தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஸ்வரம் தப்பிய ராகம்!

ஸ்வரம் தப்பிய ராகம்!

ஸ்வரம் தப்பிய ராகம்!


PUBLISHED ON : மே 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''பட்டு மாமா... இந்த சண்டே, நண்பர்கள் ரெண்டு பேர் குடும்பத்தோட சாப்பிட வர்றாங்க... சாப்பாடு ஏ கிளாஸா இருக்கணும்... அதிலும், சண்முகத்துக்கு வத்தக் குழம்பும், பருப்பு உசிலியும்ன்னா உயிர்; ரொம்ப வருஷமா நார்த்துலேயே இருந்துட்டான். நாக்கு செத்துப் போயி வர்றான்... லஞ்ச் அசத்தலா இருக்கணும்,'' என்ற சரவணனுக்கு, காபியை ஆற்றி கொடுத்து, ''ஆகட்டும் தம்பி... ஜமாய்ச்சிடலாம்,'' என்றார் பட்டு மாமா.

பட்டு மாமா என்ற பட்டாபி, சரவணனுக்கு மட்டுமல்ல; அவன் குழந்தைகளுக்கும் ஏன், இரு பக்கத்து உறவினர்களுக்கும் கூட மாமா தான்; இந்த குடும்பத்தில் ஒருவராகவே கலந்து விட்டவர்.

சரவணனின் மனைவி தலைப் பிரசவத்திற்காக போயிருக்க, சுய பாகமும் தெரியாமல், ஓட்டல் சாப்பாடும் ஒத்துக்கொள்ளாமல், சரவணன் விழி பிதுங்கிய நேரம் அது...

வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்து கொண்டிருந்தது. பசி தாள மாட்டாமல், அருகில் உள்ள ஓட்டலுக்கு போய் வரலாம் என்று கதவை திறந்தவன், வாசல் கேட்டருகே, சின்ன சன்ஷேடின் கீழே நனைந்து கொண்டு நின்றிருந்த உருவத்தை பார்த்தான்.

அந்த உருவம், 'மன்னிக்கணும்... மழை விட்டதும் கிளம்பிடுறேன்...' என்றது.

சரவணன், 'என்ன சார், இப்படி நனைஞ்சுட்டீங்க... உள்ளே வாங்க...' என்றான்.

'இருக்கட்டும் சார்...'

'முதல்ல நீங்க உள்ளே வாங்க...' என்றவன், துண்டு ஒன்றை எடுத்து நீட்டினான்.

'அய்யோ... வேணாம் தம்பீ...'

'ப்ச்... முதல்ல தலைய துவட்டுங்க...' சங்கோஜத்துடன் தயங்கியவரை, 'ப்ளீஸ்... தலைய துவட்டுங்க... இந்தாங்க இந்த வேட்டிய கட்டிக்குங்க...'

தயக்கத்துடனே பெற்றுக் கொண்டார். அவருடைய சிவந்த நிறமும், வெள்ளந்தி முகமும், சட்டென்று சரவணன் மனது, அவரிடம் ஒட்டிக்கொண்டது.

'இருங்க... சூடா ஒரு டீ போட்டு தரேன்... இந்த மழைக்கு ஜோரா இருக்கும்...' என்றான். அவர் சுற்றும் முற்றும் நோக்க, வெறுமையான வீடு, அவருக்கு எதை உணர்த்தியதோ... 'அவ, பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போயிருக்கா...' என்றான் லேசான வெட்கத்துடன். அவரும், பரிவுடன், சினேகமாக முறுவலித்தார்.

'நீங்க, எங்கேயோ புறப்பட்டுட்டு இருந்தீங்க... என்னால சிரமம்...' என்றார்.

'ஒண்ணுமில்ல... ஓட்டலுக்கு தான், சாப்பிட கிளம்பினேன்...' என்று கூறி, சமையல் அறைக்கு சென்றான்.

பாலை சூடாக்கிய பின், டீ பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்க முனைகையில், அவர் குரல் தடுத்தது. 'இன்னும் சில நிமிஷம் கொதிக்கட்டும் தம்பீ... அப்ப தான் டீ ருசியா இருக்கும்...' என்றார்.

அவன் திகைப்புடன் பார்த்தான்.

'என்ன தம்பீ, திகைச்சுட்டீங்க... என் பேரு பட்டாபிராமன்; சமையல் பட்டாபின்னா, எங்க ஊருல பிரசித்தம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, நான் டீ போட்டுத் தர்றேன்... குடிச்சு பாருங்க...'

