PUBLISHED ON : ஜூலை 09, 2023

மகள் சுதா வீட்டுக்கு வந்திருந்தாள், மங்களம்.
''சுதா... ஒண்ணு சொன்னா, தப்பா நினைச்சுக்க மாட்டியே?'' என்றாள்.
''தப்பா நினைச்சுக்கிற அளவுக்கு அப்படி என்ன சொல்லப் போற. சொல்லு,'' என்றாள், சுதா.
''அதை எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு. ஆனாலும், சொல்லிதான் ஆகணும். மாப்பிள்ளையோட நடத்தையில் சந்தேகமா இருக்கு.''
அம்மா சொன்னதும், அதிர்ந்தவள், ''என்னம்மா சொல்ற, என் புருஷன் நடத்தையில் சந்தேகப்படறியா... எதை வச்சு சொல்ற?'' என்றாள், சுதா.
''காரணம் இல்லாம சொல்ல மாட்டேன். நேற்று, உன் புருஷன் துணிகளை துவைக்க வேலைக்காரிகிட்ட கொடுத்தேன்ல... அப்போ, அவரோட பேன்ட் பாக்கெட்ல பூ இருந்தது. ஆம்பிளையோட பாக்கெட்ல எதுக்கு பூ வரணும்? உன் புருஷன், கடவுளை நம்பாதவர். கோவிலுக்கே போகாதவர். எப்படி வரும்ன்னு கேட்கிறேன்?''
''ஐயோ அம்மா... இதை வச்சு தான் சந்தேகப்படறியா? நேற்று, அவர் எனக்கு பூ வாங்கிட்டு வந்தார். அதுவா கூட இருக்கலாம் இல்லையா?''
''அவ்வளவு அசடாடி நான்... அவர் உனக்கு வாங்கிட்டு வந்தது மல்லிகை பூ. ஆனா, பாக்கெட்ல இருந்தது, கனகாம்பரம்.''
''வாங்கின பூவுல ஏதாவது ஒட்டிட்டு வந்திருக்கலாம்.''
''சரி, அதை விடு. முன்பெல்லாம் தினமும் சரியா ஆபீஸ் விட்டு, 6:00 மணிக்கெல்லாம் வீடு வந்துடுவார். ஆறு மாசம் முன்ன வந்திருந்தப்போ பார்த்தேனே... ஆனா, இப்ப தினம், 9:00 - 10:00 மணின்னு ஆகுது.''
''ஆபீஸ்ல வேலை அதிகமா இருக்கலாம்.''
''என்ன தினமுமா? சரி... காரணம் கேட்டா, பதில் சொல்ல எப்படி தயங்குறார், தடுமாறுறார் பார்த்தியா... இந்த தயக்கமும், தடுமாற்றமுமே அவர் சொல்றது பொய்ன்னும், அவர் ஏதோ தப்பு பண்றார்ன்னும் தெரியுது.''
''சும்மா வாய்க்கு வந்தபடி பேசாத... அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ரொம்ப நல்லவர்,'' சுதாவின் குரலில் கோபம் தெரிந்தது.
''அப்படி இருந்தா சந்தோஷம் தான். இன்னொரு விஷயமும் சொல்றேன் கேளு. வீட்டுக்கு வந்த பின், போன் வந்தா, வேற யாரும் எடுக்கறதுக்கு முன்ன ஓடிப் போய் எடுத்து, வெளியே போய் மணிக்கணக்கா பேசறார். நாம பார்த்தா, உடனே, 'கட்' பண்ணிடறார்.''
''நீ என்னதாம்மா சொல்ல வர்ற?''
''வேற யார் கூடவாவது தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்குடி.''
''அம்மா... யாரைப் பத்தி யார்கிட்ட பேசறோம்ன்னு தெரிஞ்சுதான் பேசறியா? என்ன தைரியம் இருந்தா, என்கிட்டயே அவரைப் பற்றி தப்பா பேசுவ.
''என் புருஷன் ராமன் மாதிரி. அந்த ராமனை கூட சந்தேகப்படுவேன்; என் புருஷனை சந்தேகப்பட மாட்டேன். என்னை தவிர வேற யாரையும் மனசால கூட நினைக்காதவர். இப்படி எல்லாம் பேசறதா இருந்தா, என் வீட்டுக்கே வராத,'' கோபமாக சீறினாள், சுதா.
இருவரும் பேச ஆரம்பித்தபோதே, வந்து விட்டான், சுதாவின் கணவன், சுதாகர்.
