தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டூப்!

டூப்!

டூப்!


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிய நேரத்தில் மாமரத்து குயில்களின் சத்தம், மனதை இம்சையாக பிசைந்தாலும், லேசாக கண் அசரத்தான் வைத்தது. லேசாய் கண்ணை இமை கவ்விய நேரத்தில், அலைபேசி கதறி, அவசரமாய் அவனை எழுப்பியது.

''என்ன கஜா, மதியானத்துல துாக்கமா?'' மறுமுனையில் நக்கலாய் கேட்டான், குரு. 'சுருக்'கென்று பதில் சொல்ல நினைத்தாலும், 'கழுக்'கென்று வந்து தொலைத்த கொட்டாவி இவனை, 'க்ளீன்' போல்டாக்கியது.

''எதுக்கு இப்ப போன் செய்தே... அதச் சொல்லு,'' என்றான் எரிச்சலாக!

''நம்ம ஷில்பா குமார், அடுத்த படத்துக்கு, ஒப்பந்தமாயிட்டாரு... அமாவாசை அன்னைக்கு பட பூஜை போட்ட விஷயம் தெரியுமா...''

''பேப்பர்ல பாத்தேன்,'' என்றான் அசுவாரஸ்யமாய்!

''பாத்தேன்னு சொன்னா எப்படி... இந்நேரம் நீ, என்னை கான்டாக்ட் பண்ணியிருக்க வேணாமா... தொழில்ல அக்கறை வேணும்யா... இப்படி ஏனோ தானோன்னு இருந்தா எப்படிய்யா முன்னேறுறது...'' அவன், தத்துவ முத்தை உதிர்த்து, சைடு வாக்கில், 'புளிச்'சென்று, பான்பராக் எச்சிலை துப்புவது நன்றாக கேட்டது.

''சினிமாக்காரன்னு சொல்றத தவிர, துணை நடிகர்களுக்கு எந்த பெருமையும் இல்ல... இதுல, ஏதோ இனிமேதான் நான் இந்த தொழில்ல பெரிய ஆளாகணும்கிற மாதிரி பேசாத... அதுவும் என்னை மாதிரி, 'டூப்' போடற நடிகர்ங்க நிலைமைய பத்தி வெளியில சொல்லிக்க வேண்டிய அவசியமில்ல; லெக்சர் குடுக்காம விஷயத்துக்கு வா...'' என்றான் கடுப்பாக!

''சரி சரி... விடு; ஷில்பா குமாரு, நேத்து எல்லாருக்கும் அவரோட வீட்ல பார்ட்டி கொடுத்தாரு... அத்தனை கூட்டத்திலும் அவர் உன்னைத்தான் விசாரிச்சாரு,'' என்று சொன்னதும், கஜாவுக்கு உடல் சிலிர்த்தது.

''மெய்யாலுமாவா சொல்ற...'' என்றான், சந்தோஷமாக!

மனசு பழைய நினைவுகளில் பயணப்பட்டது.

காட்டுமன்னார் கோவிலில், கஜேந்திரன் பள்ளிப் படிப்பை முடித்த சமயத்தில் தான், ஷில்பா குமாரின் முதல் படம் வெளியாகி, 'பி அண்ட் சி' சென்டர்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. உயரம், நிறம், சிரிப்பு என்று ஷில்பா குமாரை அப்படியே உரித்து வைத்திருப்பதாய், பார்ப்பவர்கள் எல்லாம் சொன்னபோது, சொர்க்கம் தன் முகத்தில் இருப்பது போலிருந்தது, கஜாவிற்கு!

'டேய் கஜா... இப்பல்லாம் ரெண்டு வேடத்தில் நடிக்கிறது தான் டிரெண்டா இருக்கு... நீ மட்டும், சென்னை போய் ஷில்பா குமார் கண்ணுல பட்டியானா, அவர் உன்னை வச்சு, ஒரே ஆண்டுல, பத்து டூயல் மூவிய ரிலீஸ் பண்ணிடுவாரு...' என்று எல்லாரும் அவனை உசுப்பேத்தினர்.