இப்படித்தான் ஆரம்பித்தது பட்டாபிக்கு, இந்த வீட்டுடனான உறவு.

கைக் குழந்தையுடன் வந்த விஜிக்கும், பார்த்து பார்த்து, பத்தியமாய் சமைத்து தந்தார். சின்னச் சின்ன கை வைத்தியங்களை கற்றுத் தந்தார். அவரையும், அவருடைய சமையலையும் சினேகமாய் ஏற்றுக்கொண்டது அந்த சின்ன குடும்பம். நம்பிக்கையான மனிதராக, நண்பராக, உறவாக, பணியாளராக மாறி விட்டார், பட்டாபி.

மனைவி இறந்த பின், மகனுக்காகவே வாழ்ந்ததும், சமையல் வேலை செய்தே அவனை பெரிய படிப்பு படிக்க வைத்ததையும், அவனும் அரசு பணியில், உயர் பதவியில் அமர்ந்ததும், காதலில் வீழ்ந்ததையும் சொன்னார். காதலியிடம், தன் தந்தை ஒரு சமையல்காரன் என்று கூற வெட்கப்பட்டு, தந்தையார் சமீபத்தில் இறந்து விட்டார்; தாயோ பிறக்கும்போதே இறந்து விட்டார்; தற்சமயம் யாருமற்ற அனாதை என்று கூறி, அனுதாபத்துடன், காதலியை கைப்பிடித்ததையும் கூறினார்.

பெற்ற தகப்பனுக்கே தெரியாமல், உயிரோடிருப்பவரை சாகடித்து, கல்யாணம் செய்து கொண்ட மகனை, நேரில் பார்க்க சென்ற போது, தன்னை பார்க்க வரவேண்டாம் என்று மகன் கையெடுத்து கும்பிட்டதையும் கூறினார். மகனுடைய துரோகம் நெஞ்சிலறைய, கால் போன வழியில் போனவரைத் தான்... மழை தடுத்து நிறுத்தி, இந்த வீட்டோடு கட்டிப் போட்டு விட்டது.

இவருடைய கதையை கேட்டதும், தம்பதியருக்கு இவர் மீது பாசமும், அன்பும், இன்னமும் கூடி விட்டது. சரவணன், அவரை தன் மூத்த சகோதரனை போலவே நடத்தினான். அவரும், தன் எல்லை உணர்ந்து நடந்து கொண்டார்.

இடிச்சு கரைச்சு வைச்ச சாம்பார், கத்தரிக்காய் பிட்ளை, கொத்தவரைங்காய் பருப்புசிலி, வத்தக் குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ், மைசூர் ரசம், உருளை ரோஸ்ட், பருப்பு பாயசம், கீரை வடை, பழக்கேசரி என்று அமர்க்களப்படுத்தி இருந்தார், பட்டு மாமா.

இரண்டு குடும்பமும் உணவை ரசித்து உண்டன. இருவருமே சரவணனின் ஒரே பேட்ச் டிரெய்னிங். ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள், டிரெய்னிங் முடிந்ததும், சரவணனுக்கு, தமிழகத்தில் போஸ்டிங் ஆகிவிட, மற்ற இருவரும் வடக்கு பக்கமே இருந்து, இப்போதுதான் தமிழகத்தில் போஸ்டிங் ஆகியிருக்கின்றனர். வெறும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், சாட்டிங்' என்றே நட்பை வளர்த்துக் கொண்டனர். மூவரும் பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தனர். அதிலும் சண்முகம், சாப்பாட்டை மும்முரமாய் சுவைத்துக் கொண்டே பேச்சிலும் இருந்தான்.

''விஜி சிஸ்டர்... சூப்பரா சமையல் செஞ்சுருக்கீங்க... எங்கப்பாவோட கை பாகம் மணக்குது... எங்கப்பா ரொம்ப நல்லா சமைப்பாரு... இப்படி சாப்பிட்டு எவ்ளோ வருஷமாயிருச்சு தெரியுமா... சரவணா கொடுத்து வச்சவன்டா நீ,'' என்று சப்புகொட்டி, சங்கோஜமே இல்லாமல் கேட்டு, வாங்கி சாப்பிட்டான்.

''அண்ணே... என்னை புகழாதீங்க... இந்த சமையல் பட்டு மாமா செய்தது... நான், மேல் வேலையோடு சரி... அவருக்குத் தான் பாராட்டு சேரணும்,'' என்றாள்.

''உங்கள் வீட்டு குக்கா?''

