PUBLISHED ON : மே 06, 2018

கே.லலிதா, கோவை:என் தோழி ஒருத்தி எப்போதும், 'லொட லொட' என, பேசிக் கொண்டிருக்கிறாளே...
இப்படி, 'லொட லொட'க்கும் நாக்கு, எப்போதும் சிக்கலில் தள்ளி விடும். கால பலம் மற்றும் இடமறிந்து பேசப்படும் சொல்லே புகழ் மற்றும் வெற்றியை தரும்.
* டி.ராஜேந்திரன், மதுரை: என்னைச் சுற்றி எப்போதும், ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே...
இயற்கை, பொறுமை, காலம் இவை மூன்றும் சிறந்த மருந்துகள்; பொறுமையுடன் இருங்கள்... பிரச்னைகள் பறந்து போகும்; பின், பிரச்னை கொடுத்தவர்கள், தானே பிரச்னையில் சிக்கிக் கொள்வர்!
சி.பத்மா, காஞ்சிபுரம்: இந்திய நர்சுகளுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பாமே!
உண்மை தான்! பயிற்சி பெற்ற நர்சுகளை, அமெரிக்க வேலைக்கு தயார் செய்யும் மையங்கள் பல சென்னையில் தோன்றியுள்ளன. வேலை கிடைத்து விட்டால் நல்ல சம்பளம்... உழைப்புக்கும், தகுதிக்கும் ஏற்றபடி இரண்டு லட்சம் முதல், ஐந்து லட்சம் வரை மாத ஊதியம் கிடைக்கிறதாம்!
வி.ராஜு, புதுச்சேரி: சேலை, தாவணி, சுடிதார், மிடி, ஜீன்ஸ், சல்வார் - எது பெண்களுக்கு அழகு?
எது அணிந்தாலும் அழகு தான்... காரணம், அவர்கள் உடல்வாகு! ஆனாலும், அந்தந்த வயதிற்குரிய உடையை பெண்கள் தெரிவு செய்து அணிந்தார்களானால் இன்னும் சிறப்பு!
* எம்.சந்தோஷ்குமாரி, கோவை: பிரச்னைகளை அசை போட்டபடியே இருக்கிறது, என் மனம். எப்படி வெளிவருவது?
உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தினால், திசை திரும்பி விடும், மனம். வருத்தம், கவலைகளுக்கும், இதையே பின்பற்றுங்கள்; மனம் லேசாகி விடும்.
ஜி.பரத், திருப்பூர்:அதிர்ஷ்டம் அடிக்க என்ன செய்ய வேண்டும்?
அது, ஓடிக்கொண்டே அல்லவா இருக்கும்... சுறுசுறுப்பாக கடமையாற்றும் ஒவ்வொருவனையும் துரத்திக் கொண்டே இருக்குமே!
வி.சுந்தரம், திருவள்ளூர்: படித்த பெண்களை விட, படிக்காத பெண்களை மணமுடித்தால் நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம் என்கின்றனரே... உங்கள் பதில் என்ன?
இது, முற்றிலும் தவறான கருத்து; இரு தரப்பிலும், 'பைட்டர் காக்ஸ்' இருக்கத் தான் செய்கின்றனர். 'லகான் பிடித்திருப்பவனைப் பொறுத்து நடந்து கொள்ளும் குதிரை' என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அன்பான, ஆதரவான மனைவியைப் புரிந்து கொண்டு நடக்கும் கணவனுக்கு, படித்த பெண், படிக்காத பெண் இருவருக்கும் வேறுபாடு இருக்காது.