பக்கவாத்தியங்கள் சத்தம் அதிகமாக இருக்கும்போது, மூல வாத்தியத்தின் ஓசை மட்டுப் படுவது இயற்கை தானே... ஷில்பா குமார் சாயலில் இருப்பது தோற்ற பொலிவிற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்; ஆனால், திரையுலகில் அசல்களின் வெற்றிக்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்போது, சாயல்கள் சாதித்த சரித்திரம் இல்லையே!

உறவுகள் புடைசூழ புறப்பட்டு வந்து, மேன்ஷன்களிலும், பிளாட்பாரங்களிலும் அடிபட்டு, மிதிபட்டு, தோற்றவனாய், ஊருக்கு திரும்பும் வழிவகையும் அற்று, வெற்றியை தொட முடியாமல் தவித்து நின்றபோது தான், ஷில்பா குமாருக்கு, 'டூப்'பாக நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது.

ஷில்பா குமாருக்கும், கஜாவை ரொம்பவே பிடித்து இருந்தது. தன்னையே உரித்து வைத்திருந்த கஜாவை பயன்படுத்தி சண்டை மற்றும் சாகச காட்சிகளில், சுலபமாய் கைதட்டல் வாங்கினான், ஷில்பா குமார்.

தன் உடல்வாகை ஒத்திருந்த வேறு சில நடிகர்களுக்கும் கஜா, 'டூப்' வேடமிட்டாலும், அவன் உடலுக்கு அதிகமாய் பொருந்தி வந்தது ஷில்பா குமாரின் உடம்பு தான்.

ஷில்பா குமார் புகழேணியின் உச்சிக்கு ஏற ஏற, ஆண்டுக்கு ஓரிரு படங்கள் என குறைத்துக் கொண்டான். அவனுக்கு வேண்டுமானால் ஒரு படத்தில் கிடைக்கும், 50 கோடி ரூபாய், ஆண்டு செலவுக்கு போதுமானதாய் இருக்கும்; ஆனால், ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் கஜாவின் காலம், அப்படியே நொடித்துப் போனது.

நாடகங்கள், சின்னச் சின்ன சண்டை காட்சிகள் என்று காலத்தை தள்ளிக் கொண்டிருந்தான்.

''என்ன கஜா... நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்... பதில் சொல்லாம இருக்கீயே...'' மறுமுனையில் குருவின் சத்தம் கேட்டு, நினைவு களைந்தான்.

''சாரிப்பா, ஏதோ பழைய ஞாபகம்... சரி... ஷூட்டிங் எப்பன்னு சொல்லு?''

குரு எல்லா விபரத்தையும் சொல்லி முடிக்க, மனதில் குறித்துக் கொண்டான்.

படப்பிடிப்பு தளம் களைகட்டி இருந்தது; நடிகர்களுக்கு, அதுவும் கஜா போன்ற தொழில்முறை வாய்ப்பில்லாத நடிகர்களுக்கு, வெகுநாள் கழித்து கிடைக்கின்ற சினிமா வாய்ப்பு, தீபாவளி, பொங்கல் போன்றது.

இவனை பார்த்ததும், அரை இஞ்சுக்கு புன்னகைத்தான், ஷில்பாகுமார். அதற்கே மனம் பூரித்தது. இயக்குனரை அழைத்து, ஏதோ சொல்லி, ஷில்பாகுமார் கேரவனுக்குள் செல்ல, இயக்குனர் கை தட்டி இவனை அழைத்து, ''கஜா... குரு எல்லாத்தையும் சொன்னானா?'' என்று கேட்டார். மார்புக்கு குறுக்காய் கை கட்டி, பவ்யமாய் குனிந்தபடி நின்றான், கஜா.

