தலைமை வகித்தார், கருணாநிதி. நாடகத்தை கண்டுகளித்த அவர், மனோரமாவின் நடிப்பை பார்த்து நிறைவடைந்தார்.
நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிலர், 'கதாநாயகியாக நடிக்கிற பொண்ணு நம்ம மாவட்டத்தை சேர்ந்தது; ரொம்ப நல்லா நடிக்குது...' என்று பெருமையாக பேசிக் கொண்டனர். அதை, கருணாநிதியும் கேட்டிருக்கிறார்.
கடைசியாக அவர் உரை நிகழ்த்தியபோது, 'கதாநாயகியாக நடித்த மனோரமாவின் முன்னோர், எங்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அவரது நடிப்பாற்றலை கண்டு உண்மையிலேயே வியந்து போனேன்...' என்று வெகுவாக புகழ்ந்து பேசினார்.
அண்ணாதுரை, கருணாநிதி என்று இரு பெரும் தலைவர்களால் பாராட்டு கிடைக்கப்பெற்றதை, தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக நினைத்தார், மனோரமா.
உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார், கருணாநிதி. இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் கருணாநிதி. இதில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு கிடைத்தது.
இந்நாடக அரங்கேற்றம், தேவகோட்டையில், தி.மு.க., மாநாட்டில் நடைபெற இருந்தது. ஆனால்...
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில் குமார்
