
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன். உன் பாதம் சாட்சியாக உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு...
காளிக்கு மட்டும் கேட்கும் குரலில் ஸ்லோகம் சொல்லி, தொடுத்த பூவை சாத்தி, வேண்டி நின்றபோதும், சாரதாவின் மனது என்னவோ, கூடத்தில் படுத்திருந்த மாமியாரிடம் தான் இருந்தது.
இரண்டு ஆண்டுகளாக, நடமாட்டம் இல்லாது, 'பார்க்கின்சன்' நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இக்குடும்பத்தின் கம்பீரமான துாண், அவள் மாமியார் தான்.
எதை எடுத்தாலும், 'அம்மா எப்படி செய்வது...' என்று ஆலோசனை கேட்டு கேட்டு, செய்த அவள், இன்று, மாமியாரை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். சற்றும் பதறாமல், குடும்ப தேரை வலம் வரச் செய்து நிலை நிறுத்திய மாமியாரின் இன்றைய நிலை, சாரதாவை நிலை குலைய செய்தது.
பேரன், பேத்தி, பிள்ளை, கொள்ளு பேரன், பேத்தி என, அனைவரும் வந்துவிட்டனர். நேற்று மதியம் மூடிய கண் திறக்கவில்லை.
இரண்டு ஆண்டுகள் படுத்ததில், ஒரு நாள் கூட படுக்கையிலேயே இயற்கை உபாதை எதையும் கழிக்காதவள், நேற்று, நினைவின்றி சிறுநீர் கழித்ததும், உடனே ஒரு புது மெத்தை வாங்கி போட்டு விட்டான், பேரன். பாட்டியிடம் கொள்ளை பாசம் அவனுக்கு. சுவாசம் மட்டும் நெஞ்சுக்கும், வாய்க்கும் இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து விக்கித்து போனாள், சாரதா.
எந்த குறைக்காக இவர் இன்னும் இப்படி கஷ்டப்படுகிறார் என்று வேதனைபட்டுக் கொண்டிருந்தாள். அச்சமயம், மாமியாரின் தங்கையோ, 'லட்சுமி, எதிலும் பற்று வைக்காதவள் ஆயிற்றே, அவளுக்கு ஏன் இப்படி இழுத்துண்டு இருக்கு...' என்று கூற, மனம் வருந்தியபடி, பக்கத்து அறையில் இருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள், சாரதா.
அதில் அமர்ந்ததுமே, யாரோ அவளை, 'கிசுகிசு'வென்று அழைத்தது போன்ற உணர்வு. சுற்று முற்றும் பார்க்க, 'நான் தான் ஊஞ்சல் பேசுகிறேன்...' என்ற குரல் கேட்டு திடுக்கிட்டாள்.
'பயப்படாதே சாரதா, எல்லா உறவும், உன் மாமியாருக்கு அருகில் இருப்பதாக, நீ எண்ணிக் கொண்டிருப்பது தவறு. அவளுடைய சுக துக்கங்களில் பங்கேற்ற உற்ற தோழியான என்னை எண்ணி தான், அவள் இன்னும் மூச்சை நிறுத்தவில்லை. எங்கள் உறவு, 65 வருடத்தை கடந்தது. கொஞ்சம் எங்கள் கதையை கேள்; உன் மனம் தெளிவடைந்து விடும்...' என்று கூற ஆரம்பித்தது:
ஒரு அக்கா, மூன்று தங்கை, மூன்று தம்பி, லட்சுமியோட பாட்டி, அப்பா, அம்மா என்று, உன் மாமியாரின் குடும்பம் பெரியது.
அவர்கள் எல்லாரும், ஊஞ்சலில் அமர்ந்து வேக வேகமாக ஆடுவர். அப்படியே ஊஞ்சலை ஆடவிட்டு எழுந்து போய் விடுவர். ஆனால், லட்சுமி மட்டும் மெதுவாக உட்கார்ந்து, இரு கைகளால் கம்பியை பிடித்து, ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கப் போட்டு, கால் விரல்களால் ஒரு உந்து உந்தி, வேகம் ரொம்ப கூடாது என்று, 'பிரேக்' போடுவது போல் குதிகாலால் நிறுத்தி, அழகாக ஆடுவாள்.
அவள் விரல்களால் உந்துவதும், குதிகாலால், 'பேலன்ஸ்' செய்வதும், ஒரு தாள கதியில் இருக்கும். சற்று நேரம் ஆடிவிட்டு, மெதுவாக இறங்கி, ஊஞ்சல் ஆட்டத்தை கையால் நிறுத்தி, 'ஊஞ்சலி - எனக்கு அவள் வைத்த பெயர், நான் விளையாட போறேன்...' என்றபடி ஓடுவாள்.