''என்னாச்சுய்யா, விதியத்தவன் விட்டத்தை பாத்த மாதிரி பாத்துட்டு நிக்கற... அவன் எதுவும் உன்கிட்ட சொல்லலன்னு நினைக்கிறேன். யோவ்... நம்ம ஷில்பாஜிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல...'' என்றவர், அக்கம்பக்கம் பார்த்தவர் குரலை தாழ்த்தி,''வெளியே யாருக்கும் சொல்லிடாத... அவருக்கு, 'ஜாண்டீஸ்' அட்டாக் ஆகியிருக்கு; பெரிய அளவுல பயப்பட எதுவும் இல்லாட்டியும், 'ரிஸ்க்' எடுக்க முடியாது. அப்படியே இருந்தாலும் மார்க்கெட் இருக்கிறப்பதான்யா நாலு காசு பார்க்க முடியும்...'' என்றார்.

கஜா தலையாட்டினாலும், 'யாருக்கு மார்க்கெட் இருந்து, யார் காசு பார்த்தால் எனக்கென்ன...' என்று மனசு புலம்பியது.

''அதுல என்னன்னா, கேரக்டர்படி அவர் கொஞ்சம் உடம்பு இளைக்கணும்... அத, அவரு பாத்துக்குவாரு... வழக்கமா, 'டூப்பு' போடற நீயும் கொஞ்சம் உடம்பை பாத்துக்க. அவரு சைசுக்கு வந்தாத்தான்யா சரியா வரும். இன்னொரு பக்கம், 'க்ளோசப்'ல ஒல்லியாவும், 'லாங் ஷாட்'ல சினை பன்னி மாதிரியும் தெரிஞ்சா நல்லா இருக்காதுல்ல...''

பேச்சு வாக்கில், இயக்குனர் தன்னை, சினை பன்னி என்று சொன்னது, அவனுக்கு புரிந்தது. ஆனாலும், என்ன செய்ய... வறுமையும், வேலை இன்மையையும் உணர்ந்ததால், அமைதியாக இருந்தான்.

ஷில்பா குமாருக்கும், இவனுக்கும் ஒரே மாதிரியான உடைகள் தைக்கப்பட்டன.

ஷில்பா குமாருக்கு வயதாகி வருவதாலோ என்னவோ தன்னை நிரூபிக்க, அடிதடி நிறைந்த படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. எகிறி குதிக்கும் சண்டைகளும், துாக்கி அடித்து பந்தாடும் காட்சிகளும் படத்தில் நிறைய இருந்தன.

க்ளோசப்பில் உதைப்பதும், கை, கால்களை சுழற்றுவதுடன் ஷில்பா குமார் நிறுத்திக்கொள்ள, வில்லன்களோட கட்டிப்பிடித்து உருண்டு, அடி வாங்கி, துள்ளிக் குதித்து, கன்னம் கிழிந்து, அடிவயிற்றில் குத்து வாங்கினான், கஜா.

இவன் ஒவ்வொரு காட்சிக்கும் ஐந்தாறு, 'ஷாட்' எடுத்துக்கொள்ள, அதை, கேரவனில் இருந்து ஆப்பிள் சாப்பிட்டபடி வேடிக்கை பார்த்தான், ஷில்பா குமார்.

தினமும் இந்த, 'டூப்'பிற்கு சம்பளம் ஐந்தாயிரம் ரூபாய்; இதில், ஏஜென்ட் குருவிற்கு ஆயிரம் போக, நாலாயிரம் ரூபாய் கையில் நிற்கும். அதுவும், அடிவாங்கிய களைப்பிற்கு, பிராந்தியும், பிரியாணியும், முன்பு வாங்கிய கடன், ரூம் வாடகைக்கு போக இந்த நிமிஷம் வரை, ஒத்தக் காசு கையில் மிஞ்சியதில்லை.

அன்றும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து காத்திருந்தான், கஜா. அவனுக்கு, காட்சி இருக்குமா என்று தெரியாது என்றாலும், தவறாமல் ஸ்பாட்டில் வந்து காத்திருப்பான்.

