PUBLISHED ON : மே 13, 2018

அந்த ஆடம்பர பங்களாவின் முன் இருந்த அழகிய தோட்டத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. நான்கைந்து, 'டாபர்மேன்'கள் நாக்கை தொங்க போட்டபடி உலாவிக் கொண்டிருந்தன. மொட்டை மாடியில், காளான் வடிவ, 'டிஷ்'ஆன்டெனா!
இயக்குனர், புன்னகை மாறனை பார்க்க, நுாற்றுக்கணக்கானோர் வாசலில் காத்திருந்தனர். அவர்களில் விருச்சிககுமாரும் ஒருவன். வயது, 38; உயரம், 180 செ.மீ., அடர்த்தி குறைந்த சுருள்கேசம், கழுத்தில் புலி நகத்துடன் கூடிய மைனர் செயின்; உடல் தெரியும் மெல்லிய காட்டன் சட்டை, கறுப்பு ஜீன்ஸ் பேன்ட். சட்டைப் பையில் முதலமைச்சர் சஜினிகாந்தும், துணை முதலமைச்சர் விமல்ஹாசனும் இணைந்து புகைப்படமாய் சிரித்தனர். இடது கையில், ஸ்மார்ட் போன் வைத்திருந்தான்.
செக்யூரிட்டிக்கு பெரிதாய் கும்பிடு போட்டு இளித்து, ''அண்ணே... சவுக்கியமா இருக்கீங்களா... வீட்ல அண்ணி பசங்க நல்லா இருக்காங்களா... போன தடவை பாத்ததுக்கு ரொம்ப இளைச்சு, கறுத்து போயிட்டீங்களே...'' என்று குசலம் விசாரித்தான், விருச்சிககுமார்.
முன்பின் தெரியாத ஆள், இவ்வளவு அக்கறையாய் விசாரிக்கிறானே என நெகிழ்ந்து, ''எல்லாம் நல்லா இருக்கோம்ண்ணே...'' என்ற செக்யூரிட்டியின் கையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிய, விருச்சிககுமார், ''இயக்குனரை பாக்கணும்... ஏதாவது காரணம் சொல்லி, என்னை உள்ளே அனுப்பு...'' என்று கிசுகிசுத்தான்.
இன்டர்காம் போனை எடுத்து, பேசுவது போல நடித்தான், செக்யூரிட்டி. ஒலி வாங்கியை வைத்துவிட்டு, விருச்சிககுமாரிடம், ''அய்யா, உங்கள உள்ள கூப்பிடுறாரு... போங்க!''
''போற காரியம் சக்ஸஸ் ஆச்சுன்னா, ஒரு புல்லும், ஒரு கிலோ மட்டன் பிரியாணியும் கூடவே, ஐயாயிரம் ரூபாயும் பரிசளிப்பேன்,'' என்று சொல்லி, உள்ளே நடந்தான் விருச்சிககுமார்.
ஓடி வந்த உதவியாளன், ''வரவேற்பறையில் காத்திரு... அய்யா குளிச்சிட்டு இருக்காரு, பத்து நிமிஷத்துல வந்துடுவாரு,'' என்றான்.
வரவேற்பறையில் அமர்ந்தான், விருச்சிககுமார். மின்னல், 'டிவி'யின் செய்தி அறிக்கை ஓடியது. 'உங்கள் கட்சியின் கொள்கை என்ன?' என நிருபர்கள் கேட்டதற்கு, 'தமிழ் சினி மக்கள் கட்சி'யின் தலைவரும், மாநில முதலமைச்சருமான சஜினிகாந்த் பின்வருமாறு பதிலளித்தார்... ''ஆன்மிகமும், நாத்திகமும், கம்யூனிஸமும், சோஷலிஸமும், அண்ணாயிஸமும் கலந்ததே எங்கள் கட்சி கொள்கை; எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச!''
துணை முதலமைச்சர் விமல்ஹாசன், ''சிறந்த மருத்துவ முத்தம் அளிக்கும் ஒரு தமிழக இளைஞனுக்கு, தமிழக அரசு, 'முத்த மன்னன் ஆரவ்' பட்டமும், ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கும்,'' என, 'பிக் பிரதர் சீசன், 30' அறிவித்தார்.