நான் வந்த, மறு ஆண்டே அவள் பெரியவளாகி விட்டாள். அந்த காலத்தில், உங்கள் சமூகத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன் திருமணம் முடித்து விடவேண்டும்; இல்லாவிட்டால் அக்கம் பக்கத்தினர், கேலி பண்ண ஆரம்பித்து விடுவர். ஐந்து பெண்களில் பெரியவள் மட்டுமே, திருமணம் ஆனவள்.
லட்சுமி வயதுக்கு வந்தது, அவர்களுக்கெல்லாம் மிக பாரமாக அமைந்தது. அதிலும், பாவம் அவளுக்கு, மூல நட்சத்திரம் வேறு. அந்த நாளில், பெண்களுக்கு திருமணம் ஆவதற்கு, நிறம், பணம், நட்சத்திரம் எல்லாம் பெரும் தடைகள். இந்த மூன்றும் லட்சுமிக்கு சேர்ந்திருந்தது கொடுமை. அடுத்து வரும் நாட்களில், அவள் தங்கையும் பருவமடைந்தாள்.
வயதுக்கு வந்த பின் பள்ளிக்கு செல்லவும் தடை என்பதால், ஒருநாள் மதியம் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, லட்சுமி என்னிடம் மெதுவாக வந்து அமர்ந்தாள். வழக்கபடி காலை மடித்து ஊஞ்சலில் ஆடுபவள், என்னை அணைத்தபடி படுத்து, என் காதில், 'கிசுகிசு'த்தாள்.
'ஊஞ்சலி, இந்த வீட்டில் எனக்கென்று பேச எவருமே இல்லை. அம்மா கூட என் நட்சத்திரத்தை குறை சொல்றா... 'மாமா பிள்ளைக்கு லட்சுமியை திருமணம் செய்யலாம்' என்று, அப்பா கேட்டால், எங்கம்மா, 'மூலத்து மாமியார் மூலைல. இது தெரியாதா... எங்க அண்ணாவுக்கு போய் இந்த கஷ்டம் நான் தரமாட்டேன். யாராவது மாமனார் இல்லாத இடமாக லட்சுமிக்கு பாருங்கோ; அவ தங்கையை, எங்கண்ணா பையனுக்கு பேசி முடிச்சுடலாம்'ன்னு சொல்றா...' என, என்னை கட்டிக்கொண்டு அழுதாள்.
'ஏய் அசடு, அழாதே... உனக்கு ராஜா மாதிரி புருஷன் அமைவான்'னு, நான் சொல்வேன்.
நான் ராஜகுமாரன்னு சொல்லியிருக்கணுமோ என்னமோ... நிஜமாகவே, 35 வயதான, முதல் மனைவியை இழந்த, மூன்று குழந்தைகளின் தந்தையான ஒரு ராஜாவை, 13 வயது பெண்ணான லட்சுமிக்கு தேடிப் பிடித்து நிச்சயம் செய்து விட்டனர்.
படித்தவர், நல்ல குடும்பம், வேலை மற்றும் பணம் காசு நிறைய உள்ளது; லட்சுமி அதிர்ஷ்டக்காரி என்றெல்லாம் ஏமாற்றி, அவள் தங்கை திருமணத்தோடு, இவளுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். திருமணத்துக்கு இரண்டு நாள் முன், லட்சுமி என்னிடம் வந்து அழுதாள்.
அவளுக்கு என்ன தோன்றியதோ, அழுவதற்கு ஆரம்பம் தான், தன் மண வாழ்வு என்று நினைத்தாளோ, அந்த சிறுமி. என் மனது கனத்து கிடந்தது. திருமணம் முடிந்து வீடே வெறிச்சோடியது. லட்சுமி அதன்பின் வரவே இல்லை.
அடுத்த வருடம், கல்யாணம் முடிந்த அதே ஆனி மாதம், எட்டு மாத கர்ப்பிணியாக, லட்சுமியை பார்த்ததும் எனக்கு திக்கென்றது. சீமந்தம் முடிந்து அழைத்து வந்ததாக பேசிக் கொண்டனர். ஒரு சின்ன குழந்தைக்கு, குழந்தையா என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
லட்சுமியும், அவள் குடும்ப வாழ்வை பற்றி எதுவும் என்னிடம் பேசவே இல்லை. அவளுடன் அவள் கணவரும் வரவில்லை. பிறந்த வீட்டில் அவள் அக்காவுக்கு நடந்தது போல், எதுவும் தனக்கு நடக்கவில்லை என்ற குறை இருந்தது, லட்சுமிக்கு.