பிலிம் சிட்டி கார்டனில், கதாநாயகியுடன் காதல் செய்து கொண்டிருந் தான், ஷில்பா குமார். காதல் சிச்சுவேஷன் படமாக்கும் போது, பெரும்பாலும், வெளியாட்களுக்கு அனுமதி தரமாட்டார்கள்.

விரும்பி செய்கிறானா, வேண்டுமென்று செய்கிறானா என்று தெரியவில்லை; நிறைய, 'டேக்' வாங்கினான், ஷில்பா குமார். கள்ளச் சிரிப்பு சிரித்தான், கேமராமேன்.

கஜாவிற்கு அலுப்பாய் இருந்தது; வெளியில் வந்து மரத்தடியில் அமர்ந்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த போது, பக்கத்தில் வந்து அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவன்,''நான் கஜா... ஜூனியர் ஆர்டிஸ்ட். பெரும்பாலும், ஷில்பா சாருக்கு, 'டூப்' போடறது நாந்தான்...'' என்றான் பெருமையாக!

வந்தவன் சிரித்தபடி,''நான் மதியழகு; பெரும்பாலும் கதையாசிரியர் நீலமேகத்துக்கு டூப்பு நான் தான்...'' என்று சொல்லி சிரிக்க, சரேலென நிமிர்ந்து பார்த்தான் கஜா.

''என்ன அப்படி பாக்குறீங்க... இங்க எதுவுமே நிஜமில்ல. சினிமாவுல சாதிக்கிற ஆசையில, கதை எழுத வந்து, மேன்ஷன்ல மூணு மாசம் வாடகை பாக்கி வச்சிருக்கிறவங்கள்ல நானும் ஒருத்தன்.

''நம்பளை முழுசா காட்டிட்டா ஜெயிச்சுரலாம்கிற முரட்டு பிடிவாதத்துல, என்னை முழுசா காட்ட, அவங்களோ, என்னோட பலவீனத்தை புரிஞ்சு, அதுல தாக்க பழகிட்டாங்க. பயமும், தயக்கமும் தான் என்னோட பலகீனம்... அதை பலப்படுத்திக்க தெரியல,'' கண்ணாடியை கழற்றி, கண்களை ஒற்றிக்கொண்டான். கஜாவிற்கு அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

''இண்டஸ்ட்ரியில, 20 வருஷமா இருக்கேன்... கதைக்கு, 'டூப்பு' போடறத இப்பதான் பாக்குறேன்...'' என்றான் பரிதாபமாக!

பதறியபடி, ''தப்பா சொல்றீங்க... என்னோட கதைய வாங்கி, அதுல லேசா திருத்தம் பண்ணி, தன் பேர போட்டுக்கறவன் தான் டூப்பு; நான் இல்ல. படத்துல முக்கால் பகுதி ரிஸ்கான காட்சியெல்லாம் நீங்க நடிக்க, காதலிக்கிறதும், நெஞ்சு நிமிர்த்தி டப்பிங் வாய்ஸ்ல வசனமும் பேசற ஆள்தான் டூப்பே தவிர நாம இல்ல...'' என்றான்.

மகிழ்வாய் அவனை பார்த்தான், கஜா.

''நிஜமாவா சொல்றீங்க மதியழகு...'' என்றான் ஆவலாக!

''கண்டிப்பா... ஒரு பெரிய மரத்துக்கு கீழ இருக்கிற செடி, பெரிசா வளர்ந்த சரித்திரமே இல்ல. நாமளும் இந்த பெரிய மரத்துக்கு கீழ, நிழல்ல பத்திரமா இருக்கிறதா நினைச்சுகிட்டோம்; அதான் தப்பு. நமக்கு வளர்ச்சியே இல்ல. அதை, நான், உணர்ந்துட்டேன். நீங்களும் உணர்ந்திடுங்க...'' என்றான்.

அவனுடைய வார்த்தைகள் வேராய், அவன் மனதில் படர்ந்தது.