கல்வி அமைச்சர் பார்யா, ''தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இந்த ஆண்டும் தொடரும்; இன்னும், 70 ஆண்டுகள் போராடவும் தயாராய் இருக்கிறோம்,'' என சூளுரைத்தார்.
செய்தியாளர்கள், 'இந்த ஆண்டாவது உங்க திருமணம் நடக்குமா?' எனக் கேட்டதற்கு, செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், குஷால் புன்னகைத்தபடி, ''என் கல்யாணமும், அறுபதாம் கல்யாணமும் சேர்ந்து நடக்கும்,'' என உறுதியளித்தார்.
''மாதா மாதம் ஒரு தொகுதிக்கு வந்து, குறைந்தது, ஆயிரம் பேருக்காவது என் கையால் பிரியாணி சமைத்து போடுவேன்... அது...'' என்றார், சுகாதாரத்துறை அமைச்சர் பஜித்குமார்.
''இன்றைய தமிழ் இளைஞர்கள், மரியாதையாய் அனைவரையும், 'வாங்கண்ணா போங்கண்ணா' என பேச, தகுந்த பேச்சு பயிற்சி அளிக்கப்படும்; 'பஞ்ச்' டயலாக் அடிக்கவும் சொல்லித் தரப்படும்,'' என உறுதியளித்தார், சட்டத்துறை அமைச்சர், அஜய் இந்திரசேகர்.
''யோகா பயிற்சியுடன், ராமாயணம், மகாபாரதம் படிப்பதும் கட்டாயம் ஆக்கப்படும்,'' என, ஒரு பொது நிகழ்ச்சியில் ஆணித்தரமாக கூறினார், அறநிலையத்துறை அமைச்சர், தவகுமார்.
''இனி, தமிழகத்தில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் காந்த், ஹாசன் என முடியும் பெயர்கள் வைக்கக் கூடாது என, தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வர இருக்கிறது,'' என, சூசகமாக தெரிவித்தார், விவசாயத்துறை அமைச்சர், சுஜய் சேதுபதி.
காலடி அரவம் கேட்டு திரும்பினான், விருச்சிககுமார். இயக்குனர் புன்னகை மாறன், தன் உதவியாளர்களுடன் வரவேற்பறைக்குள் பிரவேசித்தார்.
நெடுஞ்சாண் கிடையாக, அவர் கால்களில் விழுந்த விருச்சிககுமார், ''தெய்வமே... தமிழ் சினிமாவுக்கு பிட்ஸா ஊட்டிய தந்தையர் குலமே... உன்னை கண்டதால், சாப விமோசனம் பெற்றேன். உன் திறமைக்கு முன், அகிரா குரசேவா கால் துாசு; நீ ஹாலிவுட்டில் பிறந்திருந்தால், இன்னேரம் நுாறு ஆஸ்கர் விருதுகள் பெற்று குவித்திருப்பாய். உன்னுடைய ஜோதியில் நானும் கலக்க ஒரு வரம் தா!'' என்றான்.
''எந்திரிப்பா... யாருப்பா நீ... என்ன விஷயமா என்னை பாக்க வந்த?''
''எம்.எல்.ஏ., தேர்தலுக்கு நிற்க, குறைந்தபட்சம் அஞ்சு நேரடி தமிழ் படங்கள்ல, 'ரன்னிங்' ரோல்ல நடிச்சு, சான்றிதழ் வாங்கியிருக்கணும்ன்னு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்து, பத்து வருஷம் ஆகுது!''
''ஆமா... அதுக்கென்ன இப்ப...''
''என் பெயர் விருச்சிககுமார்; புதுக்கோட்டை மாவட்ட, அரசு பிலிம் இன்ஸ்டியூட்ல படிச்சு, நடிப்புக் கலையில தேர்ச்சி பெற்றிருக்கிறேன். சண்டை மற்றும் நடன பயிற்சி கற்றிருக்கேன். இதுவரைக்கும், எட்டு படங்கள்ல, 'ரன்னிங்' ரோல் பண்ணியிருக்கேன்.''
''என்னென்ன படங்கள் நடிச்சிருக்க?''
