PUBLISHED ON : ஏப் 22, 2018

* கோடை காலத்தில், மோர், இளநீர், பழ ரசங்கள் மற்றும் தண்ணீர் போன்ற இயற்கை பானங்கள் உடலுக்கு இதமாக இருக்கும். தாகம் தீர, குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்ட ஜில்லென்ற தண்ணீரை பருகுவதை விட, மண் பானை நீர், உடலுக்கு நல்லது.
* சுண்டக் காய்ச்சிய பாலில், தேவையான சர்க்கரை போட்டு, ஆறியதும், அதில், மில்க் பிரெட் அல்லது ரஸ்க்கை ஊறப்போட்டு மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றி, வெனிலா எசன்ஸ் விட்டு, ப்ரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, மீண்டும் மிக்சியில் சுற்றி ப்ரீசரில் வைத்து எடுத்தால், திடீர் ஐஸ்க்ரீம் தயார்!
* வெயில் காலத்தில், இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளித்து விடும். இதைத் தவிர்க்க, ஐந்து அல்லது ஆறு வெற்றிலையை காம்பு நீக்காமல், மாவின் மீது பரவலாக வைத்து மூடினால், மாவு புளிக்காமல் இருக்கும். வாழை இலைத் துண்டு அல்லது வெண்டைக்காயின் நடுப்பகுதியை மாவில் போட்டு வைத்தாலும், புளிக்காது.
* வெல்லம் குளிர்ச்சியைத் தரும் என்பதால், இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் போது, சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். பானை தண்ணீரில் வெல்லம் கரைத்து, வடிகட்டி, சுக்கு, ஏலக்காய் பொடி கலந்தால் சுவையான, சத்தான பானகம் கிடைக்கும்.