அவனை பற்றி பேசுவது தெரிந்ததும், என்ன பேசிக் கொள்கின்றனர் என கேட்க நினைத்தவனின் காதில், சகலமும் விழுந்தது. மனைவி சுதா தன்னை பற்றி சொன்னதை நினைத்து, நெகிழ்ந்து போனான்.
எவ்வளவு உயர்வாக நினைத்திருக்கிறாள். ஆனால், நானோ... மாமியார் சந்தேகப்பட்டது உண்மை தானே... ஆபீசில் வேலை செய்யும் புவனாவுடன் எனக்கு தொடர்பு இருப்பது உண்மை தானே?
சுதா, தன் மீது வைத்திருக்கும் உண்மையான அன்புக்கும், நம்பிக்கைக்கும் நான் தகுதியானவன் தானா? சே... எவ்வளவு கேவலமாக நடந்திருக்கிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் இது என, நினைக்க, நினைக்க அவன் செயல் அவனுக்கே அருவருப்பாக இருந்தது.
''தயவுசெஞ்சு இந்த மாதிரி பேசாதே. நானே சந்தேகப்பட்டாலும் நீதான் என்னை சமாதானப்படுத்தி, 'அப்படி எல்லாம் இருக்காது'ன்னு ஆறுதல் சொல்லணும். ஆனா, நீயே எங்களுக்குள்ளே சண்டை மூட்டி விடற மாதிரி பேசறியே... உன்னை நினைச்சா...'' இன்னும் கோபமானாள் சுதா.
''சுதா...''
''பேசாத, அமைதியா இரு. நான் டென்ஷன் ஆயிடுவேன்.''
இனியும் வெளியே நிற்பது நல்லதல்ல என்று நினைத்து, அப்போது தான் உள்ளே வருபவன் போல வந்தான், சுதாகர். ஒன்றுமே நடக்காதது போல அமைதியாகினர் மங்களமும், சுதாவும்.
சுதா கொடுத்த காபியை குடித்து, சிறிது நேரம், 'டிவி' பார்த்து, சாப்பிட்ட பின் படுக்கைக்கு போனவனுக்கு துாக்கமே வரவில்லை.
சுதாகர் பணிபுரியும் அலுவலகத்தில், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ளாள், புவனா. இவனுக்கு கீழே வேலை செய்பவள். அந்த அலுவலகத்துக்கு மாற்றல் ஆகி வந்து, ஓராண்டு தான் ஆகிறது.
அலுவலகத்துக்கு வந்த புதிதில், அவளின் எல்லா சந்தேகத்துக்கும் அவனிடம் தான் வருவாள். எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான். அப்படி ஏற்பட்ட பழக்கம், நட்பாகி இறுகியது.
கணவனை இழந்தவள், புவனா. அவளிடம் பழகி, மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் அவனுக்கே இந்த விஷயம் தெரிந்ததும், அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
அவளுக்கு ஆறுதல் கூற, அவனிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தாள். அவனுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து தரும் அளவு நெருக்கமானது.
ஆரம்பத்தில் அவனுக்கு உறுத்தலாக இருந்தாலும், போக, போக பழகி விட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த சுதாகருக்கு, வேலையே ஓடவில்லை. நேற்று, வீட்டில் சுதாவும், மங்களமும் பேசியது, அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சுதாவின் நம்பிக்கைக்கு தகுந்த மாதிரியா நடந்து கொண்டிருக்கிறேன் என, நினைக்க நினைக்க, அவமானமாக இருந்தது.
'இனியும் இது தொடர வேண்டாம். நான் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால், சுதாவின் மனது எவ்வளவு பாடுபடும், எவ்வளவு காயப்படும்? அவள் துடித்துப் போக மாட்டாளா, என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பாள்...
'என் மீது அவள் வைத்திருக்கும் பரிசுத்தமான அன்புக்கு நான் கொடுக்கும் பரிசு இதுதானா? வேண்டாம், புவனாவுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்...' என, தீர்க்கமான முடிவு எடுத்தான்.
நிம்மதியாக வேலை பார்க்க ஆரம்பித்தவனின் அறை கதவு தட்டப்பட்டது.
''எஸ் கம்மின்...'' அவன் சொன்னதும், உள்ளே வந்தாள், புவனா.
ஆர்ப்பாட்ட அழகு. இவ்வளவு நாள் பார்த்து சந்தோஷப்பட்டவனுக்கு இன்று ஏனோ பார்க்க பிடிக்காமல், தலையை குனிந்து கொண்டான்.
