தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (10)

நான் வந்த பாதை! (10)

நான் வந்த பாதை! (10)


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

எனக்கு, சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பிருந்தாலும், நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன். நண்பர் கருணாநிதியிடம், 'மனோகரா' மாதிரி சரித்திரம் தழுவிய நாடகம் எழுதித் தர கோரினேன். அவரும் சிந்தித்து, என்னிடம் ஒரு கதையை சொன்னார்.

அவர் எனக்கென எழுதப் போகும் நாடகமென்றால் நல்ல கதையுடன், அதில் எங்கள் கொள்கைப் பிரசாரமும் அமைய வேண்டுமல்லவா? அந்த நாடகத்துக்கு, 'மணிமகுடம்' என பெயர் சூட்டப்பட்டது.

நாடகத்தை விரைவில் எழுதி முடிக்கும் திட்டத்துடன், நாங்கள் இருவரும் நாட்களை ஒதுக்கி, கர்நாடகாவில் உள்ள மைசூருக்கு காரில் புறப்பட்டோம். என் கார் டிரைவர் அர்ஜுனன் மற்றும் வேலைக்கார பையன் மணியும் எங்களுடன் வந்தனர்.

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னிடம் பழகுபவர், பணிபுரிபவர், என்னை விட வயது குறைந்தவர்களாக இருந்தால், என்னை அண்ணன் என்று சொல்ல வேண்டும். எனக்கு மூத்தவர்களை நான், அண்ணன் என அழைப்பேன்.

மைசூரில், தாசப்பிரகாஷ் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம். 'மணிமகுடம்' நாடகம் உருவாகத் துவங்கியது. வசனங்களை எழுதிக் கொண்டே இருப்பார், கருணாநிதி. நான் படித்துப் பார்த்து என் கருத்துக்களை அவ்வப்போது சொல்வேன்.

அங்கேயே சில நாட்கள் தங்கி, 'மணிமகுடம்' நாடகத்தை முழுமையாக எழுதி முடித்து, சென்னை வந்து சேர்ந்தோம்.

சரித்திரக் கதை போல் அமைந்ததால், அதற்கான புதிய காட்சிகள், புதிய உடைகள், புதுமுறை வண்ண விளக்குகள், டோப்பா, தாடி, தலைப்பாகை, சிம்மாசனம் மற்றும் அதற்கேற்ப நாற்காலிகள் என, நிறைய செலவு செய்து, சிறப்பான முறையில், 'மணிமகுடம்' நாடக ஏற்பாடுகளை துவக்கினேன்.

எனக்கு கதாநாயகியாக, எம்.என்.ராஜம், பொன்னழகன் என்ற புரட்சிக்காரன் வேடத்தில், என் தங்கை கணவர், டி.வி.நாராயணசாமியை நடிக்க வைக்க, முடிவு செய்தேன்.

முக்கியமான அமைச்சர் வேடத்துக்கு, வைரம் நாடக சபையில் அனுபவம் பெற்ற, நடிகர் முத்துராமனை சென்னைக்கு வரவழைத்தோம். எங்கள் நாடக மன்றத்தில், மாத சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். நாடகங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று, சில ஆண்டுகாலம் நடித்து வந்தார், முத்துராமன்.

அந்த முத்துராமன் தான், பின்னாளில், பல படங்களில் கதாநாயகனாக நடித்து பெருமை பெற்றவர். என்னுடனும், சிவாஜியுடனும் சில படங்களில் நடித்துள்ளார்.

முதலில் சென்னையில் நாடகத்தை அரங்கேற்றினோம். சிறந்த பாராட்டு கிடைத்தது. வெளியூர்களிலும் எங்கள் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இச்சமயத்தில், எம்.ஆர்.ராதாவின், 'ரத்தக்கண்ணீர்' நாடகம், சென்னை, ஒற்றவாடை தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது.

பராசக்தி படத்தை தயாரித்து வெளியிட்ட நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள், 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை படமாக எடுக்க திட்டமிட்டு, அதற்கான நடிகர் - நடிகையரை தேர்வு செய்ய துவங்கினார். இயக்குனர்களாக, கிருஷ்ணன் - பஞ்சு. எம்.ஆர்.ராதாவின் நண்பனாக நானும், மற்ற நடிகர் - நடிகையரும் தேர்வு செய்யப்பட்டோம்.