கட்டிலில் குப்புற கவிழ்ந்து கிடந்தான், கஜா. அலைபேசி சிணுங்கியது, குரு தான்.

''என்ன கஜா, இன்னும் துாங்கறியா... இன்னைக்கு க்ளைமேக்ஸ் இருக்குயா... சீக்கிரம் வந்து சேரு...'' என்றான், குரு.

''இதப்பாரு குரு, சும்மா தொந்தரவு பண்ணாத... 'ரிஸ்க்' எடுத்து நடிக்கிற எனக்கு டெய்லி ஐயாயிரம் ரூபா... அதை, 'கேரவன்'ல இருந்து பாத்துட்டு க்ளோசப்ல எச்சில் தெறிக்க, ஆ ஊன்னு கத்துற ஹீரோவுக்கு கோடியில சம்பளமா... நான் அவருக்கு இனி, 'டூப்' போடணும்ன்னா ஒரு லட்சம் ரூபா வேணும்...'' என்றான் கூலாக!

அதிர்ந்து போனான், குரு.

''என்னய்யா இது... இதை கேட்கும் போதே உனக்கு வெட்கமாயில்லயா...

அது சரி, அந்த ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர்ன்னு உனக்கு தெரியுமா?'' என்றான் நக்கலாக!

''சைபருக்கு இல்லயா காசு... நான் பண்ற அசகாய வேலைக்குதான் கூலி. நீ யாருய்யா என்னோட உழைப்போட தரத்தை நிர்ணயிக்கிறது... உனக்கு, என் உழைப்பு பெரிசா தெரியாட்டி என்னை கூப்பிடாத... போனை வச்சிரவா...''

''டேய் கஜா, விளையாடாத... நீ வராட்டி கட்டினியூட்டி போயிடும்யா... புதுசா ஆள் தேடறது ரொம்ப ரோதனைய்யா...'' என்றான் குரு பதற்றமாக!

''புரியுதுல... அப்ப போய் டைரக்டர்ட்ட பேசு... அத விட்டுட்டு, என்னை சமாதானப்படுத்தாத... சின்ன ரோலானாலும் தனியாத்தான் பண்ணப் போறேன்; இல்ல டூப்புதான் போடணும்னா, நான் செய்யிற வேலைக்குரிய பணம் தரணும்... என் உழைப்புக்கு மரியாதை வேணும்...'' என்றான்.

''நிழல் எப்பவும் நிஜமாகிறது இல்ல; அதை புரிஞ்சுக்க...'' என்று காட்டமாக கூறினான் குரு.

'இடி இடி'யென சிரித்த கஜா, ''இந்த உலகத்துல, நிழல் இல்லாம, நிஜமே இல்ல. நீ நடக்கும்போது, தரையில விழுற நிழலை வச்சுதான், உன் தலைக்கு மேல இருக்கற வெளிச்சத்தோட அளவே நிர்ணயம் ஆகுது. போதும்யா... இனியும் மனுஷங்க அளவை நிர்ணயிக்கிற தகுதிய அவன்கிட்ட இருக்கிற பணத்தையும், அவனுக்கு இருக்கிற புகழையும் வைத்து நிர்ணயம் செய்யாதீங்க... அப்புறம், இனிமே நம்ம பேரு, 'டூப்பு கஜா' இல்ல... 'டாப்பு கஜா' சரியா...'' என்றபடி தொலைபேசி அழைப்பை துண்டித்தான்.

மனசு லேசாகி இருந்தது; முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த போலி முகமூடி கிழிந்து, நிஜத்தின் வெளிச்சம் முகத்தில் படர்ந்தது; எழுந்து சோம்பல் முறித்தான்.

குளித்து முடித்து, முதல் வேலையாய், எல்லா சினிமா கம்பெனிகளிலும் ஏறி, இறங்கி, சின்ன பாத்திரமானாலும், தன் நிஜ முகம், பேசும் வாய்ப்பை பெற்று, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் நிமிர்ந்து நின்றான்.

எஸ்.பர்வின் பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us