PUBLISHED ON : ஜூலை 09, 2023

கடற்கரை ஓரமாக இருந்த குடிசை ஒன்றில், பூஜை செய்து கொண்டிருந்தான், வாலிபன் ஒருவன். அருகில், அவன் அம்மா நின்று கொண்டிருந்தாள்.
வெளியில் ஏதோ கூச்சல் கேட்டு, போய் பார்த்து விட்டுத் திரும்பினாள், அம்மா. ஆனால், எதுவும் பேசவில்லை; அமைதியாக நின்றாள். அம்மாவை ஒரு பார்வை பார்த்த வாலிபன், பூஜையை முடித்து, வெளியில் வந்து பார்த்தான்.
கடலில் சற்று துாரத்தில் ஒரு கப்பல் முழுகிக் கொண்டிருந்தது. அதிலிருந்த மக்கள் போட்ட கூச்சல் தான், அங்கு பரவி இருந்தது. நிலைமையை உணர்ந்த வாலிபன், கரையிலிருந்த பெரும் படகு ஒன்றை இழுத்து, தண்ணீரில் இறக்கினான்.
அவனை தடுத்து, 'மகனே, ஆறு மாதத்திற்கு முன், கப்பல் பயணம் போன உன் அப்பா, கப்பல் கவிழ்ந்து, போய் விட்டதாகத் தகவல் வந்ததே தவிர, அவர் உடலைக் கூடப் பார்க்க முடியவில்லை.
'நீ, பூஜை செய்யும்போது, தீர்க்காயுளோடு இருக்க வேண்டும் என்று, நான் பிரார்த்தித்தேன். உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். உன்னையும் இழக்க நான் தயாராக இல்லை...' என்றாள், அம்மா.
'அம்மா... இதோ கண் எதிரில் தவிக்கும் இவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? சக்தி இருந்தும் செய்யாவிட்டால், மனிதனாகப் பிறந்தும் பலனில்லை என, எனக்கு நல்லதைச் சொல்லிக் கொடுத்த நீ, இப்போது தடுக்கலாமா? நல்லது செய்தால் நல்லதுதான் நடக்கும். கவலைப்படாதே, கடவுள் காப்பாற்றுவார்...' என்றான்.
படகில் ஏறிய வாலிபன், வெகு வேகமாக போய், கப்பலில் இருந்த பலரையும், கும்பல் கும்பலாக படகில் ஏற்றி, கரையில் கொண்டு வந்து சேர்த்தான். கப்பலில் மீதி இருந்தது நான்கு பேர் மட்டுமே. வாலிபன் சளைக்கவில்லை. வேகமாக போய் அவர்களையும், படகில் ஏற்றி வந்து இறக்கினான்.
மூன்று பேர் இறங்கி விட்டனர். நான்காவது ஆள், தன்னைக் காப்பாற்ற வந்த வாலிபனை பார்த்ததும், 'மகனே...' என்று கூறி, பாய்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரை கண்ட வாலிபனும், 'அப்பா...' என்றபடியே கட்டித் தழுவினான்.
ஆம்... கப்பலிலிருந்து கடைசியாகக் காப்பாற்றப்பட்டவர், ஆறு மாதங்களுக்கு முன், இறந்ததாகக் கருதப்பட்ட அவன் அப்பா தான்.
கரைக்கு வந்து சேர்ந்தனர்.
கணவரைக் கண்டதும், வாலிபனின் அம்மாவுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி உண்டானது.
'மகனே, நீ சொன்னபடி கடவுள் காப்பாற்றி விட்டார்...' என்று, மனதார மகனை வாழ்த்தினாள்.
நல்லது செய்தால் நன்மைதான் விளையும். தெய்வம் காப்பாற்றும்!
பி. என். பரசுராமன்
