PUBLISHED ON : மே 06, 2018

டாக்டர் முன் அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா; உடன் நான்!
'உங்க ரொட்டீன் வேலை என்ன?' -என்று கேட்டார், டாக்டர்.
'காலையில ஆபீஸ்; மாலையில் வீடு...' என்றார், லென்ஸ் மாமா. டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.
நான் சொன்னேன்... 'டாக்டர்... காலையில், ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய மாடிப்படி ஏறுவது ஒன்று தான் அவரின் உடற்பயிற்சி. போட்டோ எடுக்கும் அசைன்மென்டுகளும், இப்போ, எங்க ஆசிரியர் அதிகமாக இவருக்கு கொடுக்கிறதில்ல. அதனால், ஓடி, ஆடி வேலை செய்றதில்ல. இது தவிர வெண்குழல் வத்தியும், உ.பா., பழக்கமும் உண்டு...' என்றேன்.
ரத்த பரிசோதனை செய்த டாக்டர், 'உங்களுக்கு கொழுப்பு அதிகமா போச்சு; டெய்லி முக்கால் மணி நேரம் வேகமா நடந்து, உடற்பயிற்சி செய்யணும்... வெண்குழல் வத்திய சுத்தமா விட்டுடணும்; டெய்லி, ரெண்டு, 'பெக்' உ.பா.,ன்னா குத்தம் இல்ல...' என்று கூறி விட்டார்.
லென்ஸ் மாமாவுக்கு, உயிர் மீது பயம் வந்து விட்டது. தினமும் மாலையில், கடற்கரை கலங்கரை விளக்கம் துவங்கி, பாரதியார் சிலை வரை, இரண்டு முறை சுற்றி, புறப்பட்ட இடத்தை மீண்டும் அடைகிறார். இது, 6.2 கி.மீ., துாரம்; இதற்காக, 55 நிமிடம் எடுத்துக் கொள்கிறார்.
மாமாவுக்குத் தான் கொழுப்பு ஏறிவிட்டது; எனக்கென்ன? உடன் நானும் வரவேண்டுமென,'நச்சு' பண்ணி, என்னையும் உடன் அழைத்து செல்கிறார். முதல் இரண்டு நாள் அலுப்பாக இருந்தாலும், கடற்கரையில் உள் சாலையில் நடக்கும் காட்சிகள் ஆர்வம் கொள்ள செய்தன.
சாலையில், கடற்கரை மணலையும், சாலையையும் பிரிக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் கற்களில் குறிப்பிட்ட இடங்களை பட்டா போட்டு வைத்துக் கொள்கின்றனர், சில ஜோடிகள்.
கல்லுாரி மாணவியர் துவங்கி, பணிக்கு செல்லும் பெண்கள், பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியர் வரை தத்தமது காதலர்களுடன், 'டாண்' என, குறிப்பிட்ட நேரத்தில் பைக்கில் வந்து இறங்குகின்றனர்; பைக்கை மறைவிடமாக கொண்டு விதவிதமான, வசதியான போஸ்களில் அமர்ந்து ஒருவரையொருவர் தழுவியபடி மெய் மறக்கின்றனர்.
ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் என்றால், சரியாக ஏழரை மணிக்கு, 'ஜூட்' விடுகின்றனர்... எட்டு மணிக்குள் ஹாஸ்டல் செல்ல வேண்டுமல்லவா... திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் பெண்கள், தத்தமது வீட்டை எட்டு மணிக்குள் அடைய, ஏழே முக்கால் மணிக்கு கிளம்பி விடுகின்றனர்.
இதில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் சிறுமியர் தனியே வருவதில்லை; தம் தோழி ஒருவரையும் உடன் அழைத்து வந்து, துணைக்கு வைத்து, தம் காதலருடன் அடித்து பிடித்து விளையாடுகின்றனர்.
தொடர்ந்து அதே நேரத்திற்கு, 'வாக்கிங்' செல்வதால், எங்களை அடையாளம் கண்டு, புன்முறுவல் பூத்து தோழமையாக, 'ரெக்ககனைஸ்' செய்கின்றனர், சில ஜோடிகள்.
அங்கு, போலீஸ் அவுட் போஸ்ட் ஒன்றும் உள்ளது. இங்கு, போலீஸ்காரர் ஒருவரும், லத்தியை சுழற்றும் இரண்டு காவலர்களும் உண்டு. இவர்களின் கண்கள் கழுகுப் பார்வை கொண்டவை. இவர்களையும் தொடர்ந்து கவனித்து வந்தேன். இளம் ஜோடிகள் பக்கம் இவர்கள் செல்வதே கிடையாது; மத்திய தர வயதுடைய ஜோடிகளையே குறி வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஜோடிகளை அணுகி, இருவரையும் தனித்தனியே பிரித்து, பெண்ணிடம், 'அவர் உன் கணவரா, பெயர் என்ன... முகவரி என்ன...' போன்ற கேள்விகளை கேட்கின்றனர். இதே போன்ற கேள்விகள் ஆணிடமும் கேட்கப்படுகின்றன.
அவர்கள் இருவரும் நிஜமான ஜோடி கிடையாது; அவரது மனைவி வீட்டிலிருப்பார்; இவரது கணவர் வேலைக்குப் போயிருப்பார். இவர்கள் இருவருக்கும், 'இல்லீகல்' தொடர்பு; இப்படி மாட்டிக் கொள்வோம் என்பது தெரியாததால், முன் கூட்டியே இருவரும் கலந்து பேசி, தகுந்த பதிலை தயாராக வைத்திருக்க மாட்டார்கள். போலீஸ்காரர் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான பதில் சொல்லி மாட்டிக் கொள்வர்.