''நான் நடித்த படங்களின் பெயரைச் சொல்றேன் குறிச்சுக்கங்க... 'நம்புங்க... நான் பொறுக்கி; ஒன்றரை டன் குத்து, போடாங்க, வெள்ளை பணியாரம், தெண்ட சோறு, முனுஞ்சிபட்டி முனுசாமி, இச்இச் மற்றும் கொய்யா இலை' இவை தான் நான் நடிச்ச எட்டு படங்கள்!
''இதுல பாதி படங்கள் வந்ததும் தெரியல, போனதும் தெரியல. எட்டுல, அஞ்சு படங்கள், என் நண்பர்கள் தயாரித்தவை; திருட்டு, 'விசிடி'காரன் கூட எங்க படங்கள, 'விசிடி' பண்ணி விக்கல. ஒரு சேனல்காரனும் எங்க படங்கள வாங்க மாட்டேன்னுட்டான்,'' என்றான், விருச்சிககுமார்.
''எது எப்படியோ... எம்.எல்.ஏ., தேர்தல்ல நிக்க தகுதி பெற்றுவிட்ட... அது போதுமே...''
பாபி சிம்ஹா போல சிரித்த விருச்சிககுமார், ''கழுதை எலெக் ஷன்ல நிக்கப் போறேன்னு ஆகிப்போச்சு... அதென்ன, எம்.எல்.ஏ.,வாகிறது... ஸ்டிரைட்டா முதலமைச்சர் பதவிதான் என் குறிக்கோள்; அதற்கு தகுதி வர, குறைந்தபட்சம் ஒரு முழு நீள ஆக் ஷன் படத்துல நான் ஹீரோவா நடிச்சாகணும்; யாரார்கிட்டயோ வாய்ப்பு தேடி கெஞ்சினேன்... ஒருத்தரும் முன் வரல; நீங்கதான் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க அருள் செய்யணும்.''
''உன் கார்ட்டூன் மூஞ்சி, ஆக் ஷன் ஹீரோவுக்கு ஒத்து வராதே...''
''தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்; ஒரு கழுதைய ஆக் ஷன் ஹீரோவா போட்டு படம் எடுத்தாக் கூட, மக்கள் ஆரவாரமா வரவேற்பாங்க... ஓபனிங் சாங், குத்துப்பாட்டு, பாரின்ல ரெண்டு டூயட், நான்கைந்து சண்டை காட்சிகள், ஆங்காங்கே, 'பஞ்ச்' டயலாக்குகள் எல்லாத்தையும் சரிவிகிதத்துல கலந்தா, படம் சூப்பர் ஹிட் தான்!''
''நான், இப்ப ஆக் ஷன் படம் எடுக்கற மூடுலயே இல்லப்பா...''
''அய்யய்யா... நீங்க அப்படி சொல்லக்கூடாது; தமிழகத்திற்கு ஒரு முதலமைச்சரை பரிசளிக்கிற கிங் மேக்கரா ஆகுங்க!''
''அதெப்படி நீதான் முதலமைச்சர் ஆவன்னு உலக நிச்சயமா சொல்ற... 20, 30, 50 படங்கள்ல ஆக் ஷன் ஹீரோவா நடிச்சவன் எல்லாம் உன் கூட போட்டி போடுவான்... இறுதியில, நீ மண்ணை கவ்விடுவ,'' என்றார், இயக்குனர்.
''நான் அமைதிப்படை அமாவாசை மாதிரி; முதலமைச்சர் பதவிக்காக, எது வேணும்ன்னாலும் செய்வேன். அரசியல்ல கிரிமினல் தனம் செய்யவும், காலை வாரி விடவும், கோஷ்டி சேர்க்கவும், முதுகுல குத்தவும், அப்பாவி மக்களின் உணர்வுகளை துாண்டி விடவும், தமிழகத்தின், 80 ஆண்டு அரசியலை கரைச்சு குடிச்சிருக்கேன். நான் கோயபல்ஸின் பேரன்; 21ம் நுாற்றாண்டு சாணக்கியன். கூனி, கைகேயி, சகுனியின் மொத்த வார்ப்பும் நான் தான்!''
''ஆக் ஷன் ஹீரோவுக்குரிய அம்சம் உன்னிடம் இல்லயே...''