''அவர், 'குக்' இல்ல; எங்க வீட்டுல ஒருத்தர். எனக்கு சகோதரன் மாதிரி,'' என்று குறுக்கிட்டான் சரவணன்.

''சாரிடா... எனக்கும் இப்படி சமைக்கக் கூடிய ஆள் இருந்தா பாரேன்... அவரை கூப்பிடேன் நேரிலேயே பாராட்டை தெரிவிச்சுக்கறேன்,'' என்றான் சண்முகம்.

சரவணன், குழந்தைகளை அனுப்பி, மாமாவை அழைத்து வரச்சொல்ல, பட்டு மாமா குளித்துவிட்டு வருவதாக சொன்னதாக கூறினர், குழந்தைகள்.

பேச்சு திசை திரும்பி, அவர்கள் புறப்படும் நேரமும் வந்துவிட்டது. சண்முகத்தின் மனைவி, விஜியிடம், ''எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்... வர்ற புதன் கிழமை, எங்க மாமனாருக்கு திவசம்; அன்னிக்கு ஒருநாள் மட்டும் பட்டு மாமாவை எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வாங்களேன். எனக்கு இந்த பக்க சமையல் சுத்தமா வராது... ப்ளீஸ்,'' என்றாள்.

விஜியும் அழைத்துக் கொண்டு வருவதாக சொன்னாள்.

விருந்தினரை வழியனுப்பி விட்டு, உள்ளே நுழைந்தபோது, பட்டாபி எல்லா பாத்திரங்களையும் ஏறக் கட்டுவதை பார்த்ததும், ''மாமா... அசத்திட்டீங்க... சாப்பாடு ஏ ஒன்... எல்லாரும் சந்தோஷமா சாப்பிட்டாங்க. உங்க சமையல் எல்லாருக்குமே பிடிச்சு போச்சு... உங்கள பாராட்டணும்ன்னு கூப்பிட்டாங்க, நீங்க தான் வரல...'' என்றாள் விஜி.

''இல்லம்மா... அசதியாயிருந்தது; லேசா தலைவலி வேற, அதான் படுத்துட்டேன்.''

''தலைவலியா... இப்ப எப்படி இருக்கு? மாத்திரை எடுத்துண்டீங்களா... காபி வச்சு தரச் சொல்லவா...'' படபடத்தான், சரவணன்.

''இப்போ பரவாயில்ல தம்பி...''

''மாமா... ரசம் சாதம் கரைச்சு தரட்டுமா?'' என்று கேட்டாள், விஜி.

''ஒண்ணுமில்லம்மா... விடுங்கோ!''

''மாமா... உங்கள கேட்காமலேயே ஒரு விஷயத்துக்கு சரின்னுட்டேன்... மன்னிச்சிடுங்கோ... நம்ம சண்முகம் இருக்காரோல்லியோ, அவரோட அப்பாவுக்கு வர்ற புதன் அன்னிக்கு திவசமாம்... அவரோட மனைவிக்கு இங்கித்து சமையல் தெரியாதாம். நீங்க சமைச்சு தரணும்ன்னு ரொம்ப கேட்டுகிட்டாங்க, நானும் உங்கள அழைச்சிட்டு வர்றதா சொல்லிட்டேன்... போயிட்டு வந்துடலாமா?'' என்றாள்.

''கண்டிப்பா போகலாம்மா... இது பெரிய குடுப்பினையாச்சே... என் திவசத்துக்கு நானே சமைச்சு, என் கண்ணெதிரே பிண்டம் வச்சு, அதை, நானே கண் குளிர பார்ப்பது எப்பேற்பட்ட பாக்கியம்... யாருக்கு கிடைக்கும்,'' பட்டாபி குரல் கம்ம சொல்ல, விஜியும், சரவணனும் விக்கித்து போயினர்.

''வெட்டி கவுரவத்துக்காக, உயிரோட இருக்கிற அப்பனை செத்துட்டதா வாய் கூசாம சொன்ன மகன், கர்ம சிரத்தையா திவசம் பண்றானாம்... நான் ரொம்ப குடுத்து வைச்சவன்,'' மேல் துண்டால் முகத்தை மூடி, கதறினார், பட்டாபி.

விஜியும், சரவணனும், மின்சாரம் தாக்கியவர்களை போல் செயலற்று நிற்க, ஸ்வரம் தப்பிய ராகமாய் கேட்டது அவருடைய அழுகுரல்!

''பட்டு மாமா... அழாதீங்க...'' சரவணனின் குழந்தைகளின் குரல்கள், ஸ்ருதியுடன் ஒன்றாய் இழைந்தன.

- ஜெரினாகாந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us