''ஹாய் சுதாகர்... என்ன பண்ணிக்கிட்டிருக்கே? ஆமா, ராத்திரி மூன்று முறை போன் பண்ணினேன். ஏன் எடுக்கல?'' கேட்டபடியே வந்து, உரிமையுடன் அவன் சேரின் கைப்பிடி மேல் அமர்ந்து கொண்டாள்.
''அது வந்து புவனா, ராத்திரி, மொபைல் போனை, 'சைலன்ட் மோடுல' போட்டுட்டேன். அதான் நீ பண்ணினது கேட்கலை.''
''சரி... மிஸ்ட் கால் இருக்கும்ல்ல? அதைப் பார்த்துட்டு, நீயாவது போன் பண்ணியிருக்கலாமில்ல? நீயும் பண்ணலை.''
''போனை காலைல எடுத்துப் பார்த்தேன். உன் நம்பர் இருந்தது. காலையில் நேரமே இல்லை. அதுவுமில்லாம ஊரிலிருந்து மாமியார் வந்துருந்தாங்க. அதான் போன் பண்ணலை.
''எப்படியும் நேரில் பார்க்கப் போறோமே, எதுக்குப் போன் பண்ணிக்கிட்டுன்னு அமைதியா இருந்துட்டேன்,'' அவள் அருகில் அமர்ந்திருந்தது, அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்கவே, நெளிந்தான்.
''ஆமா, இந்த புடவையை பார்த்தீங்களா... நல்லா இருக்கா? உங்களுக்கு பிடிக்குமேன்னு கட்டிட்டு வந்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லலியே...'' கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.
உண்மையில் அந்த புடவை அவளுக்கு அழகாகவே இருந்தது. வேறு சமயமாக இருந்தால், 'ஆஹா, ஓஹோ' என்று புகழ்ந்திருப்பான். இன்றோ வேறு மன நிலையில் இருந்ததால் அமைதியாக இருந்தான்.
அவனிடமிருந்த மாற்றத்தை கவனித்தவள், ''என்னாச்சு சுதாகர்... இன்னைக்கு நீங்க வழக்கமான சுதாகரனா இல்லையே? உங்ககிட்ட ரொம்ப மாற்றம் தெரியுது. கலகலப்பா இருக்கற நீங்க, இறுக்கமா இருக்கீங்க... உடம்பு சரியில்லையா?''அவனை நெருங்கி, நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
அவனுக்கோ சங்கடமாக இருந்தது. அவளிடமிருந்து முற்றிலுமாக விலக விரும்பி, ''அதெல்லாமில்லை புவனா... கொஞ்சம் வேலை அதிகம். அந்த டென்ஷன் தான். சாயங்காலம் நீ ப்ரீதானே... வழக்கமா நாம சந்திக்கற இடத்துக்கு வா, கொஞ்சம் பேசணும். இப்போ நீ கிளம்பறியா? நிறைய வேலை இருக்கு,'' என்றான்.
சுதாகரனை பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள். அதன் பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
மாலை, 6:00 மணி. வழக்கமாக சந்திக்கும், 'பீச்'சின் படகு மறைவுக்குப் பின்னால் அமர்ந்திருந்தனர் சுதாகரனும், புவனாவும்.
''ஆக, கடைசியா என்ன சொல்றீங்க?''
''ஆமா புவனா... நம்மோட இந்த தவறான உறவை, இனியும் தொடர வேண்டாம்; சந்திக்கவும் வேண்டாம். நல்ல நண்பர்களா மட்டும் இருப்போம்.''
''இதை சொல்றதுக்குதான் வர சொன்னீங்களா... என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?'' அதிர்ச்சியாக கேட்டாள்.
''மனசு உறுத்துது, புவனா. நான் செய்யிறது மகா தப்புன்னு புரியுது. என் மேல உயிரையே வச்சிருக்கிற என் மனைவிக்கு நான் செய்யிறது எவ்வளவு பெரிய துரோகம்? குற்ற உணர்ச்சி என்னை பாடா படுத்துது.
''சுதா முன்னால நான் ரொம்ப கேவலமானவனா, மகா மட்டமானவனா கூனி குறுகி போய் நிக்கிறேன். போதும் இனிமேலாவது உண்மையானவனா, நேர்மையானவனா, அவளுக்கு மட்டுமானவனா இருக்க விரும்பறேன். என்னை மன்னிச்சுடு...'' உதடு துடிக்க சொன்னவனை, பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அடுத்த நாள் அலுவலகம் விட்டு மாலை, 6:00 மணிக்கே வீட்டுக்கு வந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள், சுதா.