அன்று என்னிடம், ஓய்வாக வந்தமர்ந்த லட்சுமியிடம், 'என்னம்மா புருஷன் வீட்டுக்கு போனதும், தோழி தோழமை எல்லாம் மறந்து போச்சா...' என்றதும், என் மடியில் கண்ணீர் விட்டாள்.
'என் மாமியார், என்னிடம் கடுமையாக தான் நடந்து கொள்கிறார். ஆனால், அவர் மிக அன்பாக இருக்கிறார்...' என்றதும், 'தெரிகிறதே உன் நிலைமை பார்த்தாலே, அவர் அன்பு புரிகிறது...' என்ற என்னை, விசித்திரமாய் பார்த்தது, அந்த குழந்தை.
'அவரோட மற்ற மூன்று குழந்தைகளும், ஏன் என்னை அம்மான்னு கூப்பிட மாட்டேங்கறா, சித்தின்னு கூப்பிடறாளே...' என்ற, லட்சுமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மூத்தாளுடைய பெரிய பொண்ணும், லட்சுமியும் ஒரே வயது என்பது தான், மிக கொடுமை.
இரண்டு மாதங்கள் ஓடின; அழகிய ஆண் குழந்தையை பெற்றாள், லட்சுமி. புண்யாகவாசனம் அன்று கூட, அவள் மாமியார் வீட்டிலிருந்து புருஷன் உட்பட யாரும் வரவில்லை. குழந்தைக்கு மூன்று மாதம் ஆனதும், அவள் புருஷன் வீட்டுக்கு போய் விட்டாள்.
அடுத்து வரும் நாட்களில், லட்சுமியின் கணவருக்கு தீராத தலைவலி என்றனர். குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும்போது, லட்சுமியின் கணவர் இறந்து விட்டார் என்று, எல்லாரும் ஓடினர். இரண்டே ஆண்டுகளில் அஸ்தமித்த லட்சுமியின் வாழ்வு என்னை வாட்டியது.
கணவர் இறந்து, 13 நாட்கள் ஆனதும், கையில் குழந்தையுடன் லட்சுமி, மொட்டையடிக்கப்பட்டு நார்மடி கட்டி, முக்காடு போட்டு வந்திறங்கியதை பார்த்து ஊரே அழுதது. 15 வயது சிறுமியை, அலங்கோலப்படுத்தி அழைத்து வந்தனர்.
அன்று, அடுப்பங்கரையில் நுழைந்தவள் தான், லட்சுமி. வெளியே வருவதே இல்லை. யாரும் இல்லாத நேரம், மெதுவாக வந்து ஊஞ்சலில் அமர்வாள். மவுனமாக ஆடுவாள். அவளின் புதிய கோலத்தை பார்த்து, அவள் குழந்தையே, அவளிடம் பால் குடிக்க மறுத்ததென்றால், எனக்கு பேச எப்படி வாய் எழும்.
லட்சுமியின் கணவர் இறந்ததற்கு இந்த குழந்தை தான் காரணம் என்று, அவர்கள் புறக்கணித்து விட்டனர். 'எனக்கும், அந்த வீட்டு சொத்து சுகங்களுக்கும் சம்பந்தமில்லை...' என்று கையெழுத்து போடச் சொல்லி, அவளை பிறந்த வீட்டுக்கே அனுப்பி விட்டனர்.
காலம் நகர்ந்தது. லட்சுமி அப்பா, அவள் பையனை கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். தங்கைகள் கல்யாணம் நடக்கும் சமயம், இவளுடைய புடவைகள், நகைகள், வெள்ளி பாத்திரங்கள் எல்லாம், அவர்களுக்கு தேவைப்பட்டது. தன் பையனை தவிர எதுவும் தேவையில்லை என்று, எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள்.
விரக்தி சிரிப்புடன் என்னிடம் வரும் லட்சுமியை, நான் அணைத்துக் கொள்வேன். லட்சுமி குளித்து வரும்போது, எதிரே வராதே என்று, அவள் அம்மாவிடம், அப்பா சொன்னதை சொல்லிச் சொல்லி அழுவாள்.
அவளுக்கு என் மடி தான் புகலிடம். தன் தாயாரிடம் கூட, அவள் தன் வேதனைகளை சொன்னதில்லை. தங்கைகளிடம், 'லட்சுமிக்கு நேரே சிரித்து சிரித்து பேசாதீங்கோ, அவளும் குழந்தை தானே. அவள் ஏக்கம் உங்களை பாதிக்க கூடாது...' என்று, அம்மா பேசியதை கேட்டு உடைந்து போவாள்.