இது, போலீஸ்காரர்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து கிடைத்தது போன்ற குஷியை ஏற்படுத்தி விடும். சிக்கியவர் பையிலிருக்கும் ஐம்பது பைசாவைக் கூட விட்டு வைக்காமல் வழித்து, துடைத்து எடுத்து, அனுப்பி விடுவர்.
ஒரு நாளைக்கு ஒரு ஜோடி என்ற விகிதத்தில் தான் பிடிக்கின்றனர். ஒரே நாளில் பல ஜோடிகளையும் பிடித்தால், 'இந்த இடம் டேஞ்சரானது; இனி இங்கே வரக்கூடாது...' என முடிவு செய்து, அங்கே ஜோடிகள் வருவது நின்று விடும் அல்லவா... அதனால் தான் ஒரு நாளைக்கு ஒரு ஜோடி; பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில், கழுத்தை அறுத்துக் கொன்று விடுவரா என்ன!
எது, எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நீங்கள் எந்த ஊரில் வசித்தாலும் சரி, உங்களது வயதுக்கு வந்த மகள், தங்கை, மாலை வேளையில், கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன், பாட்டு கிளாஸ், பரத கிளாஸ் போன்றவற்றுக்கு செல்லும்போது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்களேன்... காரணம், வீட்டின் கூடத்திற்கே டெலிவிஷன் அரக்கன் வந்து விட்ட காலமல்லவா!
வெள்ளாட்டை ஆங்கிலத்தில் எப்படி சொல்வோம் என்று கேட்டால், இரண்டாம் வகுப்புபடிக்கும் குழந்தை கூட, 'கோட்' என்று சொல்லும். செம்மறி ஆட்டை ஆங்கிலத்தில், 'ஷீப்' என்று சொல்வோம்.
ஆனால், நம் ஜனங்கள் குறிப்பாக, தென்னாற்காடுகாரர்கள், ஆட்டை, ஆங்கிலத்தில் எப்படி நினைத்துள்ளனர் என்பதைக் கூற, இந்த துணுக்கை எழுதுகிறேன்...
இங்கே இடைச்செருகல் ஒன்று... வேர்க்கடலையை, மல்லாட்டை என்று அழைப்பர், தென்னாற்காடு ஆசாமிகள். முதன் முறையாக இச்சொல்லை கேட்ட போது அரண்டு விட்டேன். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்ட போது, மணிலா கொட்டையை தான் இப்படிக் கூறுகின்றனர் என்பது புரிந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து, அந்த குறிப்பிட்ட ரக வேர்க்கடலை வந்ததால் இப்பெயர்.
இதைப் போல, மரவள்ளிக்கிழங்கை கப்பா என்பர், மலையாளிகள். இதுவும் காரணப் பெயரே! ஏதோ ஒரு மகாராஜாவின் ஆட்சியில் சேர நாடு இருந்த போது, உணவு பஞ்சம் ஏற்பட்டதாம். அப்போது, ஏதோ ஒரு கிழக்கு ஆசிய நாட்டில் இருந்து, மரவள்ளிக்கிழங்கை, கப்பல் மூலம் இறக்குமதி செய்தாராம், அரசர்.
கப்பலில் வந்த கிழங்கு ஆதலால், மரவள்ளிக் கிழங்கு, மலையாளிகளுக்கு கப்பா ஆயிற்று.
கம்மிங் பேக் டு தி பாயின்ட்... பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள ஆரோவில் கிராமத்தைப் பற்றி டாக்குமென்ட்ரி படம் எடுக்க, பாண்டிச்சேரி வந்திருக்கிறார், வெள்ளைக்காரர் ஒருவர். அங்கே, ஒரு மெட்டடார் வேனை வாடகைக்கு அமர்த்தி, டிரைவரிடம், 'விலை மதிப்பு மிக்க படப்பிடிப்பு கேமராக்கள் உள்ளன; அவற்றை பிடித்துக் கொள்ள உதவியாளர் யாரும் இல்லை. எனவே, அலுங்காமல், குலுங்காமல், சடன் பிரேக் போடாமல் வண்டியை செலுத்து...' என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
பலமாக தலையாட்டி, 'எஸ் சார்.. எஸ் சார்...' என்று கூறி, வண்டியை சீரான வேகத்திலேயே செலுத்தி இருக்கிறார், டிரைவர்.
வண்டி, 10- - 20 கி.மீ., துாரம் சென்று இருக்கும்... சடன் பிரேக் போட்டார் டிரைவர்; அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர், 'வாட் ஹேப்பண்ட்...' என, பதறி இருக்கிறார்.
அதிர்ந்து போன குரலில் டிரைவர், 'மட்டன் ஜம்பிங் சார்...' எனக் கூவவும், வெளியே எட்டிப் பார்த்திருக்கிறார் வெள்ளைக்காரர்...
அங்கே, எது துள்ளி குதித்து ஓடியிருக்கும் என, நீங்கள் அனுமானித்து விட்டீர்கள் தானே!
இந்த ஜோக்கை நண்பர் ஒருவர் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
ஆட்டுக்கு, ஆங்கிலத்தில், 'மட்டன்' என, தென்னாற்காடுகாரர் நினைத்ததால், நடந்த விபரீதம் இது. ஆட்டைக் கொன்ற பிறகுதான், அந்த பெயர் என்பது தெரிந்திருக்கவில்லை.