''என்ன... சீக்கிரமா வந்துட்டீங்க?'' கேட்டாள்.
அப்போது தான் கவனித்தாள். அவன் கையில் பூ.
''ஆமா சுதா... இவ்வளவு நாள் அழுக்கா இருந்தவன், இப்ப சுத்தமாகி வந்திருக்கேன்.''
''என்ன சொல்றீங்க... புரியலை...''
''சில விஷயங்கள் புரியாமல் இருக்கிறது தான் நல்லது.''
அடுத்து வந்த நாட்களில் பழைய சுதாகரனாக, அவளுக்கு மட்டுமேயானவனாக அவன் வளைய வந்ததில், அவளுக்கு மகிழ்ச்சி, பூரிப்பு.
ஒரு வாரம் ஓடியது. மதிய வேளை மொபைல் போன் ஒலித்தது. எடுத்தாள், மங்களம்.
''அம்மா... சந்தோஷமான விஷயம், இப்போ அவர் மாறிட்டார். லேட்டா வர்றதில்லை. போனும் வர்றதில்லை. பழையபடி மாறிட்டார்ம்மா.''
''சந்தோஷம்மா.''
''ஒரு சந்தேகம்மா... அவரோட நடத்தையை வச்சு, பேன்ட்ல மறந்து வச்சுட்டு போன பர்ஸ்ல இருந்த பொண்ணோட போட்டோவ வச்சு, அவருக்கு வேற பொண்ணோட தொடர்பு இருக்குன்னு கண்டு பிடிச்சோம்.
''எனக்கும் அவர் மேல கொல வெறி இருந்தது. விட்டிருந்தா அன்னைக்கு சண்டை போட்டு, ரகளை பண்ணியிருப்பேன். ஆனா, நீதான் என்னை சமாதானம் பண்ணி அவரை திருத்த, வேற ஐடியா கொடுத்த. அதுவும் நல்லபடியா பலன் கொடுத்திருக்கு. எப்படிம்மா உனக்கு அப்படி ஒரு ஐடியா தோணுச்சு?''
''அதான் சுதா, ஆம்பிளைங்க சைக்காலஜி. நீ அன்னைக்கு சண்டை போட்டிருந்தா பிரச்னை இன்னும் பெரிசாத்தான் ஆகி இருக்கும். இவ்வளவு நாள் தெரியாம நடந்தது, அதான் தெரிஞ்சு போச்சே. இனிமே என்னன்னு வெளிப்படையாவே தொடர ஆரம்பிச்சிருக்கும். அதில்லை தீர்வு...
''எப்பவுமே தப்பு பண்றவங்க மனசாட்சியை உலுக்கற மாதிரி செய்யணும். நாம தப்பு பண்றோம்ங்கிற குற்ற உணர்ச்சியை அவங்ககிட்ட ஏற்படுத்தணும். அதான் அவங்களை யோசிக்க வைக்கும்; திருந்த வைக்கும். அதனால தான், நான் உனக்கு அப்படி ஒரு ஐடியா கொடுத்தேன்.
''நீ, அப்படி பேசினதை கேட்டவர், மனசாட்சி உறுத்தியிருக்கும். 'நம் மேல மனைவி இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா... நம்மை இவ்வளவு உயர்வா நினைச்சுருக்கா... நாம துரோகம் பண்றோமே'ன்னு யோசிச்சிருப்பார். அதான் இந்த மாற்றம்,'' என்றாள், மங்களம்.
''ஆனாலும் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி, கோபமா வேற பேசிட்டேன்,'' என்றாள், சுதா.
''விடும்மா... என்ன கஷ்டம்னா, என்ன பேசறதுன்னு ப்ளான் பண்ணி, ஆயிரம் முறை ரெண்டு பேரும் ஒத்திகை பார்த்து, அதை உன் புருஷன் வர்ற சமயமா பார்த்து, அவர் காதுல விழற மாதிரி பேசி நாடகம் நடத்துனோமே அதான்...
''எப்படியோ நாம நடத்துன நாடகத்துக்கு நல்ல பலன் கிடைச்சுதேன்னு நினைக்கறப்போ சந்தோஷமா இருக்கு,'' மங்களம் சிரிக்க, அதில் சுதாவும் சேர்ந்து கொண்டாள்.
கே. ஆனந்தன்