சென்னையில், 'ரத்தக்கண்ணீர்' நாடகம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், படத்தில் நடிப்பவர்களை, நாடகத்தையும் பார்க்க வைத்தனர். ஆனால், அவருடன், காந்தா என்ற வேடத்தில் நடிக்க, லலிதா, பத்மினி போன்ற நடிகையர் மறுத்து விட்டனர். காரணம், நாடகத்தில் குஷ்டரோகியாக, ராதா நடிப்பது மிக இயற்கையாக இருக்கும்.

எனவே, அந்த வேடத்துக்கு ஏற்கனவே நாடகங்களில் நடித்து பழக்கப்பட்டவரும், சில படங்களில் நடித்து அனுபவம் பெற்றவருமான, எம்.என்.ராஜத்தையே நடிக்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

சென்னையில், அண்ணாதுரை தலைமையில், 'மணிமகுடம்' நாடகம் அரங்கேறியது. அப்போது, எம்.என்.ராஜத்தையும் பாராட்டினார், அண்ணாதுரை.

ரத்தக்கண்ணீர் படத்துக்கு பிறகு, எம்.என்.ராஜத்துக்கு, வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல, எனக்கும் படப்பிடிப்பு வேலைகள் நிறைய இருந்ததால், நானும், எம்.என்.ராஜமும் இணைந்து வெளியூர் நாடகங்களுக்கான தேதியை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, காரைக்குடியில், பள்ளத்துாரில் வசித்து வந்த மனோரமா என்ற நாடக நடிகையை பற்றி நான் ஏற்கனவே அறிந்ததால், அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தேன்.

நாடகத்தில் வசனம் பேசி, நடிக்க, மனோரமாவுக்கு பயிற்சி அளித்தேன். பிறகு, 'எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்ற'த்தின் நிரந்தர கதாநாயகி ஆனார், மனோரமா. ஆண்டுக்கணக்கில், நாடகங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வந்த, மனோரமா தான், பிறகு நகைச்சுவை நடிகையாக எண்ணற்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன்பின் குணசித்திர நடிகையாக, ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார்.

'இந்த பாராட்டுகள் எல்லாம் எனக்கு, எஸ்.எஸ்.ஆரால் கிடைத்தது...' என, பெருமையுடன் சொல்வார், மனோரமா.

- தொடரும்.

- எஸ்.எஸ். ராஜேந்திரன்




மனோரமா பற்றி கருணாநிதி கூறியது இது:
'மணிமகுடம்' நாடகத்தில், புரட்சிக்காரி கதாபாத்திரத்தில் நடிக்க, ஒரு பெண்மணி தேவைப்பட்டு, அதற்கான பெருந்தேடலில் ஈடுபட்டார், எஸ்.எஸ்.ஆர்.,மிக நீண்ட வசனங்களை பேச வேண்டும். புரட்சிப் பாசறையில் மகளிர் தலைவியாக விளங்கி, வீராவேசமாகவும், விவேகம் மிகுந்தவராகவும், தியாகத்துக்கு அஞ்சாத துணிவு உடையவராகவும் உள்ள, கதாபாத்திரம் அது. இதற்காக தேடி அலைந்து, கடைசியாக, காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்துாரில், ஒரு நாடக நடிகையை, காரில் அழைத்து வந்தனர்.'மணிமகுடம்' நாடகத்தில்,    புரட்சிக்காரி வேடத்துக்கு, அந்த பெண் பொருத்தம்தானா என்று, நான் பார்த்து சொல்ல வேண்டுமென்று, என்னையும் வீட்டுக்கு அழைத்திருந்தார். எஸ்.எஸ்.ஆர்., நாடகத்தில் இடம்பெறும், அல்லி என்ற அந்த கதாபாத்திரத்துக்கான வசனங்களை படித்து ஒப்பித்தார், அந்த நடிகை.அவர் வசனங்களை பேசிய பாங்கு, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எஸ்.எஸ்.ஆர்., - டி.வி.நாராயணசாமி போன்றோர், நாடகத்தில் பேசும் இலக்கிய தமிழுக்கிடையே, இவர் பேசிய காரைக்குடி தமிழும் எடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அல்லி என்ற புரட்சி பெண் கதாபாத்திரத்துக்கு அவர் ஏற்றவர் தான் என்று, ஏகமனதாக தீர்மானித்தோம்.அந்த பெண்மணி தான், 'மணிமகுடம்' நாடகத்திலும், பின்னர், நான் எழுதிய கட்சி பிரசார நாடகமான, 'உதயசூரியன்' நாடகத்திலும் தொடர்ந்து நடித்து, இன்று, கலை உலகில் அனைவராலும், 'ஆச்சி' என்று அன்புடன் அழைக்கப்படும், மனோரமா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us