''ஒரு மூஞ்சிய, ஐநுாறு தடவை காட்டி, ஒரு குரலை இருநுாறு தடவை பேசி, மக்கள நம்ம பக்கம் செயற்கையா இழுத்திரலாம். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைக்கு அதை, இதை காட்டி ஊட்டி விடுறதில்லயா ஒரு தாய்... யாரும் போகாத ஒற்றையடி பாதையில, ஆயிரம் வாகனங்கள் போய் வந்து, அதை, தேசிய நெடுஞ்சாலையாக்கி விடலாமே...''
யோசித்தார், புன்னகை மாறன்.
''என்ன யோசிக்கறீங்க தெய்வமே... இவனை ஆக் ஷன் ஹீரோவா நடிக்க வச்சா, இவன் முதலமைச்சராகி ராஜ வாழ்வு வாழ்வான்... நமக்கென்ன லாபம்ன்னுதானே கணக்கு போடுறீங்க...''
''ஆமாம்!''
''பத்து படங்கள இயக்கிய இயக்குனர்களுக்கு, எம்.எல்.ஏ.,வாகும் தகுதி வந்து விடுகிறது. 30 படங்கள இயக்கிய உங்களுக்கு, அந்த தகுதி எப்பவோ வந்திருச்சு; நீங்க அமைச்சர் தகுதி பெற, உங்களின் ஒரு படம், 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருக்கணும். நடிகர், அனுசு வச்சு நீங்க எடுத்த, 'கிழக்கு தாம்பரம்' 110 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கு. உங்களுக்கும், எனக்கும் ஒரு, 'டீல்.' நான் முதலமைச்சரானா, நீங்க, தமிழ் சினிமா வளர்ச்சி துறை அமைச்சர்; அமைச்சரவையில நம்பர் டூ நீங்க தான். என்னை வச்சு நீங்க எடுக்கும் ஆக் ஷன் படம், கைய கடிச்சிருச்சுன்னா நஷ்டத்தை கணக்கிட்டு, நான் முதலமைச்சரான உடனே திருப்பி தந்திடறேன்!''
''நீ ஒரு அரசியல் நரி; நாளைக்கு முதலமைச்சரான உடனே, என்னை காலை வாரி விட்டுட்டா, நான் எங்கே போய் முட்டிக்கிறது...''
''ஓர் அயோக்கியனுக்கும், ஒரு யோக்கியனுக்கும், 'டீல்' வந்தா, 'டீல்' தோத்துடும்; இரு அயோக்கியன்களுக்கு இடையே, 'டீல்' வந்தா, அது, ஒருநாளும் தோற்காது.''
''என்னை அயோக்கியன்னு சொல்றியா?''
''சேச்சே... மாண்புமிகு அயோக்கியர்ன்னு சொல்றேன்.''
''ஓகே., சீப் மினிஸ்டர்... அடுத்த வாரமே படத்துக்கு பூஜை போட்றலாம்... படத்தோட டைட்டில், 'சிம்மக் குரலோன்' நான்கு ஹீரோயின்கள் அமன்னா, கியன்தாரா, கிக்கி எள் ராணி, பிஞ்சிமா மேகன்...'' சொல்லிக் கொண்டே போனார், புன்னகை மாறன்.
மீண்டும் மாறனின் காலில் விழுந்து, கால்களை முத்தமிட்டு, நாலாபுறமும் திரும்பித் திரும்பி தலைக்கு மேலே இரு கை உயர்த்தி, கும்பிட்டபடியே புறப்பட்டான், விருச்சிககுமார்.
அவன் அகன்றவுடன், உதவியாளர்கள் புன்னகை மாறனை சூழ்ந்து, 'அவன், சி.எம்., நீங்க, தமிழ் சினிமா துறை அமைச்சர்; உதவியாளர்களாகிய நாங்கள்...' என்றனர்.
''உங்க எல்லாருக்கும் குறைந்தபட்சம், வாரிய தலைவர் பதவி உண்டு; அதற்கு, ஐந்து படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தகுதி போதும்...'' கண் சிமிட்டி, மந்தகாச புன்னகை வெடித்தார், கிங் மேக்கர் புன்னகை மாறன்.
ஆர்னிகா நாசர்