ஒருவழியாக, அவளது பிள்ளை, எஸ்.எஸ்.எல்.சி., முடித்து, வேலைக்கு போனதும், அவனுடன் கடலுார் கிளம்பினாள், லட்சுமி. போகும்போது அவள் கேட்ட ஒரே பொருள், ஊஞ்சல் தான். அதன்பின் உன்னை மருமகளாக்கிக் கொள்வதற்குள் என்னிடம் எவ்வளவு யோசனை கேட்டிருப்பாள் தெரியுமா...
நீ வந்த பிறகும், அவள் மனது வேதனைப்படுவாள். உன்னை சொல்லி குற்றமில்லை. 'பையனை தன் கண்ணுக்குள்ளேயே வைத்துக் கொள்ளணும்னா, என்னை எதற்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்கள்...' என்று கேட்டியாம்.
பாவம்டீ அவள்... உலகமே அவள் பையன் தான். எங்கே நீ அவனை பிரித்து அழைத்து போய் விடுவாயோ என்று பயந்தாள். உன் குழந்தைகளையெல்லாம் அணைத்து, தன் கட்சியை பலப்படுத்திக் கொண்டாள். இன்றும், அவர்கள் பாட்டியா, அம்மாவா என்றால், பாட்டியிடம் தானே ஓடுகின்றனர்.
பிள்ளை வர தாமதமானால் அதிகாலை, 2:00 மணி வரை கூட, ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அமர்ந்திருப்பாள். அவனை கண்ணால் கண்டபின் தான் படுக்க செல்வாள். நீ உறங்கி விடுவாய்.
அவளுக்கு துணை, நான் தான். மேல் படிப்பு படிக்க, ஊர் விட்டு பேரன் போகும்போது, மண முடித்து, பேத்தி, புக்ககம் செல்லும்போது, எப்போதும் அவள் என்னிடம் தான், தன் மன வருத்தத்தை கொட்டியிருக்காள்.
இரண்டு ஆண்டுகளாக அவள் தன்னிச்சையாய் இயங்க முடியாததால், என்னுடனான உறவு சற்றே பிரிவு கண்டாலும், அவள் அறையிலிருந்து என்னை பார்த்தபடியே படுத்திருப்பாள். நீ, என் மேல் இப்போ அவளை படுக்க வை, உடனே விடைபெற்றுக் கொள்வாள். அவளுக்கு என்னிடம் வரவேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த ஊஞ்சலை, சாரதா வியப்பாக பார்த்தாள்.
'ஜட பொருளுக்கும், ஒரு உயிருக்கும் இப்படி ஒரு இணைப்பா... அவர்களுக்குள் இப்படி ஒரு உணர்ச்சி பாலமா...' என நினைத்தவள், 'படபட'வென இயங்கினாள்.
'சித்தி, ஆனந்தா, சாமா ஒரு கை பிடித்து, பாட்டியை ஊஞ்சலில் ஒரு நிமிடம் படுக்க வையுங்கடா...' என்றவளை, ஏதோ பைத்தியத்தை பார்ப்பது போல் பார்த்தனர்.
'ஊஞ்சலில் படுக்க வச்சிருக்கேன் அம்மா...' என்று, மாமியாரின் காதில் கூறியதும், மூடிய கண்கள் சற்றே திறந்தன. நீர் ததும்பும் கண்கள், நன்றியுடன் சாரதாவை பார்த்தன. அதுவரை துவண்டு கிடந்த கரங்கள் இரண்டும், ஊஞ்சலை இறுக பற்றின. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். வாய் மெதுவாக திறந்து ஏதோ சொல்ல முயல, எல்லாரும் கத்தினர்.
'பாட்டி என்னமோ சொல்றா, ஒண்ணும் புரியலையே...' என்றனர். அமைதியாக உயிர் பிரிந்து விட்டது.
சாரதா மட்டும், பாட்டி என்ன சொன்னாள் என்று புரிந்து கொண்டாள். 'ஊஞ்சலி நான் கிளம்பறேன்...' என்று தான் சொல்லியிருப்பாள்.
தோழமையின் வலிமையை நினைத்தபடி, ஊஞ்சல் சங்கிலியை பற்றி, சிலையாக நின்றாள், சாரதா.
ஆர். சாரதாம்பாள்
வயது: 73, ஊர்: சென்னை. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன், இவர் எழுதிய கவிதை மற்றும் கதைக்கு, 'அமுதசுரபி' இதழ் முன்னாள் ஆசிரியர் மறைந்த, விக்ரமன் கையால் பரிசு பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

